Friday, October 15, 2010

உண்மை சொன்னாள் (சவால் சிறுகதை)


அந்தப் புல்வெளியில் நான் என்னுடைய அக்கா என் அம்மா மாமா நால்வரும் அமர்ந்திருந்தோம்..இதுவரை காரசாரமாக நாங்கள் மாறி மாறி சண்டையிட்டுக்கொண்டதால் தொண்டை வரண்டு இனி பேச முடியாது சிறிது ஓய்வு தேவை என்று உடல் சோர்வாய் சொல்லியது.

ஒருவருக்கொருவர் அவரவர் கருத்துக்களில் பிடிவாதமாகவே இன்னும் இருந்ததால் பேச்சும் ஒரு முடிவுக்கு வருவதாய் தெரியவில்லை. எங்களுக்கும் யாருக்கும் விட்டுக்கொடுக்க எங்களது ஈகோ தடுத்தது. ஒருவரை ஒருவர் சில நேரம் சற்று கோபமாகவும், சில நேரம் பாசமாகவும் பார்த்துக்கொண்டு ஒருவித குழப்பத்துடனேயே அமர்ந்திருந்தோம்.

திடீரென உள்ளுக்குள் அரவம் கேட்டது..

* * *
காமினி ஜன்னலின் அருகே படுத்திருந்தாள். அவளது முகத்தில் மாஸ்க் போன்று எதோ ஒப்புக்கு வைக்கப்பட்டிருந்தது. அதில் இணைத்து சில ஒயர்கள் அவளது கையில் ஒட்டப்பட்டிருந்தன.
ஸ்டெதஸ்கோப்பை மாட்டிக்கொண்டு அந்த டாக்டர் வெளியே வந்தாள்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

அவளது கையில் சிறிய பொட்டலம் இருந்தது. அதை கையில் பிடிக்க முடியாமல் சிரமத்துடன் பிடித்திருந்தாள்.

திடீரென ஹேண்ட்ஸ் அப் என்றான் சிவா. அவனுக்கு பயப்படுவதைப் போல நடித்த காமினி சிறிது சிறிதாக வாசற்பக்கத்துக்கு நகர்ந்தாள். எப்படியாவது இந்த பொட்டலத்தை பரந்தாமனிடம் சேர்த்துவிட வேண்டும். அப்படி சேர்த்து விட்டால் அவளுக்கு கிடைக்கப்போகும் பரிசை நினைத்து அவள் மனம் பரபரத்தது.

"ஏய் எங்க நகர்ர நில்லு..நில்லு.. ஏய் சொல்றேன் இல்லை நில்லு"

அவள் அவனை அசட்டை செய்து நடந்து கொண்டே இருந்தாள். ஓட எத்தனித்தாள்.

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

"ஏண்டா என்னை சுடனும்னு முடிவு பன்னிட்டே இல்லை..நீயே இப்படி பன்னுவேன்னு நான் நினைக்கலைடா. நீ பேருக்குதான் போலிஸு உண்மைலயே போலீஸுன்னு நினைப்பா உனக்கு. எப்பவும் எனக்கு சப்போர்ட் பன்னுவ இப்ப இப்படி காலை வாரிவிடரியே...சுடுடா சுடு" என்றாள்.

அவன் சிரித்துக் கொண்டே துப்பாக்கியை கீழே நழுவவிட்டு என்ன சொல்வது என்றே தெரியாமல் முழித்தான்.

அவள் வேகமாக பரந்தாமனிடம் ஓடினாள்..

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

சரி இதைக் கொண்டு வந்து கொடுத்தா எனக்கு பிரைஸ் தர்ரேன்னு சொன்னீங்களே கொடுங்க என்றாள்.

அவரும் சிரித்துக் கொண்டே அவளுக்கான பரிசைக் கொடுத்தார். அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட காமினி. வேகமாக சிவாவிடம் ஓடினாள்.

"ஏய் வர்ஷினி இங்க வாவேன்" என்று வர்ஷினியையும் அழைத்தாள்.

அவளுக்கு பரந்தாமனிடம் இருந்து கிடைத்த பரிசை மூவரும் சமமாக பங்கிட்டு எடுத்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்த்துச் சிரித்தனர்.

* * *
உண்மையில் அதுதான் சரியோ..அவர்களது செய்கையில் லாஜிக் இல்லாவிட்டாலும். பாசம் இருக்கிறது, பிரியம் இருக்கிறது, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கிறது. கெட்டதை உடனேயே மறந்துவிடும் நல்ல குணம் இருக்கிறது. இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய விசயம் இருக்கிறது. இவர்களிடம் நாம் எதையும் கற்றுக்கொள்ளாமல் இவர்களுக்கு வாழக்கற்றுக் கொடுக்கும் பொறுப்பு நம்மிடம் இருப்பதாக நினைக்கிறோமோ!

என் மனம் எதை எதையோ நினைத்துக் குழம்பியது. மனம் குழம்புகிறதா இல்லை தெளிவடைகிறதா என்பதைக் கூட சரியாக கணிக்க இயலாத மனநிலையில் நான் இருக்கிறேன். உண்மையில் இது தெளிவல்லவா!

"என்னப்பா ரொம்ப கஸ்டமா இருக்காப்பா"

திடீரென அம்மா மவுனம் கலைத்து என்னிடம் பேசி என் நினைவுகளையும் கலைத்தார்.

"இல்லம்மா இப்ப நான் நாம சண்டை போட்டுக்கிட்டத பத்தி யோசிக்கவே இல்லைம்மா. காலைல இருந்து அதுங்க சண்டை போட்டதை விளையாண்டதை எல்லாம் பார்த்துட்டே இருக்கேம்மா. மனசு கொஞ்சம் நார்மலான மாதிரி இருக்கும்மா. இப்ப கூட அதுங்க மூனும் (வர்ஷினி, சிவா-என் அக்கா குழந்தைகள்)  தீபாவளி துப்பாக்கிய வெச்சி அப்பா கூட சேர்ந்து எதோ விளையாண்டுகிட்டு இருந்தாங்க"

"என்னப்பா சொல்ற நீ அதுங்க எதோ வெட்டியா விளையாண்டு பொழுத போக்கிட்டு இருக்குங்க. என்ன பன்றதுன்னே தெரியாம?"

"அப்படி இல்லம்மா உண்மைல அவங்க பன்றது வெட்டி வேலை இல்லம்மா. அவங்க செயல் உணர்த்தற விசயம் நிறைய இருக்கும்மா. நாமதான் அதை எதுவுமே புரிஞ்சுக்காம. சண்டை போட்டு வெட்டியா பொழுதை போக்கிட்டு இருக்கோம் இப்ப"

அங்கு சிறிது நேரம் மவுனம் நிலவியது.

"சரிப்பா இப்ப என்ன பண்ணலாம்ங்கிற"

"இனியும் இவங்ககிட்ட நியாயம் இதுதான்னு பேசி நேரத்தை ஓட்ட வேணாம்மா. நியாயமோ அநியாயமோ..சரி சரின்னு விட்டுக்கொடுத்து பேசுவோம். ஒரு வயித்துல பொறந்துட்டு இப்படி நாங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கறது எனக்கு பிடிக்கலைம்மா. அவளும் அதே உணர்வுலதான் இருக்கா. ஆனா பேசும் போது ஈகோ பாத்துக்கிட்டு. கொதிச்சு கோவமா பேசி சண்டை முத்திடுது. வேணாம்மா இதெல்லாம்" என்றேன்.

அம்மாவும் நான் பேசிய பேச்சுக்கு ஆமோதிப்பது போல பார்த்தார்.

"அப்பா அப்பா இன்னிக்கு விளையாட்டுல தாத்தா ஒரு போட்டி வெச்சாரு அதுல நான் ஜெயிச்சுட்டேன்பா. தாத்தா எனக்கு டைரி மில்க் பிரைஸா கொடுத்தாருப்பா. அதை மூனா பிரிச்சு மூனு பேரும் எடுத்துக்கிட்டொம்பா."

என்றாள் ஓடிவந்து என் மடியில் அமர்ந்த என் மகள் காமினி.