Tuesday, October 26, 2010

கண்ணீர் துள்ளல் - சிறுகதை

அந்த உணவகத்தில் மேஜையை ஈரத்துணியால் துடைத்துக் கொண்டிருந்தான் ராஜன்.

"டேய் என்னடா படிக்கற நீ... நீ படிக்கற ஸ்கூல்ல ஃபீஸ் எவ்லோன்னு தெரியும் இல்ல. கூடப்படிக்கறவன்லாம் பத்தாவதுல எவ்லோ மார்க் வாங்கி அங்க சேந்திருக்கான் தெரியும் இல்ல. நல்ல மார்க் எடுத்தாதான்டா அந்த ஸ்கூல்லயே எட்டிப்பாக்க முடியும். பத்தாவதுல உன்னைய பாஸ் பண்ண வைக்க நான் பட்ட பாடு எனக்குத்தான்டா தெரியும். இப்பவாவது பொறுப்பா படிக்க வேண்டியதுதான. பேருக்கு பாஸான உன்னை அந்த ஸ்கூல்ல தொடர்ந்து வெச்சிருக்கறதுக்காகவே, டொனேசன்ங்கற பேர்ல மாசா மாசம் என் வருமானத்துல பாதிய அழுவறன்டா."

தன் மகன் வேலனிடம் பொரிந்துத் தள்ளிக் கொண்டிருந்தார் அந்த உணவகத்தை நடத்தி வரும் சுந்தரம். அவருக்கு அவன் ஒரே மகன். அந்த ஊரிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற உணவகம் அது. நல்ல வருவாய். இருந்தும் என்ன செய்ய?. மகனை நன்றாக படிக்க வைத்து வெளிநாட்டிற்கு அனுப்பிப் பார்க்க வேண்டும் என்பது அவரது ஆசை. ஆனால் அவனோ என்ன திட்டினாலும் உதைத்தாலும் நான் படிக்கமாட்டேன் என்றே செயல்பட்டான்.

"சரி இனியும் உன்ன நம்பி உபயோகம் இல்ல. இப்படி என்னால காசு கொண்டு போய் கடல்ல கொட்ற மாதிரி. பலனே இல்லைன்னு தெரிஞ்சும் மாசா மாசம் உன் ஸ்கூல்ல போய் கொட்ட முடியாது. இந்த ராஜனைப் பாரு. படிப்பு வரலைன்ன உடனே நம்ம ரூட் இது இல்லன்னு வேலைக்கு வந்துட்டான். எவ்லோ பொறுப்பா வேலை செய்யற பையன் தெரியுமா. உன் வயசுதான் ஆவுது. இப்பவே எவ்லோ கண்ணும் கருத்துமா இருக்கான். நீயும் இனிமே இங்கயே வந்து வேலை செய்யிடா. அப்பதான் உனக்கு புத்தி வரும்."

இதனை அரசல் புரசலாக கேட்டுக்கொண்டிருந்த ராஜனுக்கு திக்கென்றது. நம்மை நம்ம முதலாளி இப்படி நினைச்சிக்கிட்டிருக்காரோ என்று நினைத்தவன். அடுத்த நொடியே. அடுத்தடுத்த செய்ய வேண்டிய வேலைகள் நினைவு வந்தவனாய் சகஜமாகி அதனைப் பார்க்கப் போனான். 

இச்சம்பவம் நடந்து ஒரு மாதம் சென்றிருக்கும். ஒரு மாலை நேரம்.

அந்த உணவகத்தில் ஒரு டேபிளில் வந்து அமர்ந்தார் அவர்.

எதிரே உள்ளே சென்ற ராஜனை பின்புறமாக பார்த்த அவர். அவன் அக்கடையின் ஊழியன் என்பதைப் புரிந்தவராய்..

"தம்பி. ஒரு காபி. ஒரு பிளேட் வடை கொண்டு வாப்பா"

"சரிங்க சார்" என்றவாரே அவரிடம் திரும்பினான் ராஜன்.

ஒரு நிமிடம் அதிர்ந்தான், பின் மகிழ்ந்தான்.

"சார்.. நீங்களா சார். எப்படி இருக்கீங்க சார். உங்கள பாத்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம் சார்."

என்று அவனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட்டு. இது போதாது என்கிற தொனியில் யோசித்து நின்றான்.

"என்னப்பா. இது உங்க கடையா?"

"இல்லை சார்"

"பின்ன வேலை செய்யிறியா. ஏன்பா காலேஜ் சேரலையா. என்ன ஆச்சுப்பா"

அவரது குரலில் பரிதாபமும் அதிர்ச்சியும் சரிவிகிதத்தில் கலந்திருந்தது.

ராஜன் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்தான். எப்போதும் மலர்ந்த முகமாய் இருக்கும் ராஜனின் முகம் இருண்டிருந்தது. கண்களின் ஓரம் கண்ணீர் நான் வரட்டுமா வரட்டுமா என்றது.

அவனது முகவாட்டத்தைப் பார்த்த அவர்..

"தம்பி என்ன ஆச்சுன்னு சொல்லுப்பா.. ஏன் காலேஜ்ல சேரலை நீ. தைரியமா சொல்லுப்பா" என்றார்.

இதனை கவனித்துக் கொண்டிருந்த சுந்தரம் எழுந்து இவர்கள் அருகில் வந்தார்.

"சார் உங்களுக்கு இந்த பையனைத் தெரியுமா. என்ன கேட்டீங்க அவன் கிட்ட? ஏன் அவன் இவ்லோ பதட்டமா இருக்கான்?"

"நான் ஒரு ஆசிரியர். இவன் எங்க ஸ்கூல்லதான் 12 வது வரைக்கும் படிச்சான். 12 வதுல ஸ்கூல்லயே ஃபர்ஸ்ட் வந்த பையன் சார் இவன். இந்நேரம் ஒரு நல்ல காலேஜ்ல சீட் கிடைச்சிருக்கும். படிச்சுட்டு இருப்பான். வந்து சொல்லக்கூட இல்லை பாரு. அவ்லோதான் ஸ்டூடண்ட்ஸ்னு நாங்க பேசிட்டு இருந்தோம். இவன் என்னன்னா இங்க வேலை பாத்துட்டு இருக்கான்."

"அப்படீங்களா. நான் இவன் படிப்பேறாத பையன்னு இல்ல நினைச்சுட்டு இருந்தேன். பாருங்க. யாரையும் பாத்தவுடன் நமக்கு என்ன தோணுதோ அப்படிதான் அவங்க இருப்பாங்கன்னு நினைச்சுக்கறோம்." என்றவாரே அவனிடம் திரும்பி..

"தம்பி நீ இனிமே என் கடைக்கு வேலைக்கு வர வேண்டாம்ப்பா"

அந்த ஆசிரியருக்கு திக்கென்றது. அச்சச்சோ அவன் படிப்பில் எப்படி மண் விழுந்ததோ தெரியவில்லை. இப்போது அவன் பிழைப்பிலும் நாமே மண் அள்ளிப் போட்டுவிட்டோமோ என்று தடுமாறினார். திகைத்தார். அடுத்து என்ன பேசுவது என யோசித்தார்.

ராஜனும் அதிர்ச்சியடைந்தவனாய்...

"சார் சார் அப்படி சொல்லாதீங்க சார். என் குடும்பத்துல நான் மட்டும்தான் சார் சம்பாதிக்கறேன். எங்கப்பா குடிச்சி குடிச்சே சமீபத்துல செத்துட்டாரு சார். அவரோட சொற்ப வருமானத்துலதான் சார் குடும்பம் ஓடிட்டு இருந்தது. அம்மாவுக்கு பிரஷர், சுகர்லாம் இருக்கு சார். அதனால் அவங்கள வேலைக்கு போக வேனாம்னு சொல்லிட்டு. நான் மட்டும் இங்க சம்பாதிக்கறேன் சார். இப்ப நீங்களும் என்ன வேலைய விட்டு நிறுத்திட்டா என் குடும்பம் நடுத்தெருவுக்குதான் சார் வரும்"

சொல்லும் போதே அந்த காட்சிகள் அவன் மனக்கண்ணில் ஓடியிருக்க வேண்டும். அவன் கண்ணில் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த கண்ணீர் வழிந்தோடியது. உடல் ஏகமாய் நடுங்கியது.

"தம்பி பதறாதப்பா. நீ இனிமே என் கடைக்கு வேலைக்கு வர வேண்டாம். ஆனா உன் படிப்புச் செலவை நான் ஏத்துக்கறேன்பா. நல்லா படிக்கற நீ ஏன் வாழ்க்கையைப் பாழாக்கிக்கனும். நீ சம்பாதிக்க ஆரம்பிக்கற வரைக்கும். உங்க வீட்டுக்கு மாசா மாசம் நான் ஒரு தொகை கொடுக்கறேன்பா." என்றார் சுந்தரம்.

ராஜனின் முகம் குப்பென மலர்ந்தது. மீண்டும் கண்களில் கண்ணீர் துள்ளலுடன் வழிந்து வந்து தரையில் விழுந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

உடனே ஓடிப்போய் அவரது கால்களில் விழுந்தான். பின் ஆசிரியரின் கால்களிலும் விழுந்து கும்பிட்டான். அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. உடல் நடுக்கம் இன்னும் அதிகரித்திருந்தது. வாழ்வின் மோசமான பக்கங்களையே பார்த்திருந்த அவனது மூளை இதனை நம்ப மறுத்துத் தடுமாறியது.

இதனை உணர்ந்த சுந்தரம்.. அவனை அருகில் அழைத்து கட்டியணைத்து ஆசுவாசப்படுத்தினார். பின் ஆசிரியரிடம்...

"ஏன் சார். உங்க பள்ளியிலேயே முதல் மதிப்பெண் வாங்கிய பையன்கறீங்க. அவனுக்கு கூட அடுத்து என்ன படிக்கனும்னு அக்கறையா அறிவுரை சொல்ல மாட்டீங்களா? குறைந்த பட்சம் அவன் என்ன படிக்கறான்னு கூட தெரிஞ்சுக்க மாட்டீங்களா? பள்ளியோடவே ஆசிரியரோட கடமை முடிஞ்சதுன்னு நினைச்சிட்டீங்களா? அவ்லோதான் ஆசிரியரா?"

ஆசிரியர் புதிய பாடம் கற்றவராய் திகைத்து நின்றார்.