Search This Blog

Saturday, July 31, 2010

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..



நினைத்தாலே மகிழ்ச்சி பிறக்கும் வார்த்தைகள் எவை எவை என்று யோசிக்கச் சொன்னால் பெரும்பாலானோருக்கு முதலில் தோன்றும் வார்த்தை "நண்பன்". நண்பன் என்ற வார்த்தையை சொன்னவுடன் எவ்வளவு இறுக்கமான ஆட்களுக்கும் கூட மனதிற்குள் அவர்களையும் அறியாமல் ஒரு சந்தோசமும் நம்பிக்கையும் பிறக்கும்.

நம் வாழ்க்கையில் மற்ற உறவுகளை விட நண்பனின் பங்களிப்பு மிகவும் அதிகம். மற்ற உறவுகள் எல்லாம் இரத்தம் சம்பந்தப்பட்டவை. ஆனால் எந்தவித இரத்த சம்பந்தமும் இல்லாமல் உயிருக்கு உயிராய் ஒருவர் மீது நம்பிக்கையும் பாசமும் எப்படி வந்தது?. உயிருக்கு உயிராய் இருக்கும் நண்பர்களைக் கேட்டால் கூட அவர்களுக்கும் இதற்கு பதில் தெரியாது. அதுதான் அதன் சிறப்பே!

ஏன்? நம்மைப்பற்றி அதிகம் தெரிந்திருப்பவர் நிச்சயம் நமது நெருங்கிய நண்பராகத்தான் இருப்பார். ஏன் சில நேரங்களில் நமக்கே தெரியாத நம்மைப்பற்றி நம் நண்பருக்குத் தெரிந்திருக்கும். நாம் மனசுவிட்டு அதிக விசயங்களைப் பகிர்ந்து கொள்வது நண்பர்களிடம் மட்டும்தான்.

இல்லை இல்லை...நான் என் தாயாரிடமோ, தந்தையிடமோ அல்லது மனைவியிடமோ பகிர்ந்துகொள்கிறேன்...எங்களுக்குள் அப்படி ஒரு புரிதல் என்று சொல்பவராக நீங்கள் இருந்தால்...நீங்கள் நிச்சயம் லக்கி! ஏனெனில் நீங்கள் பகிர்ந்து கொள்ளும் அந்த உறவு, தாயார், தந்தை, மனைவி, அண்ணன், அக்கா, தங்கை, தம்பி, யாராக இருந்தாலும் அவர்கள் உங்களது உறவினர் என்பதையும் தாண்டி உங்கள் நண்பர் என்ற வட்டத்திற்குள் நிச்சயம் வந்திருப்பார். நமது நண்பர் என்ற வட்டத்திற்குள் வராத எந்த உறவுகளிடமும் நிச்சயம் நம்மால் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாது என்பதே உண்மை!

நட்புக்கு முகம் தேவையில்லை. ஏற்கனவே பேசியிருக்கத் தேவையில்லை ஏன் பாத்திருக்கக்கூடத் தேவையில்லை..அதற்கு ஒரு நல்ல உதாரணமாக இந்த வலைப்பதிவுகளைச் சொல்லலாம்..வலைப்பதிவுகளில் பல நண்பர்கள் எழுதி இருப்பதைப் படிக்கும் போது..அது நமது விருப்பங்களுக்கு மிகவும் அருகில் இருக்கும் பட்சத்தில்...அந்தப் பதிவர் மீது ஒரு நட்புணர்வு நம்மையும் அறியாமல் வந்துவிடுகிறது..முகம் தெரியா அந்த நண்பரையும் நம் மானசீக நண்பராக்கிக் கொள்கிறோம்.

                                       பூக்கள் பூக்கும் தருணம்
                                       ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே!

திடிரென இந்த வரிகள் இங்கு எதற்கு என்கிறீர்களா....இவை நட்புக்கும் பொருந்தும்...பூக்கள் பூக்கும் தருணம் போலத்தான் நட்பு பூக்கும் தருணமும்...ஆருயிர் நண்பர்கள் பலரிடமும் கேட்டால் அவர்களுக்குள் நட்பு பூத்த தருணம் நிச்சயம் தெரிந்திருக்காது..

வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.......






பிரியமுடன்

ரமேஷ்


Thursday, July 29, 2010

ஐடென்டிட்டி..திக் திக் அனுபவம் (Identity (2003))


ஒரு அபார்ட்மெண்டில் ஆறு நபர்களை கொடூரமான முறையில் கொலை செய்த குற்றத்திற்காக மால்கம் ரிவர் என்பவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

மால்கமின் தாயார் ஒரு விலைமாது. மால்கமுக்கு சிறுவயதாக இருக்கும் போது அவர் தொழிலுக்காக மோட்டல் செல்லும்போது மால்கமை காரில் வெளியே காத்திருக்கச் சொல்லுவார். அப்படி காத்திருந்து காத்திருந்து மால்கம்மிற்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அவனது டைரியைப் படித்துப் பார்க்கும் அவனது மனநல மருத்துவர் கண்டறிந்து அவன் தண்டனை அனுபவிப்பதற்கு முந்தைய நாள் இரவு நீதிபதியை மறுவிசாரணைக்கு அழைக்கிறார்.

அடுத்து சம்பந்தமே இல்லாமல் காட்சிகள் மாறுகின்றன. ஒரு மோட்டலுக்குள் சம்பந்தமே இல்லாத 10 நபர்கள் காட்டாற்று வெள்ளத்தின் காரணமாகவும், மழையின் காரணமாகவும், இன்ன பிற காரணங்களுக்காகவும் வந்து தங்குகின்றனர்.

அவர்கள் ஒவ்வொருவராக அங்கு வந்து சேருவதைக் காண்பிக்கப்பட்டிருக்கும் விதம்! விவரிக்க முடியாத விருவிருப்பு. படம் துவக்கத்தில் ஆரம்பிக்கும் விருவிருப்பு படம் முடியும் வரை இருக்கிறது. படத்தில் கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளும் மழையிலயே வருது. இவ்வளவு விருவிருப்பான ஒரு படம் பார்த்து ரொம்ப நாளாச்சு...

அதற்குப்பின்தான் ஆரம்பிக்கிறது திக் திக்....மோட்டலுக்கு வந்து சேர்ந்த பத்து நபர்கள் + அங்கேயே இருந்த மேலாளருடன் சேர்த்து மொத்தம் 11 பேர். அவர்களின் விவரங்கள் மிகவும் முக்கியம் அதனால் அதையும் பாருங்கள்..

ஒரு தாய் (1. Alice), தந்தை (2. George), அவர்களது பையன் (3. Timmy),
ஒரு விலை மாது (4. Paris), ஒரு நடிகை (5. Caroline), அவளது டிரைவர் (6. Edward), ஒரு கணவன் (7. Lou), அவனது மனைவி (8. Ginny), ஒரு போலீஸ் (9. Rhodes), அவர் அழைத்துச் செல்லும் ஒரு குற்றவாளி (10. Robert), மோட்டல் மேனேஜர் (11. Larry).

அப்புறம் இவர்கள் அனைவரின் பிறந்த தேதியும் மே 10. எப்படி அப்படி அமைந்தது?

இவர்களில் ஒவ்வொருவராகக் கொலை செய்யப்படுகின்றனர். ஏன்? யார் இந்தக் கொலைகளைச் செய்தது? என்பது இறுதி வரை சஸ்பென்ஸாக நகர்கிறது. இடையிடையே மால்கமின் விசாரணையும் காண்பிக்கப்படுகிறது. முதலில் கரோலின் (i) என்ற நடிகை கொலை செய்யப்படுகிறார். அவரது உடலின் அருகே அறை எண் 10 இன் சாவி இருக்கிறது. ரோட்ஸுக்கு (போலீஸ்) அவர் அழைத்து வந்த குற்றவாளிதான் (ராபர்ட்) அவளைக் கொலை செய்திருப்பார் என்று சந்தேகம். உடனே ராபர்ட்டை அடைத்து வைத்திருந்த கழிவறைக்கு சென்று பார்க்கிறான். அங்கு அவன் இல்லை. அடுத்ததாக லூவும் (ii) மர்மமான முறையில் கொல்லப்படுகிறான். அவனுக்கு அருகில் அறை எண் 9 இன் சாவி இருக்கிறது.  அதற்கு அடுத்த காட்சியில் தப்பியோடும் ராபர்ட் தொலைதூரத்தில் வெளிச்சம் கண்ணுக்குத் தெரிய வேகமாக அங்கு போய் பார்க்கிறான்...அது அவன் தப்பி வந்த மோட்டல். மோட்டலில் இருந்து தப்பி நீண்ட தூரம் ஓடி வந்த ராபர்ட் மீண்டும் எப்படி மோட்டலுக்கே வந்தான்!!!!!!!!! எதிர்பார்ப்பு எகிறுகிறதா..மேல படிங்க பாஸ்.....

சிறிது நேரத்தில் திரும்ப மோட்டலுக்கே வந்த ராபர்ட்டும் (iii) கொல்லப்படுகிறான். அவனருகில் அறை எண் 8 இன் சாவி இருக்கிறது. அப்படியானால் இதுவரை செய்த கொலைகளைச் செய்தது யார்?

சந்தேகம் மோட்டல் மேனேஜர் லேரி மீது திரும்புகிறது. அவன் தான் கொலைகாரன் என்று ரோட்ஸ் வாதாடுகிறான். இதனால் லேரி காரில் தப்ப முயற்சிக்கிறான். அப்போது எதிர்பாராத விதமாக ஜியார்ஜ் (iv) கார் ஏற்றிக் கொல்லப்படுகிறான். இன்னும் லேரி மீது சந்தேகம் வலுக்கிறது..ஆனால் அவன் அது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்து..மற்ற கொலைகளுக்கும் எனக்கும் துளியும் சம்பந்தமில்லை என்று வாதாடுகிறான். அதை ரோட்ஸ் (போலீஸ்) நம்ப மறுக்கிறான். சிறிது நேரத்தில் அலிசும் (v) படுக்கையில் இறந்து கிடக்கிறார். அவரது அருகே அறை எண் 6 இன் சாவி இருக்கிறது. அப்படியானால் 7 ஆம் எண்ணுள்ள சாவி எங்கே என்று தேடுகின்றனர். அது எதிர்பாராதவிதமாக கார் ஏற்றிக் கொல்லப்பட்ட ஜியார்ஜின் அருகே இருக்கிறது. அனைவருக்கும் பதட்டம் அதிகமாகிறது. அவங்களுக்கு மட்டுமா...நமக்கும்தான்.....

இதற்கிடையே ஜின்னி ராபர்ட்ஸின் காரில் ஏறுகிறாள் அதில் ரோட்ஸ் (போலீஸ்), ராபர்ட்ஸ் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இருப்பதைப் பார்க்கிறாள். உண்மையில் ரோட்ஸ், ராபர்ட்ஸ் இருவருமே குற்றவாளிகள்தான்...அவர்களைக் கூட்டி வந்த போலீஸை ரோட்ஸ் கொன்றுவிட்டு....அவரது உடைகளை எடுத்துப் போட்டுக்கொண்டு போலீஸ் போல வேடமிட்டு...ராபர்ட்டை அழைத்துச் செல்கிறான் என்பதைக் கண்டுபிடித்துவிடுகிறாள். அப்படியானால் இதுவரை நடந்த கொலைகளைச் செய்தது போலீஸ் வேடத்தில் இருந்த ரோட்ஸா? ஏன் அவன் இந்தக் கொலைகளைச் செய்தான்?

இதெல்லாம் நாம யோசிச்சிட்டு இருக்கும் போதே....ஜின்னி (vi), டிம்மியக் (vii) கூட்டிக்கிட்டு காருகிட்ட போறா....அது வெடிச்சுச் சிதறுது..அவங்களும் அவுட். மீதி உயிரோட இருக்கறது பாரிஸ், எட்வர்ட், ரோட்ஸ், லேரி ஆகிய நால்வர் மட்டுமே. இவங்கள்ளாம் அதிர்ச்சியோட போய் எரிஞ்ச காருக்கிட்ட பாத்தா..அங்க ஜின்னியோட உடம்போ, டிம்மியோட உடம்போ காணோம்...அதிர்ச்சியாகி..ஏற்கனவே செத்துக் கிடக்கறவங்களையும் போய் பாக்கறாங்க...அங்கல்லாம்..எந்த உடம்பும் இல்லை.

இதற்கிடையே நாம ஆரம்பத்துல சொன்ன மால்கம மறந்திட்டமே... மால்கமுக்கு Dissociative Identity Disorder அப்படிங்கற மனநோய் இருக்கு அதனாலதான் அவன் அவனையே அறியாம ஆறு பேத்தக் கொன்னுட்டான். அதனால அவனுக்கு மரண தண்டனை தரக்கூடாதுன்னு மனநல மருத்துவர் வாதாடுறார்.

இப்படி அவனுக்காக வாதாடும் மனநல மருத்துவர் கடைசில என்ன ஆகிறார்?
செத்துப் போனவங்க எல்லாம் எப்படி மாயமா மறைஞ்சாங்க?
மோட்டலில் இருந்து வெகுதூரம் தப்பியோடிய ராபர்ட் மறுபடியும் மோட்டலுக்கே வந்தது எப்படி?
மால்கமுக்கும் அந்த 11 பேருக்கும் என்ன சம்பந்தம்?
மீதி இருக்கற நாலு பேத்துல யார் யாரெல்லாம் சாகப்போறாங்க?

இதுக்கெல்லாம் விடை வேணும்னா இந்தப் படத்தைப் பாருங்க. அடுத்தடுத்து திருப்பங்களா வரும் கிளைமேக்ஸ் சூப்பர். ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் கண்கொட்டாம பாக்கனும்னுவாங்களே அப்படி பாக்க வேண்டிய படம்..தண்ணிக் குடிக்கலாம்னு தலையைத் தூக்கினம்னா..எதாவது முக்கியமான சீன மிஸ் பண்ணிடுவோம்...வாய்ப்பு கிடைச்சா இல்லை...வாய்ப்பு ஏற்படுத்திக்கிட்டு பாருங்க பாஸ்...செம விருவிருப்பான படம்........


Wednesday, July 28, 2010

ஃபிளைட்பிளான் (2005) -திரை விமர்சனம் (Flightplan)


Robert Schwentk இன் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த படம்தான் ஃபிளைட்பிளான். விபத்தில் கணவன் இறந்துவிட...அந்த கணவனின் சடலத்துடன் தனது 6 வயது குழதையுடன் விவரிக்க முடியாத துயருடன் விமானத்தில் தன் சொந்த ஊருக்கு பயணிக்கிறாள் ஒரு பெண் (ஜூடி ஃபோஸ்டர்). தூக்க மாத்திரைகள் உட்கொண்டதால் சிறிது நேரம் தூங்கிவிடுகிறாள். எழுந்து பார்த்தால் அவள் குழந்தை அவள் அருகில் இல்லை. தன் குழந்தையைத் தேடி விமானத்தில் அங்கும் இங்கும் படபடப்புடன் அழைகிறார்..விமானத்தில் எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. நடுவானில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் இருந்து குழந்தை எவ்வாறு காணாமல் போயிருக்கும். அதுவரை சற்று மெதுவாக நகரும் திரைக்கதையில் வேகம் பிடிக்கிறது. என்ன ஆயிருக்கும் என்று நம்மையும் யோசனையோடே படம் பார்க்கத் தூண்டுகிறது திரைக்கதை.

குழந்தையைத் தேடி ஜூடி ஃபோஸ்டர் தவிக்கும் போது நமக்கும் தொற்றிக் கொள்கிறது அந்தத் தவிப்பு. அந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் யாருமே அந்தக் குழந்தையைப் பார்த்திருக்கவில்லை. விமானப் பணிப்பெண் ஒருவரும் விமானத்தில் அப்படி ஒரு குழந்தை பயணிக்கவே இல்லை. ஜூடி மட்டுமே விமானத்தில் ஏறினார் என்கிறார். சிறிது நேரத்தில் திடீரென ஒரு வயர்லெஸ் செய்தி வருகிறது. அதில் ஜூடியின் கணவன் கட்டிடத்தின் கூரையில் இருந்து விழுந்து இறக்கும் போது அவளது 6 வயது மகளும் உடன் இருந்ததாகவும் அவளும் அந்த விபத்தில் இறந்துவிட்டாள் என்ற செய்தி இருக்கிறது. இதைக்கேட்டு ஜூடி மிகவும் அதிர்ச்சி அடைகிறார். அவர் அதை மறுக்கிறார். ஆனால் அனைவருமே அவளை நம்ப மறுக்கின்றனர். அனைவரும் அவளை ஒரு மனநோயாளியைப் போல் பார்க்கின்றனர். நாமும் சிறிது நேரம் அவ்வாறுதான் நினைப்போம். அப்படித்தான் இருக்கிறது காட்சி அமைப்பு.

யாருமே அவளை நம்ப மறுக்கும் போதும் ஏர் மார்ஷல் கார்சன் மட்டும் அவளுக்கு உதவுகிறான். அவனிடம் எப்படியாவது எனக்கு உதவுங்கள் என் குழந்தை இறக்கவில்லை. அவள் இந்த விமானத்தில் என்னுடன் பயணம் செய்தது உண்மை அவள் நிச்சயம் இங்குதான் எங்கோ இருக்கிறாள் என்கிறாள். அவனும் சரி என்று கூறிவிட்டு. கேப்டனிடம் பேசுவதாகக் கூறிவிட்டு. கேப்டனைச் சந்திக்கிறான். அப்போதுதான் கதையே மாறுகிறது. அதற்குப் பின் நமக்கு எல்லாமே புரிந்துவிடுகிறது. எனினும் அதற்குப் பிறகு வரும் காட்சிகள் விருவிருப்பின் உச்சம்.

படம் முழுவதும் விமானத்திற்குள்தான் என்றாலும் படம் ஆரம்பித்து 10 நிமிடம் வரை சிறிது மெதுவாக நகர்ந்து பின் வேகமாக டேக் ஆஃப் எடுக்கிறது திரைக்கதை, அதற்குப் பிறகு இறுதி வரை நம்மையும் படபடப்போடே பார்க்கத் தூண்டுகிறது படம். 90 நிமிடங்களில் படம் முடிந்துவிடுகிறது. ஒரு நல்ல திரில்லர் பார்த்த திருப்தி நிச்சயம், கூடவே படத்தில் உணர்ச்சி மயமான காட்சிகளுக்கும் குறைவில்லை.

Friday, July 23, 2010

தில்லாலங்கடி திரை விமர்சனம்


பேராண்மை திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மெருகேறிய ஜெயம் ரவி, ரீமேக்தான் என்றாலும் தொடர்ந்து எண்டெர்டெய்ன்மெண்ட் + நெகிழ்ச்சியான காட்சிகள் என்று ஹிட் அடிக்கும் அவரது அண்ணன் ராஜா. இருவரும் மீண்டும் சேர்ந்திருப்பதால். நிச்சயம் இந்தப் படமும் நல்ல எண்டெர்டெய்னராக இருக்கும் என்ற நம்பிக்கையில் முதல் நாளே இதனைப் பார்த்தேன்..ஆனால்!!!

கதை! ரொம்ப சிம்பிள்ங்க....நம்ம ஹீரோ கிருஷ்ணா (ஜெயம் ரவி) எதைச் செய்தாலும் அதில் கிக் இருக்க வேண்டும் என்று விரும்பி ஏடாகூடமாக எதையாவது (உண்மையிலேயே என்ன செய்வது என்று தெரியாமல் எதையாவதுதான் செய்கிறார்....ஏன் ரவி ஏன்) செய்யும் ஆள். ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ள நினைக்கும் காதல் ஜோடியை அந்தப் பெண்ணின் தாயாரிடம் (நளினி) போட்டுக்கொடுத்து...சிறிது அலைக்கழித்து பின் திருமணம் செய்து வைப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது அவரது தில்லாலங்கடி. நளினியும் எம்.எல்.ஏவான என்னையே ரோடு ரோடா திரிய வைச்சிட்ட இல்ல...உன்னை என் காலடில விழ வைக்கிறேன் பார் என்று சவால் விடுகிறார். ஆனால் அதற்குப் பிறகு கடைசி காட்சிக்கு முன்பு வரை அவர் ஆளையே காணோம்.

ஒரு கட்டத்தில் அவர் நினைத்த கிக், பெரும் பணத்தை கொள்ளை அடித்து ஏழைக்குழந்தைகளுக்கு உதவுவதற்காக செலவழிப்பதில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து திருடனாகிறார். அவரைப் பிடிக்கத் துரத்தும் போலீஸாக ஷாம். இதுதான் கதை.

தமனாவுக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே ஏற்படும் காதலில் (அதைக் காதல் என்று சொன்னால்..மலேசியா முருகனே வந்து என் கண்ணைக் குத்திடுவார்னு நினைக்கிறேன்.....), பிரிவில் மீண்டும் காதலிப்பதில் எந்த அழுத்தமும், எதார்த்தமும்...அட எந்த கருமமும் இல்லைங்க...(கருமம் பிடிச்ச லவ் என்று ஜெயம் ரவி சொல்லிவிடுவதால்தான் அவர்கள் பிரிவார்கள்).

வடிவேலு மட்டும் சிறிது நேரம் சிரிக்க வைக்கிறார்...மீதி நேரம்.......என்ன செய்வது என்றே தெரியாமல் முழிக்கிறார். சந்தானம், கஞ்சா கருப்பு, மயில்சாமி..இன்னபிற காமெடியன்கள் எல்லோரும்..உள்ளேன் ஐயா..அவ்வளவே..அதற்கு மேல் அவர்களுக்கு வேலை இல்லை...

ரவியின் அப்பா அம்மாவாக பிரபுவும் சுஹாசினியும்.....பாவம் இப்படி ஒரு அப்பா அம்மாவாக இருப்போம் என்று அவர்களே நினைத்திருக்க மாட்டார்கள்.

ஜெயம் ராஜா படம் என்றால் குடும்பத்துடன் தைரியமாக பார்க்கலாம் என்று நம்பி இருந்தேன் இந்த படத்தில் அதற்கும் மண்....ஜெயம் ரவி தமனாவின் வயிற்றில் கை வைத்திருக்கிறார்...இதனால் மூடாகிவிடும் தமனா கையை எடுக்கச் சொல்லி ஒரு மாதிரியாகக் கேட்கிறார்...நம்ம ஹீரோ எடுக்கலைன்னா என்ன பண்ணுவே என்று கேட்கிறார்...அதற்கு ஹீரோயின் பண்ணும் காரியம். தவிர்த்திருக்கலாம். 

படத்தின் இறுதி 20 நிமிடங்களில் சுத்த ஆரம்பிக்கிறார்கள்.....ம்....என்ன சொல்றீங்க...நீங்க சொல்றது என்னன்னு எனக்குக் கேக்கலை...மீதி விமர்சனத்தையும் முடிச்சிடறேன்...அப்புறம் கேக்கறேன் உங்க கிட்ட...என்னன்னு.....

தன் மகளை ஒரு டிரைவருக்குக் கட்டி வைத்தவன் மீண்டும் வந்து அந்த எம்.எல்.ஏவைச் சந்தித்து 10 இலட்சம் பணம் கேட்கிறான். அந்த எம்.எல்.ஏவும் நான் உன்னை என் காலடியில் விழவைக்கிறேன் என்று சவால் விட்டேன். நான் பணம் கொடுப்பேன் என்று எப்படி நம்பி இங்கு வந்தாய் என்று கேட்கிறார். உடனே நம்ம ஹீரோ அந்த அம்மா கால்ல விழுந்துடறார். அவங்களும் உடனே மறுபேச்சின்றி 10 இலட்சம் எடுத்துக் கொடுத்துவிடுகிறார். முடியலைடா சாமி!

மலேசியாவில் ஜெயம் ரவிதான் திருடன் என்பதை ஷாம் கண்டுபிடித்துவிடுகிறார்..அப்புறம் எப்படி அவர் இந்தியா தப்பிவருகிறார்...(தப்பிவருகிறார் என்று தப்பா சொல்லிட்டேன்..படத்தில் அவர் இந்தியா திரும்பி வந்து தோல்வியைக் கொண்டாடி சரக்கடித்துவிட்டு பாட்டுப்பாடிக் கொண்டிருப்பார்). இந்தியா என்ன மலேசியாவின் பக்கத்து கிராமமா போர்வையப் போத்திக்கிட்டு கமுக்கமா இருட்டோட நடந்து போயிடறதுக்கு...

ஷாம் நடுரோட்டில் ஹீரோவைச் சுடுவதற்காக குறிபார்த்து ட்ரிக்கரை சுண்டும் இறுதி நிமிடங்களில் இரண்டு சாலைகளில் இருந்தும் நம்ம ஹீரோவை மறைத்தபடி பள்ளிக் குழந்தைகள் ஊர்வலம் வருகின்றனர். நான் குழந்தையா இருக்கும் போது இருந்து இந்த சீன நிறைய படத்துல பாத்துட்டேன் பாசு...ஊர்வலம் வந்த குழந்தைங்க பெருசானதுக்கு அப்புறமாவது..தயவு செஞ்சு இந்த மாதிரி சீனெல்லாம் விட்டுடுங்க..தாங்கலை. ஏழைக் குழந்தைகளுக்காக ஒருத்தர் கோடிக்கணக்குல பணம் கொடுக்கறாரு (வேற யாரு நம்ம ஹீரோதான் அதுன்னு இப்ப படம் பாக்க ஆரம்பிக்கிற சிறுவர்களுக்கு கூட தெரியும்), இன்னும் கொடுப்பாரு..அவருக்கு நன்றி தெரிவிச்சு..எல்லா ஸ்கூல் குழந்தைகளையும் ஊர்வலமா கூட்டிட்டு வர்றோம்னு ஒரு டீச்சர் சொல்வாங்க..இத்தனை குழந்தைகளை வைத்து நகரில் ஒரு ஊர்வலம் நடக்குது...போலீசா இருக்குற ஷாமுக்கு இது பத்தி முன்கூட்டியே எதுவும் தெரியாதாம்.

கடைசி காட்சி இன்னும் பிரமாதம்...தேர்தல் நிதி குவித்து வைக்கப்பட்டிருக்கும் கட்டிடத்துக்குள் கிட்டத்தட்ட 100, 200 போலீஸ்காரர்கள் காவல் காத்துக்கொண்டிருக்க நம்ம ஹீரோ ஒரே நிமிடத்தில் பலகோடிகளைத் திருடுகிறார்...எப்படி....ரொம்ப சிம்பிள்ங்க...அது...

நம்ம ஹீரோ ஒரு கார் எடுத்துக்கிட்டு அந்தக் கட்டிடத்துக்குப் போவாருங்க...அங்க வழி நெடுக காவலுக்கு இருக்கற போலீஸ்காரங்க...ஸ்கூல் ஃபங்க்சன்ல பிரபலங்கள் யாராவது வந்தாங்கன்னா ரெண்டு சைடும் ஸ்டூடன்ஸ நிக்க வைச்சிருப்பாங்களே..அப்படி பொட்டாட்டாம் லைன் கட்டி ஆடாம அசையாம நின்னுட்டிருக்காங்க....கார்ல வந்த நம்ம ஹீரோ கரெக்டா பணத்தைக் கொட்டி வெச்சிருக்கற அறையோட வெளிப்புறச் சுவர்ல போய் இடிப்பாரு...தப்பு தப்பு..வெளிப்புறச்சுவர் வழியா காரை உள்ளக் கொண்டு வந்திடுவாரு....சூப்பர் சீன் இல்ல...அங்க அமைச்சர் பெருமக்கள்..போலீஸ் மற்றும் நம்ம ஹீரோவோடவே வந்த போலீஸ் ஷாம் எல்லாரும் இருப்பாங்க...அவங்களுக்கெல்லாம்...புகை மண்டலத்துல என்ன நடக்குதுன்னே தெரியாது..ஆனா நம்ம ஹீரோ கரெக்டா பணத்தை லவட்டிக்கிட்டு வெளியே போய்டுவார்...வெளியன்னா ரொம்ப வெளியன்னு நினைச்சுடாதிங்க..ஜஸ்ட் அவர் உடைச்ச சுவருக்கு வெளியதான்...அங்க அவரோட ஆட்கள் இன்னொரு வண்டியோட ரெடியா இருப்பாங்க...அவங்க எப்படி வந்தாங்க...வரிசை கட்டி வந்த போலீஸ்லாம் அவங்களை எப்படி அனுமதிச்சாங்க....பணத்தை எடுத்துக்கிட்டு அவங்க தப்பிச்சு போனதும் போலீஸ் அவங்களைத் துரத்திப் பிடிக்கலையா....இந்தக் கேள்வி எல்லாம் நீங்க கேக்கக் கூடாது. இவ்லோ நேரம் கதை கேட்டுட்டு என்ன கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க ஆமாம்....

படத்தோட கிளைமேக்ஸ்தான் உச்சபட்ச காமெடி....தன்னோட காதலி ஆசைப்பட்டாங்கறதுக்காக நம்ம ஹீரோ திருட்டுக்கு நடுவுல சின்சியரா படிச்சி போலீஸ் ஆயிடறாரு. அப்புறம் ஜெயம் ரவியைப் புடிக்க ஜெயம் ரவியையே அப்பாயிண்ட் பண்ணிடறாங்க....இந்தப் படத்துல வடிவேல் ஒரு வசனம் பேசுவார்...எப்பவும் நான் அடிவாங்குவேன்..இதென்ன இவன் (மன்சூர் அலிகான்) நம்ம அடியப்பூறாம் வாங்கிட்டுப் போயிடறானேம்பார்...ஆனா படம் முடியும்போதுதான் புரியும்...உண்மைல அடிவாங்குனது மன்சூர் அலிகான் இல்லை..நாமதான்னு....

காதுல சுத்தன மொத்த பூவையும் உருவி எடுத்துட்டேன்...இப்ப கேளுங்க நீங்க என்ன கேட்டிங்க..காதுல நிறைய பூ சுத்திருந்ததால நீங்க கேட்டது காதுல விழல...கடைசியா நீ என்ன சொல்ல வர்றேன்னு கேக்கறீங்களா.....

படத்துக்கு கிக்கோ கிக்னு கேப்சன் போடுவாங்க...அடிக்கடி படத்துலயும் சொல்வாங்க..ஆனா அது கிக்கோ கிக் இல்லைங்க..மொக்கையோ மொக்கை...

இடைவேளைக்கு அப்புறம் கேம் ஸ்டார்ட்ஸ் நவ்னு அடிக்கடி சொல்றாங்க... கடைசியா நம்ம வடிவேலும் சொல்வார்..அவர் ஸ்டைல்லயே சொல்லப்போனா..

கேம் ஸ்டார்ட்ஸ் அவ்வ்வ்வ்வ்............


Thursday, July 22, 2010

தி அதர்ஸ் (2001) - திரை விமர்சனம்


 ஸ்பானிஸ் இயக்குனர் Alejandro Amenábar இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படம்தான் தி அதர்ஸ். ஸ்பெயினின் தேசியத் திரைப்பட விருதுகளான கோயா விருதுகளில் எட்டு விருதுகளைத் தட்டிச் சென்ற படம் இது. ஒரு பெண்ணும் அவளின் இரண்டு குழந்தைகளும் வசிக்கும் ஒரு வீட்டிற்குள்தான் முழுப்படமுமே.. ஆனால் நமக்கு எங்கும் சலிப்பு ஏற்படுத்தாத வகையில் அமைதியாய் மிரட்டியிருக்கிறார்கள் திரைக்கதையில்.


கிரேஸ் (நிக்கோல் கிட்மேன்) என்ற பெண் அவளது இரண்டு குழந்தைகளுடன் ஒதுக்குப்புறமான 50 அறைகள் கொண்ட ஒரு மாளிகையில் வசித்து வருகிறாள். அந்தக் குழந்தைகளுக்கு வெளிச்சம் என்றால் அலர்ஜி. அதனால் அவர்களை வெளிச்சமே காட்டாமல் பொத்திப் பொத்தி வளர்க்கிறாள். அவர்கள் வீட்டிற்கு வேலைக்காரர்களாக ஒரு வயதான தம்பதியினரும் அவர்களது ஊமைப் பெண்ணும் வந்து சேர்கிறார்கள். யார் அவர்கள் எதற்காக அங்கு வருகிறார்கள்?


ஒருநாள் கிரேஸிற்கு ஒரு அழுகுரல் கேட்கிறது.. அது தனது குழந்தைகளின் அழுகுரல் என எண்ணி பதறுகிறாள் கிரேஸ். அந்த இரண்டு குழந்தைகளில் மூத்தவளான ஆன்னே..அது விக்டர் என்ற சிறுவனின் அழுகுரல் என்று கூறுகிறாள். இது என்னுடைய வீடு இங்கிருந்து போய்விடுங்கள் என்று விக்டர் சொல்கிறான் என்கிறாள். இதனால் அவளது தம்பி நிக்கோலஸ் மிகவும் பயப்படுகிறான் (சிறுவனின் நடிப்பு சூப்பருங்க..இவனுக்காகவே இந்தப்படம் பாக்கலாம்). அதைத் தொடர்ந்து வரும் ஒவ்வொரு காட்சிகளும் நம்மை பரபரப்பூட்டுகின்றன. ஆன்னே சொல்வதை நம்பாத அவளது தாயார் அவளை எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கிறாள். உண்மையில் யார் இந்த விக்டர்?


குழந்தைகளுக்கு வெளிச்சம் என்றால் அலர்ஜி என்பதால் வீட்டில் உள்ள அனைத்து அறைகளும் எப்போதும் பூட்டப்பட்டே இருக்கும். ஒரு நாள் ஆள் இல்லாத பூட்டிய அறைக்குள் இருந்து பியானோ இசைக்கும் ஒலி கேட்கிறது. அங்கு சென்று பார்த்தால் யாரும் இல்லை..ஆனால் பியானோ திறந்து கிடக்கிறது..அங்கு என்னவோ தவறாக நடக்கிறது என்பதை கிரேஸ் புரிந்து கொள்கிறாள்..சிறுமி ஆன்னே அங்கு அவள் அடிக்கடி பார்க்கும் உருவங்களாக நால்வரை வரைகிறாள்.. அது யார் எனக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் அவளது தாய் ஈடுபடுகிறார். அப்போது மாளிகையில் உள்ள பழைய புகைப்படங்களை அவள் காண்கிறாள்.. அந்த புகைப்படங்களில் உள்ளோர் இறந்த பின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவை என்ற உண்மையை அந்த வேலைக்காரப் பெண் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியுறுகிறாள்..  ஒரு நாள் திடீரென இரண்டாம் உலகப்போரில் இறந்துவிட்டதாக நினைத்த அவளது கணவன் வீடு திரும்புகிறான். அவனும் வந்து ஒரே நாள் வீட்டில் தங்கிவிட்டு நான் திரும்பிச் செல்ல வேண்டும் என சென்றுவிடுகிறான். அவன் ஏன் சென்றான்?

ஒரு நாள் காலையில் குழந்தைகள் எழுந்தவுடன் அதிர்ச்சியடைந்து அலறுகின்றன.. என்ன என்று வந்து பார்க்கும் கிரேஸுக்கும் அதிர்ச்சி...வீட்டில் வெய்யிலை மறைப்பதற்காக போடப்பட்டிருந்த அனைத்து திரைச்சீலைகளும் காணவில்லை...அனைத்துமே அகற்றப்பட்டிருக்கின்றன..பதட்டத்துடன் குழந்தைகளை வெயில்படாத இடத்தில் வைத்துவிட்டு..இதனைச் செய்தது வேலைக்காரப் பெண்மணியாகத்தான் இருக்கும் என நினைத்து அவர்களை திட்டி வீட்டை விட்டு அனுப்பிவிடுகிறாள். பிறகு அவர்களை அனுப்பிய பிறகு அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்க்கிறாள்..அங்கு ஒரு புகைப்படம் இருக்கிறது. அந்த புகைப்படத்தைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியடைகிறாள். அவள் ஏன் அதிர்ச்சி அடைந்தாள். அந்த புகைப்படத்தில் இருந்தது என்ன?

இரவு ஆனதும் அவளது குழந்தைகள் இரண்டும் அவரது தகப்பனைத் தேடி வீட்டை விட்டு வெளியேறுகின்றன..அவர்கள் வீட்டின் அருகே இருக்கும் தோட்டத்தின் அருகில் ஓடிச்சென்ற ஆன்னே..அங்கு இருக்கும் கல்லறைகளில் எழுதப்பட்டிருப்பவைகளைப் படித்து அதிர்ச்சி அடைகிறாள். அதில் என்ன எழுதப்பட்டிருந்தது?

திரைக்கதையில் இந்த மர்மங்கள் அனைத்தும் இறுதியில் திடுக்கிடும் விதத்தில்  முடிச்சவிழ்க்கப்படும் போது நமக்கும் ஆச்சரியமாகவும், சிறிது திகிலூட்டுவதாகவும் இருக்கிறது. திரில்லர் விரும்பிகள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் இந்தப்படம். வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் பாருங்கள்.


Sunday, July 18, 2010

மதராசபட்டினம் (2010) - திரை விமர்சனம்



கமர்சியல் வெற்றிதான் முக்கியம் என பஞ்ச் டயலாக்குகள் குத்துப்பாட்டுகள்....மீதி எல்லாம் மொக்கையான காட்சிகள் என எடுக்காமல் தைரியமாக இடைச்செருகல் இல்லாத திரைக்கதையை இயக்கியதற்காக விஜய்க்கும், தொடர்ந்து வித்தியாசமான படங்களையே தயாரித்துவரும் AGS நிறுவனத்துக்கும் முதலில் ஒரு நன்றி....

ஒரு வெள்ளைக்காரக் கவர்னர் பெண்ணுக்கும் இந்திய சலவைத் தொழிலாளி ஒருவனுக்கும் ஏற்படும் காதல்தான் படம். அதனை நம் மனதிற்கு மிகவும் அருகில் சொல்லி நம்மை ஆச்சரியப்படுத்துகின்றனர் இந்தப் படக்குழுவினர்.

பரிதியிடம் (ஆர்யா) ஒரு பொருளைக் கொடுப்பதற்காக சாவின் விளிம்பில் நிற்கும் அவனது பழைய காதலி எமி வில்கின்சன் (கரோல் ட்ரங்க்மர்) இந்தியா வருவதில் இருந்து துவங்குகிறது படம். அவனைத்தேடுவதற்கு அவரிடம் இருக்கும் ஒரே தடயம், 60 ஆண்டுகளுக்கு முன் அவர் எடுத்த பரிதியின் ஒரு புகைப்படம் மட்டுமே...


தேடுதல் நடந்து வரும் போது எமி அவரது பழைய நிகழ்வுகளை நினைத்துப் பார்ப்பதாகப் படம் நகர்கிறது. இளம் வயது எமியாக எமி ஜேக்சன். இவரது அழகு, நடிப்பு.......இரண்டுமே அசத்தல். முதிர்ந்த எமியாக வரும் கரோல் ட்ரங்க்மரும் சிறப்பாய் நடித்திருக்கிறார்...படத்தில் பெரும்பாலும் இவரது கண்கள் மட்டுமே நடிக்கின்றன....அதிலும் ஒவ்வொரு முறையும் வெள்ளைக்காரிதானே, இவருக்கு எங்கே தெரியப்போகிறது என (அவருக்கு தமிழ் தெரியும் என்பது தெரியாமல்) அவரது பேத்தியிடம் ஏமாற்றிப் பணம் வாங்கும் போதெல்லாம்....அவர் வெளிப்படுத்தும் பார்வை......நமக்கே கூசுதுங்க............


தனக்கு மட்டுமே ஸ்கோப் இருந்தால்தான் நடிப்பேன் என அடம்பிடிக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில், ஆர்யா வித்தியாசமானவராக இருக்கிறார்..........இதில் அவரது பாத்திரம் உணர்ந்து அழகாய் நடித்திருக்கிறார். இவர் போலவே எல்லா ஹீரோக்களும் மாறினால் தமிழில் நிச்சயம் நிறைய நல்ல படங்களை எதிர்பார்க்கலாம்....

வித்தியாசமான படங்கள் என்றாலே அது என்னவோ G.V பிரகாஷ் குமாருக்கே வாய்ப்பு கிடைக்கிறது. இந்தப் படத்தில் பின்னணி இசையிலும் சரி...பாடல்களிலும் சரி.....படத்துடன் ஒன்ற வைத்திருக்கிறார். அதிலும்...ஆர்யா ஆங்கிலத்தில் கற்றுக்கொண்ட வார்த்தைகளை எமியிடம் கூற முயற்சித்துத் தடுமாற....மறந்திட்டியா...என அவர் திடீரேன தமிழில் கேட்கும்போது ஆர்யா அவரை ஆச்சரியத்துடன் பார்க்க...பின்னணியில் தான தோம்தனன.....என ஆரம்பித்து, பூக்கள் பூக்கும் தருணம்....பாடல் ஆரம்பிக்கிறது....அந்த இடத்தில் நாமும் அவர்களுடன் சேர்ந்து அதே உணர்வுடன் பயணிக்கிறோம்.......அசத்தல்....அதே போன்று காற்றே.... பாடலிலும் அதே உணர்வு........அருமை..............


கிரீடம், பொய் சொல்லப்போறோம் போன்ற அவரது முந்தைய படங்களில் சற்று சருக்கிய இயக்குனர் விஜய்....இதில் மிகவும் கவனமாக, கடினமாக உழைத்திருக்கிறார்....அவரது மற்றும் அவரது குழுவினரின் உழைப்பு ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது.......................கலக்கிட்டீங்க விஜய்.............

படத்தில் நெகிழவைக்கும் காட்சிகள் நிறைய....

பூக்கள் பூக்கும் தருணம் பாடல் ஆரம்பம்..........
400 வருசம் கழிச்சு முதல் முறையா வெள்ளைக்காரனை அடிச்சிருக்கோம் என்று எம்.எஸ் பாஸ்கர் சொல்வது........(உண்மையில் அந்தச் சண்டை முழுவதுமே நெகிழ்ச்சிதான்)...........
நாசரும் பாலாசிங்கும் கட்டித்தழுவும் இடம்......
சுதந்திரம் கிடைத்தவுடன் பெரியவர் ஒருவர் எமியின் ஆடையில் இந்தியக்கொடியைக் குத்திவிட்டு அவர் எனப்பார்த்து அதைத் திரும்ப எடுக்க வரும்போது அவர் அதை மறுப்பது.......
எமி சலவைத்தொழிலாளிகளின் குழந்தைகளிடம்.......அவர் கவர்னராகி....பள்ளிக்கூடம் கட்டுவேன், கல்லூரி கட்டுவேன், மருத்துவமனை கட்டுவேன்....எனச்சொல்லும் போது ஒரு சிறுமி...."எங்க வண்ணாந்தாரையை திருப்பித் தருவீங்களா....." எனக் கேட்குமிடம்...
எமி தன் காதலன் உயிர் பிழைத்தால் போதுமென...ஆர்யாவை படகில் இருந்து தள்ளிவிட.....மயங்கிய நிலையிலும் அவரது கைகள் படகு முனையைப் பிடித்திருக்கும் காட்சி.........
இன்னும்........................

இந்தப் படத்துல குறையே இல்லையா.............நிறைய நல்ல விசயம் இருக்கும்போது குறைகளைப் பெருசா நினைக்க வேனாம் இல்லீங்களா...

போங்க போய் இந்தப்படத்தை தியேட்டர்ல பாருங்க...............

மொத்தத்தில் உணர்வுப்பூர்வமான ஆட்களின் சிறந்த படங்களின் பட்டியலில் இந்தப் படத்திற்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு.........................