Thursday, July 22, 2010

தி அதர்ஸ் (2001) - திரை விமர்சனம்


 ஸ்பானிஸ் இயக்குனர் Alejandro Amenábar இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படம்தான் தி அதர்ஸ். ஸ்பெயினின் தேசியத் திரைப்பட விருதுகளான கோயா விருதுகளில் எட்டு விருதுகளைத் தட்டிச் சென்ற படம் இது. ஒரு பெண்ணும் அவளின் இரண்டு குழந்தைகளும் வசிக்கும் ஒரு வீட்டிற்குள்தான் முழுப்படமுமே.. ஆனால் நமக்கு எங்கும் சலிப்பு ஏற்படுத்தாத வகையில் அமைதியாய் மிரட்டியிருக்கிறார்கள் திரைக்கதையில்.


கிரேஸ் (நிக்கோல் கிட்மேன்) என்ற பெண் அவளது இரண்டு குழந்தைகளுடன் ஒதுக்குப்புறமான 50 அறைகள் கொண்ட ஒரு மாளிகையில் வசித்து வருகிறாள். அந்தக் குழந்தைகளுக்கு வெளிச்சம் என்றால் அலர்ஜி. அதனால் அவர்களை வெளிச்சமே காட்டாமல் பொத்திப் பொத்தி வளர்க்கிறாள். அவர்கள் வீட்டிற்கு வேலைக்காரர்களாக ஒரு வயதான தம்பதியினரும் அவர்களது ஊமைப் பெண்ணும் வந்து சேர்கிறார்கள். யார் அவர்கள் எதற்காக அங்கு வருகிறார்கள்?


ஒருநாள் கிரேஸிற்கு ஒரு அழுகுரல் கேட்கிறது.. அது தனது குழந்தைகளின் அழுகுரல் என எண்ணி பதறுகிறாள் கிரேஸ். அந்த இரண்டு குழந்தைகளில் மூத்தவளான ஆன்னே..அது விக்டர் என்ற சிறுவனின் அழுகுரல் என்று கூறுகிறாள். இது என்னுடைய வீடு இங்கிருந்து போய்விடுங்கள் என்று விக்டர் சொல்கிறான் என்கிறாள். இதனால் அவளது தம்பி நிக்கோலஸ் மிகவும் பயப்படுகிறான் (சிறுவனின் நடிப்பு சூப்பருங்க..இவனுக்காகவே இந்தப்படம் பாக்கலாம்). அதைத் தொடர்ந்து வரும் ஒவ்வொரு காட்சிகளும் நம்மை பரபரப்பூட்டுகின்றன. ஆன்னே சொல்வதை நம்பாத அவளது தாயார் அவளை எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கிறாள். உண்மையில் யார் இந்த விக்டர்?


குழந்தைகளுக்கு வெளிச்சம் என்றால் அலர்ஜி என்பதால் வீட்டில் உள்ள அனைத்து அறைகளும் எப்போதும் பூட்டப்பட்டே இருக்கும். ஒரு நாள் ஆள் இல்லாத பூட்டிய அறைக்குள் இருந்து பியானோ இசைக்கும் ஒலி கேட்கிறது. அங்கு சென்று பார்த்தால் யாரும் இல்லை..ஆனால் பியானோ திறந்து கிடக்கிறது..அங்கு என்னவோ தவறாக நடக்கிறது என்பதை கிரேஸ் புரிந்து கொள்கிறாள்..சிறுமி ஆன்னே அங்கு அவள் அடிக்கடி பார்க்கும் உருவங்களாக நால்வரை வரைகிறாள்.. அது யார் எனக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் அவளது தாய் ஈடுபடுகிறார். அப்போது மாளிகையில் உள்ள பழைய புகைப்படங்களை அவள் காண்கிறாள்.. அந்த புகைப்படங்களில் உள்ளோர் இறந்த பின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவை என்ற உண்மையை அந்த வேலைக்காரப் பெண் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியுறுகிறாள்..  ஒரு நாள் திடீரென இரண்டாம் உலகப்போரில் இறந்துவிட்டதாக நினைத்த அவளது கணவன் வீடு திரும்புகிறான். அவனும் வந்து ஒரே நாள் வீட்டில் தங்கிவிட்டு நான் திரும்பிச் செல்ல வேண்டும் என சென்றுவிடுகிறான். அவன் ஏன் சென்றான்?

ஒரு நாள் காலையில் குழந்தைகள் எழுந்தவுடன் அதிர்ச்சியடைந்து அலறுகின்றன.. என்ன என்று வந்து பார்க்கும் கிரேஸுக்கும் அதிர்ச்சி...வீட்டில் வெய்யிலை மறைப்பதற்காக போடப்பட்டிருந்த அனைத்து திரைச்சீலைகளும் காணவில்லை...அனைத்துமே அகற்றப்பட்டிருக்கின்றன..பதட்டத்துடன் குழந்தைகளை வெயில்படாத இடத்தில் வைத்துவிட்டு..இதனைச் செய்தது வேலைக்காரப் பெண்மணியாகத்தான் இருக்கும் என நினைத்து அவர்களை திட்டி வீட்டை விட்டு அனுப்பிவிடுகிறாள். பிறகு அவர்களை அனுப்பிய பிறகு அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்க்கிறாள்..அங்கு ஒரு புகைப்படம் இருக்கிறது. அந்த புகைப்படத்தைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியடைகிறாள். அவள் ஏன் அதிர்ச்சி அடைந்தாள். அந்த புகைப்படத்தில் இருந்தது என்ன?

இரவு ஆனதும் அவளது குழந்தைகள் இரண்டும் அவரது தகப்பனைத் தேடி வீட்டை விட்டு வெளியேறுகின்றன..அவர்கள் வீட்டின் அருகே இருக்கும் தோட்டத்தின் அருகில் ஓடிச்சென்ற ஆன்னே..அங்கு இருக்கும் கல்லறைகளில் எழுதப்பட்டிருப்பவைகளைப் படித்து அதிர்ச்சி அடைகிறாள். அதில் என்ன எழுதப்பட்டிருந்தது?

திரைக்கதையில் இந்த மர்மங்கள் அனைத்தும் இறுதியில் திடுக்கிடும் விதத்தில்  முடிச்சவிழ்க்கப்படும் போது நமக்கும் ஆச்சரியமாகவும், சிறிது திகிலூட்டுவதாகவும் இருக்கிறது. திரில்லர் விரும்பிகள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் இந்தப்படம். வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் பாருங்கள்.