Search This Blog

Saturday, January 31, 2015

இசை - திரை விமர்சனம்


ஒரு இசையமைப்பாளரின் இசை வாழ்வு.. அவரது தலைக்கனத்தால் முடிய, அங்கு அவரது சிஷ்யனின் வளர்ச்சி துவங்குகிறது. புகழ் போதையில் மிதந்த ஒருவன், அது அப்படியே தன் கீழ் வேலை செய்தவனுக்கே போக... அதை தாங்கிக்கொள்ள முடியாமலும், தன் புகழை மீட்டெடுக்கவும் அவன் எந்த எல்லை வரை செல்கிறான் என்பதே இசை.

படத்தில் சிஷ்யனாக எஸ்.ஜே. சூர்யா, இயற்கையாக உருவாகும் சத்தங்களை இவர் இசையாக உருவாக்கும் காட்சிகள் அழகு. பின்னர் அதே சத்தங்களை வைத்தே அவரை உளவியல் ரீதியாக வீழ்த்தும் காட்சிகள் அதிரடியாக இருக்கின்றன.

படம் முழுக்கவே சத்யராஜ் வரும் காட்சிகள் எல்லாம் அதகளம். அலட்சியமாக அசத்துகிறார். நான் துப்புவதுதான் இசை என அகங்காரமாக பேசும் போதும் சரி, மார்க்கெட் இழந்து வீழ்ந்த அவமானத்தை வெளிப்படுத்தும் போதும் சரி தேர்ந்த நடிப்பு. இவரது உளவியல் தொல்லை தாங்க முடியாமல் கிட்டத்தட்ட மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சூர்யா இவர் காலில் விழ... அப்போதும் அவரது தெளிவை சோதிக்கும் காட்சி அருமை.

சத்யராஜ் வீட்டு வேலைக்காரனாக கஞ்சா கருப்பு... படம் முழுக்கவே மைன்ட் வாய்சிலேயே வசனம் பேசி , முகபாவங்களிலேயே நடிப்பை வெளிப்படுத்தும் பாத்திரம்... நன்றாகவே செய்திருக்கிறார்.

தம்பி இராமையாவும் இருக்கிறார். வரும் காட்சிகளில் எல்லாம் நம் கேட்கும் திறனையும் மீறி.. ஹை டெசிபலில் கத்தி வசனம் பேசுவது..எரிச்சலாய் இருந்தது.

இதற்கு முந்தைய படங்களில் ஒரு நடிகனாக எஸ். ஜே. சூர்யாவை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஆனால் இதில் கச்சிதமாக பொருந்துகிறார். குறிப்பாக இயற்கை சத்தங்களை சிரத்தையாக கவனிக்கும் காட்சிகள் , இரண்டு மாத சிசுவுடன் பேசும் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். ஒரு இசையமைப்பாளராகவும் அசத்தி இருக்கிறார்... பின்னணி இசை, பாடல்கள் இரண்டுமே பக்கா...

படம் மூன்று மணி நேரம் பத்து நிமிடங்கள் ஓடுகிறது. ஆனால் இவ்வளவு நேரம் ஓடுவது தெரியாமல் காப்பாற்றி இருப்பது... படத்தின் வசனங்கள். நிறைய வசனங்களுக்கு தியேட்டரில் கைதட்டி ரசித்தனர்.

ஒளிப்பதிவு மிக அருமை, குறிப்பாக அந்த மலைப்பிரதேச காட்சிகள் எல்லாம் எல்லா ஃப்ரேமும் புகைப்படமா எடுத்து ஒட்ட வச்ச மாதிரி அழகு. ஆர்ட் டைரக்டர் செமயா வேலை பாத்திருக்கார் இதுல, செட்டிங்ஸ் எல்லாமே சூப்பர்.

கதாநாயகியாக முதுமுகம்!!... சாரி புதுமுகம் சாவித்திரி. நன்றாக நடிப்பு வருகிறது. ஒரு ஜாடையில் அமலா போல இருக்கிறார். என்ன ஒன்னு இப்ப இருக்க அமலா போல!! ஒரே ஒரு காட்சியில் அன்பே ஆருயிரே நிலா வருகிறார்.

முதல் பாதியில் தொடர்ந்து பத்து நிமிடங்கள்... சூடேற்றும் காட்சிகள் வருவதால், குடும்பத்துடன் பார்க்க முடியாது.

படத்தில் உள்ள லாஜிக்கல் மீறல்களை எழுதி வைத்து கேள்வி கேட்கும் விமர்சகர்கள் வாயடைக்கவே இப்படி ஒரு கிளைமேக்ஸ் வச்சிருக்கார் போல. உண்மைலயே தில்லுதான். வித்தியாசமாதான் இருக்கு இதுவும்.

இறுதியில் அந்த வேலைக்காரன் அவரிடம்... "இப்பதான சாப்பிட்டிங்க இன்னும் பசிக்குதா" என்று கேட்டு வெறிப்பது போல் முடித்திருந்தால் இன்னும் அதகளமாக இருந்திருக்கும்.

இசை - ஒரு முறை பார்க்கலாம், பல முறை கேட்கலாம்.

2 comments:

  1. தெளிவான விமரிசனம் ரமேஷ் சார்

    ReplyDelete
  2. தெளிவான விமரிசனம் ரமேஷ் சார்

    ReplyDelete