Monday, August 16, 2010

பேருந்தில் நீ எனக்கு.......நம்மள்ள பெரும்பாலானோருக்கு நம்ம சின்ன வயசுல பயணம்னாலே குஷியான ஒரு விசயமாதான் இருந்திருக்கும் இல்லீங்களா...அதுவும் என்னைப் பொறுத்தவரைக்கும் ஜன்னலோர இருக்கையும், மெதுவாவும் ஓட்டாம வேகமாவும் ஓட்டாம மிதமான வேகத்துல ஓட்டத் தெரிஞ்ச ஓட்டுனரும் அப்புறம் அந்த பேருந்துல நல்ல சவுண்ட் சிஸ்டமும் இருந்திட்டா...அந்தப் பயணம் எனக்கு ரொம்ப இனிமையான பயணமா இருக்கும்...நம்ம வீட்ல கேக்கறதைவிட துல்லியமான தரத்தோட அந்த பேருந்துல பாடல்களை கேட்டுக்கிட்டே சாலையோரம் வேடிக்கை பார்த்துக்கிட்டே டிராவல் பண்றது இருக்கே...அது ஒரு வித்தியாசமான சுகம்ங்க...இப்ப இதை எழுதும்போது கூட அந்த சுகத்தை என்னால உணர முடியுது....

ஆனா இப்ப சமீப நாட்கள்ல பயணங்களின் போது அந்த சுகத்தை நாம முற்றிலும் இழந்திட்டோம்னுதான் சொல்லுவேன்..அதுக்குக் காரணம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி. இந்த ஜந்து இணைக்கப்பட்ட பேருந்துகள் வந்த பிறகு சுகமான பயணம் கிட்டத்தட்ட சோகமான பயணமா மாறி, இப்ப எரிச்சலான பயணமாவும் மாறிடுச்சு இல்லீங்களா...தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத பேருந்துகளாக கிடைக்குமா என மனசு தேட ஆரம்பிச்சிடுச்சி...ஆனா இப்ப தொலைக்காட்சி இல்லாத பேருந்துகள் ''தேடினாலும் கிடைக்காது'' நிலைதான்..நூறு பேருந்துகள்ள ஐந்து பேருந்துகள்ல தொலைக்காட்சிப் பெட்டி இல்லாம இருந்தா அதிசயம்.....

அதுவும் நான் அடிக்கடி சேலத்துல இருந்து பெங்களூருக்கு பயணம் செய்பவன்...இந்த ரூட்ல வர பேருந்து நடத்துனர்களுக்கு டிராவல் பன்ற ஜனங்க மேல என்ன கோபமோ.....அவங்க போடற படம்லாம்...பயங்கரமா இருக்கும். நீங்களும் இந்த ரூட்ல அடிக்கடி டிராவல் பன்ற நபரா இருந்தா நீங்களும் அந்தக் கொடுமைய அனுபவிச்சிருப்பீங்க. அவங்க போடற படம்லாம்...எதுன்னு கேட்டீங்கன்னா நீங்க தெரிச்சு ஓடிடுவீங்க........இளைய தளபதி விஜய் அவர்களின் மதுர, திருப்பாச்சி அப்புறம் புரட்சித் தளபதி விஷால் அவர்களின் திமிரு, இந்த மூனு படங்களையே சலைக்காம திரும்பத் திரும்ப போட்டு சாவடிப்பாங்க......வாரா வாரம் ஊருக்கு போயிட்டு வர என்னை மாதிரி ஆளுங்க எல்லாம் ரொம்ப பாவம்ங்க....இந்த படத்தோட டைட்டில் போடும் போது யார் யார் மூஞ்செல்லாம் கொலை வெறியோட மாறுதோ அவங்கெல்லாம் ரெகுலரா அந்த ரூட்ல வர்ரவங்கன்னு சொல்லிடலாம் நீங்க...அவளோ பட்டுருக்கம் நாங்க....ஆனா இந்தக் கொடுமை எல்லாம் ஒரு ரெண்டு வருசம் முன்னாடிதான்..இப்ப அந்தக் கொடுமை இல்ல...அதாவது அரசுப் பேருந்துகள்ள...இப்பல்லாம்...பூம் டீவின்னு ஒன்னு வந்திருக்கு...அது வந்த பிறகு....அப்பாடா...மேற்கண்ட படங்கள்ள இருந்து இத்தனை வருசம் கழிச்சு ஒரு வழியா தப்பிச்சம்டா சாமி..அப்படின்னு சந்தோசப்பட்டேன்.

ஆனா யாரோட சந்தோசம்தான் நீடிச்சிருக்கு இந்த உலகத்துல சொல்லுங்க....இப்ப அதுவும் அதோட வேலைய காட்ட ஆரம்பிச்சிடுச்சி..............இந்த பூம் டிவியும் போட்ட படத்தையே திரும்பப் போடறது....இல்லன்னா போட்ட பாடல்களையே திரும்ப போடறது....அப்படின்னு போயிட்டிருக்கு....அதுலயும் அந்த டிவில அடிக்கடி....நம்ம ஊர்வசி நாகாவுக்காக உப்புமா கிண்டிட்டு வந்திர்ராங்க, நம்ம நாசர் உலகத்தரத்திற்கான உன்னத தயாரிப்புன்னு அசத்தபோவது யாரு காஸ்ட்யூம்ல ஒரு கம்பிய தூக்கிட்டு வந்திடறாரு....பார்வைக் குறைபாடால என் பார்வை மங்கனப்போன்னு ஒரு பாட்டிம்மா வந்திடுது....பப்பாளிப்பழத்தத் துக்கிக்கிட்டு நம்ம தமன்னா வந்திடறாங்க...வீட்ல எல்லாருக்கும் ஒரே மருந்தான முஸ்லி பவர் எக்ஸ்ட்ராவ தூக்கிட்டு ஜாக்கி செராஃப் வந்திடுறாரு....இந்த விளம்பரதாரர்கள் மட்டும்தான் அங்க நிரந்தர காண்ட்ராக்ட் போல...இதுங்க மட்டும்தான் திரும்ப திரும்ப வரும்....நாலரை மணி நேரம் டிராவல் பன்றதுக்குள்ள இந்த விளம்பரங்கள் ஒவ்வொன்னையும் தலா 20, 25 தடவையாவது பாத்தே ஆகனும் நாம...

மேற்கண்ட படங்கள்ட்ட இருந்து காப்பாத்த பூம் டிவி வந்தது...இப்ப இதுக்கிட்ட இருந்து காப்பாத்த யார் வருவாங்கன்னு தெரியலை....இதுல நேத்து என்ன ஆச்சுன்னா....மழைப்பாடல்களை எல்லாம் சேத்து வரிசையா ஒளிபரப்பிட்டு இருந்தாங்க...மழைப்பாடல்கள்னா கேக்கனுமா என்ன...எல்லாம்...நம்ம மிட் நைட் மசாலா டைப் பாட்டுதான்..அப்புறம் கொஞ்ச நேரத்துல பழைய பாட்டு ஒன்னு வந்திச்சு...அப்பாடான்னு கொஞ்சம் நிம்மதியானேன்..அடுத்த பாட்லயே..அந்த கால ஸ்ரீதேவி வந்து...அட போனா போகுது புடவை பறக்குது புடிச்சுக்கன்னு...பாட ஆரம்பிச்சு நம்ம ரஜினியை மூடு ஏத்த முயற்சி பண்ணிட்டு இருந்தாங்க.....எவ்வளவு கூச்சப்பட வைக்கிற மாதிரி காட்சிக்கும் நம்ம மக்கள் இப்பல்லாம் கவலையேபடாம, அசராம பாக்கறாங்க.....(உபயம்: தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகள்) இதுல சில ரசிகர்கள் சவுண்ட் அதிகம் வைக்கச்சொல்லி சவுண்ட் கொடுத்தாங்க...உடனே நம்ம ஆபரேட்டர் (நடத்துனர்) வந்து சவுண்ட் ஜாஸ்தியா வச்சிட்டு போனாரு....கொஞ்ச நேரத்துல நம்ம பிராசாந்த், மதுபாலா, சிவரஞ்சனி, சுஜாதா நடிச்ச செந்தமிழ் செல்வன்னு ஒரு படம் போட்டாங்க....தாங்கலைடா சாமி........எப்படி எல்லாம் படம் எடுத்து வச்சிருக்காங்களேன்னு...கவலையா போச்சு எனக்கு.....சேலம் போனவுடனே முஸ்லி பவர் எக்ஸ்ட்ரா வாங்கி இந்த டிராவல்ல இழந்த சக்திகளைத் திரும்பப் பெறனும்னு நினைச்சிக்கிட்டேன்...அந்த அளவுக்கு பிராணன வாங்கிடறாங்க....த நெக்ஸ்ட் பிக் மீடியா என்னவா இருக்கும்னு இப்பவே பயம் வந்திடுச்சுங்க...