Search This Blog

Friday, December 17, 2010

உயிரின் விலை - சிறுகதை

"இங்க பாரு விஜய்.. இன்னுமா அதை முடிக்கலை நீ.. எப்ப கேட்டாலும் இதை முடிச்சுட்டு பண்றேன்.. அதை முடிச்சிட்டு பண்றேன்னு எதாவது சாக்கு சொல்லிக்கிட்டே இருக்க. உன்னால என்னோட வேலையை நான் சொல்ற நேரத்துக்கு முடிக்க முடியலைன்னா நான் வேற ஆள் பாக்க வேண்டியிருக்கும்.. உன்னைவிட நல்லா வேலை பாக்கற சின்னப் பசங்க ரொம்ப கம்மி சம்பளத்துக்கே கிடைப்பாங்க. முடிச்சுக் கொடுத்திட்டு நீ வீட்டுக்கு போ"

இந்த வார்த்தைகள் திரும்பத் திரும்ப என் மனதில் ஓடின. இந்த நிறுவனத்தில் நான் சேர்ந்து 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த மேனேஜருக்காக நான் கடுமையாக உழைத்து வருகிறேன். அவரும் என்னை மிகவும் மதித்தார். ஆனா இப்ப கொஞ்ச நாளா வேண்டுமென்றே அளவுக்கு மீறி வேலைகள் தரப்படுகின்றன. மேனேஜர் என்னை ஒருமையில் அழைக்க ஆரம்பித்தார். முடிக்க முடியாது என்று தெரிந்தே இவ்வளவு வேலையை சுமத்துகிறாரே என்று முதலில் நினைத்தேன்.

ஆனால் அப்புறம்தான் புரிந்தது முடிக்கக் கூடாது என்றே அவ்வாறு வேலை தருகிறார் என்பதை. அடுத்த வேலை தேடினால் உடனே கிடைத்துவிடும் தான் ஆனால்.. என்னுடைய இத்தனை வருட கடுமையான உழைப்புக்கு இதுதான் மரியாதையா.. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தாலே இந்தக் கொடுமை சகஜம்தான்.. முடிந்த வரை நம் வேலையைப் புடிங்கிக்கொண்டு நமக்கு கெளரவமான சம்பளம் தர வேண்டிய கட்டம் வந்ததும் நம்மை கழட்டி விட்டு விடுவது. ஆனால் பெயரை வேண்டுமென்றே ரிப்பேராக்கி அனுப்ப முயற்சிப்பதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை.. கோபம் கோபமாக வந்தது. ஆனால் என்ன செய்ய... என் கோபத்தை இதோ இப்போது நான் ஓட்டிவரும் வண்டி மீதுதான் காட்டுகிறேன்.. வேறு யாரிடம் காட்ட முடியும்..

"ஆஆஆ ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்"

அச்சச்சோ இதையெல்லாம் நினைத்துக்கொண்டே வண்டி ஓட்டி வந்ததில் ஒரு திருப்பத்தில் ஒரு ஆளின் மீது ஏற்றிவிட்டேன்.
படபடவென நான்கைந்து பேர் என்னை சூழ்ந்து கொண்டனர். கன்னடத்தில் எதேதோ திட்டினர். எனக்குப் புரியவில்லை. அதில் ஒருவன் என் முதுகில் நான்கைந்து அடி அடித்துவிட்டான். தலை மீது எச்சில் துப்பினான். அது நான் போட்டிருந்த ஹெல்மெட்டில் விழுந்து வழிந்தது.

எனக்கு அதிர்ச்சியாகவும், அவமானமாகவும் இருந்தது.. என்ன இது.. இது போன்ற தாக்குதலை நான் இதுவரை பார்த்தது கூட இல்லை.. நான் வசிப்பது பெங்களூரில், அந்த திருப்பத்தை ஒட்டிய பகுதி சேரிப்பகுதியாக இருந்தது. இந்த கூட்டம் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்.. நான் வண்டியை அவர்களில் ஒருவன் மீது ஏற்றிவிட்டேன் போலிருக்கிறது...

எனக்கு உடல் நடுங்கியது... என்னடா விஜய் உனக்கு நேரமே சரியில்லையே... இப்படி வந்து மாட்டிக்கிட்டியே.. போச்சு போ.. இன்னிக்கு கைல இருக்கற பணம்.. கைல, கழுத்துல போட்டிருக்கற நகையெல்லாம் புடிங்கிக்கிட்டுதான் விடப்போறானுங்க.. சமீபத்தில் இவ்வாறு என் நண்பன் ஒருவனை நான்கைந்து பேர் சூழ்ந்து கொள்ள... ஏ.டி.எம் கார்டு கூட வைத்திருக்காத அவன்.. நாம்தான் எதையும் எடுத்து வரவில்லையே நம்மை விட்டு விடுவார்கள் என்று நினைத்திருக்கிறான். ஆமாம் விட்டு விட்டார்கள் அவன் ஓட்டி வந்த பைக்கைப் பிடிங்கிக்கொண்டு. இப்போது அவன் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு நடையாய் நடந்து கொண்டிருக்கிறான். அந்தச் சம்பவமெல்லாம் நினைவில் வந்து கிலி ஏற்படுத்தியது.

எனக்கு என் மீதே கோபம் வந்தது.. நாயே முதல்ல பேரை மாத்துடா உனக்கு விஜய்னு பேரு இருக்கறதாலதான் இத்தனை பிரச்சினையும்... என என்னை நானே திட்டிக் கொண்டேன்...

அடிபட்டவன் கன்னடத்தில் எதோ அந்த கும்பலிடம் பேசினான்... அவர்களும் எதோ பேசினர்.. பின் கலைந்து சென்றனர். அந்த ஆள் நொண்டிக்கொண்டே என்னிடம் வந்தான்....

கன்னடத்தில் எதோ கேட்டான்.. எனக்கு கன்னடம் ஓரளவுக்குப் புரியும்தான் ஆனால் இப்போது பயத்தில் ஏதும் புரியவில்லை.

"ஆங்... என்ன சொல்றீங்க.. சார் தெரியாம இடிச்சிட்டேங்க" அவனுக்கு தமிழ் தெரியுமா என என் மூளைக்கு அப்போது யோசிக்கத் தெரியவில்லை. பயத்தில் தாய் மொழியே வந்தது.

"ஓ தமிளா" (அப்படித்தான் உச்சரித்தான்)

நல்லா வேலை அந்தாளுக்கு தமிள்.. சாரி சாரி.. தமிழ் தெரிந்திருந்தது..

"ஆமாங்க.. சாரிங்க நீங்க இந்த டர்னிங்ல நிக்கறது தெரியாம திருப்பிட்டேங்க.. சாரி. வாங்க நானே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போறேன்"

"என்னப்பா நீ.. இந்த ஏரியால்லாம் ஒரு மாதிரிப்பா.. பாத்து வரக்கூடாதா.. யாருனே தெரியாத என்னை இடிச்சதுக்கே இவ்வளவு கோவமா வந்து அடிக்கறாங்கன்னா... அவங்கள்ல ஒருத்தனை அடிச்சிருந்தீன்னா அவ்லோதான்"

அடக்கருமாந்திரம் புடிச்சவனுங்களா யாரோ ஒருத்தனை அடிச்சதுக்காடா இந்த அளப்பரை பண்ணீங்க.. ஹெல்மெட்ல எச்செல்லாம் துப்பி வச்சு... எனக்கு நினைக்கவே மீண்டும் அறுவருப்பாகவும், அவமானமாகவும் இருந்தது.

பயம், பதட்டம், கோவம், கடுப்பு எல்லா உணர்ச்சியும் சேர்ந்து இருந்ததால் எதுவும் பேசத் தோன்றாது... அந்தாளை பின்னாடி உட்கார வைத்து அமைதியாக ஹாஸ்பிட்டல் சென்றேன். அந்தாளுக்கான சிகிச்சை செலவு 1500 ரூபாய் ஆகியது..

இனி நான் விஜய் இல்ல இனி நான் விஜய் இல்ல... என்று என் மனதில் நான் தப்பியோடிக்கொன்டிருந்தேன்...

"தம்பி அந்த டீக்கடையில் நிறுத்துப்பா" என்றான் அவன். நிறுத்தினேன்.

"தம்பி நானும் ஒரு டிரைவர்தாம்பா.. பதட்டப்படாத.. இதெல்லாம்.. சகஜமான விசயம்தாம்ப்பா.. எல்லோருக்கும் நடக்கறதுதான். ரொம்ப பதட்டமா பேயறைஞ்ச மாதிரி இருக்கியேப்பா"

அந்த நாயிங்க வந்து அறைஞ்சதுக்கு...பேயே வந்து அறைஞ்சிருக்கலாம்... யாரும் பாக்க முடியாத பேயைப் பார்த்த திருப்தியில விட்டுட்டுப் போயிருப்பேன் என நினைத்தவாறே...

"இல்லீங்க.. இந்த மாதிரி நான் இதுவரை ஃபேஸ் பண்ணினதே இல்ல.. அதான் என்றேன்"

"டிரைவிங்கல இதெல்லாம் சகஜம்தாம்பா.. எப்பவும் ஒரே மூடுல வண்டி ஓட்ட முடியுமா... நான் ஒரு பஸ் டிரைவர்.. என்னோட சர்வீஸ்ல அதிகம் ஆக்சிடெண்ட் பண்ணதே இல்ல.... ஆனா ஒரு தடவை.. நான் வேகமா போயிட்டிருந்தப்ப.. ரோட்டோரமா போயிட்டருந்த ஒருத்தன் சட்டுனு ரோட்ல எறங்கிட்டான். திடீர்னு அப்படி அவன் இறங்கவும் என்னாலயும் கன்ட்ரோல் பன்ன முடியலை.. அடிச்சுத் தூக்கிட்டேன். ஆள் ஸ்பாட்லயே அவுட்டு. இதுக்கெல்லாம் பதட்டப்பட்டா முடியுமா"

அடப்பாவி கொலைகாரனா நீ... பஸ்ல நாயடிக்கற மாதிரி ஒரு மனுசனையே அடிச்சு கொலை பண்ணிட்டு.. இவ்வளவு தில்லா பேசுதே இந்த நாயி... எனக்கு இன்னும் அதிர்ச்சி அதிகமாகியது... நாம் எங்க வாழ்ந்திட்டிருக்கோம்.. வாழ்க்கை மீதான பயம் இன்னும் அதிகரித்தது.

மீண்டும் எதுவும் பேசாமல் அந்த ஆளை அவனது வீட்டில் கொண்டு போய் விட்டேன்.

"சரி தம்பி அடிச்சிட்டு ஓடிப்போயிடாம ஹாஸ்பிட்டல் செலவெல்லாம் பண்ணி வீடு வரை கொண்டு வந்து விட்டுருக்க பரவால்ல... அடிக்கடி வாப்பா"

அடிக்கடி வேற வரனுமா போயாங்க...

"சரிங்க வரேன்.. சரி அந்த ஆளை பஸ் ஏத்தி கொன்னதுக்கு உங்களுக்கு என்ன தண்டனைங்க கிடைச்சது"

அவன் என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தான்.. பின் மெல்ல...

"500 ரூபா அபராதம் தம்பி"

எனக்கு பக்கென்றது. ஒரு உயிரைக் கொன்னதுக்கு 500 ரூபா அபராதம்தான் தண்டனையா.. அதிர்ச்சி விலகாமல் வண்டியிருப்பதையும் மறந்து அதைத் தள்ளியபடியே வீடு நோக்கி நடந்தேன்.

37 comments:

 1. வடை எனக்கா? தெரியலியே

  ReplyDelete
 2. இனி நான் விஜய் இல்ல இனி நான் விஜய் இல்ல..//

  ஏதோ காரணத்துக்காக பேர் வெச்சிருகீங்க போல

  ReplyDelete
 3. கதை நல்ல இருக்கு... உயிருக்கு மதிப்பே இல்லை இப்போ...

  ReplyDelete
 4. @இரவு வானம்

  வாங்க... ஆமாங்க உங்களுக்கேதான் வடை... எடுத்துக்கோங்க...

  ReplyDelete
 5. //என்னடா விஜய் உனக்கு நேரமே சரியில்லையே... //
  சிறுகதையில் அரசியல்+சினிமா+காமெடி டச்
  very good...

  ReplyDelete
 6. @அருண் பிரசாத்

  எதோ காரணம்லாம் இல்லீங்க அருண் அந்த காரணம்தான்... ஹ ஹ ஹ...

  ReplyDelete
 7. @வினோ

  வாங்க வினோ.. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க...

  ReplyDelete
 8. @பாரத் பாரதி

  //சிறுகதையில் அரசியல்+சினிமா+காமெடி டச்
  very good...

  வாங்க.. ரொம்ப நன்றிங்க...

  ReplyDelete
 9. //எனக்கு என் மீதே கோபம் வந்தது.. நாயே முதல்ல பேரை மாத்துடா உனக்கு விஜய்னு பேரு இருக்கறதாலதான் இத்தனை பிரச்சினையும்... என என்னை நானே திட்டிக் கொண்டேன்...///

  என்ன நக்கலா ..?

  ReplyDelete
 10. எனக்கு என்னமோ இந்தக் கதைல நீங்க கொஞ்சம் குழம்பிட்ட மாதிரி தெரியுது .. எழுத்து நடை வழக்கம் போல கலக்கல் . ஆனா விபத்துக்கும் கொலைக்கும் வித்தியாசம் இருக்கு தானே .. அந்த டிரைவர் மேல தப்பு இல்லாத மாதிரி காட்டிருகீங்க ..! அப்புறம் ஏன் கடைசில அந்த மாதிரி , அதாவது ஒரு ஆள கொன்னதுக்கு ஐநூறு தான் அபராதமா ..? அப்படின்கிரமாதிரி கேட்டது ..?

  ReplyDelete
 11. நல்ல ஃப்லோல வந்து இருக்குங்க... சூப்பர்

  ReplyDelete
 12. @கோமாளி செல்வா

  //எனக்கு என்னமோ இந்தக் கதைல நீங்க கொஞ்சம் குழம்பிட்ட மாதிரி தெரியுது .. எழுத்து நடை வழக்கம் போல கலக்கல் . ஆனா விபத்துக்கும் கொலைக்கும் வித்தியாசம் இருக்கு தானே .. அந்த டிரைவர் மேல தப்பு இல்லாத மாதிரி காட்டிருகீங்க ..! அப்புறம் ஏன் கடைசில அந்த மாதிரி , அதாவது ஒரு ஆள கொன்னதுக்கு ஐநூறு தான் அபராதமா ..? அப்படின்கிரமாதிரி கேட்டது ..?//

  வாங்க செல்வா.. விபத்துக்கும் கொலைக்கும் கண்டிப்பா வித்தியாசம் இருக்குதாங்க.. ஆனா.. நாம விபத்து ஏற்படுத்திட்டோம்.. அதனால ஒருத்தன் இறந்திட்டானேங்கற உணர்வில்லாம ஒருத்தன் பேசும் போது.. அதையும் விபத்துலதான செத்துப் போனான்னு யாராலையும் ஏத்துக்க முடியாது இல்லியா.. அதான் சொன்னேன்..

  இப்படி ஆயிப்போச்சேங்கற வருத்தமும் அந்த டிரைவருக்கு இல்ல... அதுக்குத் தகுந்த தண்டனையும் அவனுக்குக் கிடைக்கலை.. அந்த ஆதங்கத்தைத்தான் அப்படி வெளிப்படுத்தினேன்...

  ReplyDelete
 13. @ அருண்

  //நல்ல ஃப்லோல வந்து இருக்குங்க... சூப்பர்//

  வாங்க அருண்... நன்றிங்க..

  ReplyDelete
 14. என்னோட நண்பரோட சித்தப்பா பஸ் ட்ரைவர்தாங்க. அவர் சர்விஸ்ல இருந்தப்போ ஒரு வயதான பாட்டி மேல பஸ் மோதி அந்த பாட்டி இறந்து போய்ட்டாங்க.
  அவருக்கு என்ன தெரியுமா தண்டனை போலிஸ் ஸ்டேசன்ல தினமும் போய் கையெழுத்து மட்டும் போட்டுட்டு வேலைக்கு களம்பிருவார். இப்படியே கிட்டத்தட்ட சர்விச முடிச்சிட்டார். இப்போ மனுஷன் free

  ReplyDelete
 15. நடைமுறைல இருக்கறத கதை வடிவில் கொண்டு வருவது ரொம்ப நல்லா இருக்குங்க.

  ReplyDelete
 16. கதை சூப்பர்! நல்லா எழுதறீங்க!

  ReplyDelete
 17. @கார்த்திக்குமார்

  வாங்க பங்கு.. ஒரு வாரம் வரலைன்னோட உறவ மறந்திட்டீங்களே...

  //என்னோட நண்பரோட சித்தப்பா பஸ் ட்ரைவர்தாங்க. அவர் சர்விஸ்ல இருந்தப்போ ஒரு வயதான பாட்டி மேல பஸ் மோதி அந்த பாட்டி இறந்து போய்ட்டாங்க.
  அவருக்கு என்ன தெரியுமா தண்டனை போலிஸ் ஸ்டேசன்ல தினமும் போய் கையெழுத்து மட்டும் போட்டுட்டு வேலைக்கு களம்பிருவார். இப்படியே கிட்டத்தட்ட சர்விச முடிச்சிட்டார். இப்போ மனுஷன் free//

  ஆமாங்க.. என்ன கொடுமை பாத்தீங்களா.. தண்டனை கடுமையா இருந்தாதான்.. பொருப்பு வரும் எல்லாருக்கும்..

  ReplyDelete
 18. @கார்த்திக்குமார்

  //நடைமுறைல இருக்கறத கதை வடிவில் கொண்டு வருவது ரொம்ப நல்லா இருக்குங்க.//

  நன்றிங்க பங்கு

  ReplyDelete
 19. @எஸ்.கே

  வாங்க

  //கதை சூப்பர்! நல்லா எழுதறீங்க!//

  ரொம்ப நன்றிங்க எஸ்.கே...

  ReplyDelete
 20. @ ramesh
  வாங்க பங்கு.. ஒரு வாரம் வரலைன்னோட உறவ மறந்திட்டீங்களே... ///
  அப்டில்லாம் இல்ல மக்கா. கொஞ்சம் ஆணி அதான்

  ReplyDelete
 21. @பன்னிக்குட்டி ராம்சாமி

  வாங்க ராம்சாமி

  //கதை ஏதோ சேதி சொல்கிறதே?//

  ஆமாங்க எதோ நம்மளால முடிஞ்சது

  ReplyDelete
 22. சிறுகதை சுவராஸ்யமாக உள்ளது.
  //"சரி தம்பி அடிச்சிட்டு ஓடிப்போயிடாம ஹாஸ்பிட்டல் செலவெல்லாம் பண்ணி வீடு வரை கொண்டு வந்து விட்டுருக்க பரவால்ல... அடிக்கடி வாப்பா"

  அடிக்கடி வேற வரனுமா போயாங்க... //

  ஹ..ஹா.ஹா.. சிரிக்க வைத்தது.

  ReplyDelete
 23. //"சரிங்க வரேன்.. சரி அந்த ஆளை பஸ் ஏத்தி கொன்னதுக்கு உங்களுக்கு என்ன தண்டனைங்க கிடைச்சது"

  அவன் என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தான்.. பின் மெல்ல...

  "500 ரூபா அபராதம் தம்பி"

  எனக்கு பக்கென்றது. ஒரு உயிரைக் கொன்னதுக்கு 500 ரூபா அபராதம்தான் தண்டனையா.. //

  மனித உயிரின் நிலையை எண்ணி சிந்திக்க வைத்தது.
  யதார்த்தமான கதையமைப்பு..!!
  கலக்குங்க.. விஜய்.
  சாரி ரமேஷ் தல..!

  ReplyDelete
 24. @பிரவின் குமார்

  //சிறுகதை சுவராஸ்யமாக உள்ளது.//

  நன்றிங்க பிரவீன்...

  //அடிக்கடி வேற வரனுமா போயாங்க... //

  ஹ..ஹா.ஹா.. சிரிக்க வைத்தது.//

  ஹ ஹ.. சிரிக்க வெச்சா சந்தோசம்தாங்க பிரவீன்

  ReplyDelete
 25. நல்ல கதை ரமேஷ். அடிக்கடி எழுதுங்கள்.

  ReplyDelete
 26. அருமையா சொல்லியிருக்கீங்க.,,

  ReplyDelete
 27. இது உண்மைதான். பஸ் டிரைவர் அடிச்சா 500 ரூபாய் அபதாரம் மட்டும்தான்

  ReplyDelete
 28. @ரஹீம் கஸாலி

  //நல்ல கதை ரமேஷ். அடிக்கடி எழுதுங்கள்.//

  நன்றிங்க. ரஹீம்... கண்டிப்பா எழுதறேங்க இனிமே...

  ReplyDelete
 29. @வெறும்பய

  //அருமையா சொல்லியிருக்கீங்க.,,//

  நன்றிங்க ஜெயந்த்

  ReplyDelete
 30. எனக்கு பக்கென்றது. ஒரு உயிரைக் கொன்னதுக்கு 500 ரூபா அபராதம்தான் தண்டனையா.. அதிர்ச்சி விலகாமல் வண்டியிருப்பதையும் மறந்து அதைத் தள்ளியபடியே வீடு நோக்கி நடந்தேன்.


  ......ரொம்ப நாள் கழித்து பதிவு போட்டாலும், மனதை உலுக்குற மாதிரி தான் என்ட்ரி போடுறீங்க.

  ReplyDelete
 31. @சித்ரா

  //ரொம்ப நாள் கழித்து பதிவு போட்டாலும், மனதை உலுக்குற மாதிரி தான் என்ட்ரி போடுறீங்க.//

  ஹ ஹ ஹ... ரொம்ப நன்றிங்க சித்ரா.. அடுத்து மனதை உலுக்கிய ஒரு பதிவு போட்டிருக்கேன்.. அதையும் பாருங்க... அவ்வ்வ்வ்வ்.....

  ReplyDelete
 32. "ரோட்டோரமா போயிட்டருந்த ஒருத்தன் சட்டுனு ரோட்ல எறங்கிட்டான். திடீர்னு அப்படி அவன் இறங்கவும் என்னாலயும் கன்ட்ரோல் பன்ன முடியலை.. அடிச்சுத் தூக்கிட்டேன்".
  என்று சொல்ல நிறைய தைரியம் வேண்டும்

  ReplyDelete
 33. //எனக்கு என் மீதே கோபம் வந்தது.. நாயே முதல்ல பேரை மாத்துடா உனக்கு விஜய்னு பேரு இருக்கறதாலதான் இத்தனை பிரச்சினையும்... என என்னை நானே திட்டிக் கொண்டேன்...//

  ரமேஷ் மீ டிஸ்லைக்கிங் திஸ் லைன்ஸ் ...

  கதை பிடிச்சுருக்கு இலகுவான நடை
  கடைசியில கருத்தா ஸ்ஸ்ஸப்பா!

  ReplyDelete
 34. @சேக்காளி

  //"ரோட்டோரமா போயிட்டருந்த ஒருத்தன் சட்டுனு ரோட்ல எறங்கிட்டான். திடீர்னு அப்படி அவன் இறங்கவும் என்னாலயும் கன்ட்ரோல் பன்ன முடியலை.. அடிச்சுத் தூக்கிட்டேன்".
  என்று சொல்ல நிறைய தைரியம் வேண்டும்//

  உண்மைதாங்க...

  ReplyDelete
 35. @வசந்த்

  //ரமேஷ் மீ டிஸ்லைக்கிங் திஸ் லைன்ஸ் ...//

  நீங்க விஜய் ரசிகர் இல்லியா... சாரிங்க வசந்த்.. ஜஸ்ட் ஒரு ஃபன்னுக்காகத்தான் சேர்த்தேன்.. ஹர்ட் ஆயிருந்தா மன்னிச்சுக்குங்க...

  //கதை பிடிச்சுருக்கு இலகுவான நடை//

  நன்றிங்க...

  //கடைசியில கருத்தா ஸ்ஸ்ஸப்பா!///

  இதுக்கே கண்ண கட்டுதா...

  ReplyDelete
 36. @bharathi

  நன்றி நண்பரே..

  ReplyDelete