Search This Blog

Showing posts with label ஆங்கிலத் திரைப்படங்கள். Show all posts
Showing posts with label ஆங்கிலத் திரைப்படங்கள். Show all posts

Thursday, October 28, 2010

SHUTTER ISLAND (2010) - திரை விமர்சனம்

SHUTTER ISLAND (2010)

இது இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியான திரைப்படம்.. இதே பெயரில் நாவலாக வெளிவந்து பின் திரைப்படமானது. இந்த காரணத்திற்காகவும், இது ஒரு திரில்லர் திரைப்படம் என்பதனாலும் இதனைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.. நேற்றுதான் நேரம் கிடைத்தது.

1954 ஆம் ஆண்டில் படம் தொடங்குகிறது...

இரண்டு மார்ஷல்கள்  ஷட்டர் ஐலேண்டில் இருக்கும் மனநல மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற ஒரு நோயாளியைக் கண்டுபிடிப்பதற்காக கப்பலில் பயணிக்கிறார்கள். அதில் ஒருவர்தான் டிகாப்ரியோ.

மிகவும் அபாயகரமான நோயாளிகள் வைக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை அது. அந்த தீவிலேயே அந்த மருத்துவமனை மட்டும்தான் இருக்கிறது. அங்கு இந்த மார்ஷல்களை அவர்கள் நடத்தும் விதம் அங்கு இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை.. டீகாப்ரியோவிற்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

காணாமல் போனதாகச் சொல்லப்படும் நோயாளி ரேச்சல் சொலாண்டோ ஒரு பெண். அவள் அவளது மூன்று குழந்தைகளைக் கொன்ற ஒரு சைக்கோ என்கிறார்கள்.

அந்த விசாரனையின் போதே டிகாப்ரியோவுக்கும் தலை சுற்றுகிறது.. அதற்காக அவனுக்கு அங்கு மருந்து தரப்படுகிறது.

ரேச்சலுக்கு பழகும் சந்தர்ப்பம் கிடைக்கும் வாய்ப்பு இருப்பவர்களிடம் எல்லாம் ஆண்ட்ரூ லாடிஸ் என்ற பெயரை உச்சரித்து அவரைத் தெரியுமா என்று கேட்கிறார் டீகாப்ரியோ. அந்த பெயரைக் கேட்டவுடன் அனைவரும் அதிர்ந்து எழுந்து பதட்டத்துடன் ஓடாத குறையாக சென்று விடுகின்றனர். நமக்கும் யார் அந்த ஆண்ட்ரூ லாடிஸ் என்ற எதிர்பார்ப்பு வந்துவிடுகிறது.

இதனிடையே டீகாப்ரியோவிற்கு அவர் இரண்டாம் உலகப்போரில் பங்கு பெற்ற போது நடந்த நிகழ்வுகள் மற்றும் தீவிபத்தில் இறந்த அவனது மனைவி போன்ற சம்பவங்கள் நினைவுகளாகவும், கனவாகவும் வந்து அவஸ்தைப் படுத்துகின்றன.

இறந்த அவரது மனைவி கனவிலும் நினைவிலும் வந்து அடிக்கடி இதைச் செய் இதைச் செய்யாதே என்கிற ரீதியில் எதையாவது சொல்கிறார். அதனாலும் டீகாப்ரியோ குழம்புகிறார்.

தன் மனைவி இறந்ததற்கு காரணம் ஆண்ட்ரூ லாடிஸ்தான். அவர் தற்போது இந்த மருத்துவமனையில்தான் இருக்கிறார். மேலும் இந்த மருத்துவமனையில் நிறைய சித்திரவதைகள் நடக்கின்றன அதனைக் கண்டுபிடித்து உலகிற்குச் சொல்வதற்காகவே தான் இங்கு வந்திருப்பதாக தன் உடன் வந்த மார்ஷலிடம் டீகாப்ரியோ தெரிவிக்கிறார்.

ரேச்சலின் அறையில் ஒரு துண்டுச் சீட்டு அவர்களுக்குக் கிடைக்கிறது. அதில் யார் அந்த 67 ஆம் நபர்? என்ற கேள்வி இருக்கிறது.

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.. அது என்னவாக இருக்கும் என நாமும் யோசிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.

அந்த மருத்துவமனையில் மொத்தம் இருப்பதே 66 நோயாளிகள்தான் என்ற உண்மை டீகாப்ரியோவிற்கு தெரியவருகிறது. அப்படியானால் 67 வதாக ஒரு நோயாளி நிச்சயம் இங்கு இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்கிறார் டீகாப்ரியோ. அந்த 67 வது நோயாளி யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நமக்கும் எகிறிவிடுகிறது. ஆனால் இறுதியில் அந்த 67 வது நோயாளி யார் எனத் தெரியவரும் போது.. உண்மையில் நாமும் சிறிது குழம்பி பின் தெளிந்து அதிர்ந்து போகிறோம்.

இந்த விசாரணையின் போதே திடீரென காணாமல் போன ரேச்சல் கிடைத்து விட்டார் என்று அவரை டீகாப்ரியோவிற்கு அறிமுகப்படுத்துகின்றனர். அவர் தான் மருத்துவமனையில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் வீட்டில் இருக்கிறோம். உடன் இருப்பவர்கள் அனைவரும் அவரது சேவகர்கள் என்ற நினைப்பில் இருக்கிறார்.

டீகாப்ரியோவிடம் அவரது நினைவுகளை அவர் தெரியப்படுத்துகிறார்... பின் திடீரென டீகாப்ரியோவை அவரது கணவராக நினைத்து கட்டி அணைக்கிறார். கட்டி அணைக்கும் போதே திடீரென நினைவு வந்தவராய்.. இறந்த என் கணவர் எரிந்துவிட்டார்.. யாரடா நீ என்று கூச்சல் போடுகிறார். அதிர்ந்து விடுகிறார் டீகாப்ரியோ.. மீண்டும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது மருந்து தரப்படுகிறது.


அந்த தீவில் ஒரு கலங்கரை விலக்கம் இருக்கிறது. அங்கு என்ன இருக்கிறது.. அங்கு ஏதோ மர்மம் இருப்பதாக டீகாப்ரியோ நினைக்கிறார்.
எப்படியாவது அங்கே சென்று பார்த்துவிட வேண்டும் என அதற்கு திட்டமிடுகிறார்.

அங்கே அவரும் உடன் வந்த மார்ஷலும் செல்கின்றனர். செல்லும் வழியில் டீகாப்ரியோவிற்கும் உடன் வந்த மார்ஷலுக்கும் தகராறு வந்துவிடுகிறது. தான் மட்டும் தனியாக அந்த கலங்கரை விலக்கத்துக்குச் செல்வதாகக் கூறிவிட்டு டீகாப்ரியோ முன்னே நடக்கிறார். பின் திரும்பிப் பார்க்கிறார். அங்கே அந்த மார்ஷலைக் காணோம். அந்த மார்ஷலின் பெயர் சக்.. அங்கே சென்று பார்க்கிறார். இந்த சம்பவம் நடப்பது உயரமான ஒரு பாறைக்கு அருகில், கீழே கடல்..

அங்கு சென்று பார்த்தால் சக் கீழே விழுந்து இறந்து கிடக்கிறார். பதறியடித்துக் கொண்டே இவரும் சிரமப்பட்டு பாறைகளைப் பிடித்து கீழே இறங்கிப் பார்த்தால் அவர் அங்கு இல்லை.

என்னடா இதுன்னு டீகாப்ரியோ அதிர்ச்சியோட பாத்துட்டு இருக்கும் போதே.. அங்க ஒரு பொந்தில் இருந்து ஆயிரக்கணக்கான எலிகள் வந்து அவர் நின்னுட்டிருந்த பாறையைச் சூழ்ந்துக்கும்..

வேக வேகமா அவரு மறுபடியும் பாறைல மேல ஏறுனா.. அங்க சின்னதா ஒரு குகை இருக்கும்.. அதுக்குள்ள வெளிச்சமா இருக்கேன்னு உள்ள போய் பார்த்தா... அங்க ரேச்சல் இருப்பாங்க..

என்னடா ரேச்சல்தான் கிடைச்சிட்டாங்களே... மருத்துவமனைக்குள்ள வந்த ரேச்சல் மறுபடியும் இங்க எப்படி வந்தான்னு குழம்பாதீங்க.. மேல படிங்க...

நான்தான் உண்மையான ரேச்சல்னு டீகாப்ரியோகிட்ட சொல்வாங்க அவங்க.. அவங்க மூனு குழந்தைகளைக் கொலை பண்ணினதைப் பத்தி டீகாப்ரியோ கேப்பார். அதுக்கு அவங்க எனக்கு குழந்தைகளே கிடையாது நான் கல்யாணமே பண்ணிக்கலை.. உண்மையில் நான் நோயாளியே கிடையாது... இந்த மருத்துவமனையில் வேலை பார்த்துட்டு இருந்த டாக்டர் நானுன்னு சொல்வாங்க...

அப்புறம் அவங்க டீகாப்ரியோகிட்ட ஒரு கேள்வி கேப்பாங்க. டீகாப்ரியோவுக்கு அதிர்ச்சியா இருக்கும். நமக்கும்தான்.. அவங்க என்ன கேப்பாங்கங்கறதை நீங்க படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கங்க...

அதுமட்டும் இல்லாம அந்த மருத்துவமனையில் மக்களை ஆராய்சிப் பொருளாப் பயன்படுத்தறது பத்தியும் அவங்க மூளையில நடக்கிற அறுவை சிகிச்சை பத்தியும் சொல்வாங்க. இது அங்க இருக்கற எல்லா ஊழியர்களுக்கும் தெரியும்னு சொல்வாங்க. அந்த கலங்கரை விலக்கத்துலதான் மூளை அறுவை சிகிச்சை நடக்குதுன்னும் சொல்வாங்க. டீகாப்ரியோவுக்கு அங்க போகனும்ங்கற எண்ணம் இன்னும் அதிகமாகிடும்.

ஒரு வழியா டீகாப்ரியோ அந்த கலங்கரை விலக்கத்துக்கு போய்டுவார். அங்க போய் பார்த்தா... அங்கே...

இதுக்கப்புறம் நடக்கறது எதையும் நான் சொல்லமாட்டேன்.. நீங்களே பார்த்து தெரிஞ்சுக்குங்க.. இதுவரை நான் சொன்ன கதை கதையே இல்லை (அடப்பாவி...அப்ப ஏண்டா இப்படி சுத்துனங்கிறீங்களா..) இனிமேதான் இருக்கு மேட்டரே..

அவரும் அதிர்ச்சியாகி, குழம்பி நாமும் அதிர்ச்சியாகி குழம்பி... நம்ம மூளை அப்படியே டீகாப்ரியா மூளையாவே மாறி யோசிச்சிட்டிருக்கும்.. அந்த அனுபவம் ரொம்ப நல்லா இருந்தது...

இந்தப் படம் பார்த்து முடிச்சவுடனே மறுபடியும் பார்க்கத் தோணுச்சு... இரண்டாம் முறை பார்க்கும் போது அது வேற அர்த்தத்தைக் கொடுக்கும்..

மைல்டான திரில்லர் படமான் இதுல இடைல இடைல கொஞ்சம் போரடிக்கற மாதிரி காட்சிகள் இருக்கும்.. ஆனா முதல் முறை பார்க்கும் போதுதான் அந்த சீனெல்லாம் போரடிக்கும். இரண்டாவது முறை பார்க்கும் போது அந்த காட்சியை வெச்சது சரிதான்னு தோணும்..

டீகாப்ரியோவோட நடிப்பு கிளாஸ். வழக்கம் போல இதையும் அவர் நடிப்புக்காக ஆஸ்காருக்கு நாமினேட் பன்னுவாங்க.. பாவம் அவருக்குதான் அந்த ராசி இல்லையே...

கட்டாயம் இரண்டாம் முறை பார்க்க வேண்டிய படம் இது..

Tuesday, August 10, 2010

பேனிக் ரூம் - திரை விமர்சனம்


அமெரிக்க திரில்லர் பட இயக்குனர் டேவிட் ஃபிஞ்சரின் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான ஆங்கிலத்திரைப்படம் Panic Room. நேற்று எதேச்சையாக இந்தப்படத்தைப் பார்த்தேன். ரொம்ப நார்மலான மூவியாதான் ஆரம்பிக்கும்..அப்புறம் போகப் போக..............பயங்கர விறுவிறுப்பு...

சமீபத்தில் விவாகரத்தான மெக் ஆல்ட்மேன் (ஜூடி ஃபோஸ்ட்டர்) என்ற பெண்மணியும் அவரது 11 வயது மகள் சாராவும் புதிதாக ஒரு பெரிய வீட்டை வாங்குவதற்காக வந்து பார்ப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது படம். அந்தப் பெரிய வீட்டில் அவசர காலத்தில் பாதுகாப்பாக இருப்பதற்காக ஒரு இரகசிய அறை இருக்கும். அந்த அறைக்குள் யாரும் உள் நுழைய முடியாதபடி அமைப்புகள் இருக்கின்றன. மேலும் வீட்டில் உள்ள அனைத்து பகுதிகளையும் அங்கிருந்தே கண்காணிக்கும் வகையில் வீடியோ சர்வைலன்ஸ் வசதியும் அதில் இணைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்குள் உள்ளே யாராவது நுழைந்துவிட்டால் உள்ளே இருப்பவர்கள் நினைத்தால் மட்டுமே அதனைத் திறந்து வெளியே வர முடியும்..வெளியே இருந்து யாரும் உள்ளே நுழைவதற்கு எந்த வழியும் இல்லை.

அந்த இரகசிய அறைக்காகவே அவர்களுக்கு அந்தப் பெரிய வீடு பிடித்து விடுகிறது.. உடனே அதனை வாங்கி குடியேறி விடுகின்றனர். அவர்களுக்கான பிரச்சினை அடுத்த நாள் தூங்கி எழுவதற்கு முன்னரே காத்திருக்கிறது. அதிகாலையில் மூன்று கொள்ளையர்கள் அந்தப் பெரிய வீட்டில் இருக்கும் விலை மதிக்க முடியாத சொத்துக்களைக் கொள்ளை அடிப்பதற்காக வீட்டுக்குள் நுழைந்துவிடுகின்றனர். அந்த மூவரில் ஒருவன் அந்த வீட்டை வடிவமைத்தவன். அவனுக்கு அந்த இரகசிய அறை உட்பட அனைத்து பகுதிகளும் நன்கு தெரியும். அவர்கள் தேடி வந்த விலை மதிக்க முடியாத சொத்து இருப்பதும் அந்த இரகசிய அறைக்குள்தான்.



கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து விட்டார்கள் என்பதை அறிந்த மெக் ஆல்ட்மேன் சமயோகிதமாக செயல்பட்டு தன் மகளுடன் அந்த அறைக்குள் நுழைந்து விடுகிறார். கொள்ளையர்கள் அந்த அறையை எப்படி திறக்க வைக்கின்றனர். அவர்களிடம் இருந்து அம்மாவும் மகளும் தப்பினார்களா என்பதை மிகவும் விருவிருப்பாகச் சொல்லி இருக்கின்றனர்.

அதுவும் மெக் ஆல்ட்மேன் போலீசுக்குத் தகவல் தெரிவிப்பதற்காக தனது செல்போனைத் தேடுவார்...அப்போதுதான் அது அந்த அறைக்கு வெளியே விட்டு வந்ததை உணர்வார்....உடனே வீடியோ சர்வைலன்ஸைப் பார்த்து கொள்ளையர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு....செல் போனை வெளியே சென்று எடுத்துக்கொண்டு மீண்டும் அந்த அறைக்குத் திரும்புவார் பாருங்கள்......விருவிருப்பின் உச்சகட்டம் அந்தக் காட்சி.. நான் மிகவும் இரசித்துப் பார்த்த காட்சி அது. அவ்வளவு கஸ்டப்பட்டு செல்போனை எடுத்து வந்த பிறகு பார்த்தால்..அந்த அறைக்குள் சிக்னல் கிடைக்காது. வேறு என்ன செய்யலாம் என தாயும் மகளும் குழம்பிக்கொண்டிருப்பர். என்ன செய்யப் போகிறார்கள் என்று நாமும் அவர்களோடே சேர்ந்து யோசித்துக் கொண்டிருப்போம்...

இதற்கிடையே அந்த 11 வயது சிறுமிக்கு கடுமையான நீரிழிவு நோய் இருக்கும்.....சில மணி நேரங்களுக்கு ஒரு முறை போட வேண்டிய ஊசி மருந்தைப் போடவில்லை என்றால்..அவர் கோமா நிலைக்கு சென்று இறந்துவிடவும் வாய்ப்புண்டு...நேரம் அதிகமானதால் அந்தச் சிறுமி சிறிது சிறிதாக அபாயகட்டத்தை அடைந்துவிடுவார்....அவர் பிழைத்தாரா?....அந்தக் கொள்ளையர்கள் தேடி வந்த பொருள் என்ன? அதனை அவர்கள் அடைந்தார்களா? என்பதை அறிய வாய்ப்பு கிடைத்தால் இந்தப் படத்தைப் பாருங்கள்....

ஒரே வீட்டுக்குள் ஒரே இரவில் நடக்கும் கதை என்றாலும் விறுவிறுப்புக்கு சிறிதும் பஞ்சமில்லை. விறுவிறுப்பான படம் பார்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இந்தப் படத்தை நிச்சயம் பார்க்கலாம்.....



Thursday, July 29, 2010

ஐடென்டிட்டி..திக் திக் அனுபவம் (Identity (2003))


ஒரு அபார்ட்மெண்டில் ஆறு நபர்களை கொடூரமான முறையில் கொலை செய்த குற்றத்திற்காக மால்கம் ரிவர் என்பவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

மால்கமின் தாயார் ஒரு விலைமாது. மால்கமுக்கு சிறுவயதாக இருக்கும் போது அவர் தொழிலுக்காக மோட்டல் செல்லும்போது மால்கமை காரில் வெளியே காத்திருக்கச் சொல்லுவார். அப்படி காத்திருந்து காத்திருந்து மால்கம்மிற்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அவனது டைரியைப் படித்துப் பார்க்கும் அவனது மனநல மருத்துவர் கண்டறிந்து அவன் தண்டனை அனுபவிப்பதற்கு முந்தைய நாள் இரவு நீதிபதியை மறுவிசாரணைக்கு அழைக்கிறார்.

அடுத்து சம்பந்தமே இல்லாமல் காட்சிகள் மாறுகின்றன. ஒரு மோட்டலுக்குள் சம்பந்தமே இல்லாத 10 நபர்கள் காட்டாற்று வெள்ளத்தின் காரணமாகவும், மழையின் காரணமாகவும், இன்ன பிற காரணங்களுக்காகவும் வந்து தங்குகின்றனர்.

அவர்கள் ஒவ்வொருவராக அங்கு வந்து சேருவதைக் காண்பிக்கப்பட்டிருக்கும் விதம்! விவரிக்க முடியாத விருவிருப்பு. படம் துவக்கத்தில் ஆரம்பிக்கும் விருவிருப்பு படம் முடியும் வரை இருக்கிறது. படத்தில் கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளும் மழையிலயே வருது. இவ்வளவு விருவிருப்பான ஒரு படம் பார்த்து ரொம்ப நாளாச்சு...

அதற்குப்பின்தான் ஆரம்பிக்கிறது திக் திக்....மோட்டலுக்கு வந்து சேர்ந்த பத்து நபர்கள் + அங்கேயே இருந்த மேலாளருடன் சேர்த்து மொத்தம் 11 பேர். அவர்களின் விவரங்கள் மிகவும் முக்கியம் அதனால் அதையும் பாருங்கள்..

ஒரு தாய் (1. Alice), தந்தை (2. George), அவர்களது பையன் (3. Timmy),
ஒரு விலை மாது (4. Paris), ஒரு நடிகை (5. Caroline), அவளது டிரைவர் (6. Edward), ஒரு கணவன் (7. Lou), அவனது மனைவி (8. Ginny), ஒரு போலீஸ் (9. Rhodes), அவர் அழைத்துச் செல்லும் ஒரு குற்றவாளி (10. Robert), மோட்டல் மேனேஜர் (11. Larry).

அப்புறம் இவர்கள் அனைவரின் பிறந்த தேதியும் மே 10. எப்படி அப்படி அமைந்தது?

இவர்களில் ஒவ்வொருவராகக் கொலை செய்யப்படுகின்றனர். ஏன்? யார் இந்தக் கொலைகளைச் செய்தது? என்பது இறுதி வரை சஸ்பென்ஸாக நகர்கிறது. இடையிடையே மால்கமின் விசாரணையும் காண்பிக்கப்படுகிறது. முதலில் கரோலின் (i) என்ற நடிகை கொலை செய்யப்படுகிறார். அவரது உடலின் அருகே அறை எண் 10 இன் சாவி இருக்கிறது. ரோட்ஸுக்கு (போலீஸ்) அவர் அழைத்து வந்த குற்றவாளிதான் (ராபர்ட்) அவளைக் கொலை செய்திருப்பார் என்று சந்தேகம். உடனே ராபர்ட்டை அடைத்து வைத்திருந்த கழிவறைக்கு சென்று பார்க்கிறான். அங்கு அவன் இல்லை. அடுத்ததாக லூவும் (ii) மர்மமான முறையில் கொல்லப்படுகிறான். அவனுக்கு அருகில் அறை எண் 9 இன் சாவி இருக்கிறது.  அதற்கு அடுத்த காட்சியில் தப்பியோடும் ராபர்ட் தொலைதூரத்தில் வெளிச்சம் கண்ணுக்குத் தெரிய வேகமாக அங்கு போய் பார்க்கிறான்...அது அவன் தப்பி வந்த மோட்டல். மோட்டலில் இருந்து தப்பி நீண்ட தூரம் ஓடி வந்த ராபர்ட் மீண்டும் எப்படி மோட்டலுக்கே வந்தான்!!!!!!!!! எதிர்பார்ப்பு எகிறுகிறதா..மேல படிங்க பாஸ்.....

சிறிது நேரத்தில் திரும்ப மோட்டலுக்கே வந்த ராபர்ட்டும் (iii) கொல்லப்படுகிறான். அவனருகில் அறை எண் 8 இன் சாவி இருக்கிறது. அப்படியானால் இதுவரை செய்த கொலைகளைச் செய்தது யார்?

சந்தேகம் மோட்டல் மேனேஜர் லேரி மீது திரும்புகிறது. அவன் தான் கொலைகாரன் என்று ரோட்ஸ் வாதாடுகிறான். இதனால் லேரி காரில் தப்ப முயற்சிக்கிறான். அப்போது எதிர்பாராத விதமாக ஜியார்ஜ் (iv) கார் ஏற்றிக் கொல்லப்படுகிறான். இன்னும் லேரி மீது சந்தேகம் வலுக்கிறது..ஆனால் அவன் அது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்து..மற்ற கொலைகளுக்கும் எனக்கும் துளியும் சம்பந்தமில்லை என்று வாதாடுகிறான். அதை ரோட்ஸ் (போலீஸ்) நம்ப மறுக்கிறான். சிறிது நேரத்தில் அலிசும் (v) படுக்கையில் இறந்து கிடக்கிறார். அவரது அருகே அறை எண் 6 இன் சாவி இருக்கிறது. அப்படியானால் 7 ஆம் எண்ணுள்ள சாவி எங்கே என்று தேடுகின்றனர். அது எதிர்பாராதவிதமாக கார் ஏற்றிக் கொல்லப்பட்ட ஜியார்ஜின் அருகே இருக்கிறது. அனைவருக்கும் பதட்டம் அதிகமாகிறது. அவங்களுக்கு மட்டுமா...நமக்கும்தான்.....

இதற்கிடையே ஜின்னி ராபர்ட்ஸின் காரில் ஏறுகிறாள் அதில் ரோட்ஸ் (போலீஸ்), ராபர்ட்ஸ் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இருப்பதைப் பார்க்கிறாள். உண்மையில் ரோட்ஸ், ராபர்ட்ஸ் இருவருமே குற்றவாளிகள்தான்...அவர்களைக் கூட்டி வந்த போலீஸை ரோட்ஸ் கொன்றுவிட்டு....அவரது உடைகளை எடுத்துப் போட்டுக்கொண்டு போலீஸ் போல வேடமிட்டு...ராபர்ட்டை அழைத்துச் செல்கிறான் என்பதைக் கண்டுபிடித்துவிடுகிறாள். அப்படியானால் இதுவரை நடந்த கொலைகளைச் செய்தது போலீஸ் வேடத்தில் இருந்த ரோட்ஸா? ஏன் அவன் இந்தக் கொலைகளைச் செய்தான்?

இதெல்லாம் நாம யோசிச்சிட்டு இருக்கும் போதே....ஜின்னி (vi), டிம்மியக் (vii) கூட்டிக்கிட்டு காருகிட்ட போறா....அது வெடிச்சுச் சிதறுது..அவங்களும் அவுட். மீதி உயிரோட இருக்கறது பாரிஸ், எட்வர்ட், ரோட்ஸ், லேரி ஆகிய நால்வர் மட்டுமே. இவங்கள்ளாம் அதிர்ச்சியோட போய் எரிஞ்ச காருக்கிட்ட பாத்தா..அங்க ஜின்னியோட உடம்போ, டிம்மியோட உடம்போ காணோம்...அதிர்ச்சியாகி..ஏற்கனவே செத்துக் கிடக்கறவங்களையும் போய் பாக்கறாங்க...அங்கல்லாம்..எந்த உடம்பும் இல்லை.

இதற்கிடையே நாம ஆரம்பத்துல சொன்ன மால்கம மறந்திட்டமே... மால்கமுக்கு Dissociative Identity Disorder அப்படிங்கற மனநோய் இருக்கு அதனாலதான் அவன் அவனையே அறியாம ஆறு பேத்தக் கொன்னுட்டான். அதனால அவனுக்கு மரண தண்டனை தரக்கூடாதுன்னு மனநல மருத்துவர் வாதாடுறார்.

இப்படி அவனுக்காக வாதாடும் மனநல மருத்துவர் கடைசில என்ன ஆகிறார்?
செத்துப் போனவங்க எல்லாம் எப்படி மாயமா மறைஞ்சாங்க?
மோட்டலில் இருந்து வெகுதூரம் தப்பியோடிய ராபர்ட் மறுபடியும் மோட்டலுக்கே வந்தது எப்படி?
மால்கமுக்கும் அந்த 11 பேருக்கும் என்ன சம்பந்தம்?
மீதி இருக்கற நாலு பேத்துல யார் யாரெல்லாம் சாகப்போறாங்க?

இதுக்கெல்லாம் விடை வேணும்னா இந்தப் படத்தைப் பாருங்க. அடுத்தடுத்து திருப்பங்களா வரும் கிளைமேக்ஸ் சூப்பர். ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் கண்கொட்டாம பாக்கனும்னுவாங்களே அப்படி பாக்க வேண்டிய படம்..தண்ணிக் குடிக்கலாம்னு தலையைத் தூக்கினம்னா..எதாவது முக்கியமான சீன மிஸ் பண்ணிடுவோம்...வாய்ப்பு கிடைச்சா இல்லை...வாய்ப்பு ஏற்படுத்திக்கிட்டு பாருங்க பாஸ்...செம விருவிருப்பான படம்........


Wednesday, July 28, 2010

ஃபிளைட்பிளான் (2005) -திரை விமர்சனம் (Flightplan)


Robert Schwentk இன் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த படம்தான் ஃபிளைட்பிளான். விபத்தில் கணவன் இறந்துவிட...அந்த கணவனின் சடலத்துடன் தனது 6 வயது குழதையுடன் விவரிக்க முடியாத துயருடன் விமானத்தில் தன் சொந்த ஊருக்கு பயணிக்கிறாள் ஒரு பெண் (ஜூடி ஃபோஸ்டர்). தூக்க மாத்திரைகள் உட்கொண்டதால் சிறிது நேரம் தூங்கிவிடுகிறாள். எழுந்து பார்த்தால் அவள் குழந்தை அவள் அருகில் இல்லை. தன் குழந்தையைத் தேடி விமானத்தில் அங்கும் இங்கும் படபடப்புடன் அழைகிறார்..விமானத்தில் எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. நடுவானில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் இருந்து குழந்தை எவ்வாறு காணாமல் போயிருக்கும். அதுவரை சற்று மெதுவாக நகரும் திரைக்கதையில் வேகம் பிடிக்கிறது. என்ன ஆயிருக்கும் என்று நம்மையும் யோசனையோடே படம் பார்க்கத் தூண்டுகிறது திரைக்கதை.

குழந்தையைத் தேடி ஜூடி ஃபோஸ்டர் தவிக்கும் போது நமக்கும் தொற்றிக் கொள்கிறது அந்தத் தவிப்பு. அந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் யாருமே அந்தக் குழந்தையைப் பார்த்திருக்கவில்லை. விமானப் பணிப்பெண் ஒருவரும் விமானத்தில் அப்படி ஒரு குழந்தை பயணிக்கவே இல்லை. ஜூடி மட்டுமே விமானத்தில் ஏறினார் என்கிறார். சிறிது நேரத்தில் திடீரென ஒரு வயர்லெஸ் செய்தி வருகிறது. அதில் ஜூடியின் கணவன் கட்டிடத்தின் கூரையில் இருந்து விழுந்து இறக்கும் போது அவளது 6 வயது மகளும் உடன் இருந்ததாகவும் அவளும் அந்த விபத்தில் இறந்துவிட்டாள் என்ற செய்தி இருக்கிறது. இதைக்கேட்டு ஜூடி மிகவும் அதிர்ச்சி அடைகிறார். அவர் அதை மறுக்கிறார். ஆனால் அனைவருமே அவளை நம்ப மறுக்கின்றனர். அனைவரும் அவளை ஒரு மனநோயாளியைப் போல் பார்க்கின்றனர். நாமும் சிறிது நேரம் அவ்வாறுதான் நினைப்போம். அப்படித்தான் இருக்கிறது காட்சி அமைப்பு.

யாருமே அவளை நம்ப மறுக்கும் போதும் ஏர் மார்ஷல் கார்சன் மட்டும் அவளுக்கு உதவுகிறான். அவனிடம் எப்படியாவது எனக்கு உதவுங்கள் என் குழந்தை இறக்கவில்லை. அவள் இந்த விமானத்தில் என்னுடன் பயணம் செய்தது உண்மை அவள் நிச்சயம் இங்குதான் எங்கோ இருக்கிறாள் என்கிறாள். அவனும் சரி என்று கூறிவிட்டு. கேப்டனிடம் பேசுவதாகக் கூறிவிட்டு. கேப்டனைச் சந்திக்கிறான். அப்போதுதான் கதையே மாறுகிறது. அதற்குப் பின் நமக்கு எல்லாமே புரிந்துவிடுகிறது. எனினும் அதற்குப் பிறகு வரும் காட்சிகள் விருவிருப்பின் உச்சம்.

படம் முழுவதும் விமானத்திற்குள்தான் என்றாலும் படம் ஆரம்பித்து 10 நிமிடம் வரை சிறிது மெதுவாக நகர்ந்து பின் வேகமாக டேக் ஆஃப் எடுக்கிறது திரைக்கதை, அதற்குப் பிறகு இறுதி வரை நம்மையும் படபடப்போடே பார்க்கத் தூண்டுகிறது படம். 90 நிமிடங்களில் படம் முடிந்துவிடுகிறது. ஒரு நல்ல திரில்லர் பார்த்த திருப்தி நிச்சயம், கூடவே படத்தில் உணர்ச்சி மயமான காட்சிகளுக்கும் குறைவில்லை.

Thursday, July 22, 2010

தி அதர்ஸ் (2001) - திரை விமர்சனம்


 ஸ்பானிஸ் இயக்குனர் Alejandro Amenábar இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படம்தான் தி அதர்ஸ். ஸ்பெயினின் தேசியத் திரைப்பட விருதுகளான கோயா விருதுகளில் எட்டு விருதுகளைத் தட்டிச் சென்ற படம் இது. ஒரு பெண்ணும் அவளின் இரண்டு குழந்தைகளும் வசிக்கும் ஒரு வீட்டிற்குள்தான் முழுப்படமுமே.. ஆனால் நமக்கு எங்கும் சலிப்பு ஏற்படுத்தாத வகையில் அமைதியாய் மிரட்டியிருக்கிறார்கள் திரைக்கதையில்.


கிரேஸ் (நிக்கோல் கிட்மேன்) என்ற பெண் அவளது இரண்டு குழந்தைகளுடன் ஒதுக்குப்புறமான 50 அறைகள் கொண்ட ஒரு மாளிகையில் வசித்து வருகிறாள். அந்தக் குழந்தைகளுக்கு வெளிச்சம் என்றால் அலர்ஜி. அதனால் அவர்களை வெளிச்சமே காட்டாமல் பொத்திப் பொத்தி வளர்க்கிறாள். அவர்கள் வீட்டிற்கு வேலைக்காரர்களாக ஒரு வயதான தம்பதியினரும் அவர்களது ஊமைப் பெண்ணும் வந்து சேர்கிறார்கள். யார் அவர்கள் எதற்காக அங்கு வருகிறார்கள்?


ஒருநாள் கிரேஸிற்கு ஒரு அழுகுரல் கேட்கிறது.. அது தனது குழந்தைகளின் அழுகுரல் என எண்ணி பதறுகிறாள் கிரேஸ். அந்த இரண்டு குழந்தைகளில் மூத்தவளான ஆன்னே..அது விக்டர் என்ற சிறுவனின் அழுகுரல் என்று கூறுகிறாள். இது என்னுடைய வீடு இங்கிருந்து போய்விடுங்கள் என்று விக்டர் சொல்கிறான் என்கிறாள். இதனால் அவளது தம்பி நிக்கோலஸ் மிகவும் பயப்படுகிறான் (சிறுவனின் நடிப்பு சூப்பருங்க..இவனுக்காகவே இந்தப்படம் பாக்கலாம்). அதைத் தொடர்ந்து வரும் ஒவ்வொரு காட்சிகளும் நம்மை பரபரப்பூட்டுகின்றன. ஆன்னே சொல்வதை நம்பாத அவளது தாயார் அவளை எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கிறாள். உண்மையில் யார் இந்த விக்டர்?


குழந்தைகளுக்கு வெளிச்சம் என்றால் அலர்ஜி என்பதால் வீட்டில் உள்ள அனைத்து அறைகளும் எப்போதும் பூட்டப்பட்டே இருக்கும். ஒரு நாள் ஆள் இல்லாத பூட்டிய அறைக்குள் இருந்து பியானோ இசைக்கும் ஒலி கேட்கிறது. அங்கு சென்று பார்த்தால் யாரும் இல்லை..ஆனால் பியானோ திறந்து கிடக்கிறது..அங்கு என்னவோ தவறாக நடக்கிறது என்பதை கிரேஸ் புரிந்து கொள்கிறாள்..சிறுமி ஆன்னே அங்கு அவள் அடிக்கடி பார்க்கும் உருவங்களாக நால்வரை வரைகிறாள்.. அது யார் எனக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் அவளது தாய் ஈடுபடுகிறார். அப்போது மாளிகையில் உள்ள பழைய புகைப்படங்களை அவள் காண்கிறாள்.. அந்த புகைப்படங்களில் உள்ளோர் இறந்த பின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவை என்ற உண்மையை அந்த வேலைக்காரப் பெண் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியுறுகிறாள்..  ஒரு நாள் திடீரென இரண்டாம் உலகப்போரில் இறந்துவிட்டதாக நினைத்த அவளது கணவன் வீடு திரும்புகிறான். அவனும் வந்து ஒரே நாள் வீட்டில் தங்கிவிட்டு நான் திரும்பிச் செல்ல வேண்டும் என சென்றுவிடுகிறான். அவன் ஏன் சென்றான்?

ஒரு நாள் காலையில் குழந்தைகள் எழுந்தவுடன் அதிர்ச்சியடைந்து அலறுகின்றன.. என்ன என்று வந்து பார்க்கும் கிரேஸுக்கும் அதிர்ச்சி...வீட்டில் வெய்யிலை மறைப்பதற்காக போடப்பட்டிருந்த அனைத்து திரைச்சீலைகளும் காணவில்லை...அனைத்துமே அகற்றப்பட்டிருக்கின்றன..பதட்டத்துடன் குழந்தைகளை வெயில்படாத இடத்தில் வைத்துவிட்டு..இதனைச் செய்தது வேலைக்காரப் பெண்மணியாகத்தான் இருக்கும் என நினைத்து அவர்களை திட்டி வீட்டை விட்டு அனுப்பிவிடுகிறாள். பிறகு அவர்களை அனுப்பிய பிறகு அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்க்கிறாள்..அங்கு ஒரு புகைப்படம் இருக்கிறது. அந்த புகைப்படத்தைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியடைகிறாள். அவள் ஏன் அதிர்ச்சி அடைந்தாள். அந்த புகைப்படத்தில் இருந்தது என்ன?

இரவு ஆனதும் அவளது குழந்தைகள் இரண்டும் அவரது தகப்பனைத் தேடி வீட்டை விட்டு வெளியேறுகின்றன..அவர்கள் வீட்டின் அருகே இருக்கும் தோட்டத்தின் அருகில் ஓடிச்சென்ற ஆன்னே..அங்கு இருக்கும் கல்லறைகளில் எழுதப்பட்டிருப்பவைகளைப் படித்து அதிர்ச்சி அடைகிறாள். அதில் என்ன எழுதப்பட்டிருந்தது?

திரைக்கதையில் இந்த மர்மங்கள் அனைத்தும் இறுதியில் திடுக்கிடும் விதத்தில்  முடிச்சவிழ்க்கப்படும் போது நமக்கும் ஆச்சரியமாகவும், சிறிது திகிலூட்டுவதாகவும் இருக்கிறது. திரில்லர் விரும்பிகள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் இந்தப்படம். வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் பாருங்கள்.