எனக்கு அப்போது ஒரு 12 வயது இருக்கும்... வீட்டில் கட்டிலுக்கு அடியில் அட்டை பெட்டிகள் நிறைய பட்டாசாய் நிறைந்திருந்தது.
அடிக்கடி அதை எடுத்து எடுத்து பார்த்துக் கொண்டேன்.
"அம்மா இதுல இருக்கறதை நான் வெடிக்கலாமா?"
"நீ வெடிக்காமயா வெடிடா... ஆனா நம்ம கடை இங்க இருக்குது இல்லியா. அதனால தூரமா போயி வெடி" என்றார்.
தீபாவளிக்கு நம்ம வீட்டு முன்னாடி பட்டாசு வெடித்து நம் வீட்டு முன்பு வெடித்த பட்டாசு குவியல்கள் இருப்பதைப் பார்ப்பதில் எவ்வளவு மகிழ்ச்சி. எங்கோ போய் பட்டாசு வெடிப்பதில் என்ன இருக்கிறது. அம்மா அப்படி சொன்னதற்கு நான் எதுவும் சொல்லவில்லை.
கடையில் தீபாவளி விற்பனை ஜரூராக நடந்து கொண்டிருந்தது. அதனை சென்று வேடிக்கை பார்த்தேன். தீபாவளி நெருங்க நெருங்க... இரவிலும் கடை முழுதாக திறந்திருந்தது.
வீட்டில் இரவு நேரங்களில் மாற்றி மாற்றி கடையில் அமர்ந்திருப்பார்கள்.
எனக்கு தூங்காமல் அப்படி அவர்களுடன் அமர்ந்திருப்பது பிடித்திருந்தது. தீபாவளி அன்று மதியம் வரையில் எங்களது பட்டாசு கடையில் விற்பனை இருந்தது.
பட்டாசுகள் வரிசையாக மர ரேக்குகளில் அழகாக அடிக்கி வைக்கப்பட்டிருந்தன. தீபாவளி அன்று வந்து வாங்குவது பெரும்பாலும் கூலித் தொழிலாளிகளாக இருந்தனர். அன்று மிகவும் குறைந்த விலையில் பட்டாசு விற்கப்பட்டது.
அம்மாவும் கடையில் நின்று வாங்க வருபவர்களுடன் வரும் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் எதாவது ஒரு பட்டாசு பாக்கெட்டை கூடுதலாக எடுத்துக் கொடுத்தார்.
எனக்கு அது பிடிக்கவில்லை. மர ரேக்குகளில் பட்டாசுகள் குறைய குறைய எனக்கு கஷ்டமாக இருந்தது. என்ன இந்தம்மா சும்மாவே அதுங்களுக்கு எடுத்துக் கொடுக்கறாங்களே. அதோட விலையே 15, 20 ரூபா ஆகுதே என்று நினைத்தேன்.
அது எப்படி அம்மாவுக்கு புரிந்ததோ தெரியவில்லை.
"பாவம் சின்னப்பசங்க நேத்து வரைக்கும் பட்டாசு அப்பா வாங்கித் தருவாரோ மாட்டாரோன்னு ஏங்கி இருக்கும்ங்க. இப்ப கூட தீபாவளி அன்னைக்குதான் வாங்கித்தந்தாருன்னு ஒரு நினைப்பு மனசுல இருக்கும். இப்ப அதுங்களுக்கு ஒரு சின்ன சந்தோசம். இன்னிக்கு வந்ததால இது நமக்கு ஃப்ரியா கிடைச்சதுன்னு அதான்" என்றார் பொதுவாக.
அப்ப நான் மட்டும் சின்னப்பையன் இல்லியா என்ற எண்ணம் தோன்றி மறைந்தது.
கடையில் இப்போது எதுவுமே இல்லை. எல்லாமே விற்றும், இலவசமாகக் கொடுக்கப்பட்டும் தீர்ந்துவிட்டது.
பட்டாசுகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மர ரேக்குகள் காலியாகக் கிடந்தன.
ஓடிப்போய் கட்டிலுக்கு அடியில் பார்த்தேன் வெறுமையாய் இருந்தது.
அதனைப் பார்ப்பதற்கு எனக்கு என்னவோ போல் இருந்தது. என் மனசும் வெறுமையானது.
அதுவரை உழைத்து மிகவும் களைத்துப் போய் குடும்பத்தில் எல்லோரும் படுக்க இடம் கிடைத்தால் போதும் என சென்று படுத்தனர்.
எனக்கு படுக்கவும் பிடிக்கவில்லை. கண்ணில் என்னையும் மீறி மெலிதாக கண்ணீர். அப்புறம் என்னையும் அறியாமல் தூங்கிப் போனேன்.
மாலையில் அம்மா என்னை எழுப்பிவிட்டார்.
"போடா நாலு மணி ஆயிடுச்சு போய் குளிச்சி இந்த புது சட்டைய போட்டுட்டு வா" என்றார்.
எனக்கு வெறுப்பாக இருந்தது. புது சட்டையை போட்டு என்ன பண்றது என்று நினைத்தவாறே அமர்ந்திருந்தேன். அம்மா என்னை இன்னொரு முறை மிரட்டினார். அதனால் சென்று குளித்துவிட்டு வந்தேன்.
வந்து புது சட்டை போட்டபிறகு...
அம்மா பீரோவில் இருந்து ஒரு கவரை எடுத்துப் பிரித்தார். அதில் நான் கடையில் ஆசையாய் தொட்டுப் பார்த்த பட்டாசுகள் அனைத்தும் சேர்த்து வைக்கப்பட்டிருந்தன.
அதனைப் பார்த்தவுடன் எனக்கு மனசு மகிழ்ச்சியால் துள்ளியது. ஓடிச்சென்று அம்மாவைக் கட்டிக் கொண்டேன். கண்களில் என்னையும் மீறி மீண்டும் கண்ணீர். அம்மா என்னைப் புரிந்தவராய் என்னைப் பார்த்துச் சிரித்தார்.
அந்த பட்டாசுகளை எடுத்துச் சென்று காலியாகக் கிடந்த மர ரேக்கில் வரிசையாக அடுக்கினேன்.
மனசு நிறைவாய் இருந்தது.