Search This Blog

Sunday, October 31, 2010

PAN'S LABYRINTH (2006) - திரை விமர்சனம்


ஒஃபீலியாங்கற 11 வயசு பொண்ணு கர்ப்பமா இருக்கற தன்னோட அம்மாவோட பயணம் செய்யறதோட கதை ஆரம்பிக்குது. அந்த பொண்ணுக்கு தேவதைக் கதைகள்னா அவ்வளவு இஷ்டம். தேவதைக் கதைகள் அடங்கிய புத்தங்களை எப்பவும் படிச்சிக்கிட்டே இருக்கு.

அந்த பொண்ணோட அப்பா இறந்துடறாரு. அதுக்கப்புறம் அவங்கம்மாவ ஸ்பெயின்ல அப்ப (1944 ஆம் வருசம்) கேப்டனா இருக்கற விடால் கட்டிக்கறாரு. அவர்கிட்டதான் இப்ப அவங்க போய்கிட்டு இருக்காங்க. அங்க போனவுடனே அந்த பொண்ணுக்கு அதோட வளர்ப்புத் தந்தையையும் அந்த இடமும் கொஞ்சம் கூட பிடிக்கலை.

அந்த கேப்டன் விடால் சர்வாதிகாரியா இருக்கார்... அந்த கால கட்டத்துல இருந்த கலகக்காரங்களை கொடூரமா துன்புறுத்தறதுல ஆர்வம் உடைய ஆளா இருக்கார். அந்த வீட்டுக்கு பக்கத்துல தேவதையோட உதவியோட அந்த பொண்ணு ஒரு அபாயகரமான குழியைப் பாக்கறா...

அந்தக் குழிக்குள்ள பான் அப்படிங்கற ஃபான் (Faun - கொம்பும் வாலும் கொண்ட தெய்வம்) இருக்கு. அது ஓஃபீலியாவ பார்த்தவுடனே சந்தோசமாயிடுது. அது ஓஃபீலியாகிட்ட நீ முந்தின பிறவியில மோன்னா அப்படிங்கற இளவரிசியா இருந்த. இது உன்னோட கடைசி பிறவி. நான் சொல்ற மூனு கஸ்டமான விசயங்களை வெற்றிகரமா அடுத்த வர இருக்கற பெளர்ணமிக்குள்ள பண்ணி முடிச்சிட்டா. நீ பிறவிப்பயனை அடைஞ்சுடலாம். உன்னோட வாழ்க்கைல இருக்கற கொடூரமான சம்பவங்கள்ல இருந்து விடுபட்டுடலாம்னு சொல்லுது.

அந்த பொண்ணு அதை வெற்றிகரமா முடிச்சி பிறவிப்பயனை அடைஞ்சாளான்றதை அருமையான திரைக்கதையா சொல்லி இருக்காங்க.

எழுத்துல படிக்கும் போது ரொம்ப சாதாரணமா தெரியற இந்தக் கதைய விசுவல்ல அவங்க காமிச்சிருக்க விதம்.. சான்சே இல்லைங்க.. ரொம்ப அருமையான திரைக்கதை, எடிட்டிங், ஆர்ட் ஒர்க், கிராபிக்ஸ். அப்புறம் இசை.. கிளைமேக்ஸ்ல வர இசை ரொம்ப பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதா இருக்கும். எடிட்டிங் ரொம்ப ரசிக்கற விதமா இருந்தது. நீங்க பார்த்தாதான் அது உங்களுக்குப் புரியும்.

அடிக்கடி அம்மா வயித்துல இருக்கற தன்னோட தம்பிகிட்ட அந்த பொண்ணு பேசற காட்சிகள் வரும் அதெல்லாம் ரொம்ப நல்லா இருக்கும். ஒரு முறை... வயித்துக்குள்ள இருக்கற அந்தப் பையன்கிட்ட.. நம்ம அம்மா ரொம்ப நல்லவங்க.. நீ பொறக்கும் போது அவங்களுக்கு அதிகம் சிரமம் கொடுத்திடாத அப்படின்னு கெஞ்சிக் கேட்கிற சீன் பயங்கற டச்சிங்கா இருக்கும்.

முதல் டாஸ்க்க அந்தப் பொண்ணு செய்யறதைப் பாக்கும் போது பயங்கர பிரம்மிப்பா இருக்கும்... அந்த டாஸ்க்குக்கு பண்ணியிருக்கற கிராபிக்ஸ்லாம் பக்கா...

இரண்டாவது டாஸ்க்குல பான் எவ்வளவோ எச்சரிக்கை பண்ணியும் அந்தப் பொண்ணு ஆசையே துன்பத்துக்குக் காரணம் அப்படிங்கற கான்செப்ட் படி ஒரு தப்பு பண்ணிடும்.
 அதுல இருந்து அந்தப் பொண்ணு தப்பி வர்ர சீன் ரொம்ப நல்லா இருக்கும். ஆனா தப்பிச்சி வந்துட்டாலும் அந்த பொண்ணுக்கு துணையா வந்த மூனு தேவதைகள்ல இரண்டு தேவதைகளை இழந்திடுவா. இந்த மாதிரி தப்பு பண்ணிட்டதால பான் கோவிச்சுக்கிட்டு அந்தப் பொண்ண விட்டுட்டு போயிடும்.

அதுக்கப்புறம் அவங்கம்மா பிரசவத்துல அவ தம்பி பிறந்தவுடனே இறந்திடுவாங்க. ஆதரவா இருந்த வேலைக்காரி அந்த இடத்தை விட்டு உடனே போக வேண்டிய நிலைமை. பொண்ணு தனியா என்ன பண்றதுன்னே புரியாம தவிச்சிட்டு இருக்கும்.

அப்ப மறுபடியும் அந்த பான் வந்து அவளுக்கு கடைசி சான்ஸ் கொடுக்கும்.. இன்னும் மூனு நாள்தான் இருக்கு பெளர்ணமிக்கு அதுக்குள்ள அந்த அபாயகரமான குழிக்குள்ள உன் தம்பியைக் கொண்டு வா ஏன் எதுக்குன்னு எல்லாம் கேட்காத... அங்க உனக்கு மூனாவது டாஸ்க்க சொல்றேன்னு சொல்லும்.

இந்தப் பொண்ணும் கஷ்டப்பட்டு தன்னோட தம்பிய அங்க தூக்கிட்டு போவா. அங்க போனா.. அந்த பான்... அவளோட தம்பியோட இரத்தத்தை அந்த இடத்துல விட்டாக்கா நீ பிறவிப்பயனை அடைஞ்சுடுவன்னு சொல்லுது. இவ அதுக்கு மறுத்துடுவா.. தம்பி என் கூடதான் இருக்கனும்னு சொல்லிடுவா....

அந்த நேரத்துல அவளைத் தேடிக்கிட்டு அவங்கப்பா சர்வாதிகாரி விடால் அங்க வருவாரு... அதுக்கப்புறம் வர்ர கிளைமாக்ஸ் ரொம்ப அதிர்ச்சியானதா இருக்கும்.
படம் பார்த்து முடிச்சவுடனே மனசு முழுக்க அந்த 11 வயசு பொண்ணுதான் இருப்பா... அந்தப் பொண்ண சுத்தியேதான் கதை... அந்தப் பொண்ணும் ரொம்ப நல்லா நடிச்சிருக்கு...

இந்தப்படம் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்பானிஷ் மொழிப்படம். மூனு ஆஸ்கார் விருத வாங்கிருக்கு அதோட ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவிச்சிருக்கு. இந்தப் படத்தப் பார்த்துட்டு விமர்சனம் எழுதலாம்னு இது பத்தின மத்த தகவல்களுக்காக கூகுள்ள தேடும் போது.. இந்தப் படத்தோட வெப்சைட் கண்ல பட்டுச்சு... அதை ஒரு தடவை பாருங்க. இந்தப் படம் பார்க்கனும்ங்கற ஆசை தானா வந்திடும் உங்களுக்கு..

Thursday, October 28, 2010

மனதோடு - சிறுகதை

விடியற்காலையிலேயே அந்த கிராமம் சோகமுகம் காட்டியது.

நேற்று வரை கந்தசாமி என்று அழைக்கப்பட்ட 48 வயதான அந்த நபர் வாய்பிழந்து இறந்து கிடந்தார். தலை பலமாக தாக்கப்பட்டிருந்தது. அதில் இருந்து இரத்தம் கசிந்து உறைந்திருந்தது. ஈக்கள் மும்முரமாக அவற்றின் பணியினை அந்த வீட்டில் செய்து கொண்டிருந்தன. 

கந்தசாமியின் மனைவி அழுதழுது ஓய்ந்து போய் அமைதியாக சுவரோரம் தலையை சாய்த்து அமர்ந்திருந்தார்.

"சொல்லும்மா என்ன ஆச்சு" இன்ஸ்பெக்டர் விசாரனையைத் துவக்கினார்.

"சார் ஒரு வாரத்துக்கு முன்னாடி எனக்கும் என் புருஷனுக்கும் தகராறு சார். அதனால பக்கத்து தெருல இருக்கற என் பொண்ணு வீட்டுக்கு போயிட்டேன் சார். இன்னிக்கு விடிகாலைல இப்படி ஒரு நியூஸு சார்."

என்று விசும்பினார். அழுகை மெலிதாக எட்டிப்பார்த்தது.

"சரி ஏன் உன் புருசனை கொன்ன சொல்லு"

அவள் ஓவென்று அழ ஆரம்பித்தாள். புருசன் இறந்ததற்கு அலட்டிக்கொள்ளாத அவள் இப்படி இன்ஸ்பெக்டர் கேட்டவுடன். மிகுதியாக அதிர்ந்தாள். அருகில் இருப்பவர்கள் யாராவது துணைக்கு வரமாட்டார்களா என பார்த்தாள்.

"சார் சார். நான் எதுக்கு சார் என் வூட்டுக்காரர கொலை பண்ணனும். அவருக்கும் எனக்கும் அடிக்கடி தகராறு வரும்தான் சார். ஆனா கொலை பண்ற அளவுக்கு எல்லாம் எனக்கு தைரியம் கிடையாது சார்"

"உன் புருசன் என்ன பண்ணிட்டிருந்தார்"

"செங்கல் சூளையில வேலைக்கு போயிட்டு இருந்தார் சார்."

"அங்க எதாவது தகராறு"

"எப்பவும் யார் கிட்டயாவது தகராறு பன்ற ஆளுதான் சார் என் புருசன். தெரியலை சார் என்னாச்சுன்னு"

இன்ஸ்பெக்டர் அவரது விசாரனையின் அடுத்த கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அதே நேரம்.. அந்தத் தெருவின் மூலையில் இருந்த கோவிலில் ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தான் அவன்.

அவன் வேறு யாருமல்ல இவன் தான்......

"என் பேரு கனேசனுங்க.. எனக்கு பதினைஞ்சு வயசு ஆகுது. கடந்த ஒரு வருசமா என்னைய பைத்தியம்னு இந்த ஊர் சொல்லிட்டு இருக்கு. சின்னப்பசங்கல்லாம் என் மேல கல்லடிச்சு விளையாடுவாங்க. ஆனா இந்த ஜனங்கதாங்க பைத்தியம். எல்லாம் காமப்பிசாசுங்க. என்னடா இந்த வயசுப்பையன் பேசுற பேச்சாடா இது. என்னடா பேசுற வயசுக்குத் தகுந்த மாதிரி பேசுடாங்கறீங்களா. என் கதையைக் கேட்டா. நீங்க அப்படி சொல்ல மாட்டீங்க.

ஆமாங்க. நான் என் தங்கச்சி எங்கம்மா அப்பான்னு. எவ்வளவு அழகான, பாசமான குடும்பம் தெரியுமா எங்களுது.

ஆனா.. ஆனா.. அதெல்லாம்.. ஒரு வருசத்துக்கு முன்னதான்.. இப்ப நான் ஒரு அனாதை."

கோவிலின் சுவரில் தலை சாய்த்து அமர்ந்திருந்த அவன் கண்களில் நீர் துளிர்த்தது.

"என்ன அதிர்ச்சியாயிட்டீங்களா. அதுக்கு காரணம்.... அதுக்கு காரணம்.. இது நான் யார்கிட்டயும் சொல்லாம... காலம் முழுக்க என்னோடயே போகனும்னு நினைச்ச இரகசியம். ஆனா இப்ப என்னயும் மீறி இதை என் மனசு யார்கிட்ட சொல்லுதுன்னே தெரியலைங்க எனக்கு."

மீண்டும் அவன் கண்களில் இருந்து நீர் துளிர்த்தது. பின் அவன் மனசு சிறிது நேரம் மெளனமாயிருந்தது.

"என் தங்கச்சிக்கு எட்டு வயசுதான் ஆகுது, ரொம்ப புத்திசாலி நல்லா படிப்பா.. எப்பவும் சுறுசுறுப்பா இருப்பா.. எங்க தெருவுக்கே செல்லக் குழந்தையா இருந்தா. அந்த தங்கச்சி திடீர்னு காணாம போயிட்டா. நாங்க தேடாத இடம் இல்லை. அவ கிடைக்கவே இல்லை. அடுத்த நாளும் நாங்க ஆளுக்கொரு பக்கமா போயி தேட ஆரம்பிச்சோம். தேடிக்கலைச்சு போய் தண்ணி குடிக்கலாம்னு ஆத்தங்கரை பக்கம் போனேன். அங்க ஒரு மூட்டை கரை ஒதுங்கி இருந்தது. எனக்கு மனசுல ஒரு நடுக்கம், சந்தேகம்.

கூடாது.. கூடாது எனக்கு இப்ப தோணின மாதிரி இருந்துடக் கூடாதுன்னு நினைச்சுகிட்டே. அந்த மூட்டையை பிரிச்சு பாக்கறேன்.

ஆ.. அது என் தங்கச்சியோட கொலுசேதான். போன மாசம் என்னோட முதல் சம்பாத்தியத்துல வாங்கிக் கொடுத்த கொலுசு அது. நான் வெள்ளிப் பட்டறைல வேலை செஞ்சேன்.

அவளோட உடம்பு ஒரு லுங்கில சுத்தி இருந்தது. அது அது... எங்க வீட்டு எதிர் வீட்ல குடியிருந்த ஆளோடது. அடிக்கடி அந்த ஆள் அதைக்கட்டி பாத்திருக்கேன். எப்ப பாத்தாலும் அந்தாளும் அவங்க வீட்டு பொம்பளையும் ரோட்டுல தகராறு பண்ணிக்குவாங்க. அப்புறம் அந்தம்மா கிளம்பி எங்கயோ போகும். அப்புறம் வாரம் பத்து நாளுக்கு வராது.

எனக்கு விசயம் என்னன்னு புரிஞ்சுடுச்சு. யாரோ வர்ர அரவம் கேட்டுச்சு. மறுபடியும் அந்த மூட்டையை ஒரு கல்லைப் போட்டு கட்டி நடு ஆறு வரைக்கும் இழுத்துட்டு போயி விட்டுட்டு வந்தேன்.

அப்புறம் எவ்வளவு நேரம் நான் கரைல உக்காந்து அழுதிட்டிருந்தேன்னு தெரியாது. தங்கச்சி நீ திடீர்னு ஆத்துல இருந்து எந்திருச்சி வந்துடும்மான்னு கதறினேன். எதாவது அதிசயம் நடக்கும்னு நம்பினேன்.

ஒரு வாரம் இதை ஜீரனிக்க முடியாத மாதிரி பித்து புடிச்ச மாதிரி திரிஞ்சேன். தேடும் படலம் நடந்துக்கிட்டே இருந்தது. ஒரு நாள் என் நாக்குல சனி உக்காந்திருந்திச்சு போல. எங்கம்மாகிட்ட.. இந்த விசயத்தை சொன்னேன்.

அவங்களும் அப்பாவும் கதறினாங்க துடிச்சாங்க. அவங்களால இதை தாங்கவே முடியலை. ரொம்ப நேரம் அழுதிட்டே இருந்தாங்க. மூனு பேரும் அழுதழுது நான் தூங்கிட்டேன். காலைல எந்திருச்சி பாக்கறேன். எங்கம்மாவும் அப்பாவும்... எங்கம்மாவும் அப்பாவும்...

எங்க வீட்டு உத்தரத்துல தொங்கிக்கிட்டு இருந்தாங்க..."

அந்த கோவிலின் இன்னொரு மூலையில் இருந்த தண்ணீரைப் பிடித்து சிறிது தொண்டையை நனைத்துக் கொண்டான் அவன். பேசுவது மனதாக இருந்தாலும் தொண்டை துக்கத்தால் வரண்டிருந்தது.

"மனிதர்களுக்கு காமம்ங்கறது ஒரு உணர்வு அவ்வளவுதான... தோ நான் இப்ப தாகம் எடுக்குதுன்னு தண்ணி குடிச்சனே அது மாதிரிதான. தாகம் எடுத்ததுன்னா தண்ணியதான குடிப்போம். வேற எதாவது கழிவுப் பொருளை குடிச்சிருவமா. அந்த ஆளோட காமத்தை வெளிப்படுத்த ஒரு பச்சை மண்ணுதான் கிடைச்சுதா"

கண்களில் நீர் பொலபொலவென கொட்டியது. அவனது உடல் மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்தது.

"இந்த ஆளோட காமத்துக்கு எங்க குடும்பமே பலி ஆயிடுச்சே. இதெல்லாம் வெளியே சொல்ற விசயமா. அப்படி சொல்லிட்டா.. என் தங்கச்சி...

என் தங்கச்சி... ஆத்மா எப்படி தவிக்கும். இப்படி மானம் போயிடுச்சேன்னு. அதான் மனசைக் கல்லாக்கிக்கிட்டு அந்தக் கல்லைதான் அவளுக்கு துணையா அந்த மூட்டைக்குள்ள போட்டு நடு ஆத்துக்கு இழுத்துட்டு போய் விட்டுட்டு வந்தேன். இன்னமும் அந்த ஆத்துக்கு அடில என் தங்கச்சி தூங்கிட்டு இருக்கா.

சமயம் பாத்துட்டே இருந்தேன் அந்தாளைப் பழிவாங்க.. இதோ இன்னிக்கு காலைல இன்னொரு கல்ல அந்தாள் தலைல போட்டேன்."

அவன் மெல்ல எழுந்து நடக்க ஆரம்பித்தான்.

"சொல்லுங்க.. காமம்ங்கறது உயிர்களை உருவாக்குவதற்காகவா? இல்லை உயிர்களை அழிப்பதற்காகவா?" என்றவாரே.. அருகில் இருந்த கோவில் கிணற்றில் குதித்தான் அவன்.

உண்மை மூழ்கிக்கொண்டிருந்தது.

SHUTTER ISLAND (2010) - திரை விமர்சனம்

SHUTTER ISLAND (2010)

இது இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியான திரைப்படம்.. இதே பெயரில் நாவலாக வெளிவந்து பின் திரைப்படமானது. இந்த காரணத்திற்காகவும், இது ஒரு திரில்லர் திரைப்படம் என்பதனாலும் இதனைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.. நேற்றுதான் நேரம் கிடைத்தது.

1954 ஆம் ஆண்டில் படம் தொடங்குகிறது...

இரண்டு மார்ஷல்கள்  ஷட்டர் ஐலேண்டில் இருக்கும் மனநல மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற ஒரு நோயாளியைக் கண்டுபிடிப்பதற்காக கப்பலில் பயணிக்கிறார்கள். அதில் ஒருவர்தான் டிகாப்ரியோ.

மிகவும் அபாயகரமான நோயாளிகள் வைக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை அது. அந்த தீவிலேயே அந்த மருத்துவமனை மட்டும்தான் இருக்கிறது. அங்கு இந்த மார்ஷல்களை அவர்கள் நடத்தும் விதம் அங்கு இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை.. டீகாப்ரியோவிற்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

காணாமல் போனதாகச் சொல்லப்படும் நோயாளி ரேச்சல் சொலாண்டோ ஒரு பெண். அவள் அவளது மூன்று குழந்தைகளைக் கொன்ற ஒரு சைக்கோ என்கிறார்கள்.

அந்த விசாரனையின் போதே டிகாப்ரியோவுக்கும் தலை சுற்றுகிறது.. அதற்காக அவனுக்கு அங்கு மருந்து தரப்படுகிறது.

ரேச்சலுக்கு பழகும் சந்தர்ப்பம் கிடைக்கும் வாய்ப்பு இருப்பவர்களிடம் எல்லாம் ஆண்ட்ரூ லாடிஸ் என்ற பெயரை உச்சரித்து அவரைத் தெரியுமா என்று கேட்கிறார் டீகாப்ரியோ. அந்த பெயரைக் கேட்டவுடன் அனைவரும் அதிர்ந்து எழுந்து பதட்டத்துடன் ஓடாத குறையாக சென்று விடுகின்றனர். நமக்கும் யார் அந்த ஆண்ட்ரூ லாடிஸ் என்ற எதிர்பார்ப்பு வந்துவிடுகிறது.

இதனிடையே டீகாப்ரியோவிற்கு அவர் இரண்டாம் உலகப்போரில் பங்கு பெற்ற போது நடந்த நிகழ்வுகள் மற்றும் தீவிபத்தில் இறந்த அவனது மனைவி போன்ற சம்பவங்கள் நினைவுகளாகவும், கனவாகவும் வந்து அவஸ்தைப் படுத்துகின்றன.

இறந்த அவரது மனைவி கனவிலும் நினைவிலும் வந்து அடிக்கடி இதைச் செய் இதைச் செய்யாதே என்கிற ரீதியில் எதையாவது சொல்கிறார். அதனாலும் டீகாப்ரியோ குழம்புகிறார்.

தன் மனைவி இறந்ததற்கு காரணம் ஆண்ட்ரூ லாடிஸ்தான். அவர் தற்போது இந்த மருத்துவமனையில்தான் இருக்கிறார். மேலும் இந்த மருத்துவமனையில் நிறைய சித்திரவதைகள் நடக்கின்றன அதனைக் கண்டுபிடித்து உலகிற்குச் சொல்வதற்காகவே தான் இங்கு வந்திருப்பதாக தன் உடன் வந்த மார்ஷலிடம் டீகாப்ரியோ தெரிவிக்கிறார்.

ரேச்சலின் அறையில் ஒரு துண்டுச் சீட்டு அவர்களுக்குக் கிடைக்கிறது. அதில் யார் அந்த 67 ஆம் நபர்? என்ற கேள்வி இருக்கிறது.

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.. அது என்னவாக இருக்கும் என நாமும் யோசிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.

அந்த மருத்துவமனையில் மொத்தம் இருப்பதே 66 நோயாளிகள்தான் என்ற உண்மை டீகாப்ரியோவிற்கு தெரியவருகிறது. அப்படியானால் 67 வதாக ஒரு நோயாளி நிச்சயம் இங்கு இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்கிறார் டீகாப்ரியோ. அந்த 67 வது நோயாளி யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நமக்கும் எகிறிவிடுகிறது. ஆனால் இறுதியில் அந்த 67 வது நோயாளி யார் எனத் தெரியவரும் போது.. உண்மையில் நாமும் சிறிது குழம்பி பின் தெளிந்து அதிர்ந்து போகிறோம்.

இந்த விசாரணையின் போதே திடீரென காணாமல் போன ரேச்சல் கிடைத்து விட்டார் என்று அவரை டீகாப்ரியோவிற்கு அறிமுகப்படுத்துகின்றனர். அவர் தான் மருத்துவமனையில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் வீட்டில் இருக்கிறோம். உடன் இருப்பவர்கள் அனைவரும் அவரது சேவகர்கள் என்ற நினைப்பில் இருக்கிறார்.

டீகாப்ரியோவிடம் அவரது நினைவுகளை அவர் தெரியப்படுத்துகிறார்... பின் திடீரென டீகாப்ரியோவை அவரது கணவராக நினைத்து கட்டி அணைக்கிறார். கட்டி அணைக்கும் போதே திடீரென நினைவு வந்தவராய்.. இறந்த என் கணவர் எரிந்துவிட்டார்.. யாரடா நீ என்று கூச்சல் போடுகிறார். அதிர்ந்து விடுகிறார் டீகாப்ரியோ.. மீண்டும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது மருந்து தரப்படுகிறது.


அந்த தீவில் ஒரு கலங்கரை விலக்கம் இருக்கிறது. அங்கு என்ன இருக்கிறது.. அங்கு ஏதோ மர்மம் இருப்பதாக டீகாப்ரியோ நினைக்கிறார்.
எப்படியாவது அங்கே சென்று பார்த்துவிட வேண்டும் என அதற்கு திட்டமிடுகிறார்.

அங்கே அவரும் உடன் வந்த மார்ஷலும் செல்கின்றனர். செல்லும் வழியில் டீகாப்ரியோவிற்கும் உடன் வந்த மார்ஷலுக்கும் தகராறு வந்துவிடுகிறது. தான் மட்டும் தனியாக அந்த கலங்கரை விலக்கத்துக்குச் செல்வதாகக் கூறிவிட்டு டீகாப்ரியோ முன்னே நடக்கிறார். பின் திரும்பிப் பார்க்கிறார். அங்கே அந்த மார்ஷலைக் காணோம். அந்த மார்ஷலின் பெயர் சக்.. அங்கே சென்று பார்க்கிறார். இந்த சம்பவம் நடப்பது உயரமான ஒரு பாறைக்கு அருகில், கீழே கடல்..

அங்கு சென்று பார்த்தால் சக் கீழே விழுந்து இறந்து கிடக்கிறார். பதறியடித்துக் கொண்டே இவரும் சிரமப்பட்டு பாறைகளைப் பிடித்து கீழே இறங்கிப் பார்த்தால் அவர் அங்கு இல்லை.

என்னடா இதுன்னு டீகாப்ரியோ அதிர்ச்சியோட பாத்துட்டு இருக்கும் போதே.. அங்க ஒரு பொந்தில் இருந்து ஆயிரக்கணக்கான எலிகள் வந்து அவர் நின்னுட்டிருந்த பாறையைச் சூழ்ந்துக்கும்..

வேக வேகமா அவரு மறுபடியும் பாறைல மேல ஏறுனா.. அங்க சின்னதா ஒரு குகை இருக்கும்.. அதுக்குள்ள வெளிச்சமா இருக்கேன்னு உள்ள போய் பார்த்தா... அங்க ரேச்சல் இருப்பாங்க..

என்னடா ரேச்சல்தான் கிடைச்சிட்டாங்களே... மருத்துவமனைக்குள்ள வந்த ரேச்சல் மறுபடியும் இங்க எப்படி வந்தான்னு குழம்பாதீங்க.. மேல படிங்க...

நான்தான் உண்மையான ரேச்சல்னு டீகாப்ரியோகிட்ட சொல்வாங்க அவங்க.. அவங்க மூனு குழந்தைகளைக் கொலை பண்ணினதைப் பத்தி டீகாப்ரியோ கேப்பார். அதுக்கு அவங்க எனக்கு குழந்தைகளே கிடையாது நான் கல்யாணமே பண்ணிக்கலை.. உண்மையில் நான் நோயாளியே கிடையாது... இந்த மருத்துவமனையில் வேலை பார்த்துட்டு இருந்த டாக்டர் நானுன்னு சொல்வாங்க...

அப்புறம் அவங்க டீகாப்ரியோகிட்ட ஒரு கேள்வி கேப்பாங்க. டீகாப்ரியோவுக்கு அதிர்ச்சியா இருக்கும். நமக்கும்தான்.. அவங்க என்ன கேப்பாங்கங்கறதை நீங்க படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கங்க...

அதுமட்டும் இல்லாம அந்த மருத்துவமனையில் மக்களை ஆராய்சிப் பொருளாப் பயன்படுத்தறது பத்தியும் அவங்க மூளையில நடக்கிற அறுவை சிகிச்சை பத்தியும் சொல்வாங்க. இது அங்க இருக்கற எல்லா ஊழியர்களுக்கும் தெரியும்னு சொல்வாங்க. அந்த கலங்கரை விலக்கத்துலதான் மூளை அறுவை சிகிச்சை நடக்குதுன்னும் சொல்வாங்க. டீகாப்ரியோவுக்கு அங்க போகனும்ங்கற எண்ணம் இன்னும் அதிகமாகிடும்.

ஒரு வழியா டீகாப்ரியோ அந்த கலங்கரை விலக்கத்துக்கு போய்டுவார். அங்க போய் பார்த்தா... அங்கே...

இதுக்கப்புறம் நடக்கறது எதையும் நான் சொல்லமாட்டேன்.. நீங்களே பார்த்து தெரிஞ்சுக்குங்க.. இதுவரை நான் சொன்ன கதை கதையே இல்லை (அடப்பாவி...அப்ப ஏண்டா இப்படி சுத்துனங்கிறீங்களா..) இனிமேதான் இருக்கு மேட்டரே..

அவரும் அதிர்ச்சியாகி, குழம்பி நாமும் அதிர்ச்சியாகி குழம்பி... நம்ம மூளை அப்படியே டீகாப்ரியா மூளையாவே மாறி யோசிச்சிட்டிருக்கும்.. அந்த அனுபவம் ரொம்ப நல்லா இருந்தது...

இந்தப் படம் பார்த்து முடிச்சவுடனே மறுபடியும் பார்க்கத் தோணுச்சு... இரண்டாம் முறை பார்க்கும் போது அது வேற அர்த்தத்தைக் கொடுக்கும்..

மைல்டான திரில்லர் படமான் இதுல இடைல இடைல கொஞ்சம் போரடிக்கற மாதிரி காட்சிகள் இருக்கும்.. ஆனா முதல் முறை பார்க்கும் போதுதான் அந்த சீனெல்லாம் போரடிக்கும். இரண்டாவது முறை பார்க்கும் போது அந்த காட்சியை வெச்சது சரிதான்னு தோணும்..

டீகாப்ரியோவோட நடிப்பு கிளாஸ். வழக்கம் போல இதையும் அவர் நடிப்புக்காக ஆஸ்காருக்கு நாமினேட் பன்னுவாங்க.. பாவம் அவருக்குதான் அந்த ராசி இல்லையே...

கட்டாயம் இரண்டாம் முறை பார்க்க வேண்டிய படம் இது..

Tuesday, October 26, 2010

கண்ணீர் துள்ளல் - சிறுகதை

அந்த உணவகத்தில் மேஜையை ஈரத்துணியால் துடைத்துக் கொண்டிருந்தான் ராஜன்.

"டேய் என்னடா படிக்கற நீ... நீ படிக்கற ஸ்கூல்ல ஃபீஸ் எவ்லோன்னு தெரியும் இல்ல. கூடப்படிக்கறவன்லாம் பத்தாவதுல எவ்லோ மார்க் வாங்கி அங்க சேந்திருக்கான் தெரியும் இல்ல. நல்ல மார்க் எடுத்தாதான்டா அந்த ஸ்கூல்லயே எட்டிப்பாக்க முடியும். பத்தாவதுல உன்னைய பாஸ் பண்ண வைக்க நான் பட்ட பாடு எனக்குத்தான்டா தெரியும். இப்பவாவது பொறுப்பா படிக்க வேண்டியதுதான. பேருக்கு பாஸான உன்னை அந்த ஸ்கூல்ல தொடர்ந்து வெச்சிருக்கறதுக்காகவே, டொனேசன்ங்கற பேர்ல மாசா மாசம் என் வருமானத்துல பாதிய அழுவறன்டா."

தன் மகன் வேலனிடம் பொரிந்துத் தள்ளிக் கொண்டிருந்தார் அந்த உணவகத்தை நடத்தி வரும் சுந்தரம். அவருக்கு அவன் ஒரே மகன். அந்த ஊரிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற உணவகம் அது. நல்ல வருவாய். இருந்தும் என்ன செய்ய?. மகனை நன்றாக படிக்க வைத்து வெளிநாட்டிற்கு அனுப்பிப் பார்க்க வேண்டும் என்பது அவரது ஆசை. ஆனால் அவனோ என்ன திட்டினாலும் உதைத்தாலும் நான் படிக்கமாட்டேன் என்றே செயல்பட்டான்.

"சரி இனியும் உன்ன நம்பி உபயோகம் இல்ல. இப்படி என்னால காசு கொண்டு போய் கடல்ல கொட்ற மாதிரி. பலனே இல்லைன்னு தெரிஞ்சும் மாசா மாசம் உன் ஸ்கூல்ல போய் கொட்ட முடியாது. இந்த ராஜனைப் பாரு. படிப்பு வரலைன்ன உடனே நம்ம ரூட் இது இல்லன்னு வேலைக்கு வந்துட்டான். எவ்லோ பொறுப்பா வேலை செய்யற பையன் தெரியுமா. உன் வயசுதான் ஆவுது. இப்பவே எவ்லோ கண்ணும் கருத்துமா இருக்கான். நீயும் இனிமே இங்கயே வந்து வேலை செய்யிடா. அப்பதான் உனக்கு புத்தி வரும்."

இதனை அரசல் புரசலாக கேட்டுக்கொண்டிருந்த ராஜனுக்கு திக்கென்றது. நம்மை நம்ம முதலாளி இப்படி நினைச்சிக்கிட்டிருக்காரோ என்று நினைத்தவன். அடுத்த நொடியே. அடுத்தடுத்த செய்ய வேண்டிய வேலைகள் நினைவு வந்தவனாய் சகஜமாகி அதனைப் பார்க்கப் போனான். 

இச்சம்பவம் நடந்து ஒரு மாதம் சென்றிருக்கும். ஒரு மாலை நேரம்.

அந்த உணவகத்தில் ஒரு டேபிளில் வந்து அமர்ந்தார் அவர்.

எதிரே உள்ளே சென்ற ராஜனை பின்புறமாக பார்த்த அவர். அவன் அக்கடையின் ஊழியன் என்பதைப் புரிந்தவராய்..

"தம்பி. ஒரு காபி. ஒரு பிளேட் வடை கொண்டு வாப்பா"

"சரிங்க சார்" என்றவாரே அவரிடம் திரும்பினான் ராஜன்.

ஒரு நிமிடம் அதிர்ந்தான், பின் மகிழ்ந்தான்.

"சார்.. நீங்களா சார். எப்படி இருக்கீங்க சார். உங்கள பாத்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம் சார்."

என்று அவனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட்டு. இது போதாது என்கிற தொனியில் யோசித்து நின்றான்.

"என்னப்பா. இது உங்க கடையா?"

"இல்லை சார்"

"பின்ன வேலை செய்யிறியா. ஏன்பா காலேஜ் சேரலையா. என்ன ஆச்சுப்பா"

அவரது குரலில் பரிதாபமும் அதிர்ச்சியும் சரிவிகிதத்தில் கலந்திருந்தது.

ராஜன் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்தான். எப்போதும் மலர்ந்த முகமாய் இருக்கும் ராஜனின் முகம் இருண்டிருந்தது. கண்களின் ஓரம் கண்ணீர் நான் வரட்டுமா வரட்டுமா என்றது.

அவனது முகவாட்டத்தைப் பார்த்த அவர்..

"தம்பி என்ன ஆச்சுன்னு சொல்லுப்பா.. ஏன் காலேஜ்ல சேரலை நீ. தைரியமா சொல்லுப்பா" என்றார்.

இதனை கவனித்துக் கொண்டிருந்த சுந்தரம் எழுந்து இவர்கள் அருகில் வந்தார்.

"சார் உங்களுக்கு இந்த பையனைத் தெரியுமா. என்ன கேட்டீங்க அவன் கிட்ட? ஏன் அவன் இவ்லோ பதட்டமா இருக்கான்?"

"நான் ஒரு ஆசிரியர். இவன் எங்க ஸ்கூல்லதான் 12 வது வரைக்கும் படிச்சான். 12 வதுல ஸ்கூல்லயே ஃபர்ஸ்ட் வந்த பையன் சார் இவன். இந்நேரம் ஒரு நல்ல காலேஜ்ல சீட் கிடைச்சிருக்கும். படிச்சுட்டு இருப்பான். வந்து சொல்லக்கூட இல்லை பாரு. அவ்லோதான் ஸ்டூடண்ட்ஸ்னு நாங்க பேசிட்டு இருந்தோம். இவன் என்னன்னா இங்க வேலை பாத்துட்டு இருக்கான்."

"அப்படீங்களா. நான் இவன் படிப்பேறாத பையன்னு இல்ல நினைச்சுட்டு இருந்தேன். பாருங்க. யாரையும் பாத்தவுடன் நமக்கு என்ன தோணுதோ அப்படிதான் அவங்க இருப்பாங்கன்னு நினைச்சுக்கறோம்." என்றவாரே அவனிடம் திரும்பி..

"தம்பி நீ இனிமே என் கடைக்கு வேலைக்கு வர வேண்டாம்ப்பா"

அந்த ஆசிரியருக்கு திக்கென்றது. அச்சச்சோ அவன் படிப்பில் எப்படி மண் விழுந்ததோ தெரியவில்லை. இப்போது அவன் பிழைப்பிலும் நாமே மண் அள்ளிப் போட்டுவிட்டோமோ என்று தடுமாறினார். திகைத்தார். அடுத்து என்ன பேசுவது என யோசித்தார்.

ராஜனும் அதிர்ச்சியடைந்தவனாய்...

"சார் சார் அப்படி சொல்லாதீங்க சார். என் குடும்பத்துல நான் மட்டும்தான் சார் சம்பாதிக்கறேன். எங்கப்பா குடிச்சி குடிச்சே சமீபத்துல செத்துட்டாரு சார். அவரோட சொற்ப வருமானத்துலதான் சார் குடும்பம் ஓடிட்டு இருந்தது. அம்மாவுக்கு பிரஷர், சுகர்லாம் இருக்கு சார். அதனால் அவங்கள வேலைக்கு போக வேனாம்னு சொல்லிட்டு. நான் மட்டும் இங்க சம்பாதிக்கறேன் சார். இப்ப நீங்களும் என்ன வேலைய விட்டு நிறுத்திட்டா என் குடும்பம் நடுத்தெருவுக்குதான் சார் வரும்"

சொல்லும் போதே அந்த காட்சிகள் அவன் மனக்கண்ணில் ஓடியிருக்க வேண்டும். அவன் கண்ணில் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த கண்ணீர் வழிந்தோடியது. உடல் ஏகமாய் நடுங்கியது.

"தம்பி பதறாதப்பா. நீ இனிமே என் கடைக்கு வேலைக்கு வர வேண்டாம். ஆனா உன் படிப்புச் செலவை நான் ஏத்துக்கறேன்பா. நல்லா படிக்கற நீ ஏன் வாழ்க்கையைப் பாழாக்கிக்கனும். நீ சம்பாதிக்க ஆரம்பிக்கற வரைக்கும். உங்க வீட்டுக்கு மாசா மாசம் நான் ஒரு தொகை கொடுக்கறேன்பா." என்றார் சுந்தரம்.

ராஜனின் முகம் குப்பென மலர்ந்தது. மீண்டும் கண்களில் கண்ணீர் துள்ளலுடன் வழிந்து வந்து தரையில் விழுந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

உடனே ஓடிப்போய் அவரது கால்களில் விழுந்தான். பின் ஆசிரியரின் கால்களிலும் விழுந்து கும்பிட்டான். அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. உடல் நடுக்கம் இன்னும் அதிகரித்திருந்தது. வாழ்வின் மோசமான பக்கங்களையே பார்த்திருந்த அவனது மூளை இதனை நம்ப மறுத்துத் தடுமாறியது.

இதனை உணர்ந்த சுந்தரம்.. அவனை அருகில் அழைத்து கட்டியணைத்து ஆசுவாசப்படுத்தினார். பின் ஆசிரியரிடம்...

"ஏன் சார். உங்க பள்ளியிலேயே முதல் மதிப்பெண் வாங்கிய பையன்கறீங்க. அவனுக்கு கூட அடுத்து என்ன படிக்கனும்னு அக்கறையா அறிவுரை சொல்ல மாட்டீங்களா? குறைந்த பட்சம் அவன் என்ன படிக்கறான்னு கூட தெரிஞ்சுக்க மாட்டீங்களா? பள்ளியோடவே ஆசிரியரோட கடமை முடிஞ்சதுன்னு நினைச்சிட்டீங்களா? அவ்லோதான் ஆசிரியரா?"

ஆசிரியர் புதிய பாடம் கற்றவராய் திகைத்து நின்றார்.

Monday, October 25, 2010

பயணம் - சிறுகதை


 அந்த இரவு நேரத்தில் அந்த அரசுப் பேருந்து தூக்கக் கலக்கத்துடன் நகர்ந்து சென்று கொண்டிருந்தது. ஓட்டுனர் தாமோதரனுக்கு அனுபவம் போதவில்லை என்பது அவர் பேருந்தை ஓட்டிய விதத்திலேயே புரிந்து கொண்டார் அனுபவஸ்தரான நடத்துனர் மனோகரன்.

இந்த தம்பிகிட்ட பேச்சு குடுத்துக்கிட்டெ வந்தாதான் வேலையாகும் போல இருக்கே. இல்லன்னா தூங்கிடுவான் போல இருக்கு என்று நினைத்தார். அதனால் அவனிடம் பேச்சு கொடுத்தார்.

"என்னப்பா தாமோதரா இதுவரைக்கும் உன்ன நான் பார்த்ததே இல்லையே. எந்த ஊருப்பா நீயி"

"நாமக்கல் பக்கத்துல ஒரு கிராமம்னே கொஞ்ச வருசம் பிரைவேட்டா ஓட்டினேண்ணே. இப்பதான்னே அரசு வேலை கிடைச்சது"

"அப்படியா ரொம்ப சந்தோசம். என்ன ஒற்றுமை பாத்தியா நமக்குல்ல. எனக்கு இது கடைசி ட்ரிப்புப்பா"

ஓட்டுனர் தாமோதரனுக்கு ஒன்றும் புரியவில்லை.

"என்னண்ணே சொல்றீங்க?"

"ஆமாம்பா நான் இன்னையோட ஓய்வு பெற வேண்டியதுப்பா. சாய்ந்தரம் ஃபங்க்சன்லாம் கூட வெச்சிருந்தாங்களே. அப்புறம் இன்னிக்கு இது சிறப்புப் பேருந்துங்கறதால கண்டக்டர் தேடிட்டிருந்தாங்க. நானா விரும்பி வந்துட்டேன். அப்புறம் நாளைல இருந்து எனக்கு இங்க வேலை இல்லை இல்லையா, அதான்"

"அப்படிங்களான்னே ரொம்ப சந்தோசம்னே. உங்களுக்கு எத்தனை குழந்தைங்கன்னே"

"எனக்கு ஒரே பொண்ணுப்பா அவளுக்கும் இப்ப தேவை நடக்கப்போகுது. எனக்கு ரொம்ப பிடிச்சதே இந்த வேலையும் என் பொண்ணும் தாம்பா. இதோ இன்னியோட இதுவும் முடிஞ்சுடும். அப்புறம் அவளும் கல்யாணமாகிப் போயிட்டா... நினைக்கவே  கஷ்டமா இருக்குப்பா"

சிறிது நேரம் அங்கு மவுனம் நிலவியது.

என்ன இது இவனிடம் பேச்சுக் கொடுக்க நினைத்து நம்ம சொந்தப் புலம்பலை ஆரம்பித்து விட்டோமே. என்று சுதாரித்தவராய் பேச்சை வேறு திசையில் திருப்பினார். பேச்சு எங்கெங்கோ சென்றது.. பேருந்தைப் போலவே...


* * *

பிரவீனும் சிவாவும் அந்த அரசு விரைவுப் பேருந்தில் அமர்ந்திருந்தனர். பேருந்து அசுர வேகத்தில் பாய்ந்து சென்று கொண்டிருந்தது.

"நான் இப்ப இருக்கற சந்தோசத்துக்கு அளவே இல்லடா மச்சான். எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லைடா"

என்று தன் குதூகலத்தை பிரவீனிடம் வெளிப்படுத்தினான் சிவா.

"மச்சி இதையே நீ நூறாவது தடவையா சொல்றடா. வேலை கிடைச்சிருக்கறது சந்தோசமான விசயம்தான். இப்பதான படிச்சி முடிச்சிருக்கோம். இப்ப ஃபீல்டும் ரொம்ப நல்லா இருக்கு. இந்த வேலை கிடைக்கலைன்னாலும் வேற வேலை சீக்கிரம் கிடைச்சிருக்கும்டா மச்சி. நீ ஏன் இவ்ளோ எக்சைட் ஆகறேன்னு புரியலைடா மச்சி"

"அப்படி இல்லடா. உங்கப்பா பெரிய பிசினஸ் மேன். உனக்கு காசு சம்பாதிக்கனும்ங்கற நெசசிட்டி இல்லை. அதாண்டா உனக்கு அருமை தெரியலை. ஆனா நான் அப்படி இல்லைடா. என்ன படிக்க வைக்கிறதுக்காக எங்க குடும்பமே சேர்ந்து கஸ்டப்பட்டதுடா. அப்பா கூலி வேலைதான். யாரையாவது ஒருத்தரைத்தான் படிக்க வைக்க முடியும்னு சொல்லிட்டார். அதனால எங்கக்காங்க மூனு பேரும் படிப்பை பாதிலயே நிறுத்திட்டு அவங்களுக் கூலி வேலைக்கு போனாங்கடா. இனி நான் தலையெடுத்துதான் அவங்களுக்கு கல்யாணம் காச்சின்னு பண்ணனும்.  இப்ப கூட பாரு. வேலைக்கு நீ முயற்சியே பண்ணலைன்னாலும் சும்மா பெங்களூர சுத்திப் பாக்கனும்னு எங்கூட கிளம்பிட்ட. எங்க ஊர்ல இருந்து திருச்சிக்கே நான் நாலைஞ்சு தடவைதாண்டா வந்திருப்பேன். ஆனா எனக்கு பெங்களூரெல்லாம். ஃபாரின் மாதிரிடா. நீ கூட வரலைன்னா. நான் பயந்து நடுங்கிட்டே இருந்திருப்பேன்டா."

"ஹ ஹ ஹ... சரி அதைவிடு. அக்காங்க கல்யாணத்தை எல்லாம் ஜாம் ஜாம்னு நடத்திடலாம்டா அதான் இப்ப சூப்பர் சேலரில வேலை கிடைச்சிடுச்சே. உனக்கு இனி கவலையே இல்லைடா"

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே "பட்டீர்" என்று ஒரு வெடிச்சத்தம் கேட்டது. அந்த அரசு விரைவுப் பேருந்தின் ஓட்டுனர் சற்று நிலை தடுமாறி, பின் வண்டியை சாலையின் ஓரத்தில் நிறுத்தினார். உடனே நடத்துனர் இறங்கி என்ன ஆச்சு என்று பார்க்கச் சென்றார்.

"அண்ணே டயர் வெடிச்சிடுச்சிண்ணே" -நடத்துனர்.

ஓட்டுனரும் இறங்கி சென்று பார்த்தார்.

பின் இருவரும் அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்.

பின் பேருந்துக்குள் ஏறி...

"பஸ் டயர் வெடிச்சிடுச்சி மாற்று இல்ல இப்ப. வேற பஸ் மாத்திவிடறோம் எல்லோரும் எந்துரிச்சி வாங்க" என்று நடத்துனர் கத்தினார்.

அந்த அரசு விரைவுப் பேருந்தில் இருந்த 34 பயணிகளும் தூக்கம் கலைந்த கடுப்பிலும். வேறு பஸ்ஸில் மாற்றிவிட்டால் நின்று கொண்டு பயணிக்க வேண்டி இருக்குமோ என்று கடுப்பிலும் முணுமுணுத்தனர்.

"சீக்கிரம் இறங்கி வாங்க. எங்களுக்கு என்ன ஜோசியமா தெரியும் இப்படி ஆகும்னு. இறங்குங்க இறங்குங்க" என்றவாரே. கீழே சென்று நின்று கொண்டார் நடத்துனர்.

பின்னர் வந்த அரசுப்பேருந்துகளில் அவர்களை ஏற்றிவிடும் பணியில் துரிதமாக ஈடுபட்டார். ஒரு வழியாக இரண்டு பேருந்துகளில் முடிந்த அளவு பயணிகளை ஏற்றி அனுப்பியாயிற்று இன்னும் சொற்ப பயணிகளே நின்று கொண்டிருந்தனர். அடுத்து ஒரு பேருந்து வந்தது. அதிலும் நின்று கொண்டுதான் பயணிக்க வேண்டியதாய் இருந்தது. முதலில் முரண்டு பிடித்த சிலர் இனியும் அமர்ந்துதான் செல்வேன் என முரண்டு பிடித்து கீழே நிற்கும் கொடுமைக்கு பஸ்ஸிலேயே நின்று தொலைத்துவிடலாம் என பஸ்ஸில் ஏறினர்.

"ஏய் பிரவீன். வாடா நாமளும் போலாம்டா. இன்னும் மூனு மணி நேரம் தாண்டா அப்புறம் சேலம் போய் வேற பஸ் பிடிச்சுக்கலாம்டா" - சிவா.

"ஏய் போடா இன்னும் மூனு மணி நேரம் நின்னுகிட்டே டிராவல் பண்ணனுமா என்னால முடியாதுடா. நான் உக்காந்துதான் வருவேன்"

"தம்பி முரண்டு பிடிக்காதப்பா. எல்லாரும் கிளம்பிட்டாங்க. உங்க நாலு பேத்தோடதான் ஒரே ரோதனையா போச்சு." இவனுடன் சேர்த்து உக்காந்துதான் பயணிப்போம் என்று முரண்டு பிடித்த நால்வரையும் சேர்த்தே திட்டினார் நடத்துனர்.

அந்தப் பேருந்தும் கிளம்பியது. பிரவீன், சிவா மற்றும் இன்னும் இருவர் மட்டும் உட்கார்ந்து போனால்தான் ஆச்சு என்று நின்று கொண்டிந்தனர். சிவா எவ்வளவோ சொல்லிப் பார்த்தான் பிரவீன் மசிவதாயில்லை.

நால்வரும் அந்த விரைவுப் பேருந்தின் பின்னால் அடுத்த பேருந்து வருகிறதா என பார்த்துக் கொண்டு சோர்வுடன் நின்றிருந்தனர். அது ஒரு வளைவுப்பகுதியாக இருந்ததால் லைட் வெளிச்சம் மட்டுமே தெரிந்தது.. வருவது பேருந்துதானா என பக்கத்தில் வந்தால் மட்டுமே தெரிந்தது. நடத்துனரும் ஓட்டுனரும் அருகில் இருந்த டீ கடையில் புகுந்து தம் அடித்துக் கொண்டிருந்தனர்.

"சே யார் மூஞ்சில முழிச்சமோ சரியான சாவு கிராக்கிகளா இருக்கானுங்...."

சட்டீர் என பெருத்த சப்தம் கூடவே ஆ..... அம்மா.... என அலறல் கேட்டது.. பதறியடித்துக் கொண்டு அவர்கள் திரும்பிப் பார்த்தனர். அங்கே....

அந்த அரசு விரைவுப் பேருந்து அருகில் இருந்த ஒரு பள்ளத்தில் சாய்ந்து கொண்டிருந்தது. ரோட்டின் நடுவில் இருந்த தடுப்புச் சுவர் உடைந்து அதனையும் தாண்டிக்கொண்டு ஒரு அரசுப் பேருந்து அசுர வேகத்தில் 200 அடி சென்று நின்றது.   

திடீரென அங்கே கூட்டம் கூடியது. ஆ அம்மா என அலறல்கள்...கதறல்கள்.... சிறிது நேரத்தில் போலீஸ் வாகனங்கள், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்தன.

அடுத்த நாள் காலை செய்தித்தாளில்.

அரசு விரைவுப் பேருந்து மீது அரசுப் பேருந்து மோதல் 7 பேர் உடல் நசுங்கி பலி, 13 பேர் படுகாயம்.
என்ற தலைப்பில் இது தலைப்புச் செய்தியாயிருந்தது. இரண்டாம் பக்கத்தில் இறந்தவர்கள் விவரம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

1. கிருஷ்ணன் (36), நெல்லையைச் சேர்ந்தவர்.
2. கலாநிதி (65), மதுரை பாலாஜி நகரைச் சேர்ந்தவர்.
3. பிரவீன் (21), திருச்சியைச் சேர்ந்தவர்.
4. சிவா (21), திருச்சி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் (முழு விவரம் தெரியவில்லை).

(இவர்கள் நாலு பேரும் அரசு விரைவுப் பேருந்தில் பயணம் செய்து டயர் வெடித்ததால் மற்றொரு வாகனத்திற்காக சாலையோரம் காத்திருந்த பயணிகளாவர்.)

5. ராமநாதன் (56), சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர்.
6. தமிழ்வாணன் (55), சென்னையைச் சேர்ந்தவர்.
7. மனோகரன் (58), அரசுப் பேருந்தின் நடத்துனர்.

இதில் மனோகரன் நேற்றுதான் பணி ஓய்வு பெற்றிருந்தார். இவராகவே விருப்பத்தின் பேரில். இறுதியாக ஒரு முறை செல்கிறேன் என்று பணிக்கு வந்திருக்கிறார். விதி அவருடைய வாழ்வில் விளையாடிவிட்டது இதுவே அவரது இறுதிப் பயணம் ஆகிவிட்டது. மேலும் அரசு விரைவுப் பேருந்து பழுதானதால் மற்ற பயணிகள் நின்று கொண்டு சென்றாலும் பரவாயில்லை என்று சென்றுவிட்டனர். இவர்கள் நால்வரும் உட்கார்ந்துதான் பயணிப்போம் என்று பிடிவாதமாக நின்று கொண்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

***

ஆத்திரத்துடன் செய்தித்தாளை விட்டெறிந்தேன்.

"ஏன் என்ன ஆச்சு மச்சி" என்று அதிர்ச்சியுடன் கேட்டான் என் அறைத்தோழன்.

"பேப்பர் நியூஸ் பாத்தியா?"

உடனே புரிந்து கொண்டு..

"ம்" என்றான்.

"வாழ்க்கை.. கனவுகள் நிறைந்தது இல்லையா. அவர்களுக்கும் ஆயிரம் கனவுகள் இருந்திருக்கும். கன நேர பிடிவாதத்திற்கும். தான் செய்த பணியை இறுதியாய் ஒரு முறை செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசைக்கும் விலை அவர்களது உயிரா?"

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தான் என் நண்பன். நீங்கள் தெரிந்தால் சொல்லுங்களேன்.

Friday, October 15, 2010

உண்மை சொன்னாள் (சவால் சிறுகதை)


அந்தப் புல்வெளியில் நான் என்னுடைய அக்கா என் அம்மா மாமா நால்வரும் அமர்ந்திருந்தோம்..இதுவரை காரசாரமாக நாங்கள் மாறி மாறி சண்டையிட்டுக்கொண்டதால் தொண்டை வரண்டு இனி பேச முடியாது சிறிது ஓய்வு தேவை என்று உடல் சோர்வாய் சொல்லியது.

ஒருவருக்கொருவர் அவரவர் கருத்துக்களில் பிடிவாதமாகவே இன்னும் இருந்ததால் பேச்சும் ஒரு முடிவுக்கு வருவதாய் தெரியவில்லை. எங்களுக்கும் யாருக்கும் விட்டுக்கொடுக்க எங்களது ஈகோ தடுத்தது. ஒருவரை ஒருவர் சில நேரம் சற்று கோபமாகவும், சில நேரம் பாசமாகவும் பார்த்துக்கொண்டு ஒருவித குழப்பத்துடனேயே அமர்ந்திருந்தோம்.

திடீரென உள்ளுக்குள் அரவம் கேட்டது..

* * *
காமினி ஜன்னலின் அருகே படுத்திருந்தாள். அவளது முகத்தில் மாஸ்க் போன்று எதோ ஒப்புக்கு வைக்கப்பட்டிருந்தது. அதில் இணைத்து சில ஒயர்கள் அவளது கையில் ஒட்டப்பட்டிருந்தன.
ஸ்டெதஸ்கோப்பை மாட்டிக்கொண்டு அந்த டாக்டர் வெளியே வந்தாள்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

அவளது கையில் சிறிய பொட்டலம் இருந்தது. அதை கையில் பிடிக்க முடியாமல் சிரமத்துடன் பிடித்திருந்தாள்.

திடீரென ஹேண்ட்ஸ் அப் என்றான் சிவா. அவனுக்கு பயப்படுவதைப் போல நடித்த காமினி சிறிது சிறிதாக வாசற்பக்கத்துக்கு நகர்ந்தாள். எப்படியாவது இந்த பொட்டலத்தை பரந்தாமனிடம் சேர்த்துவிட வேண்டும். அப்படி சேர்த்து விட்டால் அவளுக்கு கிடைக்கப்போகும் பரிசை நினைத்து அவள் மனம் பரபரத்தது.

"ஏய் எங்க நகர்ர நில்லு..நில்லு.. ஏய் சொல்றேன் இல்லை நில்லு"

அவள் அவனை அசட்டை செய்து நடந்து கொண்டே இருந்தாள். ஓட எத்தனித்தாள்.

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

"ஏண்டா என்னை சுடனும்னு முடிவு பன்னிட்டே இல்லை..நீயே இப்படி பன்னுவேன்னு நான் நினைக்கலைடா. நீ பேருக்குதான் போலிஸு உண்மைலயே போலீஸுன்னு நினைப்பா உனக்கு. எப்பவும் எனக்கு சப்போர்ட் பன்னுவ இப்ப இப்படி காலை வாரிவிடரியே...சுடுடா சுடு" என்றாள்.

அவன் சிரித்துக் கொண்டே துப்பாக்கியை கீழே நழுவவிட்டு என்ன சொல்வது என்றே தெரியாமல் முழித்தான்.

அவள் வேகமாக பரந்தாமனிடம் ஓடினாள்..

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

சரி இதைக் கொண்டு வந்து கொடுத்தா எனக்கு பிரைஸ் தர்ரேன்னு சொன்னீங்களே கொடுங்க என்றாள்.

அவரும் சிரித்துக் கொண்டே அவளுக்கான பரிசைக் கொடுத்தார். அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட காமினி. வேகமாக சிவாவிடம் ஓடினாள்.

"ஏய் வர்ஷினி இங்க வாவேன்" என்று வர்ஷினியையும் அழைத்தாள்.

அவளுக்கு பரந்தாமனிடம் இருந்து கிடைத்த பரிசை மூவரும் சமமாக பங்கிட்டு எடுத்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்த்துச் சிரித்தனர்.

* * *
உண்மையில் அதுதான் சரியோ..அவர்களது செய்கையில் லாஜிக் இல்லாவிட்டாலும். பாசம் இருக்கிறது, பிரியம் இருக்கிறது, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கிறது. கெட்டதை உடனேயே மறந்துவிடும் நல்ல குணம் இருக்கிறது. இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய விசயம் இருக்கிறது. இவர்களிடம் நாம் எதையும் கற்றுக்கொள்ளாமல் இவர்களுக்கு வாழக்கற்றுக் கொடுக்கும் பொறுப்பு நம்மிடம் இருப்பதாக நினைக்கிறோமோ!

என் மனம் எதை எதையோ நினைத்துக் குழம்பியது. மனம் குழம்புகிறதா இல்லை தெளிவடைகிறதா என்பதைக் கூட சரியாக கணிக்க இயலாத மனநிலையில் நான் இருக்கிறேன். உண்மையில் இது தெளிவல்லவா!

"என்னப்பா ரொம்ப கஸ்டமா இருக்காப்பா"

திடீரென அம்மா மவுனம் கலைத்து என்னிடம் பேசி என் நினைவுகளையும் கலைத்தார்.

"இல்லம்மா இப்ப நான் நாம சண்டை போட்டுக்கிட்டத பத்தி யோசிக்கவே இல்லைம்மா. காலைல இருந்து அதுங்க சண்டை போட்டதை விளையாண்டதை எல்லாம் பார்த்துட்டே இருக்கேம்மா. மனசு கொஞ்சம் நார்மலான மாதிரி இருக்கும்மா. இப்ப கூட அதுங்க மூனும் (வர்ஷினி, சிவா-என் அக்கா குழந்தைகள்)  தீபாவளி துப்பாக்கிய வெச்சி அப்பா கூட சேர்ந்து எதோ விளையாண்டுகிட்டு இருந்தாங்க"

"என்னப்பா சொல்ற நீ அதுங்க எதோ வெட்டியா விளையாண்டு பொழுத போக்கிட்டு இருக்குங்க. என்ன பன்றதுன்னே தெரியாம?"

"அப்படி இல்லம்மா உண்மைல அவங்க பன்றது வெட்டி வேலை இல்லம்மா. அவங்க செயல் உணர்த்தற விசயம் நிறைய இருக்கும்மா. நாமதான் அதை எதுவுமே புரிஞ்சுக்காம. சண்டை போட்டு வெட்டியா பொழுதை போக்கிட்டு இருக்கோம் இப்ப"

அங்கு சிறிது நேரம் மவுனம் நிலவியது.

"சரிப்பா இப்ப என்ன பண்ணலாம்ங்கிற"

"இனியும் இவங்ககிட்ட நியாயம் இதுதான்னு பேசி நேரத்தை ஓட்ட வேணாம்மா. நியாயமோ அநியாயமோ..சரி சரின்னு விட்டுக்கொடுத்து பேசுவோம். ஒரு வயித்துல பொறந்துட்டு இப்படி நாங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கறது எனக்கு பிடிக்கலைம்மா. அவளும் அதே உணர்வுலதான் இருக்கா. ஆனா பேசும் போது ஈகோ பாத்துக்கிட்டு. கொதிச்சு கோவமா பேசி சண்டை முத்திடுது. வேணாம்மா இதெல்லாம்" என்றேன்.

அம்மாவும் நான் பேசிய பேச்சுக்கு ஆமோதிப்பது போல பார்த்தார்.

"அப்பா அப்பா இன்னிக்கு விளையாட்டுல தாத்தா ஒரு போட்டி வெச்சாரு அதுல நான் ஜெயிச்சுட்டேன்பா. தாத்தா எனக்கு டைரி மில்க் பிரைஸா கொடுத்தாருப்பா. அதை மூனா பிரிச்சு மூனு பேரும் எடுத்துக்கிட்டொம்பா."

என்றாள் ஓடிவந்து என் மடியில் அமர்ந்த என் மகள் காமினி.

Monday, October 04, 2010

எந்திரன் - நாங்கள் பார்த்த முதல் திரைப்படம்

எந்திரன் விமர்சனம் போடலீன்னா நானெல்லாம் ஒரு பதிவரே கிடையாது அப்படீங்கற ரேஞ்சுக்கு இதுவரை விமர்சனமே எழுதியிருக்காத பதிவர்கள்லாம் கூட எந்திரன் படத்துக்கு விமர்சனம் எழுதிட்டாங்க...என்னோட எந்திரன் அனுபவம் கொஞ்சம் வித்தியாசமானது..ஏன்னா நான் இந்தப் படத்தை என் மனைவியுடன் போய் பார்த்தேன்...

இதுல என்னடா வித்தியாசம் இருக்கு...அப்படின்னு திட்டாதீங்க...எங்களுக்கு திருமணம் போன செப்டம்பர் 12 ஆம் தேதிதான் ஆச்சு...எல்லாரும் பாஸ் (எ) பாஸ்கரன் படத்தை திருமணத்துக்குப் பிறகு இரண்டு பேரையும் சேர்ந்து பாக்கச் சொல்லிட்டு இருந்தாங்க...ஏன்னா வேற படம் இல்லையே...ஆனா நான் நாங்க கல்யாணத்துக்கு அப்புறம் பாக்கற முதல் படம் எங்க காலத்துக்கும் மறக்காத விசயங்கள்ல சேரக்கூடியது..அதை எதோ ஒன்னுன்னு போய் பாக்கறதுல எங்களுக்கு விருப்பம் இல்லை...நல்ல படமா போய் பாத்துக்கறோம்னு மட்டும் பதில் சொல்லிட்டு இருந்தேன்..

அப்புறம்...எந்திரன் ரிலீஸ் ஆச்சு...இது பெட்டர் சாய்ஸா இருக்கும்னு நானும் என் மனைவியும் இந்த படத்துக்கு போனோம்....எதிர்பார்ப்பு வீண் போகலை...முதல் பாதி பயங்கற உற்சாகம்...இதுவரை என் வாழ்நாள்ல எந்த படத்தையும் பார்த்து இவ்வளவு உற்சாகமா உணர்ந்ததே இல்லை....அந்த அளவுக்கு பயங்கற உற்சாகத்தக் கொடுத்தது.

இடைவேளைக்கு அப்புறம்..முதல் பாதியில கிடைச்ச அதீத உற்சாகத்துனாலயோ என்னவோ..காட்சிகள் சற்று மெதுவா நகர்ர மாதிரி ஃபீல் ஆச்சு..அப்புறம் நம்ம ரஜினி வில்லன் அவதாரம் எடுத்ததுக்கு அப்புறம்...அதகளம்....பின்னி எடுத்துட்டாரு.. அவருக்கு 60 வயசுன்னு சொன்னா நிச்சயம் யாரும் நம்ப முடியாது.. அவருக்கு 30, 35 வயசு இருக்கும்போதே படத்தை எடுத்து..இத்தனை வருசம் கழிச்சு இப்ப ரிலீஸ் செய்யற மாதிரியே ஒரு ஃபீல்..
பொதுவா ரஜினி படம்னா ஸ்க்ரீன் முழுக்க திரும்பன பக்கம் எல்லாம் அவர்தான் தெரிவார்...மத்த கேரக்டர்ஸ் பத்தி யாருக்கும் அதிக கவனம் இருக்காதுன்னு சொல்லுவாங்க...ஆனா இந்த படத்துல இடைவேளைக்கு அப்புறம்..அவர் வில்லன் அவதாரம் (அவதாரங்கள்) எடுத்ததுக்கு அப்புறம்..உண்மையிலேயே ஸ்க்ரீன் முழுக்க அவர்தான்..படத்துல சிட்டி ரோபோ சார்ஜ் ஏத்திக்கற மாதிரி ரஜினி ஃபேன்ஸ் எல்லாம்..ஃபுல்லா சார்ஜ் ஏத்திக்கிட்ட குஷியோட என்ன பன்றதுன்னே தெரியாம உற்சாக வெள்ளத்துல மிதந்தாங்க..

பொதுவா லாஜிக் பத்தி யோசிச்சா..சினிமா அப்படிங்கற ஒரு மீடியமே இருக்காது...ஆனா படம் பாக்கும் போது அந்த லாஜிக் பத்தியெல்லாம் யோசிக்கவிடாம செய்யறதுலதான் வெற்றியே இருக்கு..அதை இயக்குனர் ஷங்கர் பக்காவா பன்னியிருக்காரு இந்த படத்துல..அவர் அமைச்சுருக்கற காட்சி அமைப்புகள்...நிச்சயமா ரஜினி இருந்தா மட்டும்தான் சாத்தியம்..வேற யார் இந்த பாத்திரத்துல வந்திருந்தாலும் கை கொட்டி சிரிச்சிருப்போம்..

படத்துல இருந்த உற்சாகம் பாடல்கள்ல இல்லைன்னுதான் சொல்லுவேன்...ஏ.ஆர்.ரகுமானோட இசை நிச்சயம் உலகத்தரத்துக்குதான் இருந்தது அதில் சந்தேகமே இல்லை..ஆனா ரஜினி ரசிகர்கள்லாம்..படத்தோட காட்சிகளுக்கு அளித்த உற்சாகமான செயல்பாடுகளை..பாடல்கள்ல செய்ய முடியாம தவிச்சதை வெளிப்படையா உணர முடிஞ்சது..

உணர்வே இல்லாத இயந்திரத்தைக் கொண்டும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளையும் எடுத்து அசத்தியிருக்கிறார் ஷங்கர்..கடவுள் இருக்கிறாரா?, தீ விபத்து, பிரசவம் பார்ப்பது இந்த காட்சிகள் எல்லாம் உதாரணங்கள்..

உணர்ச்சிகள் கொடுக்கப்பட்ட எந்திரன்..என்ன அழிச்சிடாதீங்க..நான் வாழனும்னு ஆசைப்படறேன்னு உருகுவது..உருக்கம்..

மொத்தத்தில் இயற்கையை மீறினால் அது எவ்வளவு ஆபத்தில் கொண்டு போய் விடும் என்பதை...செயற்கையான தொழில்நுட்பங்களை செம்மையாகப் பயன்படுத்தி..கமர்சியலாகச் சொல்லி..அசத்தியிருக்கிறார் ஷங்கர், அதில் ஒரு இயக்குனரின் நடிகராகவே மாறி..தனது கடுமையான உழைப்பைக்கொடுத்து பின்னி பெடலெடுத்திருக்கிறார் ரஜினிகாந்த்..