Search This Blog

Tuesday, January 15, 2019

விஸ்வாசம் - திரை விமர்சனம்

       குழந்தை வளர்ப்புங்கறது சாதாரன விசயம் இல்ல. அவங்களுக்கு என்ன தெரியும் என்ன சிந்திக்கறாங்கன்னு நமக்குப் புரியாததாலயே அது குழந்தை அதுக்கென்ன தெரியும்னு நம்மலா நினைச்சுக்கறோம். அப்புறம் குழந்தை நம்ம மூலமா  இந்த உலகத்துக்கு வருதுங்கறதாலயே அதுக்கு உரிமையாளர் நாமதான்னு நினைச்சு அந்தக் குழந்தை மேல தேவையில்லாத அடக்குமுறை செய்யறதும்... நம்ம நிறைவேறாத ஆசைகளை நிறைவேத்திக்க கிடைச்ச ஆயுதமா பயன்படுத்திக்கறதுமா இருக்கோம். இதெல்லாம் நாம குழந்தையா இருந்தப்ப அதிகமாவே இருந்தது. இப்ப நம்ம தலைமுறை நிறையவே மாறிருக்குனு நினைக்கறேன். நம்ம குழந்தைகளை உணர்வுகள் உள்ள ஒரு தனி உயிரா  மதிக்க ஆரம்பிச்சிட்டோம்னுதான் நினைக்கிறேன். அதைப்பத்திதான் சொல்லுது இந்த விஸ்வாசம்.

வாழ்க்கைய தன் போக்குல வாழ்ந்துட்ருக்க ஒரு முரட்டு கிராமத்து நபர, காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கிட்ட ஒரு பொண்ணு. ஒரு பெண் குழந்தை பிறந்தப்புறம்... தன் கணவனோட முரட்டுத்தனத்தால அந்தக் குழந்தைக்கு ஏற்பட்ட ஒரு பாதிப்பக் கண்டு வெறுத்து போய் அவனைவிட்டு தன் குழந்தையோட பிரிஞ்சிடறா. திரும்ப அவன் தன் குடும்பத்தோட சேரனும்னு நினைக்கற போது.. தன் குழந்தைக்கு இன்னொரு ஆபத்து வருது. அது என்ன ஆபத்து? அதுல  இருந்து தன் குழந்தையை எப்படி காப்பாத்தி ஒன்னு சேர்றாங்கன்றதுதான் இந்தப்படம்.


அஜித், நயன்தாரா அவங்க பொண்ணா அனிகான்னு மூனு பேரும் போட்டி போட்டு நடிச்சிருக்காங்க. வாலி, வில்லன், வரலாறு, மங்காத்தாக்கு அப்புறம் அஜித் இந்தப் படத்துல செமயா ஸ்கோர் பன்றார் தூக்கு துரையா... கிராமத்துல அலப்பறைய கொடுக்கும்போது, தன் பொண்ணு கிட்ட உண்மை சொல்ல முடியாம  அவளோட அன்புக்காக ஏங்கும்போது, அவளோட சேர்ந்து வீட்டுக்கு தெரியாம குறும்புத்தனம் செய்யும்போது, அவளைப் பாதுகாக்க தவிக்கும்போது, கடைசியா அவ அப்பான்னு கூப்பிடறப்ப "இன்னொருக்கா" சொல்லும்மா என்சாமின்னு உருகும்போதுன்னு அசத்தலா இருக்கு அவரோட நடிப்பும் ஸ்க்ரீன் பிரசன்சும். அஜித் இந்தப்படத்துல "இஞ்ஜார்ரா" னு அடிக்கடி சொல்றார். அவ்லோ இயல்பா அழகா இருக்கு அது.

இமான் இசைல பாட்டெல்லாம் நல்லாருக்கு. குறிப்பா கண்ணான கண்ணே... சித் ஸ்ரீராம் உருக வைக்கிறார். அப்புறம் வானே வானே....

முதல் பாதில இலக்கில்லாம காட்சிகள் போகுது. இரண்டாம் பாதில  விவேக் வர்ற சீன்லாம் யோசிக்காம வெட்டி வீசிடலாம். இப்படி சில குறைகள் இருந்தாலும். அதை எல்லாம் மறக்கடிச்சிடுது. பிள்ளை பாசம். 

கனா - திரை விமர்சனம்


              இனி விவசாயமும் கிடையாது நீங்க விவசாயியும் கிடையாது.... இத விவசாயத்த உயிரா  நினைக்கற ஒரு விவசாயி கேட்க நேர்ந்தா அவன் மனசு எவ்வளவு பாடுபடும். விவசாயத்த சுத்தமா மதிக்கவே தெரியாத நம்ம விவசாய நாட்டுல, இதக் கேட்டு கடந்துவராத விவசாயியே இருக்கமாட்டார் இல்லையா?

ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். அத எப்படி சாதிக்கனும்ங்கற வழிதான் பலருக்கும் தெரியாது. அப்படி தெரிஞ்சாலும் அதை அடையும் குடும்பச்சூழல் இல்லாமல் இருக்கும். நம் கனவை நினைச்சு நான்கு சுவருக்குள் அழுது மருகும் நிலையே பலருக்கும் இருக்கும்.

அதையும் மீறி அந்தக்கனவ அடைய நமக்கு இருக்க பெரிய சவால் நம்மல சுத்தி நம்ம கூடவே இருக்கவங்கள எப்படி எதிர்கொள்றதுங்கறதுதான். டிக்டாக் பண்ணா கூட இவன் இருக்க நிலைமைக்கு இதெல்லாம் தேவையான்னு எள்ளி நகையாடற நம்மாளுங்க... நமக்கு ஒரு விசயத்த சாதிக்கனும்ங்கற கனவு இருக்குன்னா சும்மா விடுவாங்களா? அதுவும் அந்தக் கனவோட இருக்கறது பெண்ணா இருந்துட்டா?

சார் சார் நேத்து இந்தியா தோத்துடுச்சின்னு எங்கப்பா அழுதார் சார் எப்படியாவது கிரிக்கெட் விளையாண்டு  ஜெயிச்சி எங்கப்பாவ சந்தோசப்படுத்தனும். என அப்பாவை சந்தோசப்படுத்த கிரிக்கெட் மீது காதல் கொள்ளும் மகள் கெளசி.

மகளுக்காக கிரிக்கெட் பேட்டை தானே செதுக்கிக் கொடுத்து... விவசாயம் பொய்த்து குடும்பமே வறுமையில் உழன்று, வீடு ஜப்திக்கு வரும் நிலை வந்தபோதும் தன் மகளின் கனவு நிறைவேற வேண்டுமென எந்தச் சூழலிலும் அவளுக்கு முட்டுக்கட்டை போடாமல் அவளை ஊக்கப்படுத்தி அவளது கனவு நிறைவேற வேண்டும் எனத்துடிக்கும் அப்பா. மகள் விளையாடுவது பிடிக்காவிட்டாலும். மகளின் குழப்பமான தருணத்தில் அவளுக்கு ஊக்கப்படுத்தி முன்னேற வைக்கும் தாய்.

எந்தவிதமான பந்தில் தன் கரியரை இழந்தாரோ அதே விதமான பந்தில் தான் பயிற்சியளித்த பெண் இறுதியில் வெற்றி தேடித் தந்ததைக் கண்டு சமாதானம் அடையும் கிரிக்கெட் கோச்.


சின்ன வயசுல இருந்து கெளசியை கிரிக்கெட் விளையாட ஊக்கப்படுத்தும், அவள் வெற்றியைத் தங்கள் வெற்றியாக நினைத்து கொண்டாடும் நண்பர்கள். தன் காதலை கூட அவளிடம் சொல்லும் தைரியம் இன்றி.. ஆனால் கிரிக்கெட்டில் அவளது வெறித்தனம் உணர்ந்து அவள் வெற்றியில் மகிழும் ஒருதலைக் காதலன்.

இப்படி சரியான விதத்துல கதாபாத்திரங்கள சேர்த்து நெகிழ்ச்சியோட சொல்லிருக்காங்க இந்தக் கனாவ...

ஐஸ்வர்யா ராஜேஷ். அப்பா என்ன நடிகை இவங்க. பத்து வயசு பசங்களுக்கு அம்மாவாவும் அதற்குரிய உடல்வாகு உடல்மொழியோட நடிச்சு அசத்தறாங்க. இதுல  ஸ்கூல் பொண்ணா வரப்பவும் அதற்குரிய உடல்வாகோட வராங்க. கிரிக்கெட் விளையாடறப்பவும்...ஒரு பிளேயராவே பாக்க முடியுது அவங்கள. வெறித்தனம். சத்யராஜ் ஒரு விவசாயியா ஒரு தகப்பனா பின்னிருக்காரு இதுல..

அருண்ராஜா காமராஜ் வெறித்தனமா வசனம் எழுதி இயக்கியிருக்கார் இந்த படத்த. குறிப்பிட்டு சொல்லனும்னா....

நமக்கு ஒன்னு வேணும்னா ஆசப்பட்டா மட்டும் பத்தாது அடம்பிடிக்கத் தெரியனும். நாம பிடிக்கற அடத்துலதான் அது நமக்கு எவ்வளவு பிடிக்கும்னு மத்தவங்களுக்கு தெரியும்....

இங்க இருக்கவங்களுக்கெல்லாம் எனக்கு திறம இருக்கா இல்லையா? அதெல்லாம்விட... நான் ஒருத்தி இங்க இருக்கன்னே தெரிலப்பா...

ஒருத்தர் கஷ்டத்துல இருக்கும்போது கூட நிக்கனும்னுதான் மத்தவங்க நினைப்பாங்க. ஆனா பெத்தபுள்ள அந்தக் கஷ்டத்த தீக்கனும்னுதான் நினைக்கனும். எல்லா அப்பனோட தோல்வி தர வலிக்கு ஒரே மருந்து அவங்க பிள்ளைகளோட வெற்றி.

இந்த உலகம் ஜெயிச்சிடுவேன்னு சொன்னா கேக்காது. ஆனா ஜெயிச்சவன் சொன்னா கேக்கும். நீ எது பேசறதா இருந்தாலும் ஜெயிச்சிட்டு பேசு.

தோத்தா  எப்படி வலிக்கும்னு இந்த முப்பது செகன்ட் உங்களுக்கு காமிச்சிருக்கும்.

ஒருத்தரோட வெற்றிய இந்த உலகமே பாராட்டும்போது அவங்க வீட்ல சந்தோசம் இல்லன்னா அந்த வெற்றி கிடைக்கறதுல அர்த்தமே இல்ல.

ஒரு விளையாட்ட சீரியசா பாக்கத்தெரிஞ்ச நமக்கு... நம்ம விவசாயத்த விளையாட்டா கூட பாக்கத் தெரியல.

நம்ம நாட்ல ஒரு விவசாயி தோத்துட்டா அது அவனுக்கு மட்டும் அவமானம் இல்ல. பசியோட சாப்பிடற ஒவ்வொருத்தருக்குமே அவமானம்தான்.

அனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துகள்.

ஒரு பந்து மேட்சையே மாத்திடும். அது மாதிரி ஒரு பந்து நம்ம லைஃபையே கூட மாத்திடும். அந்த ஒரு பந்துக்காக காத்திருங்க விடாதிங்க....


Monday, December 19, 2016

சென்னை 28 2 - திரை விமர்சனம்


நண்பனின் காதல் திருமணம் நின்று போனதற்குக் காரணமான நண்பர்கள் அவர்களை மீண்டும் எப்படி சேர்த்து வைக்கிறார்கள் அதான் இந்தப்படம். 

பெரும்பாலான ஆண்களுக்கு கல்லூரி வயது துவங்கி வேலை செல்வதற்கு முன்பு வரை எதைப்பற்றியும் வாழ்வில் பயம் இருக்காது. ஒவ்வொரு நொடியையும் தனக்காக, குறும்பாக வாழ்வார்கள். அதை முதல் பாகத்தில் சரியாக செய்திருந்தார் வெங்கட் பிரபு. சலூன் கடையில் முடி வெட்டும் சீனில் கூட பின்னனியில் FM இல் கிச்சு கிச்சு கிச்சுடி.... என்று பாட்டு ஒலிக்கும்.. இப்படி படம் முழுக்கவே உன்னிப்பாக கவனித்து ரசிக்க நிறைய விசயங்கள் இருந்து. எனக்கு மிகவும் பிடித்த படங்களில் அதுவும் ஒன்று. அவர்களுடன் நாமும் சேர்ந்து வாழ்வது போலவே நிறைய காட்சிகள் இருந்து. சிரிக்க வைத்தது, அழ வைத்தது.

 அதே ஆண்கள் குடும்பபாரத்தை சுமக்க ஆரம்பிக்கும் தருணத்தில். அவர்களுடைய முதல் இழப்பு நட்பு. :( 

அந்த நண்பர்களை நாம் மீண்டும் பார்க்கும், பழகும் வாய்ப்பு இருந்தாலும். மனசே இல்லாமல் அவர்களை இரண்டாம்பட்சத்திற்கு நகர்த்த வேண்டிய சூழல்தான் பெரும்பாலும். அதனால் பழைய ஒட்டுதலுடன் நண்பர்களுடன் இருப்பது கடினம். அதை இந்த பாகத்தில் சரியாக காண்பித்திருக்கிறார் வெங்கட் பிரபு. அதனாலேயே முதல் பாகத்தில் இருந்த சுவாரசியம் இதில் கொஞ்சம் குறைவாகத் தோன்றுகிறது. 

 முதல் பாகத்தின் காட்சிகளை, அதைப் பார்க்காமல் இதை மட்டும் பார்ப்பவர்களையும் குழப்பாமல் சாமர்த்தியமாக இணைத்திருப்பது அருமை. முதல் பாகத்திலேயே ஏகப்பட்ட நடிகர்கள் அவர்கள் அனைவரையும் அப்படியே பத்து வருடம் கழித்து எடுக்கப்பட்ட இரண்டாம் பாகத்திலும் நடிக்க வைத்திருப்பது சாதனைதான். 

பின்னனி இசையும் பாடல்களும் முதல் பாகத்தில் பட்டாசாய் இருக்கும். இதில் நன்றாக இருக்கிறது. நீ கிடைத்தாய் ஒரு முன்னைத்தவம் போலே... செம... இது கதையா பாடலில்... சோகம், சந்தோசம், மீண்டும் சோகம் என்று வந்து முடியும் போது யாரோ யாருக்குள் இங்கு யாரோ... ட்யூனை இணைத்திருப்பது அருமை. ஹவுஸ் பார்ட்டி... தேவையில்லாத இடைச்செருகல். 
     
பழைய நினைவுகள் எப்போதுமே பசுமையானது. இந்தப்படம் முடிந்த பிறகும் முதல் பாகமே மனதில் நிற்கிறது. மொத்தத்தில் இந்தப்படம் கணவர்களுக்குப் பிடிக்கும் மனைவிகளுக்கு டவுட்தான் :-p 

மறக்காம SHARE பன்னுங்க... :-p :-)Wednesday, October 12, 2016

தேவி - திரை விமர்சனம்


மாடர்ன் பெண்ணை கட்டிக்கொள்ள விரும்பும் பிரபுதேவா, சூழ்நிலையால் பிடிக்காத பட்டிக்காட்டு பெண்ணை கட்டிக் கொண்டு மும்பை வருகிறார். அங்கு அவர் மனைவி மீது ஒரு மாடர்ன் பேய் பிடித்துக் கொள்ள அடுத்து என்ன என்பதுதான் தேவி.

பிரபுதேவாவிற்கு ஒரு நடிகராக சிறந்த கம் பேக் படம் இது.  வெறுப்பு, கோபம், இயலாமை, பயம்னு நிறைய எக்ஸ்பிரசன காட்ட வேண்டிய பாத்திரம்... நல்லாவே நடிச்சிருக்கார். அதிலும் அது ரூபி (பேய்) இல்ல தேவின்னு மக்கள் கிட்ட கலங்கி புரிய வைக்க முயற்சிக்கற மாதிரி வர ஒரு சீன்ல செம ஆக்டிங்.

தமன்னா கிராமத்து பொண்ணு, மாடர்ன் பொண்ணுனு ரெண்டு விதமாவும் நல்லா நடிச்சிருந்தாலும்... ரெண்டு விதமான ஆக்டிங்லயும் கூடவே ஃப்ரேம்ல வர பிரபுதேவா ஈசியா  ஓவர்டேக் பன்னிடறார்.

காமெடி நல்லா ஒர்க்கவுட் ஆகிருக்கு.. அதுவும் ஒரு சீன்ல ரூபிக்கு பயந்து பிரபுதேவா பாட்டீனு கத்திக்கிட்டே வீட்ட  விட்ட வெளிய  ஓட, டக்னு கதவு ஃபளோரிங் மேல போய் திறந்துக்க, அவர் டக்னு மேல இருந்து பொத்னு வீட்டுக்குள்ளயே  விழுவார்... சிரிச்சு சிரிச்சு முடியல.

பாடல்கள் நா. முத்துகுமார்னு டைட்டல்ல போட்டாங்க. நம்பவே முடியல, இந்தி வாடையோட வேனும்னு கேட்டு வாங்கிருப்பாங்க போல. பாடல்கள் இசையும் ரொம்ப சுமார். ஆனா மொக்க  பாட்டுக்கு கூட ரசிக்க வைக்கும் செம டேன்ஸ். அருமை.

நிறைய பேய் படமா ரிலீஸ் ஆகி... பேய்லாம் ஒன்னும்  பன்னாதுப்பாங்கற மனநிலைக்கு நாம வந்திருக்கறது இந்த படத்துக்கு பெரிய ப்ளஸ். மூனு மொழில  எடுத்து வெளியிடனும்ங்கறதுக்காக மிக்ஸ்டா வர காஸ்ட்டிங்தான், லைட்டா இம்சை...மத்தபடி கொஞ்சமும் போரடிக்காத எண்டர்டெயினர் இந்த தேவி.

Friday, October 07, 2016

ரெமோ - திரை விமர்சனம்


நான் காலேஜ் படிக்கும் போது காதல் மன்னன் வந்துச்சு.  அஜித் வேலி தாண்டற மாதிரி வந்த ஒரு ஸ்டில்லே இந்த படத்த கண்டிப்பா பாத்திடனும்டான்னு தோன வச்சது. படமும் ஏமாத்தல. சுவாரஸ்யமாவே இருந்தது.
ஏற்கனவே கரணுக்கு நிச்சயமான பொண்ண  அஜித் லவ் பண்ணி கல்யாணம் பன்னிக்கறதுதான் கதை. ஃப்ரெஷ்ஷான பாடல்கள் பிளஸ்ஸா இருந்தது.

அப்புறம் மின்னலே...
நான் M. Sc முதல் வருசம் படிக்கறப்ப வந்தது. படம் வரதுக்கு முன்னாடியே பாடல்கள் உருக வச்சது. ஹாஸ்ட்டல்ல கிட்டத்தட்ட எல்லார் ரூம்லயும் மின்னலே பாட்டுதான் திரும்ப திரும்ப ஓடுச்சு. காதல் மன்னன் அஜித்தும் அதுல  வில்லனா வந்த கரணும் ஏற்கனவே ஒரே காலேஜ்ல படிச்சு முன் பகையோட இருந்தா... அதான் மின்னலே.  படம் பாக்கறப்ப அந்த நினைப்பே வராது.
இப்ப அதே கதையை கிட்டத்தட்ட 18 வருசம் கழிச்சு திரும்ப எடுத்திருக்கார் பாக்யராஜ் கண்ணன். ஆனா இப்பவும் அதே ஃபீல அங்கங்க வரவச்சு தப்பிச்சிட்டார்.

கீர்த்திய பாத்த உடனே லவ் பன்ன ஆரம்பிக்கற சிவா. அத புரொபோஸ் பன்ன அவங்க வீட்டுக்கே போறாரு. பாத்தா அவங்களுக்கு அன்னைக்கு ஒரு டம்மி மாடலிங் ஆளோட நிச்சயதார்த்தம். அப்புறம் நடிப்பு வாய்ப்புக்காக போட்ட நர்ஸ் வேசத்த கீர்த்தி உண்மையான பொண்ணுனு நம்பிடறதால அது மூலமாக அவங்கல லவ் பன்ன வைக்கறதுதான் கதை.

படத்தோட பெரிய பிளஸ். ரெஜினா மோத்வானியா வர சிவகார்த்திகேயன். அவரோட நடை, உடல்மொழி, மேக்கப்னு எல்லாமே உண்மைக்கு ரொம்ப நெருக்க்கமா :-) இருக்கறதால எந்த நெருடலும் இல்லாம  பாத்து ரசிக்க முடிஞ்சது.

கீர்த்தி சுரேஷ் இதுல  அழகாவே இருக்காங்க. நல்லாவும் நடிச்சிருக்காங்க. ஆனா அப்பப்ப பேசறது கீர்த்தியா இல்ல சுரேஷானு குழப்பம் வந்திடுது. :-) ஒரு சீன்ல வர ஸ்ரீ திவ்யாவயே இவர் ரோல்ல போட்ருக்கலாம்.

அப்புறம் மொட்டை ராஜேந்திரன்.. பின்றார்  மனுசன்.. அவருக்கு சீன்ல வசனமே இலலாதப்ப கூட சின்ன சின்ன அசைவுகள்லயே சிரிக்க வைக்கறார். செம ஸ்கிரீன் பிரசன்ஸ்.

பெரிய இம்சை. அனிருத்தோட இசை. இந்த மாதிரி லவ்வ மட்டும் நம்பி எடுக்கற படங்களுக்கு கசிஞ்சுருகற பாடல்கள் ரொம்ப முக்கியம். இதுல  பாட்டு வருது போகுது அவலோதான். சுமாரான இசை, பாத்து சலிச்ச கதை, வசனங்கள்னு இருந்தாலும்... படம் எங்கயும் போரடிக்கல. நிச்சயம் நல்ல டைம் பாஸ்...இந்த படம். 

Friday, April 15, 2016

தெறி - திரை விமர்சனம்கடமையை செய்ததற்காக போலீஸ் குடும்பத்தை கொல்லும் வில்லனை, அந்த போலீஸ் பழி வாங்கும் அரதப் பழசான கருதான் தெறி.

ஆனால்... ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக நான்கு பெண்கள் இந்தியாவில் கற்பழிக்கப்படுவது,
குழந்தைகளை கடத்தி முடமாக்கி பிச்சை எடுக்க விடுவது, வெளி மாநில தொழிலாளர்களை மனிதர்களாகவே மதிக்காமல் வேலை வாங்குவது போன்ற சமூக அவலங்களை சரியான அளவில் கலந்ததில் கவர்கிறார் அட்லி.

அதே போல குடும்ப சென்டிமெண்ட் காட்சிகளும்.. புதிதாக ஏதுமில்லாவிட்டாலும் ரசிக்கும்படி காட்சிப்படுத்த தெரிந்து வைத்திருக்கிறார். என்னை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க எனும் சமந்தாவின் கேள்வியும் சரி இன்னொரு அம்மா நீங்கற பதிலும் புதிதில்லை என்றாலும் படத்தில் அந்த காட்சி வரும் இடம் கலங்க வைத்து விடுகிறது.

சமந்தாவிற்கு நான் ஈக்கு பிறகு பெர்ஃபாமென்ஸ் செய்ய நல்ல வாய்ப்பு, அதை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். அவர் சாகும் காட்சி அப்டியே பக்குனு ஆகிடுது.

மதராசப்பட்டணத்தில் நாம ரசித்து :-p பார்த்த எமியா இது... அவரோட விக்கும், கண்ணாடியும்... கொடுமை. அதை விட கொடுமை இவர் வர பாட்டு தியேட்டர் விட்டு எல்லாரும் வீட்டுக்கே போனதுக்கப்புறம் வருது.

மீனாவோட பொண்ணுன்றத தவிர வேற ஸ்பெசல் எதும் இல்ல நைனிகா கிட்ட. சீரியல்ல வர்ற குழந்தைகளே செம பெர்ஃபாமென்ஸ் குடுக்குதுங்க. அவ்வை சண்முகில மீனாக்கு பொண்ணா, கிட்டத்தட்ட இதே வயசுல வர்ற பாப்பாவோட க்யூட் நடிப்பெல்லாம் இன்னும் நினைப்புருக்கு. இதுல இந்த பாப்பா பாக்க மட்டும்தான் க்யூட்.

உன்னாலே என்னாலும் என் ஜீவன் வாழுதே.... பாடல் இசையும் அதை படமாக்கியிருக்கும் விதமும் க்ளாஸ். படம் முடிஞ்சு வந்தப்புறமும் அந்த பாட்டும் அதன் விசுவலும்தான் மனசுல இருக்கு.

விஜய்க்கு பல ஹிட் ஆல்பம் கொடுத்த தேவாவுக்கு ஒரு பாட்டு பாட வாய்ப்பு கொடுத்ததுக்கு அவரையே மியூசிக் போட விட்ருக்கலாம். ஜீ.வி பிரகாஷ் 50 வது படமாம் இது. உன்னாலே மட்டும்தான் பாஸ் மார்க். மத்ததெல்லாம் 50க்கு கீழ.

விஜய். சந்தேகமே இல்லாம செம பெர்ஃபாமென்ஸ். குழந்தை கூட வர்ற சீன்லலாம் அந்த குழந்தைய விட இவர் நடிப்புதான் க்யூட்டா இருக்கு. அதான் குழந்தைகளுக்கு இவர பிடிக்குது போல. காதல், சென்டிமெண்ட், ஆக்சன் காட்சிகளிலும் பக்காவான நடிப்பு. துள்ளாத மனமும் துள்ளும்ல இவர் அழற சீன இப்ப நினைச்சாலும் சிரிப்பு வந்திடும். அழுற மாதிரி காட்சிக்கெல்லாம் இவர் சரியில்லைனு நினைச்சேன். ஆனா இந்த படத்துல செமயா அழுதிருக்கார். :-) அதாவது பக்காவ அந்த ஃபீல நமக்கு கடத்திருக்கார். கற்பழிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை செய்யும் காட்சியில் கலக்கல் நடிப்பு.

படம் தெர்ர்ர்றீயா இருக்கும்னு நினைச்சு போகாம எதிர்பார்ப்பில்லாம போனா தெறி நிச்சயம் பிடிக்கும்.Sunday, March 27, 2016

தோழா - திரை விமர்சனம்கழுத்துக்கு கீழ் முற்றிலும் செயல் இழந்த ஒரு கோடீஸ்வரன். சிறு திருட்டுக்காக சிறை சென்று பரோலில் வெளி வந்திருக்கும், குடும்பத்தில் மதிப்பிழந்த ஒரு இளைஞன். இவர்கள் இருவருக்குமான தோழமைதான் தோழா.

வாழ்க்கையில் பணம் இழந்தவன் மட்டுமே ஏழை என பொதுவாக சொல்லப்படுகிறான். ஆனால் பணம் இருந்தும் நினைத்த வாழக்கை வாழ முடியாமல் ஏங்கித் தவிக்கும் ஏழையாக நாகார்ஜுனா. இவரது கண்களும், நெத்தியுமே படம் முழுக்க நடித்திருக்கிறது. சந்தேகமே இல்லாமல் வேறு சாய்சே இல்லை அந்த பாத்திரத்திற்கு. அமர்க்களப் படுத்தியிருக்கிறார். மகிழ்ச்சியில் மனிதர் கண் கலங்கும் போது... நம் கண்களும் அவருடன் இணைந்து கொள்வதை பல காட்சிகளில் தவிர்க்க முடியவில்லை.

அடுத்து என்ன என்ற எந்த இலட்சியமும் இல்லாமல் இந்த நொடியை கொண்டாடும் இளைஞனாக கார்த்தி. இவரது நடிப்பில் எனக்கு பிடித்த முதல் படம் இதுவே... படம் முழுக்க உற்சாகமாக வலம் வருகிறார். இவரது உற்சாகம் நமக்கும் தொற்றிக் கொள்ள பின்னணி இசை சரியாக உதவி இருக்கிறது.

படம் இறுதி வரை போரடிக்காமல் ஃபீல் குட் உணர்வை நமக்கு தருவதில் கார்த்தி, நாகார்ஜுனாவின் நடிப்புடன் இணைந்து படத்தின் வசனங்களும் பக்க பலமாக உதவியிருக்கிறது.

காதல், தாய் தங்கை பாசம் என்றெல்லாம் குழப்பியடிக்க நிறையவே வாய்ப்புகள் இருந்தும், உடல் ஊனமுற்றவர்களை பரிதாபத்திற்குரியவராக காட்ட வாய்ப்பிருந்தும், அதை முழுக்க தவிர்த்து கரு சிதையாமல் கவனமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் வம்சி.

நம்முடன் இருக்கும் நட்பு, உறவுகளுக்கு நாம் ஒரு கேர் டேக்கராக இருக்க வேண்டும் என்ற உணர்வை, அதன் அவசியத்தை நிச்சயம் எதாவது ஒரு காட்சியிலாவது நீங்கள் உணர்வீர்கள்.

நாம போற இடத்துக்கு நம்ம மனசும் போகனும், பயம் இருந்தா காதல் அதிகம் இருக்குனு அர்த்தம்... இப்படி மனசுக்கு நெருக்கமான வசனங்களுக்காகவே இந்த ஃபிரண்ட மறுபடி போய் பாத்துட்டு வரனும்.
தோழா - நமக்கும்.

Sunday, March 06, 2016

கணிதன் - திரை விமர்சனம்கல்விங்கறது நம்ம நாட்டை பொருத்தவரை அறிவு வளர்ச்சிக்கான, வேலைக்கான விசயம்ங்கறதையும் தாண்டி... அது நம்ம அடுத்த சந்ததிக்கான வாழ்வாதாரமாவும் இருக்கு.

நாமதான் படிக்கல அதனாலதான் நம்மால் முன்னேற முடியல... நம்ம பையனையாவது நல்லா படிக்க வச்சு பெரிய ஆளாக்கனும்ங்கற கனவோட, அதுக்காக இருக்கற சொற்ப்ப சொத்தையும் வித்து, தாலிக்கொடி தங்கத்தை கூட மஞ்சக்கொடி கட்டிக்கிட்டு கழட்டி வித்து, நம்ம மானமே போனாலும் பரவால நம்ம பையன் தலை நிமிர்ந்து நிக்கனும்னு கண்டவன் கால்லயும் விழுந்து கடன் வாங்கி... இப்படி எப்பாடு பட்டாவது தன் பிள்ளைக்கு நல்ல வாழ்வாதாரத்த ஏற்படுத்தி கொடுத்துடனும்னு துடிக்கற பெற்றோர்கள் நிறைந்த நாடு இது.

அது மட்டுமில்ல நம்மல நம்பிதான் நம்ம குடும்பம் இருக்கு, நமக்காகத்தான் பல அவமானங்களையும் நம்மல பெத்தவங்க பட்ருக்காங்கனு புரிஞ்சுகிட்டு... பிடிக்காத வேலைனாலும், செய்யற வேலைய விட பல மடங்கு சொற்ப சம்பளம்னாலும், சுயமரியாதைக்கு இழுக்கு வரும் அசிங்கத்தையும் அவமானத்தையும் தினம் தினம் வேலைல சந்திச்சாலும் குடும்பத்துக்காக எல்லாத்தையும் பொறுத்து கிட்டு் பல்ல கடிச்சுகிட்டு வேலை செய்யும் இளைஞர்களும் நிறைந்த நாடு.

 முறையா படிச்சவனுக்கே இங்க போட்டிக்கு நிறைய ஆளுங்க இருக்காங்க... இதுல கண்ணுக்கு தெரியாத எதிரியா.. கல்வி சான்றிதழையே போலியா காசு கொடுத்து வாங்கினவனும் சேர்ந்துட்டா? யாரோ ஒரு உண்மையான பட்டதாரிக்கு கிடைக்க வேண்டிய வேலை தான அந்த போலிக்கு கிடைச்சிருக்கும்....
இந்த மாதிரியான நபர்களால எத்தனை பெற்றோர்களோட, இளைஞர்களோட கனவு சிதைஞ்சுருக்கும்.. வாழ்க்கை திசை மாறி இருக்கும். இதுக்கு காரணம் அந்த போலிதான்னு கூட அந்த குடும்பத்துக்கு தெரியாது. :( :(

இந்த விசயத்தை கருவா எடுத்துகிட்டு வந்திருக்க படம்தான் கணிதன். லோக்கல் சேனல்ல ரிப்போர்ட்டரா வேலை பார்க்கும் அதர்வாவுக்கு பிபிசில ரிப்போர்ட்டர் ஆகனும்ங்கறதுதான் கனவு. பிபிசி இண்டர்வியூல அவர் செலக்ட் ஆகி அவர் சர்ட்டிஃபிகேட்லாம் வெரிஃபிகேனுக்கு போக. அதுல அவர் தன் சர்ட்டிஃபிகேட்ட வச்சு பேங்கல லோன் வாங்கி மோசடி செஞ்சதா தெரிய வர, போலீஸ் அவர அரெஸ்ட் பன்ன... இந்த பிரச்சினைல இருந்து அவர் எப்படி வெளிய வரார், உண்மையான குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கறார்ங்கறதுதான் கதை.  அதர்வா முரளி தேர்ந்தெடுக்கற கதைலாம் வித்யாசமா மட்டுமில்லாம தேவையானதாவும் இருக்கு. படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலயே கதைக்கு வந்திடுது.... இதெல்லாம் நிஜத்துல இவ்லோ வேகமாவா நடக்கும்னு நம்ம மூளை யோசிக்கறதுக்குள்ளயே பரபரன்னு நகருது. போலி சான்றிதழ் சம்பந்தப்பட்ட நெட்வொர்கை காட்டும் காட்சிகள் அருமை.  அதர்வா + இன்னும் நாலு பேர்கள அவ்லோ வேகமா கைது செஞ்சு கோர்ட்ல நிறுத்துன போலீஸ் அதுக்கப்புறம் உண்மையான குற்றவாளிகளை பத்தின செய்தி எல்லா மீடியாலயும் வந்த பிறகும் எங்க போனாங்கன்னே தெரியல... அப்புறம் பிற்பகுதில தேவை இல்லாத பிறந்த நாள் கொண்டாட்டம்.. பாட்டுனு வரத தவிர்த்திருக்கலாம். சில லாஜிக்கள் சிக்கல்கள் இருந்தாலும், வெகு நிச்சயமா தவிர்க்கவே கூடாத படம் இது. 

Saturday, January 16, 2016

ரஜினி முருகன் - திரை விமர்சனம்


பரம்பரை சொத்தை வித்து தன் செல்ல பேரனை செட்டில் ஆக்க நினைக்கும் தாத்தா. அதற்கு இடையூராக வெளிநாட்டிலேயே செட்டில் ஆகி வர மறுக்கும் மற்ற மகன்கள். ஊரில் பணக்காரர்களை குறி வைத்து மிரட்டி பணம் பறிக்கும் ஒரு மொக்கராசு. குழந்தைகளாக இருக்கும் போதே இவனுக்கு இவள்தான் என முடிவெடுத்து பின் சிறு பிரச்சினையால் பகையாளி ஆகும் குடும்பம். இப்படி தமிழ் சினிமா பார்த்து பழகிய கதை, திரைக்கதையை வைத்தே வசனங்களாலும் சில ட்விஸ்ட்களாலும் போரடிக்காத ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் பொன்ராம். 

யானையோ பூனையோ தன் பலம் அறிந்தால்தான் வெல்லும் என்பார்கள். அப்படி தன் பலம் அறிந்து அடித்து ஆடுகிறார் சிவகார்த்திகேயன். திருவிழா பாட்டு, குழந்தைகளுடன் ஆட்டம் என விஜயின் திருமலை, திருப்பாச்சி கால டெம்பளேட் இவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது.
பக்கத்து வீட்டு பையன் போன்ற இமேஜ் இவரை ரொம்பவே காப்பாற்றுகிறது. அதை சரியாக புரிந்து கொண்டு அதற்கு பங்கம் வராதபடியே படங்களை தேர்ந்தெடுக்கிறார். 

ரொம்ப நாள் கழித்து சூரியின் எரிச்சல் அடைய வைக்காத நடிப்பு. காமெடி நன்றாகவே ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. கீர்த்தியும் ரசிக்க வைக்கிறார். இவர் திரையில் தோன்றும் போதெல்லாம் விசிலடிக்கிறார்கள். 
சமுத்திரக்கனியும் ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்தில் தான் ஒரு டம்மி பீஸ் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு அதற்கேற்ற பாடி லாங்க்வேஜில் அசத்துகிறார். 

சிவாவுடன் சேர்ந்து வில்லன்களுடன் சண்டை போடுவது, அந்த ஜோரில் சூரியையும் தூக்கி சுழற்றுவது என கிடைத்த கேப்பில் கிடா வெட்டுகிறார் ராஜ்கிரன். அதிலும் சிவாவும் இவரும் தோள் குலுக்கும் ரியாக்சன் செம... 

ரஜினி ரசிகராக வரும் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம். 
படத்தின் ஒரே குறை,  வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் இருந்த பெர்ஃபக்சன் (+ ஸ்ரீ திவ்யாவும் :-p) இதில் இல்லை. இன்னும் தெளிவாக எடிட் செய்திருக்கலாம். 

மொத்தத்தில் மக்களின் கொண்டாடும் மனநிலைக்கு புதுசோ அல்லது பழசே புது வடிவத்துலயோ வேண்டும். அப்படி கிடைச்ச வாய்ப்புதான் இந்த படம். கொண்டாடுறாங்க தியேட்டர்ல. குறிப்பா பெண்கள். 

Saturday, January 31, 2015

இசை - திரை விமர்சனம்


ஒரு இசையமைப்பாளரின் இசை வாழ்வு.. அவரது தலைக்கனத்தால் முடிய, அங்கு அவரது சிஷ்யனின் வளர்ச்சி துவங்குகிறது. புகழ் போதையில் மிதந்த ஒருவன், அது அப்படியே தன் கீழ் வேலை செய்தவனுக்கே போக... அதை தாங்கிக்கொள்ள முடியாமலும், தன் புகழை மீட்டெடுக்கவும் அவன் எந்த எல்லை வரை செல்கிறான் என்பதே இசை.

படத்தில் சிஷ்யனாக எஸ்.ஜே. சூர்யா, இயற்கையாக உருவாகும் சத்தங்களை இவர் இசையாக உருவாக்கும் காட்சிகள் அழகு. பின்னர் அதே சத்தங்களை வைத்தே அவரை உளவியல் ரீதியாக வீழ்த்தும் காட்சிகள் அதிரடியாக இருக்கின்றன.

படம் முழுக்கவே சத்யராஜ் வரும் காட்சிகள் எல்லாம் அதகளம். அலட்சியமாக அசத்துகிறார். நான் துப்புவதுதான் இசை என அகங்காரமாக பேசும் போதும் சரி, மார்க்கெட் இழந்து வீழ்ந்த அவமானத்தை வெளிப்படுத்தும் போதும் சரி தேர்ந்த நடிப்பு. இவரது உளவியல் தொல்லை தாங்க முடியாமல் கிட்டத்தட்ட மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சூர்யா இவர் காலில் விழ... அப்போதும் அவரது தெளிவை சோதிக்கும் காட்சி அருமை.

சத்யராஜ் வீட்டு வேலைக்காரனாக கஞ்சா கருப்பு... படம் முழுக்கவே மைன்ட் வாய்சிலேயே வசனம் பேசி , முகபாவங்களிலேயே நடிப்பை வெளிப்படுத்தும் பாத்திரம்... நன்றாகவே செய்திருக்கிறார்.

தம்பி இராமையாவும் இருக்கிறார். வரும் காட்சிகளில் எல்லாம் நம் கேட்கும் திறனையும் மீறி.. ஹை டெசிபலில் கத்தி வசனம் பேசுவது..எரிச்சலாய் இருந்தது.

இதற்கு முந்தைய படங்களில் ஒரு நடிகனாக எஸ். ஜே. சூர்யாவை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஆனால் இதில் கச்சிதமாக பொருந்துகிறார். குறிப்பாக இயற்கை சத்தங்களை சிரத்தையாக கவனிக்கும் காட்சிகள் , இரண்டு மாத சிசுவுடன் பேசும் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். ஒரு இசையமைப்பாளராகவும் அசத்தி இருக்கிறார்... பின்னணி இசை, பாடல்கள் இரண்டுமே பக்கா...

படம் மூன்று மணி நேரம் பத்து நிமிடங்கள் ஓடுகிறது. ஆனால் இவ்வளவு நேரம் ஓடுவது தெரியாமல் காப்பாற்றி இருப்பது... படத்தின் வசனங்கள். நிறைய வசனங்களுக்கு தியேட்டரில் கைதட்டி ரசித்தனர்.

ஒளிப்பதிவு மிக அருமை, குறிப்பாக அந்த மலைப்பிரதேச காட்சிகள் எல்லாம் எல்லா ஃப்ரேமும் புகைப்படமா எடுத்து ஒட்ட வச்ச மாதிரி அழகு. ஆர்ட் டைரக்டர் செமயா வேலை பாத்திருக்கார் இதுல, செட்டிங்ஸ் எல்லாமே சூப்பர்.

கதாநாயகியாக முதுமுகம்!!... சாரி புதுமுகம் சாவித்திரி. நன்றாக நடிப்பு வருகிறது. ஒரு ஜாடையில் அமலா போல இருக்கிறார். என்ன ஒன்னு இப்ப இருக்க அமலா போல!! ஒரே ஒரு காட்சியில் அன்பே ஆருயிரே நிலா வருகிறார்.

முதல் பாதியில் தொடர்ந்து பத்து நிமிடங்கள்... சூடேற்றும் காட்சிகள் வருவதால், குடும்பத்துடன் பார்க்க முடியாது.

படத்தில் உள்ள லாஜிக்கல் மீறல்களை எழுதி வைத்து கேள்வி கேட்கும் விமர்சகர்கள் வாயடைக்கவே இப்படி ஒரு கிளைமேக்ஸ் வச்சிருக்கார் போல. உண்மைலயே தில்லுதான். வித்தியாசமாதான் இருக்கு இதுவும்.

இறுதியில் அந்த வேலைக்காரன் அவரிடம்... "இப்பதான சாப்பிட்டிங்க இன்னும் பசிக்குதா" என்று கேட்டு வெறிப்பது போல் முடித்திருந்தால் இன்னும் அதகளமாக இருந்திருக்கும்.

இசை - ஒரு முறை பார்க்கலாம், பல முறை கேட்கலாம்.

Saturday, January 17, 2015

ஐ - திரை விமர்சனம்


 
பாடி பில்டிங்கில் சாதிக்கத் துடிக்கும் ஒருவன் சந்தர்ப்பவசத்தால் மாடலிங் செய்யப்போய் அதில் அவனுக்கு உருவாகும் எதிரிகளால் அகோரமாக மாற்றப்பட்டு சீரழிவதுதான் கதை.

இதில் நடித்ததற்காக நிச்சயம் விக்ரம் பாராட்டப்பட வேண்டியவரே. உடலை வருத்தி உழைத்திருக்கிறார், உடல் மொழியும் அபாரம். அப்ப நான் செத்துடுவனா டாக்டர்னு சுரேஷிடம் கேட்கும்போது மேக்கப்பையும் தாண்டி அபாரமாக நடிப்பு வெளிப்படுகிறது. ஆனால் இவர் பேசும் சென்னைத் தமிழ் கேட்டால் நமக்கு மெர்சலாகிவிடுகிறது. சுத்தமாக இவருக்கு அது பொருந்தவில்லை. இவரும் எமியும் சென்னைத் தமிழ் பேசிக்கொள்ளும் காட்சியில் இவரை விட எமியே சிறப்பாக செய்திருந்ததாக தோன்றியது எனக்கு.

கூடையில் தூக்கிவரப்படும் ஆப்பிளாக எமி.... சின்ன ஸ்டிக்கர் பொட்டில் அவ்வளவு அழகாக இருக்கிறார். அதே போல சின்னச் சின்ன உடைகளிலும். :P :P நடிப்பிலும் குறை வைக்கவில்லை. தமிழ் சினிமாவில் இருக்கும் வாடிப்போன பூக்களுக்கெல்லாம் பூக்களே சற்று ஓய்வெடுங்கள்னு ஓய்வு கொடுத்துட்டு, இவருக்கு கொடுக்கலாம் அந்த வாய்ப்ப... தண்ணி தெளிச்ச பூ மாதிரி அவ்லோ ஃப்ரெஷ்ஷா இருக்கார். 

சந்தானம்...
விக்ரமுக்கு கூடவே இருந்து உதவும் ஒரு துணைக் கதாபாத்திரம்... அவ்லோதான், அதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. இந்த ரோலுக்கு விவேக் இருந்திருந்தா நிச்சயம் கொஞ்சம் ரிலாக்ஸ் பன்னிருப்பார் அந்நியன்ல பன்ன மாதிரி. படம் போறடிக்கறதுக்கு இவரும் இவர் வரும் டுபாக்கூர் பேட்டி சீன்களும் ஒரு முக்கிய காரணம். அந்த பேட்டி சீன்களெல்லாம் கடுப்படிக்கும் ரகம்.

அப்புறம் வில்லன்களா வரும் உபன், ராம்குமார், சுரேஷ், திருநங்கை இவங்கெல்லாம் எப்படி இந்த படத்துல நடிக்க ஒத்துக்கிட்டாங்களோ தெரியல. விக்ரம விடவே அகோரமா காட்டப்படறாங்க.

இதுல திருநங்கைக்கு விக்ரம் மேல இருக்கற கோபம் மட்டும்தான்,  உடல் மற்றும் பெர்சனாலிட்டி வச்சி நம்மல நிராகரிச்சுட்டானே, அசிங்கப்படுத்திட்டானேனு விக்ரம அதை வச்சே பழி வாங்க நினைக்கறது ஓரளவு பொருந்துது. மத்ததெல்லாம் சிரிப்பு அல்லது எரிச்சல் வரவைக்கும் கோபமே..

மத்த ஷங்கர் படங்கள் போலவே இதுலயும் ஒளிப்பதிவு மிக அருமை. ஆனா அக்கம் பக்கம் யாருமில்லா அந்த வீட்டை... ச்சே நாம இப்படி ஒரு இடத்துல இருந்தா நல்லாருக்குமேங்கற மாதிரி காட்டாம... மத்த செட் ப்ராப்பர்ட்டி மாதிரி சாதாரணமா காட்டிருக்காங்க. 

ரகுமான் பின்னணி இசை அட போட வைக்கவும் இல்ல... குறை சொல்ற மாதிரியும் இல்ல.

ஷங்கர் பத்தி சொல்லனும்னா... அவர் இந்த படத்து காட்சிகளிலும் பாடல்களிலும் அங்கங்க வச்சிருக்கற விளம்பரங்களோட கான்செப்ட்டும் அதை அவர் எடுத்திருக்க விதமும் அவ்வளவு அருமையா இருக்கு. இவர் விளம்பரம் டைரக்ட் பன்னவந்தா நிச்சயம் நிறைய சுவாரஸ்யமான விளம்பரங்கள் நமக்கு கிடைக்கலாம். 

ஒரு பகுதி கடந்தகாலம் அடுத்த பகுதி நிகழ்காலம் மாதிரியான ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா!!!! ;) ;) போன்ற நம் எழுத்தாளர் தாத்தாக்களின் க்ரைம் நாவல் ஸ்டைல் திரைக்கதை ஒரு மணி நேரம் வரை மட்டுமே எடுபட்டிருக்கு. 

ஆடியோ ஃபங்ஷன், போஸ்ட்டர்ல எல்லாம் பாடி பில்டிங்குக்கு கொடுத்த முக்கியத்துவம் வச்சி படத்துல பாடி பில்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பாருன்னு நினைச்சேன்... ஆனா ஏமாத்திட்டாரு.

மத்தபடி... 

சண்டைக்காட்சிகள் எல்லாமே அளவுக்கதிகமான நீளம். ஒவ்வொன்னும் 10 முதல் 15 நிமிடங்கள் வருது. ஒரு சண்டை முடியறதுக்குள்ள. அதுக்கு முன்னாடி என்ன சீன் வந்திச்சு, எதுக்காக சண்டை போட்டுக்கறாங்கன்னே மறந்துடுது.

அப்புறம்...

இந்தியாவிலேயே எல்லா ப்ராடக்டும் தயாரிக்கிற இன்ட்டர்னேஷனல் கம்பெனி ராம்குமார்துதான், மத்தவங்கெல்லாம் லோக்கல் விளம்பரதாரர்கள் மாதிரியான சித்தரிச்சிருக்கறது எடுபடல.

பிரபல மாடலான எமிக்கு வேற எந்த மாடலையுமே தெரியாதாம் ஒரே தடவை பாத்திருக்கற விக்ரம்கிட்ட வந்து சேர்ந்து நடிக்க சொல்லி, தானே ஜிம்முக்கு அசால்ட்டா நேர்ல வந்து கெஞ்சுகிறார்.

உபன்க்கு ராம்குமார் கம்பெனி ப்ராடெக்ட் விட்டா வேற வாய்ப்பே இந்தியால இல்லையாம்.. ரியல் எஸ்டேட் விளம்பரம் நடிக்கற அளவுக்கு, உடனே இறங்கிடுவாராம். மூட்டைத்தூக்கி எடுபிடி வேலை பாத்தவங்களுக்கு வேலை முடிஞ்ச உடனே கூலி தர மாதிரி... உபன் ஒரு லோக்கல் விளம்பரத்துல நடிச்சு முடிச்ச உடனே அவர் கையில காசு கொடுத்து அனுப்பறாங்க. :) :) :)

இந்தியாவின் ஒரே இன்ட்டர்னேஷனல் கம்பெனி அதிபரான ராம்குமார்... தானே விளம்பரம் நடிக்கற நடிகர்கள் முதற்கொண்டு நேரடியா அவங்க கிட்டயே பேசி டிசைட் பன்றாரு. எந்த இடம்னே புரியாத செட்ல எல்லாம் சர்வ சாதாணமா போய் உட்கார்ந்திருக்காரு. மத்தவங்களவிட அதிகமாக லோக்கலா வசனம் பேசறாரு. ஷ்விம் ஷூட்ல நீச்சல்குளம் பக்கத்துலயே நிக்கறவருக்கு, அவ்ளோ தேனி கொட்டும் போது.... குறைந்த பட்சம் நீச்சல் குளத்துல குதிக்க கூடவா தோனாது. நிதானமா நின்னு அத ஏவி விட்ட விக்ரம்கிட்டயே... இப்ப என்னப்பா பன்றதுன்னு கேட்டுட்ருக்காரு. :P 

வில்லன் க்ரூப் ஒன்னா சேர்ந்து விக்ரம்க்கு எதிரா தம் அடிச்சிக்கிட்டு ப்ளான் போடறது. மறுபடியும் ஒன்னா சேர்ந்து அதை விக்ரம்கிட்டயே சொல்றதெல்லாம்... மரண காமெடி. 

படத்துல அவங்க ரெண்டு பேரோட காதல் ரொம்ப முக்கியம். ஆனா காதல் காட்சிகளே இல்ல.  நின்னு பேசறாங்க, கை கோத்துட்டு நடக்கறாங்க. அவ்லோதான். கல்யாண ஆல்பத்துக்கு போட்டோ எடுக்கறவங்களே இதைவிட கிரியேட்டிவ்வா யோசிப்பாங்க. :) :) :)

அதுக்கும் மேலங்கற வசனத்தை எத்தனை தடவை சொல்வாங்களோ... புரியாத புதிர்ல ரகுவரன் ஐ நோ ஐ நோ சொன்னத விட அதிகமா இந்த படத்துல இந்த வசனம் வருது.

மொத்தத்தில் ஐ..
எதிர்பார்த்ததுக்கும் கீழ!!!
(எதிர்பார்ப்பில்லாமயே பார்த்தாலும். :) :) )

Thursday, December 23, 2010

மன்மதன் அம்பு - திரை விமர்சனம்

எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம ரொம்ப சாதாரணமா ஆரம்பிக்குது படம்... திரிஷா ஒரு திரைப்பட நடிகை.. இது எங்களுக்குத் தெரியாதான்னு கேக்காதீங்க... படத்திலயும் நடிகையாவே வர்றாங்க... அவங்களைக் காதலிக்கற தொழிலதிபரா மாதவன் வர்றார். படம் ஆரம்பிக்கும் போது சூட்டிங் ஸ்பாட்ல இருக்கற அவங்களைப் பாக்க மாதவனோட குடும்பம் வருது.. அங்க அவங்க சூர்யாவோட (நடிகர் சூர்யாவேதான்) கட்டிப்பிடிச்சு... ஆடறதைப் பாக்க சகிக்காம மாதவனோட அம்மா எழுந்து போயிடறாங்க... சூர்யாவோட பொண்ணோட கான்ஃபிரன்ஸ் கால்ல திரிஷா பேசறதை, முத்தம் கொடுக்கறதை... சூர்யாவுக்குக் கொடுக்கறதா மாதவன் தப்பா நினைச்சுடறார்.. அப்புறம் ஒரே கேரவன்ல வேற வேற பகுதிகள்ல... ஒரே நேரத்துல சூர்யாவும், திரிஷாவும் உள்ளே போறதை ஒன்னா போறதா நினைச்சுக்கறார் மாதவன்... இதனால திரிஷா மேல சந்தேகமும் கோபமும் அதிகமாகுது அவருக்கு...

அதை கார்ல போய்க்கிட்டே மாதவன் திரிஷாகிட்ட கேக்க... அந்த ஆத்திரத்துலயும், கோவத்துலயும் வண்டி ஓட்டிட்டு வரும் போது எதிர்ல வர்ற ஒரு கார் மேல மோதிடறாங்க திரிஷா... அப்ப கோபத்தோட ரெண்டு பேரும் தற்காலிகமா பிரியறாங்க... அப்புறம் மூனு வருசம் கழிச்சி திரிஷா... அமைதியா இருக்கனும்ங்கறதுக்காக.. அவங்களோட தோழி சங்கீதாவோட பாரிஸ் போயி அங்க இருந்து கிளம்பர ஒரு சொகுசுக் கப்பல்ல டிராவல் பண்ணி ரிலாக்ஸ் பண்ணிட்டு வரலாம்னு கிளம்பறாங்க.... அங்க அவங்க என்ன பண்றாங்க அப்படிங்கறதை வேவு பாக்க ஒருத்தரை நியமிக்கறார் மாதவன்... அப்படி வேவு பாக்க நியமிக்கப் படறவர்தான்.. முன்னால் இராணுவ வீரரான கமல்....

கமலோட நண்பர் ரமேஷ் அரவிந்த்.. அவருக்கு கேன்சர் நோய் இருக்கு... அதுக்கான சிகிச்சைக்காக பணம் தேவைப்படறதாலதான் இந்த வேவு பாக்கற வேலைக்கே ஒத்துக்கறார் கமல். கமலும் திரிஷாவை அவருக்குத் தெரியாம பின் தொடர்ந்து வர்றார்.. திரிஷா ரொம்ப நல்லவங்க.. அவங்க மாதவன உண்மையிலேயே விரும்பறாங்க... எந்த தப்புத்தண்டா பண்ணவும் இங்க வரலை... உண்மைலயே ரிலாக்ஸ் பண்ணத்தான் அந்த டிரிப் வந்திருக்காங்கறதைத் தெரிஞ்சுக்கிட்டு... மாதவன்கிட்ட சொல்றார்.. உடனே அவர் சரி உன் வேலை முடிஞ்சது நீ இந்தியா வந்திருன்னு சொல்றார்.. அவருக்குத் தரவேண்டிய பணத்தையும், இனிமே உனக்கு அங்க வேலை இல்லையேன்னு சொல்லித் தர முடியாதுன்னு கல்தா கொடுக்க பாக்கறார்....

அதுக்குள்ள ரமேஷ் அரவிந்துக்கு ஆபரேசன் பண்ணியே ஆகனும்ங்கற கட்டாயமும் வந்திடுது... அதனால திரிஷாவைப் பத்தி கமல் மாதவன்கிட்ட தப்பா சொல்ல ஆரம்பிக்கிறார்.. அதுல ஆர்வமாகி ஆபரேசனுக்குப் பணம் கட்டறார்... அதனால வர்ற குழப்பங்களும்.. அதை அவங்க எப்படி அவிழ்க்கிறாங்க அப்படிங்கறதுதான் மீதி கதை......

கமல் எல்லாரையும் ஓரங்கட்டி நான் மட்டும்தான் நடிப்பேன்... எல்லாரும் வேடிக்கை பாக்கனும்னு அடம்புடிக்காம... அந்த ரோலுக்கு என்ன தேவையோ அதை மட்டும் சரியா செஞ்சிருக்கார்.. அதுவே பாக்க நல்லாருக்கு... படத்துல கமலயும் மீறி ஸ்கோர் பண்றாங்கன்னா அது சங்கீதாதான்...

திரிஷாவோட தோழியா வர்றாங்க.. ஆனா படம் முழுக்க திரிஷாவைவிட இவங்களுக்குதான் நடிக்கறதுக்கு வாய்ப்பு அதிகம்... அதையும் நல்லா பயன்படுத்திக்கிட்டு அசால்ட்டா நடிச்சிருக்காங்க... திரிஷாவையும் குறை சொல்ல முடியாது அளவான நடிப்பு... மாதவன் சான்சே இல்லை... பிச்சு உதறிருக்கார்...
ரமேஷ் அரவிந்த்.. அடையாளமே தெரியாம வர்றார்.. ஆனா நல்லா நடிச்சிருக்கார்... ஊர்வசி அவரோட மனைவியா வர்றாங்க... மாதவனோட முறைப்பொண்ணா.... களவானி ஓவியா - பாவம்யா.....

கமலுக்காக வர்ற அந்த ஃபிளாஷ்பேக் பாடல்காட்சி அருமை.. பாடல் ஃபுல்லா ரிவர்ஸ்லயே காட்சியமைப்பு... நேரா சீன் எடுத்துட்டு ரிவர்ஸ்ல ஓட்டறது பழைய ஸ்டைல்தானேன்னு நினைக்கறீங்களா... அதுதான் இல்லை... அந்தப் பாட்டுல... சீனெல்லாம் ரிவர்ஸ்ல ஓடுது... ஆனா பாடற கமலோட வாயசைப்பு மட்டும் நேரா ஓடுது... நல்லாருக்கு பாக்கும் போது அந்தப் பாடல்.. அதுவும் இல்லாம அந்தப் பாடலோட ஆரம்பம் படத்துல ஒரு முக்கியமான ட்விஸ்டோட வருது... அது என்னன்னு படத்தைப் பாத்து தெரிஞ்சுக்கோங்க... ஆனா... மேட்டர் ஒன்னும் பெருசா இல்லை... கமல் தசாவதாரத்துல சொல்லிருந்த அதே பட்டர்பிளை எஃபக்ட்தான்....
கமல் அவரை வேவு பாக்கத்தான் வந்திருக்காருன்னே தெரியாம அவரோட நட்பா பழக ஆரம்பிச்சுடறாங்க திரிஷா.... அந்த ஃபிளாஷ்பேக் சீனுக்கு அப்புறம்... ரெண்டு பேருமே அவங்களுக்குள்ள மறைச்சி வெச்சிருக்கற உண்மைய ஒருத்தொருக்கொருத்தர் சொல்லிடனும்னு நினைக்கிறாங்க.. அந்த சீனெல்லாம் நல்லாருக்கு...

பின்னணி இசை நல்லாருக்கு... பாட்டெல்லாம்.. படத்தோட திரைக்கதையோட ஒட்டியே வர்றதால எதுவும் தனியா பிரிச்சு பாக்க முடியாதபடி நல்லாருக்கு பாக்கறதுக்கு....

படத்துக்கு இன்னொரு பெரிய பிளஸ்.. வசனங்கள்... படம் ஆரம்பிச்சதுல இருந்தே நிறைய வசனங்கள் நல்லாருக்கு.... வசனத்துக்காகவே இன்னொரு தடவை பாக்கலாம்னு இருக்கேன்... அதே நேரம்....

தமிழ் மெல்லச் சாகட்டும்
தமிழ் பொருக்கப் போயிருக்கு

அப்படிங்கற வசனம்லாம் வந்து கோவப்படுத்தறதையும் சொல்லியாகனும்... இந்த ரெண்டு வசனம் வந்துதான்.. இது கலைஞரோட பேரன் தயாரிச்சப் படம்ங்கறதை நியாபகப்படுத்துது.... ஏன் இப்படில்லாம்... கலைஞர் ஐயா... நீங்க இதுக்கு ஒரு நியாயம் சொல்லுங்கய்யா....

படம் ஆரம்பத்துல இருந்தே சீரியஸா போகுது... அங்கங்க லைட்டா சிரிக்க முடியுது.. அப்புறம் இடைவேளைக்கு அப்புறம்... மாதவனும் வந்து இவங்களோட சேர்ந்தப்புறம் கொஞ்ச நேரம் நல்ல காமெடி... ஆனா கிளைமேக்ஸ்.. ஏத்துக்கக் கூடியதா இல்லை.... சப்புன்னு ஆயிடுது... என்ன இப்படி பண்ணிட்டாங்க அப்படின்னு ஒரு நினைப்பு வந்திடுது..

மன்மதன் அம்பு - இலக்கு வரை சரியாகப் பாய்ந்து... கடைசி நேரத்தில் குறிதவறிய அம்பு..

Sunday, December 19, 2010

கண்ணில் அன்பைச் சொல்வாளே - சிறுகதை

அப்போது நான் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.. ஸ்கூல் முடிஞ்சதும் பிசிக்ஸ் டியூசன் போயிட்டு நைட்டுதான் வீட்டுக்கு வருவேன். அன்று கொஞ்சம் அதிகமாகவே லேட்டா வந்தேன்...

தினமும் நான் நைட்டு வந்தவுடன்... அதுவரை நான் எப்போது வருவேன் என்று என் அக்கா எதிர்பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறாள் என்பதை அவளது நிம்மதியான வெளிப்பாடுகளே காட்டிக்கொடுத்துவிடும்.. அன்றும் அப்படித்தான்... ஆனால் அவளது முகம் இருண்டிருந்தது....

என் முகம் பாராமல் எனக்கு தோசை ஊற்றிக் கொண்டிருந்தாள்... அவள் விழியோரம் அவளையும் அறியாமல் அவ்வப்போது கண்ணிர் வழிவதும் அதை நான் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகவோ அல்லது பார்த்துவிடப் போகிறேனோ என்ற பதைபதைப்புடனோ தாவனியில் துடைத்து விட்டுக்கொண்டிருந்தாள்....

அக்கா ஏன் அழுகிறாள்.... எனக்கு பசி பறந்தோடியது....

"என்னாச்சுக்கா ஏன் அழற"

"நாளைக்கு நீலாவுக்குக் கல்யாணம்டா.. போனவாரம் அவ பத்திரிக்கை வைக்க வந்த போது போலாம்னு அம்மா சொன்னாங்க.. இப்ப கடைசி நேரத்துல.. அவ கல்யாணம் கருப்பூர்ல நடக்குது அவ்லோ தூரம்லாம் கூட்டிட்டு போக முடியாதுங்கறாங்க... கண்டிப்பா வருவேன்னு ஃபிரண்ட்ஸ்கிட்ட எல்லாம் சொல்லிட்டேன்.. நீலாவும் எனக்கு எப்படின்னு தெரியும் இல்ல உனக்கு... எதுக்கு என்னை ஆசை காட்டி ஏமாத்தனும்... நீ சாப்பிட்டப்புறம் சொல்லலாம்னு இருந்தேன்டா..." என்றாள்... சொல்ல சொல்லவே அவள் கண்களில் மீண்டும் கண்ணீர் வழிந்தது...

அவள் கண்ணீர் வடிப்பதை என்னால் தாங்க முடியவில்லை.... உடனே அம்மாவிடம் போய் குதித்தேன்... நீங்க அவளை நீலாக்கா கல்யாணத்துக்கு கூட்டிட்டு போங்க இல்லன்னா நான் கூட்டிட்டு போறேன்... ஏன் அவளை இப்படி அழவிடறீங்க... என்றேன்...

அக்கா அழறாளே என்ற பதட்டத்தில் எனக்கும் அழுகை வந்தது......

இருவரும் அழுவதைப் பார்த்தவுடன் அம்மா அக்காவை கல்யாணத்திற்குக் கூட்டிச் செல்ல ஒத்துக் கொண்டார்கள்...

மகிழ்ச்சியுடன் என் கையைப் பிடித்து மெல்ல அழுத்தினாள் அவள்... அந்த மெல்லிய அழுத்தம் தரும் அன்பின் உணர்வை வார்த்தைகளில் எழுத முடியாது.

எனக்கு அக்காதான் எல்லாம்.. அவள் என் தாய் போன்றவள்.. விசயம் சின்னதோ பெருசோ அது மேட்டர் இல்லை... என்னை யார் என்ன சொன்னாலும் தாங்க மாட்டாள்... அம்மாவே என்னை கண்டித்தாலும்... உடனே அவள் கண்ணில் நீர் கோர்த்துவிடும்.... எனக்கும் அப்படியே... அதனாலேயே எங்கள் இருவரில் யாரைத் திட்ட நினைத்தாலும் வீட்டில் இருவரில் ஒருவர் வீட்டில் இல்லாத போதே செய்தனர்....

இதோ அந்த அக்காவுக்குக் கல்யாணமும் முடிந்துவிட்டது... அன்று நான் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை... குதூகலத்துடன் சுற்றித்திரிந்தேன் அன்று மாலை ஒரு வேனில் அவர்கள் மாப்பிள்ளை வீட்டிற்குச் செல்லக் கிளம்பினர்.. அக்காவும் அம்மாவும் ஒருவர் முகம் பார்த்து ஒருவர் அழுதனர்....

என்னடா இது.. நல்ல விசயம்தானே நடந்திருக்கு எதுக்கு இவங்க அழறாங்க... என்று நினைத்தேன். உடனே அவளிடம் சென்று....

"அக்கா அழாதேக்கா... எனக்கு ஒரு மாதிரி இருக்கு...."

அவள் கண்களில் இன்னும் அதிகமாகக் கண்ணீர்... அதைப் பார்த்து என் முகம் வாடுவதைக் கண்டவள்... முகத்தைத் துடைத்துக்கொண்டு....

"நல்லா படிடா... அடிக்கடி வாடா அங்க"

"வராம விடுவனா.. இனிமே என் வீடே அதுதான் நீ இருக்கற வீடு என் வீடுதான்ங்கா"

இந்த வார்த்தையில் என்ன கண்டாளோ மீண்டும் கண்களில் நீர் துளிர்த்தது அவளுக்கு....

எப்போதும் நான் என் அக்காவின் பக்கத்தில்தான் படுத்துக் கொள்வேன்... இன்று எனதருகில் அவளது இடம் வெறுமையாய்... மெல்ல மெல்ல அக்கா நம்முடன் இல்லை என்ற எண்ணம் எனக்கு அப்போதுதான் வரத் தொடங்கியது.... அந்த வெறுமை என் மனதிற்குள்ளும் படறத் தொடங்கியது... அன்றிலிருந்து அக்காவின் நினைப்பில் எத்தனை நாட்கள் போர்வையைப் போர்த்திக்கொண்டு அழுதிருப்பேன் என்று தெரியவில்லை..

அன்று அக்காவின் பிறந்தநாள் எங்கள் வீட்டிற்கு மாமாவையும் அக்காவையும் அழைத்திருந்தோம்.. வருடா வருடம் எங்கள் வீட்டில் யாருக்காவது பிறந்தநாள் என்றால்.. அம்மாவே எதாவது ஸ்வீட் செய்வார்... அவ்லோதான்..

அந்த வருடம் அக்காவின் திருமணத்திற்குப் பிறகு வந்த பிறந்தநாள் என்பதால் கடையில் கேக் ஆர்டர் கொடுத்திருந்தோம்... அக்கம் பக்கம் வீட்டிலிருந்து எல்லாம்... கூப்பிட்டிருந்தோம்.. கோலாகலமாகக் கேக் வெட்டிக் கொண்டாடினோம்...

அன்று மாலை....

"இனிமே இந்த மாதிரி எனக்குப் பிறந்த நாள் கொண்டாட வேண்டாம்டா"

"ஏன் கா.... என்னாச்சு"

"இல்லடா... என் பொண்டாட்டிக்கு பிறந்த நாள் கொண்டாட இவனுங்க யாருன்னு அவர் கேக்கறார்டா"

எனக்கு சுள்ளென்று கோபம் வந்தது....

"நான் யாரா.. என்னக்கா பேசறார் மாமா.. உடனே நீ..........."

"இல்லடா... நான் எதுவும் பேச முடியாதுடா. ஏற்கனவே நீ அங்க வந்து மூனு நாள் இருந்தப்பவே... அக்காவும் தம்பியும் ரொம்பத்தான் சீன் போடறீங்க... என்ன உன் தம்பிக்கு அறிவே கிடையாதா... காலேஜ் போப்போற பையன் இப்படி இருக்கான்... இன்னொருத்தர் வீட்டுக்கு வந்து 8 மணி வரைக்கும் தூங்கிக்கிட்டு.... அப்படின்னு இன்னும் அவரு உன்னை திட்டினதை எல்லாம் என்னால சொல்ல முடியாதுடா... என்னால அதைத் தாங்க முடியலை.... எதுவும் கேக்கவும் முடியாது... இனிமே நீ அங்க வந்தாலும் என்னால இங்க இருந்த மாதிரியே இருக்க முடியாதுடா"

முதல் முறையாக என் வீடு என்று நான் நினைத்திருந்த என் அக்காவின் வீடு.. என் வீடு கிடையாது என்று தோன்றியது....

அதன் பிறகு இன்றுதான் அக்கா வீட்டிற்கு வந்தேன்... அவளது போக்கில் நிறைய மாற்றம் தெரிந்தது... ஆனால் அவளது கண்களில் எனக்கான அன்பு முழுதாய் தெரிந்தது... அவள் என் மீது கொண்டிருந்த அன்பை கண்களில் மட்டுமே  அவளால் வெளிப்படுத்த முடியும் இனி.. என எனக்குத் தெளிவாகப் புரிந்தது..

பெண்களின் வாழ்க்கை திடீரென எப்படி மாறிவிடுகிறது.... இதுவரை எனக்கு இன்னொரு அம்மா என்று நான் நினைத்திருந்த என் அக்கா இனி என் உறவுக்காரர்களில் ஒருத்தி..... மீண்டும் அழுதேன்..... போர்வை போர்த்தாமலே.....

கண்ணில் அன்பைச் சொல்வாளே
யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல்
தாயாய் காப்பாள் மண்மேலே

சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள்
பேசாமல் மெளனத்தினாலே மனதைச் சொல்லிடுவாள்

உள்ளங்கையில் பாசம் வைத்து உணவைத் தந்திடுவாள்
உறங்கும் போதும் உறங்காமல் என் அருகில் நின்றிடுவாள்...
மறுஜென்மம் வந்தால் கூட நான் தான் இவளின் பிள்ளை

என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்....


Friday, December 17, 2010

ஈசன் - திரை விமர்சனம்

 மேல்த்தட்டு இளைஞர்கள் அதிகப்படியான பணத்தினால் எப்படி சீரழிகிறார்கள், கீழ்த்தட்டு மக்கள் பணத்துக்காக எப்படி சீரழிகிறார்கள், நடுத்தர மக்கள் எப்படி மேல்த்தட்டு மக்களின் தூண்டிலில் சிக்கி சீரழிகிறார்கள், அரசியல்வாதிகள் அதிகாரிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் விதம், தொழிலதிபர்கள் அரசியல்வாதிகளை நடத்தும் விதம், இன்றைய மருத்துவர்கள் நோயாளிகளின் மீது கொண்டிருக்கும் கவனம் இதெல்லாம் சேர்ந்துதான் ஈசன்.. இதை எவ்லோ நல்லா சொல்லியிருக்கலாம்.. ஆனா ஆரம்பித்துல பப்புக்குள்ள போன படம்.... அப்பப்பா... படிங்க மேல...

தண்ணி கிளாசுக்குள் சரக்கு சலம்புவதாகக் காட்டப்படும் கிராபிக்ஸ் பின்னணியில் டைட்டிலே அசத்துகிறது. எடுத்த எடுப்பிலேயே படம் விறுவிறுப்பாகத்தான் தொடங்குகிறது. இடைவேளை வரை அரசியல்வாதி, பப், சமுத்திரக்கனி.. இதேதான் மாற்றி மாற்றி வந்து சில நேரம் பரவால்லயே எனத் தோன்ற வைக்கும் படியான காட்சியமைப்பு.. பல நேரம் அடப்போப்பா எப்ப பாத்தாலும் பப்புக்கே போய்க்கிட்டு எனக் குடிகாரர்களே அலுத்துக்கொள்ளும் அளவிற்கு பப்பிற்குள்ளேயே "குடி"கொண்டிருக்கிறார்கள்... அடப்போங்கப்பா....

காவல்துறை அதிகாரியாக சமுத்திரக்கனி. அந்த பாத்திரத்தித்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அளவான நடிப்பில் அசத்துகிறார். அரசியல்வாதியாக வந்து போகும் அழகப்பன். அந்த பாத்திரத்திற்கு எந்த எக்ஸ்பிரசனும் தேவையில்லை என்பதால் ஓகே. மற்றபடி வைபவ், அபிநயா, புதுசா வர்ற பல பெண்கள் எல்லாம்... உண்மையில் ரொம்ப பாவம்..

குடி கூத்து என்றே இருக்கும் அரசியல்வாதியின் மகனான வைபவ் இன்னொரு குடிகாரியைப் பப்பில் பார்த்தவுடன் காதல் கொள்கிறார். ஆனால் அவள் மறுத்துவிடுகிறாள். பிறகு அவள் வேறொருவனுடன் பப்பில் ஆடிக்கொண்டிருக்கும் போது போலீஸ் பிடித்துக்கொண்டு போகிறது. அந்தக் குடிகாரியின் தந்தை நான்கு மாநிலங்களில் கொடிகட்டிப் பறக்கும் பெரிய பிசினஸ் மேன்... ஆனால் போலிஸ் ஸ்டேசனில் இருக்கும் அந்த நேரத்தில் அந்தக் குடிகாரிக்கு அது மறந்திடுச்சு போல... நம்ம வைபவ்தான் அவரது அரசியல் பலத்தைப் பயன்படுத்தி அந்தப் பொண்ணை போலீஸ் ஸ்டேசன் வந்து கூட்டிக்கிட்டு போறார். உடனே அந்தப் பொண்ணு அவரை காதலிக்க ஆரம்பித்து விடுகிறது.. அப்புறம் அரசியல்வாதிக்கும் அந்த பிசினஸ் மேனுக்கும் இடையே நடக்கும் சில மொக்கையான செட்டில்மெண்ட் மற்றும் அந்த குடிகாரியின் கையறுப்பு நாடகத்துக்குப் பின்னர் கல்யாணம் முடிவாகிறது. அதையும் நம்ம வைபவ் வேற ஒரு பொண்ணு கூட குஜால் பண்ணி கொண்டாடலாம்னு கிளம்பிக் காணாமப் போயிடறார்.. அவரை ஒரு உருவம் வந்து மண்டைலயே அடிக்குது.. அது யாருன்னு பாத்தா.. அதுதான் ஈசன்னு அப்பதான் டைட்டிலே போடறாங்க... இன்டர்வெல் விட்டுடறாங்க..........

அப்புறம்.. சமுத்திரக்கனி வைபவைத் தேடிக்கண்டு பிடித்தாராங்கறதுதான் கதை... செகண்ட் ஆஃப்ல ஒரு ஃபிளாஸ்பேக் வருது... அந்த ஃபிளாஸ்பேக்கோட ஆரம்பம்லாம் என்னவோ "கண்ணில் அன்பை" என்று ஒரு மெலடியுடன் ஆரம்பிக்கிறது.. அந்தப்பாட்டு நல்லாருக்கு... அதுக்கப்புறம்.. ஃபிளாஸ்பேக் எப்படா முடியும்னு ஆயிடுச்சு... அப்பாடா ஃபிளாஸ்பேக் முடிஞ்சது அப்படின்னு நினைச்சா.. அப்புறம் அதுக்கப்புறம் வர்ற காட்சிகளைப் பார்த்தா.. படம் எப்படா முடியும்னு ஆயிடுச்சு...  ஒரு 15 வயசுப் பையனை வெச்சு இவ்லோ வன்முறையைக் கையாண்டதுக்காகவே இந்தப் படத்தை சென்சார்ல தடை பன்னிருந்தாலும் அது தகும்.. அவ்லோ வன்முறை... அபிநயா ரொம்ப பாவம்... சசிகுமார் மேல இருக்கற நம்பிக்கைல இந்தப் படத்துல நடிக்க ஒத்துக்கிட்டிருக்காங்க.. நல்ல அழகு, நல்லா நடிக்கத் தெரிஞ்ச நடிகையாவும் இருக்காங்க.. ஆனா அவங்களை சசி யூஸ் பண்ணிருக்கற விதம்.. கண்டிப்பா அபிநயாவோட ஃபேமிலேயே ரொம்ப வருத்தப்படும்.... சாரி சசி. அவங்களும் இப்படி அவரை பிளைண்டா நம்பி அந்த கேரக்டர்ல நடிக்காம இருந்திருக்கலாம்......

இளைஞர்கள்னா இப்படித்தான் இருப்பாங்க அப்படிங்கற சசியோட பார்வை ரொம்ப மோசமா இருக்கு.... அது படத்துல சீனுக்கு சீன் வெளிப்படுது.... 

சசிக்குமார் அப்படிங்கற பேருக்காகத்தான் இந்தப் படம் பார்க்க எல்லோரும் வந்திருப்பாங்க.. கண்டிப்பா ஏமாத்திட்டார்.. சசி.... இந்தக் கதைக்கான "சீசன்" முடிஞ்சு பல வருசம் ஆயிடுச்சே சசி... இந்தக் கதையவே மாத்தி மாத்தி எடுத்திட்டிருந்த எஸ்.ஏ.சந்திரசேகரே... அதை விட்டுட்டு காதல் கதைக்கு போய் ரொம்ப வருசம் ஆச்சு... நீங்க மறுபடியும்... ஒரு குட்டிப்பையனை வெச்சி கிளம்பிருக்கீங்க.... ரொம்ப கான்ஃபிடன்ட்தான் உங்களுக்கு....

படத்திலே பாராட்ட வேண்டிய விசயம்னா பின்னணி இசை, கண்ணில் அன்பை பாடல், அப்புறம்.. அங்கங்க நல்லா இருக்கற கேமிரா கோணங்கள்...... மத்தபடி எல்லாமே கோணல்கள்.....

ஈசன் - பாலமுருகன்

உயிரின் விலை - சிறுகதை

"இங்க பாரு விஜய்.. இன்னுமா அதை முடிக்கலை நீ.. எப்ப கேட்டாலும் இதை முடிச்சுட்டு பண்றேன்.. அதை முடிச்சிட்டு பண்றேன்னு எதாவது சாக்கு சொல்லிக்கிட்டே இருக்க. உன்னால என்னோட வேலையை நான் சொல்ற நேரத்துக்கு முடிக்க முடியலைன்னா நான் வேற ஆள் பாக்க வேண்டியிருக்கும்.. உன்னைவிட நல்லா வேலை பாக்கற சின்னப் பசங்க ரொம்ப கம்மி சம்பளத்துக்கே கிடைப்பாங்க. முடிச்சுக் கொடுத்திட்டு நீ வீட்டுக்கு போ"

இந்த வார்த்தைகள் திரும்பத் திரும்ப என் மனதில் ஓடின. இந்த நிறுவனத்தில் நான் சேர்ந்து 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த மேனேஜருக்காக நான் கடுமையாக உழைத்து வருகிறேன். அவரும் என்னை மிகவும் மதித்தார். ஆனா இப்ப கொஞ்ச நாளா வேண்டுமென்றே அளவுக்கு மீறி வேலைகள் தரப்படுகின்றன. மேனேஜர் என்னை ஒருமையில் அழைக்க ஆரம்பித்தார். முடிக்க முடியாது என்று தெரிந்தே இவ்வளவு வேலையை சுமத்துகிறாரே என்று முதலில் நினைத்தேன்.

ஆனால் அப்புறம்தான் புரிந்தது முடிக்கக் கூடாது என்றே அவ்வாறு வேலை தருகிறார் என்பதை. அடுத்த வேலை தேடினால் உடனே கிடைத்துவிடும் தான் ஆனால்.. என்னுடைய இத்தனை வருட கடுமையான உழைப்புக்கு இதுதான் மரியாதையா.. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தாலே இந்தக் கொடுமை சகஜம்தான்.. முடிந்த வரை நம் வேலையைப் புடிங்கிக்கொண்டு நமக்கு கெளரவமான சம்பளம் தர வேண்டிய கட்டம் வந்ததும் நம்மை கழட்டி விட்டு விடுவது. ஆனால் பெயரை வேண்டுமென்றே ரிப்பேராக்கி அனுப்ப முயற்சிப்பதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை.. கோபம் கோபமாக வந்தது. ஆனால் என்ன செய்ய... என் கோபத்தை இதோ இப்போது நான் ஓட்டிவரும் வண்டி மீதுதான் காட்டுகிறேன்.. வேறு யாரிடம் காட்ட முடியும்..

"ஆஆஆ ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்"

அச்சச்சோ இதையெல்லாம் நினைத்துக்கொண்டே வண்டி ஓட்டி வந்ததில் ஒரு திருப்பத்தில் ஒரு ஆளின் மீது ஏற்றிவிட்டேன்.
படபடவென நான்கைந்து பேர் என்னை சூழ்ந்து கொண்டனர். கன்னடத்தில் எதேதோ திட்டினர். எனக்குப் புரியவில்லை. அதில் ஒருவன் என் முதுகில் நான்கைந்து அடி அடித்துவிட்டான். தலை மீது எச்சில் துப்பினான். அது நான் போட்டிருந்த ஹெல்மெட்டில் விழுந்து வழிந்தது.

எனக்கு அதிர்ச்சியாகவும், அவமானமாகவும் இருந்தது.. என்ன இது.. இது போன்ற தாக்குதலை நான் இதுவரை பார்த்தது கூட இல்லை.. நான் வசிப்பது பெங்களூரில், அந்த திருப்பத்தை ஒட்டிய பகுதி சேரிப்பகுதியாக இருந்தது. இந்த கூட்டம் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்.. நான் வண்டியை அவர்களில் ஒருவன் மீது ஏற்றிவிட்டேன் போலிருக்கிறது...

எனக்கு உடல் நடுங்கியது... என்னடா விஜய் உனக்கு நேரமே சரியில்லையே... இப்படி வந்து மாட்டிக்கிட்டியே.. போச்சு போ.. இன்னிக்கு கைல இருக்கற பணம்.. கைல, கழுத்துல போட்டிருக்கற நகையெல்லாம் புடிங்கிக்கிட்டுதான் விடப்போறானுங்க.. சமீபத்தில் இவ்வாறு என் நண்பன் ஒருவனை நான்கைந்து பேர் சூழ்ந்து கொள்ள... ஏ.டி.எம் கார்டு கூட வைத்திருக்காத அவன்.. நாம்தான் எதையும் எடுத்து வரவில்லையே நம்மை விட்டு விடுவார்கள் என்று நினைத்திருக்கிறான். ஆமாம் விட்டு விட்டார்கள் அவன் ஓட்டி வந்த பைக்கைப் பிடிங்கிக்கொண்டு. இப்போது அவன் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு நடையாய் நடந்து கொண்டிருக்கிறான். அந்தச் சம்பவமெல்லாம் நினைவில் வந்து கிலி ஏற்படுத்தியது.

எனக்கு என் மீதே கோபம் வந்தது.. நாயே முதல்ல பேரை மாத்துடா உனக்கு விஜய்னு பேரு இருக்கறதாலதான் இத்தனை பிரச்சினையும்... என என்னை நானே திட்டிக் கொண்டேன்...

அடிபட்டவன் கன்னடத்தில் எதோ அந்த கும்பலிடம் பேசினான்... அவர்களும் எதோ பேசினர்.. பின் கலைந்து சென்றனர். அந்த ஆள் நொண்டிக்கொண்டே என்னிடம் வந்தான்....

கன்னடத்தில் எதோ கேட்டான்.. எனக்கு கன்னடம் ஓரளவுக்குப் புரியும்தான் ஆனால் இப்போது பயத்தில் ஏதும் புரியவில்லை.

"ஆங்... என்ன சொல்றீங்க.. சார் தெரியாம இடிச்சிட்டேங்க" அவனுக்கு தமிழ் தெரியுமா என என் மூளைக்கு அப்போது யோசிக்கத் தெரியவில்லை. பயத்தில் தாய் மொழியே வந்தது.

"ஓ தமிளா" (அப்படித்தான் உச்சரித்தான்)

நல்லா வேலை அந்தாளுக்கு தமிள்.. சாரி சாரி.. தமிழ் தெரிந்திருந்தது..

"ஆமாங்க.. சாரிங்க நீங்க இந்த டர்னிங்ல நிக்கறது தெரியாம திருப்பிட்டேங்க.. சாரி. வாங்க நானே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போறேன்"

"என்னப்பா நீ.. இந்த ஏரியால்லாம் ஒரு மாதிரிப்பா.. பாத்து வரக்கூடாதா.. யாருனே தெரியாத என்னை இடிச்சதுக்கே இவ்வளவு கோவமா வந்து அடிக்கறாங்கன்னா... அவங்கள்ல ஒருத்தனை அடிச்சிருந்தீன்னா அவ்லோதான்"

அடக்கருமாந்திரம் புடிச்சவனுங்களா யாரோ ஒருத்தனை அடிச்சதுக்காடா இந்த அளப்பரை பண்ணீங்க.. ஹெல்மெட்ல எச்செல்லாம் துப்பி வச்சு... எனக்கு நினைக்கவே மீண்டும் அறுவருப்பாகவும், அவமானமாகவும் இருந்தது.

பயம், பதட்டம், கோவம், கடுப்பு எல்லா உணர்ச்சியும் சேர்ந்து இருந்ததால் எதுவும் பேசத் தோன்றாது... அந்தாளை பின்னாடி உட்கார வைத்து அமைதியாக ஹாஸ்பிட்டல் சென்றேன். அந்தாளுக்கான சிகிச்சை செலவு 1500 ரூபாய் ஆகியது..

இனி நான் விஜய் இல்ல இனி நான் விஜய் இல்ல... என்று என் மனதில் நான் தப்பியோடிக்கொன்டிருந்தேன்...

"தம்பி அந்த டீக்கடையில் நிறுத்துப்பா" என்றான் அவன். நிறுத்தினேன்.

"தம்பி நானும் ஒரு டிரைவர்தாம்பா.. பதட்டப்படாத.. இதெல்லாம்.. சகஜமான விசயம்தாம்ப்பா.. எல்லோருக்கும் நடக்கறதுதான். ரொம்ப பதட்டமா பேயறைஞ்ச மாதிரி இருக்கியேப்பா"

அந்த நாயிங்க வந்து அறைஞ்சதுக்கு...பேயே வந்து அறைஞ்சிருக்கலாம்... யாரும் பாக்க முடியாத பேயைப் பார்த்த திருப்தியில விட்டுட்டுப் போயிருப்பேன் என நினைத்தவாறே...

"இல்லீங்க.. இந்த மாதிரி நான் இதுவரை ஃபேஸ் பண்ணினதே இல்ல.. அதான் என்றேன்"

"டிரைவிங்கல இதெல்லாம் சகஜம்தாம்பா.. எப்பவும் ஒரே மூடுல வண்டி ஓட்ட முடியுமா... நான் ஒரு பஸ் டிரைவர்.. என்னோட சர்வீஸ்ல அதிகம் ஆக்சிடெண்ட் பண்ணதே இல்ல.... ஆனா ஒரு தடவை.. நான் வேகமா போயிட்டிருந்தப்ப.. ரோட்டோரமா போயிட்டருந்த ஒருத்தன் சட்டுனு ரோட்ல எறங்கிட்டான். திடீர்னு அப்படி அவன் இறங்கவும் என்னாலயும் கன்ட்ரோல் பன்ன முடியலை.. அடிச்சுத் தூக்கிட்டேன். ஆள் ஸ்பாட்லயே அவுட்டு. இதுக்கெல்லாம் பதட்டப்பட்டா முடியுமா"

அடப்பாவி கொலைகாரனா நீ... பஸ்ல நாயடிக்கற மாதிரி ஒரு மனுசனையே அடிச்சு கொலை பண்ணிட்டு.. இவ்வளவு தில்லா பேசுதே இந்த நாயி... எனக்கு இன்னும் அதிர்ச்சி அதிகமாகியது... நாம் எங்க வாழ்ந்திட்டிருக்கோம்.. வாழ்க்கை மீதான பயம் இன்னும் அதிகரித்தது.

மீண்டும் எதுவும் பேசாமல் அந்த ஆளை அவனது வீட்டில் கொண்டு போய் விட்டேன்.

"சரி தம்பி அடிச்சிட்டு ஓடிப்போயிடாம ஹாஸ்பிட்டல் செலவெல்லாம் பண்ணி வீடு வரை கொண்டு வந்து விட்டுருக்க பரவால்ல... அடிக்கடி வாப்பா"

அடிக்கடி வேற வரனுமா போயாங்க...

"சரிங்க வரேன்.. சரி அந்த ஆளை பஸ் ஏத்தி கொன்னதுக்கு உங்களுக்கு என்ன தண்டனைங்க கிடைச்சது"

அவன் என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தான்.. பின் மெல்ல...

"500 ரூபா அபராதம் தம்பி"

எனக்கு பக்கென்றது. ஒரு உயிரைக் கொன்னதுக்கு 500 ரூபா அபராதம்தான் தண்டனையா.. அதிர்ச்சி விலகாமல் வண்டியிருப்பதையும் மறந்து அதைத் தள்ளியபடியே வீடு நோக்கி நடந்தேன்.

Friday, December 10, 2010

இன்று புதிதாய் பிறந்தோம் - பாரதியார்


சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.


- மகாகவி பாரதியார். 

பின்குறிப்பு: நாளை பாரதியார் பிறந்த நாள். அதனால் அவர் நினைவாக மகாகவி பாரதியார் கவிதைகளில் எனக்குப் பிடித்ததில் ஒன்று.

Wednesday, December 08, 2010

இரத்தத்தில் கலந்தவள் - சிறுகதை

ஃபோரத்தில் (பெங்களூரில் உள்ள மிகப்பெரிய ஷாப்பிங் மால்களில் ஒன்று) இருந்து வெளியே வந்தனர் நவீனும், அரவிந்தும்.

"இதெல்லாம் நம்மளுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை மச்சி" என்றான் நவீன்.

"இல்லை.. தெரியலைடா" இது அரவிந்த்.

"ஆமாம் அதெல்லாம் தெரிஞ்சுருந்தாதான் நாம எப்பவோ முன்னேறி இருப்பமே."

"ஸ்டுபிட் இப்ப என்ன கெட்டுப் போயிட்டம்னு புலம்ப ஆரம்பிக்கற.. நிறுத்துடா"

நின்றான்....

என்னடாது நாம இவன நிறுத்துடான்னா இன்னொருத்தன் நம்ம முன்னாடி நிக்கறானே என்று நிமிர்ந்து பார்த்தான் அரவிந்த்.

"ஏய் மச்சி நீ இந்த ஊர்லதான் இருக்கியாடா? என்னடா ஷாப்பிங்கா? எப்படி இருக்க?" என்று விடை தேவைப்படாத கேள்விகளாகவே கேட்டான் அவனது கல்லூரி (கால) நண்பன் ராஜூ. கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்கள் கழித்து இப்போதுதான் பார்க்கிறார்கள். ஆனால் இருவருக்குமே எந்த ஆச்சரிய உணர்ச்சியும் இல்லை.

"ம் நீயா.. நீயும் இந்த ஊர்லதான் இருக்கியா? நான் நல்லாருக்கேண்டா. ஷாப்பிங்லாம் ஒன்னும் இல்லடா. இவன் என்னோட ஃபிரண்டு. உச்சா போகனும்னான் அதான் ஃபோரம்ல இருக்கற டாய்லட் போயி போயிட்டு வந்தோம்"

அவன் அதிர்ந்தவனாய் இதெல்லாம் ஒரு பொழப்பாடா என்பது மாதிரி இருவரையும் மாறி மாறி பார்த்தான்.

"நாங்கள்லாம் உச்சா போனாலும் ரிச்சா போவம்டா" -அரவிந்த்.

அவனது நண்பன் மனதிற்குள்ளேயே தலையில் அடித்துக் கொண்டிருக்க வேண்டும்.

"சரிடா நான் கிளம்பரேன். எனக்கு வேலை இருக்கு" என்று சொன்னவாரே பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து அகன்றான்.

"எப்படி எஸ் ஆயிட்டான் பார்த்தியா.. எப்படிடா நம்மள பாத்தவுடனே இவனுங்களுக்கெல்லாம் புரிஞ்சுடுது. ஒதுங்கி ஓடிப்போயிடறானுங்க. வேஸ்ட் ஃபெல்லோஸ்" என்றவாரே அங்கிருந்து நடக்க ஆரம்பித்தனர் இருவரும்.

சிறிது தூரம் நடந்து இருவரும் அந்த பார் அண்ட் ரெஸ்டாரெண்டுக்குள் நுழைந்தனர்.
வெளிச்சம் அதிகம் நுழையாதவாறு, ஆங்காங்கே வர்ண விளக்குகளின் ஜாலத்தில் குடிமகன்களால் நிரம்பியிருந்தது அந்த பார். பாரின் இருபுறமும் எல்.சி.டி டிஸ்பிளே தொலைக்காட்சிப் பெட்டியை சுவற்றில் பதித்திருந்தனர். அதில் எதோ ஒரு இந்தி நடிகன் சட்டையைக் கழற்றிப் போட்டு விட்டு ஆடிக்கொண்டிருந்தான்.

"என்னடா பொண்ணுங்கள்லாம் வந்திருக்காங்க" - நவீன்.

"ஆமாடா இதுங்கெல்லாம் எங்க உருப்படப் போகுதுங்க. எவன் மாட்டப் போறானோ தெரியலை. மாசா மாசம் இதுங்களுக்கு தண்ணி வாங்கித் தரவே தனியா சம்பாதிக்கனும் அந்த பார்ட்டி. நல்ல வேலை என் ஆளு தங்கம்டா."

"அதையும் உரசிப் பாத்துட்டியா மச்சி"

"ஏய் நோ பேட் தாட்ஸ். அவளைப் பத்தி பேசும் போது இப்படி எல்லாம் பேசுனா எனக்குப் புடிக்காது. ஃபிரண்டுன்னு பாக்க மாட்டேன். கொன்றுவேன்"

"சரி சரி ஓவரா டெம்ப் ஆவதடா.. நாம பார்ல வந்து சும்மாதான் உக்காந்துருக்கோம். இன்னும் ஆர்டர் கூட பண்ணலை அதுக்குள்ள பெனாத்தாதே. ஒரு அரை மணி நேரம் உள்ள போவட்டும்.." என்று சொல்லிவிட்டு சிரித்தான் நவீன்.

இருடா மவனே மாட்டாமயா போயிடப்போற கொஞ்சம் உள்ள போவட்டும் அப்புறம் உன்னை வெச்சிக்கறேன் என்று மனதில் நினைத்தவாறே மெனு கார்டை எடுத்தான்.

"நீயே நீயே.. நானே நீயே.. நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே" என்ற பாடல் ரிங் டோனாக ஒலித்தது.

"ஏய் அம்மா கூப்பிடறாங்கடா.. நான் வெளிய போய் பேசிட்டு வர்ரேன். எனக்கு ஒரு லார்ஜ் சிக்னேச்சர் அப்புறம் உனக்கு என்ன வேனுமோ ஆர்டர் பண்ணு. தோ வந்துடறேன்" என்றவாறே எழுந்து வெளியே சென்றான்.

"ம் சொல்லுங்கம்மா"

"டேய்.. வீட்டுக்கு வர நேரமாகுமாடா"

"ஆமாம்மா இன்னிக்கு வீட்டுக்கு வந்தாதான் வருவேன்மா. ஃபிரண்டு ரூம்ல கொஞ்சம் வேலை இருக்கு. நானே போன் பண்ணனும்னு நினைச்சேன். நீங்களே கூப்பிட்டுட்டீங்க"

"ஓ.. சரிடா.. பிரமீ எதோ சேலை சுடிதார்லாம் எடுக்கனும்னா கூட வரச் சொல்றா.. பக்கத்துலதான்.. நான் அவ கூட போயிட்டு வந்திடறேன். சாவி கொடுத்துட்டு போகலாமான்னுதான் கூப்பிட்டேன்"

"இல்லம்மா நீங்க சாவி எடுத்துக்கிட்டே போங்கம்மா. நான் நவீன் ரூம்லயே இருந்துக்கறேன். பாத்து போயிட்டு வாங்க"

"சரிப்பா. நீ பாத்து.. சாப்பிட்டுடு வேலை இருக்குன்னு சாப்பிடாம விட்டுடாத"

"சரிம்மா" இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அரவிந்துக்கு அப்பா இல்லை.. அவனை கஸ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கியது அவன் அம்மாதான். அம்மாவின் மீது மிகவும் பாசமாய் இருந்தான்.

அவன் வந்து அமர்வதற்கும் பேரர் ஆர்டர் பண்ணியவற்றைக் கொண்டு வந்து வைக்கவும் சரியாய் இருந்தது.

மீண்டும் அரவிந்தின் மொபைலில் "எங்கிருந்தோ அழைக்கும் உன் ஜீவன்...." என்ற பாடல் ஒலித்தது.

"எங்கருந்து மச்சி அழைக்குது உன் ஜீவன்?"

"ஏய் சும்மா இருடா" என்றவாரே காலை அட்டெண்ட் செய்தான்.

"சொல்லுடா செல்லம்." குரல் பம்மியிருந்தது.

"---------"

"இல்லடா எங்க மேனேஜருக்கு இன்னிக்கு பர்த்டே அதான் பார்ட்டிக்கு கூப்பிட்டிருக்காரு.. அதான் வந்திருக்கேன். அந்த சத்தம்தான் கேக்குது. உங்கிட்ட பிராமிஸ் பண்ணதை மீறுவனா செல்லம். கண்டிப்பா கிளாஸைத் தொட மாட்டேன்" என்றவாரே. சிக்னேச்சர் கிளாஸைத் தொட்டு எடுத்து சத்தம் வராதவாறு மெதுவாக நவீன் கையிலிருக்கும் கிளாசுக்கு சியர்ஸ் வைத்தான்.

"சரிடா செல்லம்.. பார்ட்டி முடிஞ்சதும் நான் மெசெஜ் பன்றேன்."

"----------"

"சரி சரி மறப்பேனா என் இரத்தத்துலயே நீ கலந்திருக்கயே செல்லம். ஐ லவ் யூ" என்றவாரே இணைப்பைத் துண்டித்தான்.

"இரத்தத்துல எல்லாம் அவங்க வந்து எப்படா, எப்படிடா கலந்தாங்க."

"டேய் இன்னிக்கு ஒரு முடிவோடதான் வந்திருக்கே போல இருக்கு... எனக்கும் ஒரே முடிவுதான்.. அதை ஏற்கனவே சொல்லிட்டேன்.. வீனா எங்கையால சாகாத."

"சரி சரி.. விடு விடு கூல்... இரத்தத்துல கலந்துருக்கறன்னு சொல்றது எல்லாம் ரொம்ப டிராமாத்தனமா இருக்கு மச்சி.. அவ்ளோ லவ் பன்றியா அவங்களை".

"இல்லடா என்னோட பிளட் க்ரூப் AB-. என் பேரு அரவிந்த் அவ பேரு பிருந்தா... பாருடா.. இரத்தத்துலயே நாங்க ரெண்டு பேரும் ஒன்னா கலந்து இருக்கோம் பாத்தியா"

நவீன் மண்டையில் இப்பவே லைட்டா குடையற மாதிரி இருந்தது. ஸ்டைலாக கையை பின்னே கொண்டு சென்று தலையை சொரிந்து கொண்டான். அதை அரவிந்த் கவனித்து விட்டான்.

"ஏய்.. போடா இதுக்குதான் நான் என் லவ் பத்தி யார்கிட்டயும் சொல்றதில்லை"

"சே..சே.. தப்பா எடுத்துக்காதடா. நீ சொல்லு. எனக்கும் ஆச்சரியமாதான் இருக்கு. என்னவொரு மேட்ச் பாரு உங்க ரெண்டு பேருக்கும். சரி இவளோ உணர்ச்சிப் பூர்வமா காதலிக்கறவன் ஏண்டா அவங்ககிட்ட பொய் சொல்ற. உண்மைலயே குடிக்காம இருக்க வேண்டியதுதான"

"அதுக்குதான் முயற்சி பண்ணிட்டிருக்கேன்.. கொஞ்ச நாள்ல நிச்சயம் நிறுத்திடுவேன் மச்சி. ஆனா அது வரைக்கும் என் ஆளு மனசு கஸ்டப்படறதை என்னால தாங்க முடியாதுடா. அவளோட சந்தோசத்துக்காகத்தான் இப்படி அப்பப்ப கொஞ்சம் பொய் சொல்ல வேண்டியிருக்கு"

மீண்டும் கையை மெல்ல பின்னே கொண்டு செல்ல இருந்த நவீன். அரவிந்த் உஷாராக அவன் கையையே பார்த்துக் கொண்டிருந்ததால் கட்டுப்படுத்திக் கொண்டான்.

"அதுசரி மச்சி... இதுவரை உன் இரத்தத்துல பிருந்தா கலந்திருக்காங்கன்னு சொன்ன. இப்ப தண்ணியடிச்சிட்ட.. ஆல்காஹாலும் இல்ல கலந்திருக்கு"

உடனே அரவிந்தின் முகம் மாறியது. இவன் சொல்வது சரிதானே.. இரத்த வகையில் எழுத்துப் பொறுத்தம் சரியாக இருப்பதையே நினைத்து புழங்காகிதம் அடையும் நான் ஏன் இதுவரை இதை யோசிக்கவில்லை என நினைத்தான்.

அந்த நேரம் மீண்டும் "நீயே நீயே நானே நீயே" ஒலித்தது. எடுத்தான்..

"நான் பிரமீளா பேசறேன்பா.. அம்மாவுக்கு இங்க ஒரு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சுப்பா. நிறைய பிளட் லாஸ் ஆகிடுச்சு.. AB- ரேர் க்ரூப் கிடைக்காதுங்கறாங்க. எங்கப்பா இருக்க.. எனக்கு என்ன பன்றதுன்னே தெரியலை. சீக்கிரம் வாப்பா"

அம்மாவுக்கு ஆக்சிடெண்டா... அரவிந்தின் உடல் நடுங்கியது... உடனே பதட்டத்துடனும் பயத்துடனும் எழுந்தான்..

"அம்மாவுக்கு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சாம்டா உடனே போலாம் வாடா.. நிறைய பிளட் லாசாம் என் க்ருப்தான் அவங்களுக்....."

"ஆல்கஹாலும் இல்ல உன் இரத்துல கலந்திருக்கு" அந்த வார்த்தைகள் மீண்டும் நினைவுக்கு வந்தன.

"அய்யோ" என்று தலையில் கை வைத்தவாரே அந்த இடத்திலேயே தரையில் அமர்ந்தான். கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது...

"மப்பு ஏத்திக்க வேண்டியது அப்புறம் ஓவர் மப்புல... இடம் பொருள் தெரியாம உக்காந்து எதையாவது நினைச்சு அழ வேண்டியது. இவனுங்களுக்கு இதே பொழப்பா போச்சு" என்றவாரே இருவர் அவர்களுக்குள் சிரித்து பேசிக் கொண்டே சென்றனர்.

அரவிந்தின் காதில் இப்போது யார் பேசுவதும் விழவில்லை...

"நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே...."

மீண்டும் பாடல் ஒலித்தது.

mother’sday Quotes