Search This Blog

Tuesday, January 15, 2019

கனா - திரை விமர்சனம்


              இனி விவசாயமும் கிடையாது நீங்க விவசாயியும் கிடையாது.... இத விவசாயத்த உயிரா  நினைக்கற ஒரு விவசாயி கேட்க நேர்ந்தா அவன் மனசு எவ்வளவு பாடுபடும். விவசாயத்த சுத்தமா மதிக்கவே தெரியாத நம்ம விவசாய நாட்டுல, இதக் கேட்டு கடந்துவராத விவசாயியே இருக்கமாட்டார் இல்லையா?

ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். அத எப்படி சாதிக்கனும்ங்கற வழிதான் பலருக்கும் தெரியாது. அப்படி தெரிஞ்சாலும் அதை அடையும் குடும்பச்சூழல் இல்லாமல் இருக்கும். நம் கனவை நினைச்சு நான்கு சுவருக்குள் அழுது மருகும் நிலையே பலருக்கும் இருக்கும்.

அதையும் மீறி அந்தக்கனவ அடைய நமக்கு இருக்க பெரிய சவால் நம்மல சுத்தி நம்ம கூடவே இருக்கவங்கள எப்படி எதிர்கொள்றதுங்கறதுதான். டிக்டாக் பண்ணா கூட இவன் இருக்க நிலைமைக்கு இதெல்லாம் தேவையான்னு எள்ளி நகையாடற நம்மாளுங்க... நமக்கு ஒரு விசயத்த சாதிக்கனும்ங்கற கனவு இருக்குன்னா சும்மா விடுவாங்களா? அதுவும் அந்தக் கனவோட இருக்கறது பெண்ணா இருந்துட்டா?

சார் சார் நேத்து இந்தியா தோத்துடுச்சின்னு எங்கப்பா அழுதார் சார் எப்படியாவது கிரிக்கெட் விளையாண்டு  ஜெயிச்சி எங்கப்பாவ சந்தோசப்படுத்தனும். என அப்பாவை சந்தோசப்படுத்த கிரிக்கெட் மீது காதல் கொள்ளும் மகள் கெளசி.

மகளுக்காக கிரிக்கெட் பேட்டை தானே செதுக்கிக் கொடுத்து... விவசாயம் பொய்த்து குடும்பமே வறுமையில் உழன்று, வீடு ஜப்திக்கு வரும் நிலை வந்தபோதும் தன் மகளின் கனவு நிறைவேற வேண்டுமென எந்தச் சூழலிலும் அவளுக்கு முட்டுக்கட்டை போடாமல் அவளை ஊக்கப்படுத்தி அவளது கனவு நிறைவேற வேண்டும் எனத்துடிக்கும் அப்பா. மகள் விளையாடுவது பிடிக்காவிட்டாலும். மகளின் குழப்பமான தருணத்தில் அவளுக்கு ஊக்கப்படுத்தி முன்னேற வைக்கும் தாய்.

எந்தவிதமான பந்தில் தன் கரியரை இழந்தாரோ அதே விதமான பந்தில் தான் பயிற்சியளித்த பெண் இறுதியில் வெற்றி தேடித் தந்ததைக் கண்டு சமாதானம் அடையும் கிரிக்கெட் கோச்.


சின்ன வயசுல இருந்து கெளசியை கிரிக்கெட் விளையாட ஊக்கப்படுத்தும், அவள் வெற்றியைத் தங்கள் வெற்றியாக நினைத்து கொண்டாடும் நண்பர்கள். தன் காதலை கூட அவளிடம் சொல்லும் தைரியம் இன்றி.. ஆனால் கிரிக்கெட்டில் அவளது வெறித்தனம் உணர்ந்து அவள் வெற்றியில் மகிழும் ஒருதலைக் காதலன்.

இப்படி சரியான விதத்துல கதாபாத்திரங்கள சேர்த்து நெகிழ்ச்சியோட சொல்லிருக்காங்க இந்தக் கனாவ...

ஐஸ்வர்யா ராஜேஷ். அப்பா என்ன நடிகை இவங்க. பத்து வயசு பசங்களுக்கு அம்மாவாவும் அதற்குரிய உடல்வாகு உடல்மொழியோட நடிச்சு அசத்தறாங்க. இதுல  ஸ்கூல் பொண்ணா வரப்பவும் அதற்குரிய உடல்வாகோட வராங்க. கிரிக்கெட் விளையாடறப்பவும்...ஒரு பிளேயராவே பாக்க முடியுது அவங்கள. வெறித்தனம். சத்யராஜ் ஒரு விவசாயியா ஒரு தகப்பனா பின்னிருக்காரு இதுல..

அருண்ராஜா காமராஜ் வெறித்தனமா வசனம் எழுதி இயக்கியிருக்கார் இந்த படத்த. குறிப்பிட்டு சொல்லனும்னா....

நமக்கு ஒன்னு வேணும்னா ஆசப்பட்டா மட்டும் பத்தாது அடம்பிடிக்கத் தெரியனும். நாம பிடிக்கற அடத்துலதான் அது நமக்கு எவ்வளவு பிடிக்கும்னு மத்தவங்களுக்கு தெரியும்....

இங்க இருக்கவங்களுக்கெல்லாம் எனக்கு திறம இருக்கா இல்லையா? அதெல்லாம்விட... நான் ஒருத்தி இங்க இருக்கன்னே தெரிலப்பா...

ஒருத்தர் கஷ்டத்துல இருக்கும்போது கூட நிக்கனும்னுதான் மத்தவங்க நினைப்பாங்க. ஆனா பெத்தபுள்ள அந்தக் கஷ்டத்த தீக்கனும்னுதான் நினைக்கனும். எல்லா அப்பனோட தோல்வி தர வலிக்கு ஒரே மருந்து அவங்க பிள்ளைகளோட வெற்றி.

இந்த உலகம் ஜெயிச்சிடுவேன்னு சொன்னா கேக்காது. ஆனா ஜெயிச்சவன் சொன்னா கேக்கும். நீ எது பேசறதா இருந்தாலும் ஜெயிச்சிட்டு பேசு.

தோத்தா  எப்படி வலிக்கும்னு இந்த முப்பது செகன்ட் உங்களுக்கு காமிச்சிருக்கும்.

ஒருத்தரோட வெற்றிய இந்த உலகமே பாராட்டும்போது அவங்க வீட்ல சந்தோசம் இல்லன்னா அந்த வெற்றி கிடைக்கறதுல அர்த்தமே இல்ல.

ஒரு விளையாட்ட சீரியசா பாக்கத்தெரிஞ்ச நமக்கு... நம்ம விவசாயத்த விளையாட்டா கூட பாக்கத் தெரியல.

நம்ம நாட்ல ஒரு விவசாயி தோத்துட்டா அது அவனுக்கு மட்டும் அவமானம் இல்ல. பசியோட சாப்பிடற ஒவ்வொருத்தருக்குமே அவமானம்தான்.

அனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துகள்.

ஒரு பந்து மேட்சையே மாத்திடும். அது மாதிரி ஒரு பந்து நம்ம லைஃபையே கூட மாத்திடும். அந்த ஒரு பந்துக்காக காத்திருங்க விடாதிங்க....


1 comment: