Search This Blog

Monday, December 19, 2016

சென்னை 28 2 - திரை விமர்சனம்


நண்பனின் காதல் திருமணம் நின்று போனதற்குக் காரணமான நண்பர்கள் அவர்களை மீண்டும் எப்படி சேர்த்து வைக்கிறார்கள் அதான் இந்தப்படம். 

பெரும்பாலான ஆண்களுக்கு கல்லூரி வயது துவங்கி வேலை செல்வதற்கு முன்பு வரை எதைப்பற்றியும் வாழ்வில் பயம் இருக்காது. ஒவ்வொரு நொடியையும் தனக்காக, குறும்பாக வாழ்வார்கள். அதை முதல் பாகத்தில் சரியாக செய்திருந்தார் வெங்கட் பிரபு. சலூன் கடையில் முடி வெட்டும் சீனில் கூட பின்னனியில் FM இல் கிச்சு கிச்சு கிச்சுடி.... என்று பாட்டு ஒலிக்கும்.. இப்படி படம் முழுக்கவே உன்னிப்பாக கவனித்து ரசிக்க நிறைய விசயங்கள் இருந்து. எனக்கு மிகவும் பிடித்த படங்களில் அதுவும் ஒன்று. அவர்களுடன் நாமும் சேர்ந்து வாழ்வது போலவே நிறைய காட்சிகள் இருந்து. சிரிக்க வைத்தது, அழ வைத்தது.

 அதே ஆண்கள் குடும்பபாரத்தை சுமக்க ஆரம்பிக்கும் தருணத்தில். அவர்களுடைய முதல் இழப்பு நட்பு. :( 

அந்த நண்பர்களை நாம் மீண்டும் பார்க்கும், பழகும் வாய்ப்பு இருந்தாலும். மனசே இல்லாமல் அவர்களை இரண்டாம்பட்சத்திற்கு நகர்த்த வேண்டிய சூழல்தான் பெரும்பாலும். அதனால் பழைய ஒட்டுதலுடன் நண்பர்களுடன் இருப்பது கடினம். அதை இந்த பாகத்தில் சரியாக காண்பித்திருக்கிறார் வெங்கட் பிரபு. அதனாலேயே முதல் பாகத்தில் இருந்த சுவாரசியம் இதில் கொஞ்சம் குறைவாகத் தோன்றுகிறது. 

 முதல் பாகத்தின் காட்சிகளை, அதைப் பார்க்காமல் இதை மட்டும் பார்ப்பவர்களையும் குழப்பாமல் சாமர்த்தியமாக இணைத்திருப்பது அருமை. முதல் பாகத்திலேயே ஏகப்பட்ட நடிகர்கள் அவர்கள் அனைவரையும் அப்படியே பத்து வருடம் கழித்து எடுக்கப்பட்ட இரண்டாம் பாகத்திலும் நடிக்க வைத்திருப்பது சாதனைதான். 

பின்னனி இசையும் பாடல்களும் முதல் பாகத்தில் பட்டாசாய் இருக்கும். இதில் நன்றாக இருக்கிறது. நீ கிடைத்தாய் ஒரு முன்னைத்தவம் போலே... செம... இது கதையா பாடலில்... சோகம், சந்தோசம், மீண்டும் சோகம் என்று வந்து முடியும் போது யாரோ யாருக்குள் இங்கு யாரோ... ட்யூனை இணைத்திருப்பது அருமை. ஹவுஸ் பார்ட்டி... தேவையில்லாத இடைச்செருகல். 
     
பழைய நினைவுகள் எப்போதுமே பசுமையானது. இந்தப்படம் முடிந்த பிறகும் முதல் பாகமே மனதில் நிற்கிறது. மொத்தத்தில் இந்தப்படம் கணவர்களுக்குப் பிடிக்கும் மனைவிகளுக்கு டவுட்தான் :-p 

மறக்காம SHARE பன்னுங்க... :-p :-)Wednesday, October 12, 2016

தேவி - திரை விமர்சனம்


மாடர்ன் பெண்ணை கட்டிக்கொள்ள விரும்பும் பிரபுதேவா, சூழ்நிலையால் பிடிக்காத பட்டிக்காட்டு பெண்ணை கட்டிக் கொண்டு மும்பை வருகிறார். அங்கு அவர் மனைவி மீது ஒரு மாடர்ன் பேய் பிடித்துக் கொள்ள அடுத்து என்ன என்பதுதான் தேவி.

பிரபுதேவாவிற்கு ஒரு நடிகராக சிறந்த கம் பேக் படம் இது.  வெறுப்பு, கோபம், இயலாமை, பயம்னு நிறைய எக்ஸ்பிரசன காட்ட வேண்டிய பாத்திரம்... நல்லாவே நடிச்சிருக்கார். அதிலும் அது ரூபி (பேய்) இல்ல தேவின்னு மக்கள் கிட்ட கலங்கி புரிய வைக்க முயற்சிக்கற மாதிரி வர ஒரு சீன்ல செம ஆக்டிங்.

தமன்னா கிராமத்து பொண்ணு, மாடர்ன் பொண்ணுனு ரெண்டு விதமாவும் நல்லா நடிச்சிருந்தாலும்... ரெண்டு விதமான ஆக்டிங்லயும் கூடவே ஃப்ரேம்ல வர பிரபுதேவா ஈசியா  ஓவர்டேக் பன்னிடறார்.

காமெடி நல்லா ஒர்க்கவுட் ஆகிருக்கு.. அதுவும் ஒரு சீன்ல ரூபிக்கு பயந்து பிரபுதேவா பாட்டீனு கத்திக்கிட்டே வீட்ட  விட்ட வெளிய  ஓட, டக்னு கதவு ஃபளோரிங் மேல போய் திறந்துக்க, அவர் டக்னு மேல இருந்து பொத்னு வீட்டுக்குள்ளயே  விழுவார்... சிரிச்சு சிரிச்சு முடியல.

பாடல்கள் நா. முத்துகுமார்னு டைட்டல்ல போட்டாங்க. நம்பவே முடியல, இந்தி வாடையோட வேனும்னு கேட்டு வாங்கிருப்பாங்க போல. பாடல்கள் இசையும் ரொம்ப சுமார். ஆனா மொக்க  பாட்டுக்கு கூட ரசிக்க வைக்கும் செம டேன்ஸ். அருமை.

நிறைய பேய் படமா ரிலீஸ் ஆகி... பேய்லாம் ஒன்னும்  பன்னாதுப்பாங்கற மனநிலைக்கு நாம வந்திருக்கறது இந்த படத்துக்கு பெரிய ப்ளஸ். மூனு மொழில  எடுத்து வெளியிடனும்ங்கறதுக்காக மிக்ஸ்டா வர காஸ்ட்டிங்தான், லைட்டா இம்சை...மத்தபடி கொஞ்சமும் போரடிக்காத எண்டர்டெயினர் இந்த தேவி.

Friday, October 07, 2016

ரெமோ - திரை விமர்சனம்


நான் காலேஜ் படிக்கும் போது காதல் மன்னன் வந்துச்சு.  அஜித் வேலி தாண்டற மாதிரி வந்த ஒரு ஸ்டில்லே இந்த படத்த கண்டிப்பா பாத்திடனும்டான்னு தோன வச்சது. படமும் ஏமாத்தல. சுவாரஸ்யமாவே இருந்தது.
ஏற்கனவே கரணுக்கு நிச்சயமான பொண்ண  அஜித் லவ் பண்ணி கல்யாணம் பன்னிக்கறதுதான் கதை. ஃப்ரெஷ்ஷான பாடல்கள் பிளஸ்ஸா இருந்தது.

அப்புறம் மின்னலே...
நான் M. Sc முதல் வருசம் படிக்கறப்ப வந்தது. படம் வரதுக்கு முன்னாடியே பாடல்கள் உருக வச்சது. ஹாஸ்ட்டல்ல கிட்டத்தட்ட எல்லார் ரூம்லயும் மின்னலே பாட்டுதான் திரும்ப திரும்ப ஓடுச்சு. காதல் மன்னன் அஜித்தும் அதுல  வில்லனா வந்த கரணும் ஏற்கனவே ஒரே காலேஜ்ல படிச்சு முன் பகையோட இருந்தா... அதான் மின்னலே.  படம் பாக்கறப்ப அந்த நினைப்பே வராது.
இப்ப அதே கதையை கிட்டத்தட்ட 18 வருசம் கழிச்சு திரும்ப எடுத்திருக்கார் பாக்யராஜ் கண்ணன். ஆனா இப்பவும் அதே ஃபீல அங்கங்க வரவச்சு தப்பிச்சிட்டார்.

கீர்த்திய பாத்த உடனே லவ் பன்ன ஆரம்பிக்கற சிவா. அத புரொபோஸ் பன்ன அவங்க வீட்டுக்கே போறாரு. பாத்தா அவங்களுக்கு அன்னைக்கு ஒரு டம்மி மாடலிங் ஆளோட நிச்சயதார்த்தம். அப்புறம் நடிப்பு வாய்ப்புக்காக போட்ட நர்ஸ் வேசத்த கீர்த்தி உண்மையான பொண்ணுனு நம்பிடறதால அது மூலமாக அவங்கல லவ் பன்ன வைக்கறதுதான் கதை.

படத்தோட பெரிய பிளஸ். ரெஜினா மோத்வானியா வர சிவகார்த்திகேயன். அவரோட நடை, உடல்மொழி, மேக்கப்னு எல்லாமே உண்மைக்கு ரொம்ப நெருக்க்கமா :-) இருக்கறதால எந்த நெருடலும் இல்லாம  பாத்து ரசிக்க முடிஞ்சது.

கீர்த்தி சுரேஷ் இதுல  அழகாவே இருக்காங்க. நல்லாவும் நடிச்சிருக்காங்க. ஆனா அப்பப்ப பேசறது கீர்த்தியா இல்ல சுரேஷானு குழப்பம் வந்திடுது. :-) ஒரு சீன்ல வர ஸ்ரீ திவ்யாவயே இவர் ரோல்ல போட்ருக்கலாம்.

அப்புறம் மொட்டை ராஜேந்திரன்.. பின்றார்  மனுசன்.. அவருக்கு சீன்ல வசனமே இலலாதப்ப கூட சின்ன சின்ன அசைவுகள்லயே சிரிக்க வைக்கறார். செம ஸ்கிரீன் பிரசன்ஸ்.

பெரிய இம்சை. அனிருத்தோட இசை. இந்த மாதிரி லவ்வ மட்டும் நம்பி எடுக்கற படங்களுக்கு கசிஞ்சுருகற பாடல்கள் ரொம்ப முக்கியம். இதுல  பாட்டு வருது போகுது அவலோதான். சுமாரான இசை, பாத்து சலிச்ச கதை, வசனங்கள்னு இருந்தாலும்... படம் எங்கயும் போரடிக்கல. நிச்சயம் நல்ல டைம் பாஸ்...இந்த படம். 

Friday, April 15, 2016

தெறி - திரை விமர்சனம்கடமையை செய்ததற்காக போலீஸ் குடும்பத்தை கொல்லும் வில்லனை, அந்த போலீஸ் பழி வாங்கும் அரதப் பழசான கருதான் தெறி.

ஆனால்... ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக நான்கு பெண்கள் இந்தியாவில் கற்பழிக்கப்படுவது,
குழந்தைகளை கடத்தி முடமாக்கி பிச்சை எடுக்க விடுவது, வெளி மாநில தொழிலாளர்களை மனிதர்களாகவே மதிக்காமல் வேலை வாங்குவது போன்ற சமூக அவலங்களை சரியான அளவில் கலந்ததில் கவர்கிறார் அட்லி.

அதே போல குடும்ப சென்டிமெண்ட் காட்சிகளும்.. புதிதாக ஏதுமில்லாவிட்டாலும் ரசிக்கும்படி காட்சிப்படுத்த தெரிந்து வைத்திருக்கிறார். என்னை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க எனும் சமந்தாவின் கேள்வியும் சரி இன்னொரு அம்மா நீங்கற பதிலும் புதிதில்லை என்றாலும் படத்தில் அந்த காட்சி வரும் இடம் கலங்க வைத்து விடுகிறது.

சமந்தாவிற்கு நான் ஈக்கு பிறகு பெர்ஃபாமென்ஸ் செய்ய நல்ல வாய்ப்பு, அதை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். அவர் சாகும் காட்சி அப்டியே பக்குனு ஆகிடுது.

மதராசப்பட்டணத்தில் நாம ரசித்து :-p பார்த்த எமியா இது... அவரோட விக்கும், கண்ணாடியும்... கொடுமை. அதை விட கொடுமை இவர் வர பாட்டு தியேட்டர் விட்டு எல்லாரும் வீட்டுக்கே போனதுக்கப்புறம் வருது.

மீனாவோட பொண்ணுன்றத தவிர வேற ஸ்பெசல் எதும் இல்ல நைனிகா கிட்ட. சீரியல்ல வர்ற குழந்தைகளே செம பெர்ஃபாமென்ஸ் குடுக்குதுங்க. அவ்வை சண்முகில மீனாக்கு பொண்ணா, கிட்டத்தட்ட இதே வயசுல வர்ற பாப்பாவோட க்யூட் நடிப்பெல்லாம் இன்னும் நினைப்புருக்கு. இதுல இந்த பாப்பா பாக்க மட்டும்தான் க்யூட்.

உன்னாலே என்னாலும் என் ஜீவன் வாழுதே.... பாடல் இசையும் அதை படமாக்கியிருக்கும் விதமும் க்ளாஸ். படம் முடிஞ்சு வந்தப்புறமும் அந்த பாட்டும் அதன் விசுவலும்தான் மனசுல இருக்கு.

விஜய்க்கு பல ஹிட் ஆல்பம் கொடுத்த தேவாவுக்கு ஒரு பாட்டு பாட வாய்ப்பு கொடுத்ததுக்கு அவரையே மியூசிக் போட விட்ருக்கலாம். ஜீ.வி பிரகாஷ் 50 வது படமாம் இது. உன்னாலே மட்டும்தான் பாஸ் மார்க். மத்ததெல்லாம் 50க்கு கீழ.

விஜய். சந்தேகமே இல்லாம செம பெர்ஃபாமென்ஸ். குழந்தை கூட வர்ற சீன்லலாம் அந்த குழந்தைய விட இவர் நடிப்புதான் க்யூட்டா இருக்கு. அதான் குழந்தைகளுக்கு இவர பிடிக்குது போல. காதல், சென்டிமெண்ட், ஆக்சன் காட்சிகளிலும் பக்காவான நடிப்பு. துள்ளாத மனமும் துள்ளும்ல இவர் அழற சீன இப்ப நினைச்சாலும் சிரிப்பு வந்திடும். அழுற மாதிரி காட்சிக்கெல்லாம் இவர் சரியில்லைனு நினைச்சேன். ஆனா இந்த படத்துல செமயா அழுதிருக்கார். :-) அதாவது பக்காவ அந்த ஃபீல நமக்கு கடத்திருக்கார். கற்பழிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை செய்யும் காட்சியில் கலக்கல் நடிப்பு.

படம் தெர்ர்ர்றீயா இருக்கும்னு நினைச்சு போகாம எதிர்பார்ப்பில்லாம போனா தெறி நிச்சயம் பிடிக்கும்.Sunday, March 27, 2016

தோழா - திரை விமர்சனம்கழுத்துக்கு கீழ் முற்றிலும் செயல் இழந்த ஒரு கோடீஸ்வரன். சிறு திருட்டுக்காக சிறை சென்று பரோலில் வெளி வந்திருக்கும், குடும்பத்தில் மதிப்பிழந்த ஒரு இளைஞன். இவர்கள் இருவருக்குமான தோழமைதான் தோழா.

வாழ்க்கையில் பணம் இழந்தவன் மட்டுமே ஏழை என பொதுவாக சொல்லப்படுகிறான். ஆனால் பணம் இருந்தும் நினைத்த வாழக்கை வாழ முடியாமல் ஏங்கித் தவிக்கும் ஏழையாக நாகார்ஜுனா. இவரது கண்களும், நெத்தியுமே படம் முழுக்க நடித்திருக்கிறது. சந்தேகமே இல்லாமல் வேறு சாய்சே இல்லை அந்த பாத்திரத்திற்கு. அமர்க்களப் படுத்தியிருக்கிறார். மகிழ்ச்சியில் மனிதர் கண் கலங்கும் போது... நம் கண்களும் அவருடன் இணைந்து கொள்வதை பல காட்சிகளில் தவிர்க்க முடியவில்லை.

அடுத்து என்ன என்ற எந்த இலட்சியமும் இல்லாமல் இந்த நொடியை கொண்டாடும் இளைஞனாக கார்த்தி. இவரது நடிப்பில் எனக்கு பிடித்த முதல் படம் இதுவே... படம் முழுக்க உற்சாகமாக வலம் வருகிறார். இவரது உற்சாகம் நமக்கும் தொற்றிக் கொள்ள பின்னணி இசை சரியாக உதவி இருக்கிறது.

படம் இறுதி வரை போரடிக்காமல் ஃபீல் குட் உணர்வை நமக்கு தருவதில் கார்த்தி, நாகார்ஜுனாவின் நடிப்புடன் இணைந்து படத்தின் வசனங்களும் பக்க பலமாக உதவியிருக்கிறது.

காதல், தாய் தங்கை பாசம் என்றெல்லாம் குழப்பியடிக்க நிறையவே வாய்ப்புகள் இருந்தும், உடல் ஊனமுற்றவர்களை பரிதாபத்திற்குரியவராக காட்ட வாய்ப்பிருந்தும், அதை முழுக்க தவிர்த்து கரு சிதையாமல் கவனமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் வம்சி.

நம்முடன் இருக்கும் நட்பு, உறவுகளுக்கு நாம் ஒரு கேர் டேக்கராக இருக்க வேண்டும் என்ற உணர்வை, அதன் அவசியத்தை நிச்சயம் எதாவது ஒரு காட்சியிலாவது நீங்கள் உணர்வீர்கள்.

நாம போற இடத்துக்கு நம்ம மனசும் போகனும், பயம் இருந்தா காதல் அதிகம் இருக்குனு அர்த்தம்... இப்படி மனசுக்கு நெருக்கமான வசனங்களுக்காகவே இந்த ஃபிரண்ட மறுபடி போய் பாத்துட்டு வரனும்.
தோழா - நமக்கும்.

Sunday, March 06, 2016

கணிதன் - திரை விமர்சனம்கல்விங்கறது நம்ம நாட்டை பொருத்தவரை அறிவு வளர்ச்சிக்கான, வேலைக்கான விசயம்ங்கறதையும் தாண்டி... அது நம்ம அடுத்த சந்ததிக்கான வாழ்வாதாரமாவும் இருக்கு.

நாமதான் படிக்கல அதனாலதான் நம்மால் முன்னேற முடியல... நம்ம பையனையாவது நல்லா படிக்க வச்சு பெரிய ஆளாக்கனும்ங்கற கனவோட, அதுக்காக இருக்கற சொற்ப்ப சொத்தையும் வித்து, தாலிக்கொடி தங்கத்தை கூட மஞ்சக்கொடி கட்டிக்கிட்டு கழட்டி வித்து, நம்ம மானமே போனாலும் பரவால நம்ம பையன் தலை நிமிர்ந்து நிக்கனும்னு கண்டவன் கால்லயும் விழுந்து கடன் வாங்கி... இப்படி எப்பாடு பட்டாவது தன் பிள்ளைக்கு நல்ல வாழ்வாதாரத்த ஏற்படுத்தி கொடுத்துடனும்னு துடிக்கற பெற்றோர்கள் நிறைந்த நாடு இது.

அது மட்டுமில்ல நம்மல நம்பிதான் நம்ம குடும்பம் இருக்கு, நமக்காகத்தான் பல அவமானங்களையும் நம்மல பெத்தவங்க பட்ருக்காங்கனு புரிஞ்சுகிட்டு... பிடிக்காத வேலைனாலும், செய்யற வேலைய விட பல மடங்கு சொற்ப சம்பளம்னாலும், சுயமரியாதைக்கு இழுக்கு வரும் அசிங்கத்தையும் அவமானத்தையும் தினம் தினம் வேலைல சந்திச்சாலும் குடும்பத்துக்காக எல்லாத்தையும் பொறுத்து கிட்டு் பல்ல கடிச்சுகிட்டு வேலை செய்யும் இளைஞர்களும் நிறைந்த நாடு.

 முறையா படிச்சவனுக்கே இங்க போட்டிக்கு நிறைய ஆளுங்க இருக்காங்க... இதுல கண்ணுக்கு தெரியாத எதிரியா.. கல்வி சான்றிதழையே போலியா காசு கொடுத்து வாங்கினவனும் சேர்ந்துட்டா? யாரோ ஒரு உண்மையான பட்டதாரிக்கு கிடைக்க வேண்டிய வேலை தான அந்த போலிக்கு கிடைச்சிருக்கும்....
இந்த மாதிரியான நபர்களால எத்தனை பெற்றோர்களோட, இளைஞர்களோட கனவு சிதைஞ்சுருக்கும்.. வாழ்க்கை திசை மாறி இருக்கும். இதுக்கு காரணம் அந்த போலிதான்னு கூட அந்த குடும்பத்துக்கு தெரியாது. :( :(

இந்த விசயத்தை கருவா எடுத்துகிட்டு வந்திருக்க படம்தான் கணிதன். லோக்கல் சேனல்ல ரிப்போர்ட்டரா வேலை பார்க்கும் அதர்வாவுக்கு பிபிசில ரிப்போர்ட்டர் ஆகனும்ங்கறதுதான் கனவு. பிபிசி இண்டர்வியூல அவர் செலக்ட் ஆகி அவர் சர்ட்டிஃபிகேட்லாம் வெரிஃபிகேனுக்கு போக. அதுல அவர் தன் சர்ட்டிஃபிகேட்ட வச்சு பேங்கல லோன் வாங்கி மோசடி செஞ்சதா தெரிய வர, போலீஸ் அவர அரெஸ்ட் பன்ன... இந்த பிரச்சினைல இருந்து அவர் எப்படி வெளிய வரார், உண்மையான குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கறார்ங்கறதுதான் கதை.  அதர்வா முரளி தேர்ந்தெடுக்கற கதைலாம் வித்யாசமா மட்டுமில்லாம தேவையானதாவும் இருக்கு. படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலயே கதைக்கு வந்திடுது.... இதெல்லாம் நிஜத்துல இவ்லோ வேகமாவா நடக்கும்னு நம்ம மூளை யோசிக்கறதுக்குள்ளயே பரபரன்னு நகருது. போலி சான்றிதழ் சம்பந்தப்பட்ட நெட்வொர்கை காட்டும் காட்சிகள் அருமை.  அதர்வா + இன்னும் நாலு பேர்கள அவ்லோ வேகமா கைது செஞ்சு கோர்ட்ல நிறுத்துன போலீஸ் அதுக்கப்புறம் உண்மையான குற்றவாளிகளை பத்தின செய்தி எல்லா மீடியாலயும் வந்த பிறகும் எங்க போனாங்கன்னே தெரியல... அப்புறம் பிற்பகுதில தேவை இல்லாத பிறந்த நாள் கொண்டாட்டம்.. பாட்டுனு வரத தவிர்த்திருக்கலாம். சில லாஜிக்கள் சிக்கல்கள் இருந்தாலும், வெகு நிச்சயமா தவிர்க்கவே கூடாத படம் இது. 

Saturday, January 16, 2016

ரஜினி முருகன் - திரை விமர்சனம்


பரம்பரை சொத்தை வித்து தன் செல்ல பேரனை செட்டில் ஆக்க நினைக்கும் தாத்தா. அதற்கு இடையூராக வெளிநாட்டிலேயே செட்டில் ஆகி வர மறுக்கும் மற்ற மகன்கள். ஊரில் பணக்காரர்களை குறி வைத்து மிரட்டி பணம் பறிக்கும் ஒரு மொக்கராசு. குழந்தைகளாக இருக்கும் போதே இவனுக்கு இவள்தான் என முடிவெடுத்து பின் சிறு பிரச்சினையால் பகையாளி ஆகும் குடும்பம். இப்படி தமிழ் சினிமா பார்த்து பழகிய கதை, திரைக்கதையை வைத்தே வசனங்களாலும் சில ட்விஸ்ட்களாலும் போரடிக்காத ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் பொன்ராம். 

யானையோ பூனையோ தன் பலம் அறிந்தால்தான் வெல்லும் என்பார்கள். அப்படி தன் பலம் அறிந்து அடித்து ஆடுகிறார் சிவகார்த்திகேயன். திருவிழா பாட்டு, குழந்தைகளுடன் ஆட்டம் என விஜயின் திருமலை, திருப்பாச்சி கால டெம்பளேட் இவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது.
பக்கத்து வீட்டு பையன் போன்ற இமேஜ் இவரை ரொம்பவே காப்பாற்றுகிறது. அதை சரியாக புரிந்து கொண்டு அதற்கு பங்கம் வராதபடியே படங்களை தேர்ந்தெடுக்கிறார். 

ரொம்ப நாள் கழித்து சூரியின் எரிச்சல் அடைய வைக்காத நடிப்பு. காமெடி நன்றாகவே ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. கீர்த்தியும் ரசிக்க வைக்கிறார். இவர் திரையில் தோன்றும் போதெல்லாம் விசிலடிக்கிறார்கள். 
சமுத்திரக்கனியும் ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்தில் தான் ஒரு டம்மி பீஸ் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு அதற்கேற்ற பாடி லாங்க்வேஜில் அசத்துகிறார். 

சிவாவுடன் சேர்ந்து வில்லன்களுடன் சண்டை போடுவது, அந்த ஜோரில் சூரியையும் தூக்கி சுழற்றுவது என கிடைத்த கேப்பில் கிடா வெட்டுகிறார் ராஜ்கிரன். அதிலும் சிவாவும் இவரும் தோள் குலுக்கும் ரியாக்சன் செம... 

ரஜினி ரசிகராக வரும் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம். 
படத்தின் ஒரே குறை,  வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் இருந்த பெர்ஃபக்சன் (+ ஸ்ரீ திவ்யாவும் :-p) இதில் இல்லை. இன்னும் தெளிவாக எடிட் செய்திருக்கலாம். 

மொத்தத்தில் மக்களின் கொண்டாடும் மனநிலைக்கு புதுசோ அல்லது பழசே புது வடிவத்துலயோ வேண்டும். அப்படி கிடைச்ச வாய்ப்புதான் இந்த படம். கொண்டாடுறாங்க தியேட்டர்ல. குறிப்பா பெண்கள்.