ஃபோரத்தில் (பெங்களூரில் உள்ள மிகப்பெரிய ஷாப்பிங் மால்களில் ஒன்று) இருந்து வெளியே வந்தனர் நவீனும், அரவிந்தும்.
"இதெல்லாம் நம்மளுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை மச்சி" என்றான் நவீன்.
"இல்லை.. தெரியலைடா" இது அரவிந்த்.
"ஆமாம் அதெல்லாம் தெரிஞ்சுருந்தாதான் நாம எப்பவோ முன்னேறி இருப்பமே."
"ஸ்டுபிட் இப்ப என்ன கெட்டுப் போயிட்டம்னு புலம்ப ஆரம்பிக்கற.. நிறுத்துடா"
நின்றான்....
என்னடாது நாம இவன நிறுத்துடான்னா இன்னொருத்தன் நம்ம முன்னாடி நிக்கறானே என்று நிமிர்ந்து பார்த்தான் அரவிந்த்.
"ஏய் மச்சி நீ இந்த ஊர்லதான் இருக்கியாடா? என்னடா ஷாப்பிங்கா? எப்படி இருக்க?" என்று விடை தேவைப்படாத கேள்விகளாகவே கேட்டான் அவனது கல்லூரி (கால) நண்பன் ராஜூ. கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்கள் கழித்து இப்போதுதான் பார்க்கிறார்கள். ஆனால் இருவருக்குமே எந்த ஆச்சரிய உணர்ச்சியும் இல்லை.
"ம் நீயா.. நீயும் இந்த ஊர்லதான் இருக்கியா? நான் நல்லாருக்கேண்டா. ஷாப்பிங்லாம் ஒன்னும் இல்லடா. இவன் என்னோட ஃபிரண்டு. உச்சா போகனும்னான் அதான் ஃபோரம்ல இருக்கற டாய்லட் போயி போயிட்டு வந்தோம்"
அவன் அதிர்ந்தவனாய் இதெல்லாம் ஒரு பொழப்பாடா என்பது மாதிரி இருவரையும் மாறி மாறி பார்த்தான்.
"நாங்கள்லாம் உச்சா போனாலும்
ரிச்சா போவம்டா" -அரவிந்த்.
அவனது நண்பன் மனதிற்குள்ளேயே தலையில் அடித்துக் கொண்டிருக்க வேண்டும்.
"சரிடா நான் கிளம்பரேன். எனக்கு வேலை இருக்கு" என்று சொன்னவாரே பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து அகன்றான்.
"எப்படி எஸ் ஆயிட்டான் பார்த்தியா.. எப்படிடா நம்மள பாத்தவுடனே இவனுங்களுக்கெல்லாம் புரிஞ்சுடுது. ஒதுங்கி ஓடிப்போயிடறானுங்க. வேஸ்ட் ஃபெல்லோஸ்" என்றவாரே அங்கிருந்து நடக்க ஆரம்பித்தனர் இருவரும்.
சிறிது தூரம் நடந்து இருவரும் அந்த பார் அண்ட் ரெஸ்டாரெண்டுக்குள் நுழைந்தனர்.
வெளிச்சம் அதிகம் நுழையாதவாறு, ஆங்காங்கே வர்ண விளக்குகளின் ஜாலத்தில் குடிமகன்களால் நிரம்பியிருந்தது அந்த பார். பாரின் இருபுறமும் எல்.சி.டி டிஸ்பிளே தொலைக்காட்சிப் பெட்டியை சுவற்றில் பதித்திருந்தனர். அதில் எதோ ஒரு இந்தி நடிகன் சட்டையைக் கழற்றிப் போட்டு விட்டு ஆடிக்கொண்டிருந்தான்.
"என்னடா பொண்ணுங்கள்லாம் வந்திருக்காங்க" - நவீன்.
"ஆமாடா இதுங்கெல்லாம் எங்க உருப்படப் போகுதுங்க. எவன் மாட்டப் போறானோ தெரியலை. மாசா மாசம் இதுங்களுக்கு தண்ணி வாங்கித் தரவே தனியா சம்பாதிக்கனும் அந்த பார்ட்டி. நல்ல வேலை என் ஆளு தங்கம்டா."
"அதையும் உரசிப் பாத்துட்டியா மச்சி"
"ஏய் நோ பேட் தாட்ஸ். அவளைப் பத்தி பேசும் போது இப்படி எல்லாம் பேசுனா எனக்குப் புடிக்காது. ஃபிரண்டுன்னு பாக்க மாட்டேன். கொன்றுவேன்"
"சரி சரி ஓவரா டெம்ப் ஆவதடா.. நாம பார்ல வந்து சும்மாதான் உக்காந்துருக்கோம். இன்னும் ஆர்டர் கூட பண்ணலை அதுக்குள்ள பெனாத்தாதே. ஒரு அரை மணி நேரம் உள்ள போவட்டும்.." என்று சொல்லிவிட்டு சிரித்தான் நவீன்.
இருடா மவனே மாட்டாமயா போயிடப்போற கொஞ்சம் உள்ள போவட்டும் அப்புறம் உன்னை வெச்சிக்கறேன் என்று மனதில் நினைத்தவாறே மெனு கார்டை எடுத்தான்.
"நீயே நீயே.. நானே நீயே.. நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே" என்ற பாடல் ரிங் டோனாக ஒலித்தது.
"ஏய் அம்மா கூப்பிடறாங்கடா.. நான் வெளிய போய் பேசிட்டு வர்ரேன். எனக்கு ஒரு லார்ஜ் சிக்னேச்சர் அப்புறம் உனக்கு என்ன வேனுமோ ஆர்டர் பண்ணு. தோ வந்துடறேன்" என்றவாறே எழுந்து வெளியே சென்றான்.
"ம் சொல்லுங்கம்மா"
"டேய்.. வீட்டுக்கு வர நேரமாகுமாடா"
"ஆமாம்மா இன்னிக்கு வீட்டுக்கு வந்தாதான் வருவேன்மா. ஃபிரண்டு ரூம்ல கொஞ்சம் வேலை இருக்கு. நானே போன் பண்ணனும்னு நினைச்சேன். நீங்களே கூப்பிட்டுட்டீங்க"
"ஓ.. சரிடா.. பிரமீ எதோ சேலை சுடிதார்லாம் எடுக்கனும்னா கூட வரச் சொல்றா.. பக்கத்துலதான்.. நான் அவ கூட போயிட்டு வந்திடறேன். சாவி கொடுத்துட்டு போகலாமான்னுதான் கூப்பிட்டேன்"
"இல்லம்மா நீங்க சாவி எடுத்துக்கிட்டே போங்கம்மா. நான் நவீன் ரூம்லயே இருந்துக்கறேன். பாத்து போயிட்டு வாங்க"
"சரிப்பா. நீ பாத்து.. சாப்பிட்டுடு வேலை இருக்குன்னு சாப்பிடாம விட்டுடாத"
"சரிம்மா" இணைப்பு துண்டிக்கப்பட்டது.
அரவிந்துக்கு அப்பா இல்லை.. அவனை கஸ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கியது அவன் அம்மாதான். அம்மாவின் மீது மிகவும் பாசமாய் இருந்தான்.
அவன் வந்து அமர்வதற்கும் பேரர் ஆர்டர் பண்ணியவற்றைக் கொண்டு வந்து வைக்கவும் சரியாய் இருந்தது.
மீண்டும் அரவிந்தின் மொபைலில் "எங்கிருந்தோ அழைக்கும் உன் ஜீவன்...." என்ற பாடல் ஒலித்தது.
"எங்கருந்து மச்சி அழைக்குது உன் ஜீவன்?"
"ஏய் சும்மா இருடா" என்றவாரே காலை அட்டெண்ட் செய்தான்.
"சொல்லுடா செல்லம்." குரல் பம்மியிருந்தது.
"---------"
"இல்லடா எங்க மேனேஜருக்கு இன்னிக்கு பர்த்டே அதான் பார்ட்டிக்கு கூப்பிட்டிருக்காரு.. அதான் வந்திருக்கேன். அந்த சத்தம்தான் கேக்குது. உங்கிட்ட பிராமிஸ் பண்ணதை மீறுவனா செல்லம். கண்டிப்பா கிளாஸைத் தொட மாட்டேன்" என்றவாரே. சிக்னேச்சர் கிளாஸைத் தொட்டு எடுத்து சத்தம் வராதவாறு மெதுவாக நவீன் கையிலிருக்கும் கிளாசுக்கு சியர்ஸ் வைத்தான்.
"சரிடா செல்லம்.. பார்ட்டி முடிஞ்சதும் நான் மெசெஜ் பன்றேன்."
"----------"
"சரி சரி மறப்பேனா என் இரத்தத்துலயே நீ கலந்திருக்கயே செல்லம். ஐ லவ் யூ" என்றவாரே இணைப்பைத் துண்டித்தான்.
"இரத்தத்துல எல்லாம் அவங்க வந்து எப்படா, எப்படிடா கலந்தாங்க."
"டேய் இன்னிக்கு ஒரு முடிவோடதான் வந்திருக்கே போல இருக்கு... எனக்கும் ஒரே முடிவுதான்.. அதை ஏற்கனவே சொல்லிட்டேன்.. வீனா எங்கையால சாகாத."
"சரி சரி.. விடு விடு கூல்... இரத்தத்துல கலந்துருக்கறன்னு சொல்றது எல்லாம் ரொம்ப டிராமாத்தனமா இருக்கு மச்சி.. அவ்ளோ லவ் பன்றியா அவங்களை".
"இல்லடா என்னோட பிளட் க்ரூப் AB-. என் பேரு அரவிந்த் அவ பேரு பிருந்தா... பாருடா.. இரத்தத்துலயே நாங்க ரெண்டு பேரும் ஒன்னா கலந்து இருக்கோம் பாத்தியா"
நவீன் மண்டையில் இப்பவே லைட்டா குடையற மாதிரி இருந்தது. ஸ்டைலாக கையை பின்னே கொண்டு சென்று தலையை சொரிந்து கொண்டான். அதை அரவிந்த் கவனித்து விட்டான்.
"ஏய்.. போடா இதுக்குதான் நான் என் லவ் பத்தி யார்கிட்டயும் சொல்றதில்லை"
"சே..சே.. தப்பா எடுத்துக்காதடா. நீ சொல்லு. எனக்கும் ஆச்சரியமாதான் இருக்கு. என்னவொரு மேட்ச் பாரு உங்க ரெண்டு பேருக்கும். சரி இவளோ உணர்ச்சிப் பூர்வமா காதலிக்கறவன் ஏண்டா அவங்ககிட்ட பொய் சொல்ற. உண்மைலயே குடிக்காம இருக்க வேண்டியதுதான"
"அதுக்குதான் முயற்சி பண்ணிட்டிருக்கேன்.. கொஞ்ச நாள்ல நிச்சயம் நிறுத்திடுவேன் மச்சி. ஆனா அது வரைக்கும் என் ஆளு மனசு கஸ்டப்படறதை என்னால தாங்க முடியாதுடா. அவளோட சந்தோசத்துக்காகத்தான் இப்படி அப்பப்ப கொஞ்சம் பொய் சொல்ல வேண்டியிருக்கு"
மீண்டும் கையை மெல்ல பின்னே கொண்டு செல்ல இருந்த நவீன். அரவிந்த் உஷாராக அவன் கையையே பார்த்துக் கொண்டிருந்ததால் கட்டுப்படுத்திக் கொண்டான்.
"அதுசரி மச்சி... இதுவரை உன் இரத்தத்துல பிருந்தா கலந்திருக்காங்கன்னு சொன்ன. இப்ப தண்ணியடிச்சிட்ட.. ஆல்காஹாலும் இல்ல கலந்திருக்கு"
உடனே அரவிந்தின் முகம் மாறியது. இவன் சொல்வது சரிதானே.. இரத்த வகையில் எழுத்துப் பொறுத்தம் சரியாக இருப்பதையே நினைத்து புழங்காகிதம் அடையும் நான் ஏன் இதுவரை இதை யோசிக்கவில்லை என நினைத்தான்.
அந்த நேரம் மீண்டும் "நீயே நீயே நானே நீயே" ஒலித்தது. எடுத்தான்..
"நான் பிரமீளா பேசறேன்பா.. அம்மாவுக்கு இங்க ஒரு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சுப்பா. நிறைய பிளட் லாஸ் ஆகிடுச்சு.. AB- ரேர் க்ரூப் கிடைக்காதுங்கறாங்க. எங்கப்பா இருக்க.. எனக்கு என்ன பன்றதுன்னே தெரியலை. சீக்கிரம் வாப்பா"
அம்மாவுக்கு ஆக்சிடெண்டா... அரவிந்தின் உடல் நடுங்கியது... உடனே பதட்டத்துடனும் பயத்துடனும் எழுந்தான்..
"அம்மாவுக்கு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சாம்டா உடனே போலாம் வாடா.. நிறைய பிளட் லாசாம் என் க்ருப்தான் அவங்களுக்....."
"ஆல்கஹாலும் இல்ல உன் இரத்துல கலந்திருக்கு" அந்த வார்த்தைகள் மீண்டும் நினைவுக்கு வந்தன.
"அய்யோ" என்று தலையில் கை வைத்தவாரே அந்த இடத்திலேயே தரையில் அமர்ந்தான். கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது...
"மப்பு ஏத்திக்க வேண்டியது அப்புறம் ஓவர் மப்புல... இடம் பொருள் தெரியாம உக்காந்து எதையாவது நினைச்சு அழ வேண்டியது. இவனுங்களுக்கு இதே பொழப்பா போச்சு" என்றவாரே இருவர் அவர்களுக்குள் சிரித்து பேசிக் கொண்டே சென்றனர்.
அரவிந்தின் காதில் இப்போது யார் பேசுவதும் விழவில்லை...
"நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே...."
மீண்டும் பாடல் ஒலித்தது.