Search This Blog

Tuesday, August 24, 2010

நானும் பதிவர்தான்...நானும் பதிவர்தான்....

 
அன்புடன் ஆனந்தி அவர்கள் எழுதிய ஒரு தொடர்பதிவின் பின்னூட்டத்தில் என்னை ஏன் இந்த தொடர்பதிவு ஆட்டத்துல எல்லாம் சேத்துக்க மாட்டேங்கறீங்கன்னு விளையாட்டா கேட்டிருந்தேன்..அதனை அவர் நியாபகம் வெச்சிக்கிட்டு மறக்காம என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைச்சிருக்காங்க...அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றிகள்........

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

பிரியமுடன் ரமேஷ்


2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

நான் பள்ளியில் பயின்ற காலத்தில் இருந்து என்னுடன் எப்போதும் எனது பெயரிலேயே இரண்டு மூன்று மாணவர்கள் படிப்பார்கள்...எனது பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும்...ஆனால் இப்படி தனித்த அடையாளம் ஏதுமின்றி இருப்பதை நான் விரும்பாமல் இருந்தேன்...பின்னர் கல்லூரி வந்து சேர்ந்த பிறகும் இதே பிரச்சினை இருந்தது...நண்பர்களுக்கு மின்னஞ்சல் செய்தால், குறுஞ்செய்தி அனுப்பினால் அது எந்த ரமேஷிடம் இருந்து வந்தது என்று நண்பர்கள் குழம்பினர் (பெரும்பாலும் மொபைல் நம்பரையோ, மின்னஞ்சல் முகவரியையோ பார்க்காமலே அவர்களாக ஒரு ரமேஷை முடிவு செய்து கொண்டு....நீ அனுப்புன மெயில் சூப்பர்டா மச்சி..என்று இன்னொரு ரமேஷைப் பாராட்டிக்கொண்டு இருந்தனர்!!!!!! பாராட்டு கசக்கவா செய்யும்..அவர்களும் கமுக்கமாக இருந்து விடுவார்கள்...எனக்கு கடுப்பா இருக்கும்) அதனால் மின்னஞ்சல், குறுஞ்செய்தி அனுப்பும் போது என்னை தனித்து காட்ட..என் பெயருக்கு முன்னால் பிரியமுடனை சேர்த்து அனுப்பினேன்...அது நல்லாவே ஒர்க் அவுட் ஆச்சு...மற்ற ரமேஷ்களிடம் இருந்து தனித்து தெரிய ஆரம்பித்தேன்...அதனால்தான்..அந்தப் பெயரை எனது பதிவிற்கு அப்படியே பயன்படுத்திவிட்டேன்....

அச்சச்சோ கொஞ்சம் பெருசா வந்திடுச்சே பதில்..இது எத்தனை மார்க் கேள்வின்னு வேற தெரியலையே.....!!

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி?


அதற்கு மதராசபட்டினம் திரைப்படமே காரணம்...ஆமாம்...அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அதன் பாதிப்பில் அன்று இரவே, இரவோடு இரவாக எனது வலைப்பதிவைத் துவக்கி...அந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதி வெளியிட்டேன்...

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

பதிவை வெளியிட்டவுடனேயே திரட்டிகளில் அதனை வெளியிடுவேன்...நேரம் கிடைக்கும் போதெல்லாம்..பதிவுலக நண்பர்களின் படைப்புகளைப் படித்து அவர்களுக்கு பின்னூட்டம் இடுவேன் (இதனை நான் பிரபலமடையனும்ங்கற காரணத்துக்காக செய்யலை...ஆனா..இதனால என் வலைப்பதிவு பிரபலம் அடையுதுங்கறது...உண்மை).

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

சொந்த விஷயங்கள் சிலது பகிர்ந்துக்கனும்னு எண்ணம் இருக்கு...இப்பதான வந்திருக்கேன்...கொஞ்சம் என்னைப்பற்றிய இயல்பான விசயங்கள் நண்பர்களுக்குப் புரிந்த பிறகு எழுதினால் அது சரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறேன்...

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நண்பர்களைச் சம்பாதிப்பதற்காகவும்.....எனது எழுத்துக்கான அங்கீகாரத்திற்காகவும்.....

நமது எழுத்துக்களை...உலகெங்கிலும் இருக்கும் தமிழர்கள் வந்து படிக்கிறார்கள் அவர்களது கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியான விசயம் இல்லையா......

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

பல வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்கள் என் சொந்தக்காரர்களாக இப்போது ஆகிவிட்டார்கள்..அதனால் அவர்களின் பதிவுகள் எல்லாம் என் சொந்தம்தான்......ஆனால் எனக்கு ஒரே ஒரு வலைப்பதிவுதான்...

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

இந்த கேள்வி எனக்குப் புரியவே இல்லைங்களே....என்ன கேக்கறீங்க நீங்க...(!!!!!!!)

(பத்துக்கு ஒன்பது கேள்விக்கு சரியான வடை சாரி விடை கொடுத்தாலே ஜாக்பாட் கிடைச்சுடுமான்னு வேற தெரியலையே....)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்பு கொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..


படைப்பாளி என்ற பதிவர்தான் என் முதல் பதிவான மதராசபட்டினம் விமர்சனத்தைப் பாராட்டினார்...அவர் Wordpress இல் வலைப்பதிவு வைத்திருக்கிறார்... "அருமையான விமர்சனம் நண்பா..." என ரத்தினச் சுருக்கமாகப் பாராட்டி இருந்தார்...எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது...அப்புறம் நிறைய பேர் என் பதிவுக்கு வந்து என்னைப் பாராட்டுகிறார்கள்..திட்டுகிறார்கள்....ஹே நானும் பதிவர்தான்...நானும் பதிவர்தான்னு கத்திக்கிட்டே..பதிவுலக ஜீப்ல தொத்திக்கிட்டேன்...

10. கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என்னைப்பற்றி நானே சொன்னால் நல்லா இருக்காதுங்க...ஆனா...நான் பதிவரா இருந்தா..என் மரணத்துக்குப் பிறகும் உலகுக்கு என்னைப்பற்றி யாருக்கேனும் தெரியும்....என் எழுத்துக்களை எனக்குப் பிறகும் யாரேனும் படிப்பார்கள்..குறைந்த பட்சம் என் சந்ததியினராவது......என் வலைப்பதிவைப் படித்து என்னைப்பற்றி புரிந்து கொள்வார்கள், மகிழ்வார்கள்....என்ற நினைப்பிலேயே நான் பதிவை எழுதுகிறேன்....

இந்தப் பதிவைத் தொடர்வதற்கு நண்பர் பதிவுலகில் பாபுவை பிரியமுடன் அழைக்கிறேன்...

வாய்ப்பளித்த நல் உள்ளத்துக்கு மீண்டும் நன்றி கூறி வடை சாரி விடைபெறுகிறேன்..நன்றி வணக்கம்.....

இப்படிக்கு

பிரியமுடன்
ரமேஷ்


Sunday, August 22, 2010

ப்ளாக்கரில் தேதி தெரியவில்லையா?

நமது வலைப்பதிவில் நமக்கான தீம்களை மாற்றிக்கொள்ளும் வகையில் பல டிசைன்களை பல வலைத்தளங்கள் இலவசமாகவே அளிக்கின்றன.....அதில் இருப்பதிலேயே சூப்பரா ஒரு டிசைன நாமூம் தேர்ந்தெடுத்துடுவோம்...ஆனால்..

சாமி வரம் கொடுத்தும் பூசாரி வரம் கொடுக்கலைங்கற கணக்கா...அதுல எல்லாமே வேலை செய்யும் ஆனா..நம்ம பதிவோட தேதி மட்டும்..."Undefined" அப்படின்னு காமிச்சு நம்மள கடுப்பேத்தும்...மனசே இல்லாம...அப்புறம்..சுமாரா இருக்கற (அந்த நேரம் பாத்து சரியா வேலை செய்யாத அந்த டிசைன தவிர மத்தது எல்லாமே சுமாரா இருக்கற மாதிரியே நம்ம மனசுக்கு தோனித்தொலைக்கும்!), தேதி கரெக்டா தெரியற ஒரு டிசைன தேர்ந்தெடுத்து..விருப்பமே இல்லாம பயன்படுத்துவோம்....

நமக்கு புடிச்ச டிசைன் தீம்ல இந்த எர்ரர சரி பண்றதுக்கு சுலபமான ஒரு வழி இருக்கு...அது என்னன்னு இப்ப பாப்போம் வாங்க....

http://www.blogger.com/ ஓப்பன் பண்ணி உங்க லாகின பண்ணுங்க...

அப்புறம் அதுல Settings போயி Formatting போங்க...அங்க போய் Date Header Format, Archive Index Date Format அப்புறம் Timestamp Format இந்த மூனையும் கீழ இருக்கற   படத்துல இருக்கற ஃபார்மேட் மாதிரி மாத்துங்க...

மாத்தீட்டீங்களா...இப்ப Save settings பண்ணுங்க...அவலோதான்...இப்ப போய் நம்ம வலைத்தளத்த திறந்து பாருங்க......
இவ்லோதாங்க மேட்டர்.....இப்ப உங்களுக்கு புடிச்ச டிசைன உங்க வலைத்தளத்துக்கு அமைச்சு சந்தோசமா இருங்க.....

Friday, August 20, 2010

மருத்துவரும் நானும்..

நீயா? நானா? - மருத்துவர்களும் நாமும்.. என்ற தலைப்பில் நீயா? நானா? நிகழ்ச்சி குறித்து நான் எழுதியிருந்த பதிவிற்கு புருனோ என்ற மருத்துவர் பின்னூட்டம் அனுப்பி இருந்தார்..இருவருக்கும் நடந்த விவாதங்களை உங்கள் பார்வைக்கும் கொடுக்க நினைக்கிறேன்....இனி அதைப் பார்ப்போம்...

Blogger புருனோ Bruno said...

 //உண்மையில் நமக்குத் தெரிந்து எத்தனை மருத்துவர்கள் நோயாளியின் பிரச்சினையை முழுமையாகக் கேட்கின்றனர்? //

அனைவரும்.

ஆனால் எத்தனை நோயாளிகள் மருத்துவர் கூறுவதை முழுவதும் கேட்கிறார்கள் என்றால் அது 10 சதத்திற்கும் குறைவு
20 August 2010 7:27 AM

நான்:

வருகைக்கு நன்றி புருனோ..நீங்கள் அனுப்பிய லிங்க் படித்தேன்...கிராமப்புறங்களில் (ஏன்? நகர்ப்புறங்களிலும் கூட) பொதுமக்கள் இவ்வாறு நடந்து கொள்வதும் இயல்பாகவே நடக்கக்கூடிய ஒன்றுதான்..நீங்கள்தான் அவர்களுக்கு புரிய வைத்திருக்க வேண்டும் (வைட்டமின் இஞ்ஜக்சனை போடுவதற்கு முன்பே). அதை விட்டு விட்டு...அவருக்கு ஊசி குத்தினால்தான் சேட்டிஸ்ஃபேக்சன் என்பதற்காக ஒரு வைட்டமின் ஊசியைப் போட்டேன்...என்பது எந்தளவில் சரி...நோயாளியின் பிரச்சினையை எத்தனை மருத்துவர்கள் முழுமையாக கேட்கின்றனர்? என்ற கேள்விக்கு...அனைவரும் என்ற உங்களது ஒற்றை வார்த்தை பதில் நிச்சயம் ஏற்புடையதல்ல..என்பது...உங்களுக்கும் நன்றாகவே தெரியும்..நல்ல மருத்துவர்கள் நிச்சயம் இருக்கிறீர்கள் மறுக்கவில்லை...ஆனால்..எல்லோரும் அப்படித்தான் இருக்கிறோம் என்று சொல்வது..முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் வேலை..மருத்துவர்களின் தவறுகளினால், அலட்சியத்தினால் உயிரிழந்த கதைகளை, உறுப்பிழந்த கதைகளை, அறுவை சிகிச்சை உபகரணங்களை வயிற்றில் வைத்து தைத்துவிடும் கதைகளை நாம் தினம் தினம் காண்கிறோம்..அதனால் அந்த லிங்குகளை எல்லாம்..நான் உங்களுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்.

Blogger  புருனோ Bruno said...

மருத்துவர் மீது அவநம்பிக்கையுடன் இருப்பவருக்கு எப்படி புரிய வைப்பது

ஒரே நாளில் அனைவருக்கும் புரிய வைக்க முடியாது. தொடர்ந்து முயற்சி நடந்து கொண்டு தானிருக்கிறது. இன்று புரிந்தவர்களுக்கு மாத்திரை, இன்று புரியாதவர்களுக்கு மாத்திரை + ஊசி.

ஆனால் முயற்சி தொடரும்

இன்று புரியாதவர் நாளை புரிந்து கொண்டால் அவருக்கு ஊசி நிறுத்தப்படும்

வேண்டுமென்றால் நீங்கள் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து ஒரு ஐந்து பேருக்கு புரிய வைத்து

அனைவருக்கும் ஒரே நாளில் எப்படி புரிய வைப்பது என்று சொல்லி தாருங்கள்

ஆனால் ஒரு மருத்துவர் முழுமையாக கேட்டபின்னரும், ஊசி தான் வேண்டும் என்று அடம்பிடிப்பவரிடம் ஒவ்வொரு முறையும் முழுவதும் கேட்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது

//மருத்துவர்களின் தவறுகளினால், அலட்சியத்தினால் உயிரிழந்த கதைகளை, உறுப்பிழந்த கதைகளை, அறுவை சிகிச்சை உபகரணங்களை வயிற்றில் வைத்து தைத்துவிடும் கதைகளை நாம் தினம் தினம் காண்கிறோம்..அதனால் அந்த லிங்குகளை எல்லாம்..நான் உங்களுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்.//

தவறு நடக்கிறது
அது 1 சதத்திற்கும் குறைவே

ஆனால் அனைவரையும் குற்றம் சாட்டு போக்கு தான் இருக்கிறது. இதை நீங்கள் மறுக்கிறீர்களா

அதை தவிர தவறு செய்யாவிட்டாலும் குற்றம் சாட்டும் போக்கு இருக்கிறது. இது ஏன். இதை நீங்கள் ஏன் எதிர்க்க மறுக்கிறீர்கள்

இப்படி அனுப்பி இருக்கிறார்..இதற்கு நான் அளிக்க நினைத்த பதில் கீழே...

மருத்துவர்கள் மீதான நம்பிக்கையை மருத்துவர்கள்தான் ஏற்படுத்த வேண்டும் புருனோ அவர்களே...அதற்கு எங்களைக் கூப்பிடுவது எப்படி நியாயமாகும். நன்றாக பணிபுரியும் உங்கள் மீதும் நம்பிக்கை இல்லாமல் போவதற்கும் சில மோசமான மருத்துவர்களே காரணம்..அந்த காலத்தில் மருத்துவர்கள் என்ன சொன்னாலும் சரி என்று நம்புவார்கள்..இப்போது அப்படியா..என்னுடைய தாயாருக்கு உடல் நலம் குன்றிய போது சேலத்தில் ஒரு மருத்துவரைப் பார்த்தோம். அவர்கள் கொடுத்த மாத்திரையில் எந்த பலனும் இல்லை...பின்னர் ஓரிரு நாட்களில் பெங்களூர் வரவேண்டி இருந்ததால் வந்துவிட்டோம்..இங்கு வந்து..குணமாகாததால் இன்னொரு மருத்துவரைப் பார்த்தோம்...சேலத்து மருத்துவர் கொடுத்த பிரிஸ்கிரிப்சனையும் எடுத்துச் சென்றோம்..அதனைப் பார்த்த அவர்..எந்த டாக்டர்கிட்ட போனீங்க..அவர் எழுதிக்கொடுத்த மருந்தே தப்பு...இதற்கு இந்த மருந்தெல்லாம்..எழுதக்கூடாதே...என்று கிலி ஏற்படுத்திவிட்டு..பின்னர் வைத்தியம் பார்த்தார்..சரி ஆகிவிட்டது...ஒரு மருத்துவருக்கு இன்னொரு மருத்துவரே எதிரியாக இருக்கிறார். இப்படி இருந்தால் எப்படி மருத்துவர்கள் மேல் நம்பிக்கை ஏற்படும்...மக்கள் தொகை அதிகம் இருக்கும் ஒரு தேசத்தில் உங்கள் பாடு திண்டாட்டம்தான்..ஆனால் இந்தியாவில் மருத்துவர்கள் எண்ணிக்கையும் ஒன்றும் குறைவில்லை என்பதையும் மறுக்க முடியாது இல்லையா...

புரியாதவர்களுக்கு மாத்திரை + ஊசி...என்கிறீர்கள்..ஊசி போட்ட பிறகு எதற்கு மாத்திரை என்று அதனைப் பயன்படுத்தத் தேவையில்லை என்ற எண்ணத்தில் பொதுமக்கள் இருக்கும் போது...உங்களது இந்த வைத்தியத்தினால் என்ன பலன் என்று சொல்லுங்கள்...பொதுமக்கள் புரிந்து கொள்ளவில்லை என்ற காரணத்தை வைத்து நீங்கள் செய்வதை நியாயப்படுத்தாதீர்கள்.

மருத்துவர் தவறு செய்யாவிட்டாலும் அவர் மீது குற்றம் சாட்டுவது நிச்சயம் தவறுதான் ஏற்றுக்கொள்கிறேன்..உங்கள் பாணியில் பதில் சொல்ல வேண்டுமானால் இவ்வாறு நடப்பதற்கான வாய்ப்பு ஒரு சதத்திற்கும் குறைவே..இல்லையா...தவறு நடக்கிறது ஆனால் அது 1 சதத்திற்கும் குறைவே என்று சொல்லி இருக்கிறீர்கள். மருத்துவரின் தவறினால் நூறில் ஒருவர்தானே இறக்கிறார்...அதனால் என்ன பரவாயில்லை என்கிறீர்களா...

Wednesday, August 18, 2010

நித்திய சேகரானந்தா.....


நித்தியானந்தாவின் திடீர் தீவிர பக்தர் ஆகியிருக்கும் எஸ்.வி. சேகரின் பேட்டியை ஒரு வார இதழில் படிக்க நேர்ந்தது...

அவரு பெங்களூருக்கு ஒரு நாடகத்துக்காக வந்திருந்தாராம் (நானும் பெங்களூருதான்). அப்ப அவருக்கு தொண்டைல பிரச்சினை வந்துச்சாம்..உடனே நித்தியானந்தா ஞாபகம் வந்துச்சாம்...அவரை ஏன் இப்படி துரத்துறாங்களோ தெரியலையே? அப்படின்னு அவரு மேல பரிதாபம் வந்துச்சாம்...பாவம் இந்த மேட்டர் சன் பிக்சர்ஸ் பட விளம்பரம் ரேஞ்சுக்கு (படம் ரேஞ்சுக்கு இல்ல) ஓடனப்ப இவரு பாக்கலை போல இருக்கு...ஏன்னே தெரியலைன்னு வருத்தப்படறாரு....

உடனே அவர போய் பாத்தாராம்...அவரு தொண்டைல (!!!!!!!) திருநீறு வெச்சு எதோ பிரார்த்தனை பண்ணாராம்...என்ன ஆச்சரியம் உடனே சரி ஆயிடுச்சாம்...

என்னாங்க சார் கூத்தடிக்கறீங்க...கடவுள் நம்பிக்கைக்கு..இந்த மாதிரி ஆசாமிங்க நம்பிக்கைக்கும் நிறைய வேறுபாடு இருக்கு...இப்ப கூட அவருக்கு சக்தி இருக்கறதாலதான்..இவ்வளவு பிரச்சினைக்கு அப்புறமும் வெளிய வந்துட்டாருன்னு..யாராவது சொல்ல வந்தீங்கன்னா தயவு செஞ்சு புரிஞ்சுக்கங்க..அவருக்கிட்ட இப்ப இருக்கற ஆற்றல்.. கோடிக்கணக்குல இருக்கற பணம்...

இதுல சைக்கிள் கேப்ல அவர விமர்சிக்கறவங்களை பயமுறுத்தவும் ட்ரை பன்றார் இந்த எஸ்.வி சேகர்..

சங்கராச்சாரியாரை கைது செய்தவர்களுக்கு ஒருவருக்கு கிட்னி ஃபெயிலியர் ஆயிடுச்சாம், ரெண்டு பேரு கை விளங்காம போயிட்டாங்களாம்...
எப்படி பயமுறுத்தறாரு பாருங்க....

அப்புறம் அந்த நடிகை ரஞ்சிதாவே இல்லையாம்..உலகத்துல ஒரே மாதிரி 7 பேரு இருப்பாங்களாம்...மீதி இருக்கற 6 பேத்துல ஒருத்தராம் அவர்...ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பா...முடியலை......

அடுத்து அவர் சொன்னதுதான் பயங்கர காமெடி நித்தியானந்தாவின் புத்தகங்களை வாங்கி அட்டைப்படத்தைக் கிழித்துவிட்டு படித்துப் பார்க்கனுமாம்....அது என்ன சரோஜா தேவி புத்தகமா அட்டைப்படத்தைக் கிழிச்சுட்டு புக்குக்குல்ல ஒழிச்சு வைச்சுப் படிக்க.....இவரு நித்தியானந்தாவுக்கு சப்போர்ட் பன்றாரா...கிண்டல் பன்றாராங்கறதையே வேற மறந்திட்டாரு போல...(இப்ப தமிழக அரசியல்ல....எந்த கட்சில இருக்கம்னே தெரியாம இருக்காறே...அப்படி)

நித்தியானந்தாவுக்கு எதிரான சதி..கடவுள் நம்பிக்கையுள்ள இந்துக்களுக்கு எதிரான சதியாம்....மதத்திற்கு எதிரான செயலாம்.....

ஐயா நானும் கடவுள் நம்பிக்கை உள்ளவன்தான்... மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் அவர்கள் சார்ந்த மதத்து மேல நிச்சயம் நல்ல மதிப்பு இருக்கும் அல்லது மத நம்பிக்கை இல்லைன்னு சொல்றவங்களுக்கு அவங்களோட கொள்கை மீது மிகுந்த நம்பிக்கை இருக்கும்....இரண்டும் ஒன்னுதாங்கறது என் கருத்து....அப்படி நான் பிறந்த இந்து மதத்தின் மீது எனக்கு ஒரு நல்ல மதிப்பு இருக்கிறது.....தயவு செய்து...இப்படி புறம்போக்கு (நில) சாமியார்களையெல்லாம்...இந்து மதத்தின் பிரதிநிதிகளாக சித்தரித்து இந்து மதத்தை கேவலப்படுத்தாதீர்கள்...இந்து மதத்தை கேவலப்படுத்துவது....இது போன்ற ஆட்களை எதிர்ப்பவர்கள் அல்ல..இது போன்ற சாமியார்களையும் கூட ஆதரித்து பேசும் நீங்கள்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்...


Tuesday, August 17, 2010

ஒரு ரூபாய்க்கு திரைப்படம்!!!

  சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் இலவசமா வழங்கப்படும்னு நம்ம முதல்வர் கருணாநிதி அவர்கள் சுதந்திர தின உரையில் வெளியிட்ட அறிவுப்புகள்ல அறிவிச்சிருக்காரு....

சில ஆண்டுகள்  பின்னாடி போய் பாத்தம்னா...

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தர ஆரம்பிச்சு..மக்கள் வயித்துல பால வார்த்தாரு முதல்வர்...மக்கள் வயித்துல ஊத்துன பால் மட்டும் இல்ல அது, விவசாயிகள் வாயில ஊத்துன பாலும் கூட.
கஸ்டப்பட்டு வியர்வையை இரத்தமா ஓடவிட்டு...வேலை செஞ்சா..அதுக்கு மதிப்பே இல்லை..ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோன்னா...அவங்களோட உழைப்புக்கு எல்லாம்..என்னங்க மதிப்பு இருக்கு.....அசலை விட கம்மியா ஒருத்தன் விக்கனும்னா..அவன் எவ்வளோ கஷ்டப்படுவான்...கிட்டத்தட்ட விவசாயிங்ககிட்ட இருந்து அதை அடிச்சுப் புடுங்கறாங்கன்னு என்னோட விவசாயி நண்பன் ஒருத்தன் புலம்பினான். ஒருத்தன் வயித்துல அடிச்சு அடுத்தவனுக்கு கொடுத்து... இப்படி ஒரு நல்ல பேரு தேவையா.....

ஏன் இவங்க எடுக்கற படத்துக்கு ஒரு ரூபாய் வாங்கிக்கிட்டு ஜனங்களுக்குக் காட்டச் சொல்லுங்க பாப்போம் செய்றாங்களான்னு...

ஆனா இப்ப தேர்தல் வந்திடுச்சே..விவசாயிங்களுக்கு எல்லாம்..எதாவது செஞ்சாதான அவங்க ஓட்டு விழும்னு...இப்ப பம்பு செட்டு இலவசமாம்...

நல்ல நிலையில இருந்த ஒரு விவசாயிய நீங்களே ஏழை விவசாயியா மாத்திடுவீங்க..அப்புறம் அவன் ஏழையா இருக்கான்னு அவனுக்கு தேர்தல் நேரத்துல இலவசமா கொடுப்பீங்களா....

இலவசம், மலிவு விலை, ஜனங்களுக்கு சலுகைங்கற பேர்ல....நம்ம நாட்ல நடக்குற கொடுமை மாதிரி வேற எங்கயும் நடக்காதுங்க....


Monday, August 16, 2010

பேருந்தில் நீ எனக்கு.......



நம்மள்ள பெரும்பாலானோருக்கு நம்ம சின்ன வயசுல பயணம்னாலே குஷியான ஒரு விசயமாதான் இருந்திருக்கும் இல்லீங்களா...அதுவும் என்னைப் பொறுத்தவரைக்கும் ஜன்னலோர இருக்கையும், மெதுவாவும் ஓட்டாம வேகமாவும் ஓட்டாம மிதமான வேகத்துல ஓட்டத் தெரிஞ்ச ஓட்டுனரும் அப்புறம் அந்த பேருந்துல நல்ல சவுண்ட் சிஸ்டமும் இருந்திட்டா...அந்தப் பயணம் எனக்கு ரொம்ப இனிமையான பயணமா இருக்கும்...நம்ம வீட்ல கேக்கறதைவிட துல்லியமான தரத்தோட அந்த பேருந்துல பாடல்களை கேட்டுக்கிட்டே சாலையோரம் வேடிக்கை பார்த்துக்கிட்டே டிராவல் பண்றது இருக்கே...அது ஒரு வித்தியாசமான சுகம்ங்க...இப்ப இதை எழுதும்போது கூட அந்த சுகத்தை என்னால உணர முடியுது....

ஆனா இப்ப சமீப நாட்கள்ல பயணங்களின் போது அந்த சுகத்தை நாம முற்றிலும் இழந்திட்டோம்னுதான் சொல்லுவேன்..அதுக்குக் காரணம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி. இந்த ஜந்து இணைக்கப்பட்ட பேருந்துகள் வந்த பிறகு சுகமான பயணம் கிட்டத்தட்ட சோகமான பயணமா மாறி, இப்ப எரிச்சலான பயணமாவும் மாறிடுச்சு இல்லீங்களா...தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத பேருந்துகளாக கிடைக்குமா என மனசு தேட ஆரம்பிச்சிடுச்சி...ஆனா இப்ப தொலைக்காட்சி இல்லாத பேருந்துகள் ''தேடினாலும் கிடைக்காது'' நிலைதான்..நூறு பேருந்துகள்ள ஐந்து பேருந்துகள்ல தொலைக்காட்சிப் பெட்டி இல்லாம இருந்தா அதிசயம்.....

அதுவும் நான் அடிக்கடி சேலத்துல இருந்து பெங்களூருக்கு பயணம் செய்பவன்...இந்த ரூட்ல வர பேருந்து நடத்துனர்களுக்கு டிராவல் பன்ற ஜனங்க மேல என்ன கோபமோ.....அவங்க போடற படம்லாம்...பயங்கரமா இருக்கும். நீங்களும் இந்த ரூட்ல அடிக்கடி டிராவல் பன்ற நபரா இருந்தா நீங்களும் அந்தக் கொடுமைய அனுபவிச்சிருப்பீங்க. அவங்க போடற படம்லாம்...எதுன்னு கேட்டீங்கன்னா நீங்க தெரிச்சு ஓடிடுவீங்க........இளைய தளபதி விஜய் அவர்களின் மதுர, திருப்பாச்சி அப்புறம் புரட்சித் தளபதி விஷால் அவர்களின் திமிரு, இந்த மூனு படங்களையே சலைக்காம திரும்பத் திரும்ப போட்டு சாவடிப்பாங்க......வாரா வாரம் ஊருக்கு போயிட்டு வர என்னை மாதிரி ஆளுங்க எல்லாம் ரொம்ப பாவம்ங்க....இந்த படத்தோட டைட்டில் போடும் போது யார் யார் மூஞ்செல்லாம் கொலை வெறியோட மாறுதோ அவங்கெல்லாம் ரெகுலரா அந்த ரூட்ல வர்ரவங்கன்னு சொல்லிடலாம் நீங்க...அவளோ பட்டுருக்கம் நாங்க....ஆனா இந்தக் கொடுமை எல்லாம் ஒரு ரெண்டு வருசம் முன்னாடிதான்..இப்ப அந்தக் கொடுமை இல்ல...அதாவது அரசுப் பேருந்துகள்ள...இப்பல்லாம்...பூம் டீவின்னு ஒன்னு வந்திருக்கு...அது வந்த பிறகு....அப்பாடா...மேற்கண்ட படங்கள்ள இருந்து இத்தனை வருசம் கழிச்சு ஒரு வழியா தப்பிச்சம்டா சாமி..அப்படின்னு சந்தோசப்பட்டேன்.

ஆனா யாரோட சந்தோசம்தான் நீடிச்சிருக்கு இந்த உலகத்துல சொல்லுங்க....இப்ப அதுவும் அதோட வேலைய காட்ட ஆரம்பிச்சிடுச்சி..............இந்த பூம் டிவியும் போட்ட படத்தையே திரும்பப் போடறது....இல்லன்னா போட்ட பாடல்களையே திரும்ப போடறது....அப்படின்னு போயிட்டிருக்கு....அதுலயும் அந்த டிவில அடிக்கடி....நம்ம ஊர்வசி நாகாவுக்காக உப்புமா கிண்டிட்டு வந்திர்ராங்க, நம்ம நாசர் உலகத்தரத்திற்கான உன்னத தயாரிப்புன்னு அசத்தபோவது யாரு காஸ்ட்யூம்ல ஒரு கம்பிய தூக்கிட்டு வந்திடறாரு....பார்வைக் குறைபாடால என் பார்வை மங்கனப்போன்னு ஒரு பாட்டிம்மா வந்திடுது....பப்பாளிப்பழத்தத் துக்கிக்கிட்டு நம்ம தமன்னா வந்திடறாங்க...வீட்ல எல்லாருக்கும் ஒரே மருந்தான முஸ்லி பவர் எக்ஸ்ட்ராவ தூக்கிட்டு ஜாக்கி செராஃப் வந்திடுறாரு....இந்த விளம்பரதாரர்கள் மட்டும்தான் அங்க நிரந்தர காண்ட்ராக்ட் போல...இதுங்க மட்டும்தான் திரும்ப திரும்ப வரும்....நாலரை மணி நேரம் டிராவல் பன்றதுக்குள்ள இந்த விளம்பரங்கள் ஒவ்வொன்னையும் தலா 20, 25 தடவையாவது பாத்தே ஆகனும் நாம...

மேற்கண்ட படங்கள்ட்ட இருந்து காப்பாத்த பூம் டிவி வந்தது...இப்ப இதுக்கிட்ட இருந்து காப்பாத்த யார் வருவாங்கன்னு தெரியலை....இதுல நேத்து என்ன ஆச்சுன்னா....மழைப்பாடல்களை எல்லாம் சேத்து வரிசையா ஒளிபரப்பிட்டு இருந்தாங்க...மழைப்பாடல்கள்னா கேக்கனுமா என்ன...எல்லாம்...நம்ம மிட் நைட் மசாலா டைப் பாட்டுதான்..அப்புறம் கொஞ்ச நேரத்துல பழைய பாட்டு ஒன்னு வந்திச்சு...அப்பாடான்னு கொஞ்சம் நிம்மதியானேன்..அடுத்த பாட்லயே..அந்த கால ஸ்ரீதேவி வந்து...அட போனா போகுது புடவை பறக்குது புடிச்சுக்கன்னு...பாட ஆரம்பிச்சு நம்ம ரஜினியை மூடு ஏத்த முயற்சி பண்ணிட்டு இருந்தாங்க.....எவ்வளவு கூச்சப்பட வைக்கிற மாதிரி காட்சிக்கும் நம்ம மக்கள் இப்பல்லாம் கவலையேபடாம, அசராம பாக்கறாங்க.....(உபயம்: தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகள்) இதுல சில ரசிகர்கள் சவுண்ட் அதிகம் வைக்கச்சொல்லி சவுண்ட் கொடுத்தாங்க...உடனே நம்ம ஆபரேட்டர் (நடத்துனர்) வந்து சவுண்ட் ஜாஸ்தியா வச்சிட்டு போனாரு....கொஞ்ச நேரத்துல நம்ம பிராசாந்த், மதுபாலா, சிவரஞ்சனி, சுஜாதா நடிச்ச செந்தமிழ் செல்வன்னு ஒரு படம் போட்டாங்க....தாங்கலைடா சாமி........எப்படி எல்லாம் படம் எடுத்து வச்சிருக்காங்களேன்னு...கவலையா போச்சு எனக்கு.....சேலம் போனவுடனே முஸ்லி பவர் எக்ஸ்ட்ரா வாங்கி இந்த டிராவல்ல இழந்த சக்திகளைத் திரும்பப் பெறனும்னு நினைச்சிக்கிட்டேன்...அந்த அளவுக்கு பிராணன வாங்கிடறாங்க....த நெக்ஸ்ட் பிக் மீடியா என்னவா இருக்கும்னு இப்பவே பயம் வந்திடுச்சுங்க...


Tuesday, August 10, 2010

பேனிக் ரூம் - திரை விமர்சனம்


அமெரிக்க திரில்லர் பட இயக்குனர் டேவிட் ஃபிஞ்சரின் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான ஆங்கிலத்திரைப்படம் Panic Room. நேற்று எதேச்சையாக இந்தப்படத்தைப் பார்த்தேன். ரொம்ப நார்மலான மூவியாதான் ஆரம்பிக்கும்..அப்புறம் போகப் போக..............பயங்கர விறுவிறுப்பு...

சமீபத்தில் விவாகரத்தான மெக் ஆல்ட்மேன் (ஜூடி ஃபோஸ்ட்டர்) என்ற பெண்மணியும் அவரது 11 வயது மகள் சாராவும் புதிதாக ஒரு பெரிய வீட்டை வாங்குவதற்காக வந்து பார்ப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது படம். அந்தப் பெரிய வீட்டில் அவசர காலத்தில் பாதுகாப்பாக இருப்பதற்காக ஒரு இரகசிய அறை இருக்கும். அந்த அறைக்குள் யாரும் உள் நுழைய முடியாதபடி அமைப்புகள் இருக்கின்றன. மேலும் வீட்டில் உள்ள அனைத்து பகுதிகளையும் அங்கிருந்தே கண்காணிக்கும் வகையில் வீடியோ சர்வைலன்ஸ் வசதியும் அதில் இணைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்குள் உள்ளே யாராவது நுழைந்துவிட்டால் உள்ளே இருப்பவர்கள் நினைத்தால் மட்டுமே அதனைத் திறந்து வெளியே வர முடியும்..வெளியே இருந்து யாரும் உள்ளே நுழைவதற்கு எந்த வழியும் இல்லை.

அந்த இரகசிய அறைக்காகவே அவர்களுக்கு அந்தப் பெரிய வீடு பிடித்து விடுகிறது.. உடனே அதனை வாங்கி குடியேறி விடுகின்றனர். அவர்களுக்கான பிரச்சினை அடுத்த நாள் தூங்கி எழுவதற்கு முன்னரே காத்திருக்கிறது. அதிகாலையில் மூன்று கொள்ளையர்கள் அந்தப் பெரிய வீட்டில் இருக்கும் விலை மதிக்க முடியாத சொத்துக்களைக் கொள்ளை அடிப்பதற்காக வீட்டுக்குள் நுழைந்துவிடுகின்றனர். அந்த மூவரில் ஒருவன் அந்த வீட்டை வடிவமைத்தவன். அவனுக்கு அந்த இரகசிய அறை உட்பட அனைத்து பகுதிகளும் நன்கு தெரியும். அவர்கள் தேடி வந்த விலை மதிக்க முடியாத சொத்து இருப்பதும் அந்த இரகசிய அறைக்குள்தான்.



கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து விட்டார்கள் என்பதை அறிந்த மெக் ஆல்ட்மேன் சமயோகிதமாக செயல்பட்டு தன் மகளுடன் அந்த அறைக்குள் நுழைந்து விடுகிறார். கொள்ளையர்கள் அந்த அறையை எப்படி திறக்க வைக்கின்றனர். அவர்களிடம் இருந்து அம்மாவும் மகளும் தப்பினார்களா என்பதை மிகவும் விருவிருப்பாகச் சொல்லி இருக்கின்றனர்.

அதுவும் மெக் ஆல்ட்மேன் போலீசுக்குத் தகவல் தெரிவிப்பதற்காக தனது செல்போனைத் தேடுவார்...அப்போதுதான் அது அந்த அறைக்கு வெளியே விட்டு வந்ததை உணர்வார்....உடனே வீடியோ சர்வைலன்ஸைப் பார்த்து கொள்ளையர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு....செல் போனை வெளியே சென்று எடுத்துக்கொண்டு மீண்டும் அந்த அறைக்குத் திரும்புவார் பாருங்கள்......விருவிருப்பின் உச்சகட்டம் அந்தக் காட்சி.. நான் மிகவும் இரசித்துப் பார்த்த காட்சி அது. அவ்வளவு கஸ்டப்பட்டு செல்போனை எடுத்து வந்த பிறகு பார்த்தால்..அந்த அறைக்குள் சிக்னல் கிடைக்காது. வேறு என்ன செய்யலாம் என தாயும் மகளும் குழம்பிக்கொண்டிருப்பர். என்ன செய்யப் போகிறார்கள் என்று நாமும் அவர்களோடே சேர்ந்து யோசித்துக் கொண்டிருப்போம்...

இதற்கிடையே அந்த 11 வயது சிறுமிக்கு கடுமையான நீரிழிவு நோய் இருக்கும்.....சில மணி நேரங்களுக்கு ஒரு முறை போட வேண்டிய ஊசி மருந்தைப் போடவில்லை என்றால்..அவர் கோமா நிலைக்கு சென்று இறந்துவிடவும் வாய்ப்புண்டு...நேரம் அதிகமானதால் அந்தச் சிறுமி சிறிது சிறிதாக அபாயகட்டத்தை அடைந்துவிடுவார்....அவர் பிழைத்தாரா?....அந்தக் கொள்ளையர்கள் தேடி வந்த பொருள் என்ன? அதனை அவர்கள் அடைந்தார்களா? என்பதை அறிய வாய்ப்பு கிடைத்தால் இந்தப் படத்தைப் பாருங்கள்....

ஒரே வீட்டுக்குள் ஒரே இரவில் நடக்கும் கதை என்றாலும் விறுவிறுப்புக்கு சிறிதும் பஞ்சமில்லை. விறுவிறுப்பான படம் பார்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இந்தப் படத்தை நிச்சயம் பார்க்கலாம்.....



Friday, August 06, 2010

கண்களின் மொழி






இன்று, முதன் முதலாய்
வார்த்தையில்லா
கவிதை படித்தேன்...
என்னவளின் சினுங்கல்கள்!

அவளைப் பார்க்கும் முன்வரை
என் இதயத்துடிப்பை
நான் உணர்ந்ததில்லை...

இப்போது என் நெஞ்சில்
கை வைத்தால்
உணர்கிறேன்..
அவளது இதயத்துடிப்பை!

படபடக்கும் அவள் கண்கள்
பேசும் மொழி புரிந்தால்
எழுதிவிடுவேன்..
அவளுக்கான கவிதையை
அந்த மொழியிலேயே!

Monday, August 02, 2010

நீயா? நானா? - மருத்துவர்களும் நாமும்..



1.8.2010 அன்று எதேச்சையாக விஜய் டிவியில் நீயா? நானா? நிகழ்ச்சியைப் பார்க்க நேரிட்டது. அன்றைய விவாதம் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்டது. அதில் பேசப்பட்ட கருத்துக்களில் சில:

2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட இரண்டரை இலட்சம் விவசாயிகளில் 50 சதவிதத்தினர் மருத்துவச் செலவினைத் தாக்குபிடிக்க முடியாமல் தற்கொலை செய்திருக்கின்றனர் என்று பொதுமக்கள் தரப்பில் இருந்த ஒரு ஆய்வாளர் கூறினார்.

இதற்கு ஒரு மருத்துவரின் பதில், அவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்களில் தமிழகத்துக்கு நான்காவது இடமாம். அதாவது மற்ற மாநிலங்களைவிட நம் மாநிலத்தில் இறந்தவர்கள் குறைவாம் அவ்வாறு குறைவான நபர்களே இறந்ததற்கு மருத்துவர்களே காரணமாம். அதாவது 10 பேர் மருத்துவச்செலவு தாக்குப்பிடிக்க முடியாமல் தற்கொலை செய்திருக்கிறார்கள் என்று சொன்னால்...இல்லை இல்லை...மொத்தம் 12 பேர்...இரண்டு பேரை நாங்கள் சிகிச்சை அளித்து காப்பாற்றி விட்டோம்  என்கிறார். எங்கே போய் சொல்வது இதை..இப்படி பொதுவான ஒரு பேச்சிலேயே என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரிந்துகொள்ளாமல் பொறுப்பில்லாமல் பதில் அளிக்கும் அவர் எப்படி நோயாளிகளிடம் பொறுப்புடன் பிரச்சினையைக் கேட்பார் என்று புரியவில்லை.

உண்மையில் நமக்குத் தெரிந்து எத்தனை மருத்துவர்கள் நோயாளியின் பிரச்சினையை முழுமையாகக் கேட்கின்றனர்?

ஒரு மருத்துவர் சொல்கிறார், மருத்துவரை மோசமானவனாக மாற்றுவதே சமூகம்தான். (இது எப்படி இருக்கு?) நோயாளிகள் மருத்துவத்தை அனுபவித்து விட்டு ஏமாற்றிச் சென்றுவிடுகின்றனர் என்று அவரது அனுபவத்தைக் கூறினார். அதாவது அவரது மருத்துவமனையில் மாலை போட்டிருந்த ஒருவர் வைத்தியம் பார்த்துவிட்டு...இப்போது காசு எடுத்துவரவில்லை. நான் மாலை போட்டிருக்கிறேன் பொய் சொல்ல மாட்டேன்..நிச்சயம் நாளை பணம் தந்துவிடுகிறேன். என்று சென்றாராம்..அந்த மனிதர் ஒரு வருடமாக மறுபடியும் திரும்பி வரவே இல்லையாம். இப்படி ஏமாந்த சோனகிரியாக இருந்து விட்டு நாங்கள் ரோட்டில் பிச்சை எடுக்கவா? சேவை செய்யறேன்னு பொய் சொல்லிட்டு அலைய நான் விரும்பவில்லை என்று சொன்னார். மேலும் காய்ச்சல் தலைவலின்னா மட்டும் என்னைப் போன்ற தெருமுனை மருத்துவரிடம் வருகிறீர்கள். பெரிய பிரச்சினை என்றால் ஏன் எங்களை நம்பி வருவதில்லை..பெரிய மருத்துவமனைக்கே செல்கிறீர்கள் நாங்களும் அதே படிப்பைத்தானே படித்திருக்கிறோம்? என்று கேட்கிறார்.

சமூகத்தில் நீங்கள் ஒரு அங்கமாக இருக்க மறுக்கிறீர்கள். நீங்கள் தனித்த அடையாளத்துடன் இருக்கவே விரும்புகிறீர்கள் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
அதற்கு, சமூகம் எங்களை எப்போதும் உற்று நோக்கிக்கொண்டுதான் இருக்கிறது. எங்களுடைய சிறிய தவறுகளும் பெரிதுபடுத்தப்படுகின்றன என்று ஒருவர் பதில் அளித்தார். உண்மையில் கேட்கப்பட்ட கேள்வி ஒவ்வொன்றுக்கும் அவர்கள் அளித்த பதில் இந்த ரீதியில்தான் இருந்தது. கேட்ட கேள்விக்கும் அவர்கள் அளித்த பதில்களுக்கும் முடிந்தவரை தொடர்பில்லாமல் அல்லது கேட்ட கோணத்தை விட்டு விட்டு வேறொரு கோணத்தில் பதில் அளிக்கப்பட்டவையாக இருந்தன..
இது எந்த அளவுக்கு நியாயம் யோசியுங்கள். மருத்துவம் என்ன கிரிக்கெட்டா..ஒரு ஆட்டத்தில் சிறிதாக தவறு செய்துவிட்டாலும் அடுத்த ஆட்டத்தில் சரி செய்து கொள்ளலாம் என்பதற்கு. அது உயிர் விளையாட்டல்லவா.. சிறு தவறுகளும் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடலாம் என்பது ஒரு மருத்துவருக்குத் தெரியாதா? எவ்வளவு அலட்சியமாக பதில் சொல்கிறார் பாருங்கள்!.

இன்னொரு மருத்துவர் சொல்கிறார், நோயாளிகள் பல மருத்துவமனைகளில் கலந்தாலோசித்து எது சிறந்தது என்று தேர்ந்தெடுக்கக் கூடாதாம். நோய் வந்தவுடன் ஒருவரிடம் மட்டுமே சென்று அவர் என்ன சொல்கிறாரோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமாம்.

மருத்துவர்களிடம் இருந்து வாங்கும் கார்..தரமானதாக இருக்கும் என மக்கள் நினைக்கின்றனர். ஏனெனில் அது ஒழுங்காக பராமரிக்கப்பட்டிருக்கும். அந்த அளவுக்கு அவர்கள் வசதி படைத்தவர்கள். என்று ஒருவர் சொன்னார்.

அதற்கு மருத்துவரின் பதில்..ஏனெனில் நாங்கள்...நோயாளிகளையே பார்த்துக்கொண்டிருப்பதால்...எங்களுக்கு காரைப் பயன்படுத்துவதற்கு நேரம் இல்லை..அது பயன்படுத்தாத காராக இருப்பதால் அதை வாங்குவதற்கு அனைவரும் விரும்புகிறார்கள்.....

இதுக்கு என்ன சொல்றதுன்னே சத்தியமா எனக்குத் தெரியலைங்க...

எழுத்தாளர் ஜெய மோகன் அவர்களும் அதில் பங்களித்திருந்தார். அவர் பொதுமக்கள் சார்பில் உணர்ச்சிமயமாக அதே சமயம் நிதானம் இழக்காமல் கேட்ட எந்த கேள்விகளுக்கும் மருத்துவர்களிடம் இருந்து நியாயமான பதில் இல்லை.

அவர் சொன்ன கருத்துக்களில் முக்கியமானது, இன்று மருத்துவர்கள் எழுதிக்கொடுக்கும் மருந்துகளில் பெரும்பாலானவை தேவையற்றது. மருந்து நிறுவனங்களிடம் கமிசன் வாங்கிக்கொண்டு தேவையற்ற மருந்துகளை எழுதிக் கொடுத்துவிடுகின்றனர்.

அதற்கு ஒரு மருத்துவர் சொல்கிறார். இது உண்மை என்று ஒரே ஒரு பிரிஸ்கிரிப்சனை வைத்து நீங்கள் நிருபித்தால் கூட, நீதி மன்றத்தில் உங்களை சந்திக்கத் தயாராக இருக்கிறேன். நீதி மன்றம் எப்படியும் அவருக்கு ஆதரவு அளிக்கும் என்று ஆணித்தரமாக நம்புகிறார் அவர். பணம் படைத்தவர்களுக்கு நம் நீதிமன்றங்கள், தவறு செய்வதற்கு கூட எவ்வளவு நம்பிக்கையான ஒரு களமாக இருக்கிறது பாருங்கள். 

மேலும் ஜெய மோகன் அவர்கள் போலீஸ், கல்வித்துறை, மருத்துவமனை மேல மக்களுக்கு இருக்குற கோபம் வேற யார் மேலயும் இல்லை என்றார். முற்றிலும் உண்மை. அதைக் கோபம் என்று சொல்வதைவிட இயலாமை என்று சொன்னால் பொறுத்தமாக இருக்கும். திருச்சியில் எனது தம்பி படிக்கும் கல்லூரியில் 7000 ரூபாய் மதிப்புள்ள கைக்கணினியை (பாம் டாப்) 40000 ரூபாய்க்கு கட்டாயம் வாங்கியாக வேண்டும் என்று கூறி ஏமாற்றி விற்றிருக்கின்றனர். இப்படி கல்லூரிகள் எல்லாம் கொள்ளைக் கூடாரமாக மாறினாலும் யார் கேள்வி கேட்பது? அதற்காக மாணவர்கள் போராடிய செய்தி தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. ஆனால் இன்னும் ஓரிரு மாதங்களில் அந்தக் கல்வி நிறுவனத்தின் நிலை எப்படி இருக்கும். அதற்காக முன்னின்று போராடிய மாணவர்களின் நிலை எப்படி இருக்கும் என்பது நாம் அறிந்ததே...

இறுதியில் நிகழ்ச்சியின் நிறைவுக்காக பேசிய கோபிநாத்...

குற்றச்சாட்டு நிறைய இருக்கும் மருத்துவமனையும் கூட தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற்றுவருகின்றன. அதைப்பற்றி கொஞ்சமும் கவலையின்றி புற அழகை மட்டும் நம்பிச் செல்வது இந்தியாவில் மட்டும்தான்...

மருத்துவர்கள் சாமி மாதிரி...சாமிய திட்டாத ஆளுங்க இருக்காங்களா..நீங்கள்தான் பொறுத்துச் செல்ல வேண்டும். நீங்கள் இல்லை என்றால் நாங்கள் பொழைக்க முடியாது..அனால் நாங்கள் இல்லை என்றாலும் நீங்கள் பொழைச்சிக்கலாம்...ஒரு அப்பா....பையனைக் கவனித்துக் கொள்ள மாட்டேன். என்று சொல்லலாமா? நீங்கள் எல்லாம் எங்களுக்கு அப்பா மாதிரி...

கடவுளுக்கு ஆணையிட எங்களுக்கு உரிமை இல்லாவிட்டாலும் கூட கடவுளைக் கோபித்துக் கொள்ள எங்களுக்கு உரிமை இருக்கிறது என்றார்.

உண்மையில் அவர்கள் கல்லா? கடவுளா?

சில விசயங்கள் பேசினால் நமக்குத் தீர்வே கிடைக்காத கையறு நிலையில் தவிக்க நேரிடும்...இதுவும் அது போல் ஒரு விசயம்தான். உண்மையில் நம்மை யார்தான் காப்பாற்றுவார்கள்?