Search This Blog

Monday, August 02, 2010

நீயா? நானா? - மருத்துவர்களும் நாமும்..



1.8.2010 அன்று எதேச்சையாக விஜய் டிவியில் நீயா? நானா? நிகழ்ச்சியைப் பார்க்க நேரிட்டது. அன்றைய விவாதம் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்டது. அதில் பேசப்பட்ட கருத்துக்களில் சில:

2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட இரண்டரை இலட்சம் விவசாயிகளில் 50 சதவிதத்தினர் மருத்துவச் செலவினைத் தாக்குபிடிக்க முடியாமல் தற்கொலை செய்திருக்கின்றனர் என்று பொதுமக்கள் தரப்பில் இருந்த ஒரு ஆய்வாளர் கூறினார்.

இதற்கு ஒரு மருத்துவரின் பதில், அவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்களில் தமிழகத்துக்கு நான்காவது இடமாம். அதாவது மற்ற மாநிலங்களைவிட நம் மாநிலத்தில் இறந்தவர்கள் குறைவாம் அவ்வாறு குறைவான நபர்களே இறந்ததற்கு மருத்துவர்களே காரணமாம். அதாவது 10 பேர் மருத்துவச்செலவு தாக்குப்பிடிக்க முடியாமல் தற்கொலை செய்திருக்கிறார்கள் என்று சொன்னால்...இல்லை இல்லை...மொத்தம் 12 பேர்...இரண்டு பேரை நாங்கள் சிகிச்சை அளித்து காப்பாற்றி விட்டோம்  என்கிறார். எங்கே போய் சொல்வது இதை..இப்படி பொதுவான ஒரு பேச்சிலேயே என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரிந்துகொள்ளாமல் பொறுப்பில்லாமல் பதில் அளிக்கும் அவர் எப்படி நோயாளிகளிடம் பொறுப்புடன் பிரச்சினையைக் கேட்பார் என்று புரியவில்லை.

உண்மையில் நமக்குத் தெரிந்து எத்தனை மருத்துவர்கள் நோயாளியின் பிரச்சினையை முழுமையாகக் கேட்கின்றனர்?

ஒரு மருத்துவர் சொல்கிறார், மருத்துவரை மோசமானவனாக மாற்றுவதே சமூகம்தான். (இது எப்படி இருக்கு?) நோயாளிகள் மருத்துவத்தை அனுபவித்து விட்டு ஏமாற்றிச் சென்றுவிடுகின்றனர் என்று அவரது அனுபவத்தைக் கூறினார். அதாவது அவரது மருத்துவமனையில் மாலை போட்டிருந்த ஒருவர் வைத்தியம் பார்த்துவிட்டு...இப்போது காசு எடுத்துவரவில்லை. நான் மாலை போட்டிருக்கிறேன் பொய் சொல்ல மாட்டேன்..நிச்சயம் நாளை பணம் தந்துவிடுகிறேன். என்று சென்றாராம்..அந்த மனிதர் ஒரு வருடமாக மறுபடியும் திரும்பி வரவே இல்லையாம். இப்படி ஏமாந்த சோனகிரியாக இருந்து விட்டு நாங்கள் ரோட்டில் பிச்சை எடுக்கவா? சேவை செய்யறேன்னு பொய் சொல்லிட்டு அலைய நான் விரும்பவில்லை என்று சொன்னார். மேலும் காய்ச்சல் தலைவலின்னா மட்டும் என்னைப் போன்ற தெருமுனை மருத்துவரிடம் வருகிறீர்கள். பெரிய பிரச்சினை என்றால் ஏன் எங்களை நம்பி வருவதில்லை..பெரிய மருத்துவமனைக்கே செல்கிறீர்கள் நாங்களும் அதே படிப்பைத்தானே படித்திருக்கிறோம்? என்று கேட்கிறார்.

சமூகத்தில் நீங்கள் ஒரு அங்கமாக இருக்க மறுக்கிறீர்கள். நீங்கள் தனித்த அடையாளத்துடன் இருக்கவே விரும்புகிறீர்கள் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
அதற்கு, சமூகம் எங்களை எப்போதும் உற்று நோக்கிக்கொண்டுதான் இருக்கிறது. எங்களுடைய சிறிய தவறுகளும் பெரிதுபடுத்தப்படுகின்றன என்று ஒருவர் பதில் அளித்தார். உண்மையில் கேட்கப்பட்ட கேள்வி ஒவ்வொன்றுக்கும் அவர்கள் அளித்த பதில் இந்த ரீதியில்தான் இருந்தது. கேட்ட கேள்விக்கும் அவர்கள் அளித்த பதில்களுக்கும் முடிந்தவரை தொடர்பில்லாமல் அல்லது கேட்ட கோணத்தை விட்டு விட்டு வேறொரு கோணத்தில் பதில் அளிக்கப்பட்டவையாக இருந்தன..
இது எந்த அளவுக்கு நியாயம் யோசியுங்கள். மருத்துவம் என்ன கிரிக்கெட்டா..ஒரு ஆட்டத்தில் சிறிதாக தவறு செய்துவிட்டாலும் அடுத்த ஆட்டத்தில் சரி செய்து கொள்ளலாம் என்பதற்கு. அது உயிர் விளையாட்டல்லவா.. சிறு தவறுகளும் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடலாம் என்பது ஒரு மருத்துவருக்குத் தெரியாதா? எவ்வளவு அலட்சியமாக பதில் சொல்கிறார் பாருங்கள்!.

இன்னொரு மருத்துவர் சொல்கிறார், நோயாளிகள் பல மருத்துவமனைகளில் கலந்தாலோசித்து எது சிறந்தது என்று தேர்ந்தெடுக்கக் கூடாதாம். நோய் வந்தவுடன் ஒருவரிடம் மட்டுமே சென்று அவர் என்ன சொல்கிறாரோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமாம்.

மருத்துவர்களிடம் இருந்து வாங்கும் கார்..தரமானதாக இருக்கும் என மக்கள் நினைக்கின்றனர். ஏனெனில் அது ஒழுங்காக பராமரிக்கப்பட்டிருக்கும். அந்த அளவுக்கு அவர்கள் வசதி படைத்தவர்கள். என்று ஒருவர் சொன்னார்.

அதற்கு மருத்துவரின் பதில்..ஏனெனில் நாங்கள்...நோயாளிகளையே பார்த்துக்கொண்டிருப்பதால்...எங்களுக்கு காரைப் பயன்படுத்துவதற்கு நேரம் இல்லை..அது பயன்படுத்தாத காராக இருப்பதால் அதை வாங்குவதற்கு அனைவரும் விரும்புகிறார்கள்.....

இதுக்கு என்ன சொல்றதுன்னே சத்தியமா எனக்குத் தெரியலைங்க...

எழுத்தாளர் ஜெய மோகன் அவர்களும் அதில் பங்களித்திருந்தார். அவர் பொதுமக்கள் சார்பில் உணர்ச்சிமயமாக அதே சமயம் நிதானம் இழக்காமல் கேட்ட எந்த கேள்விகளுக்கும் மருத்துவர்களிடம் இருந்து நியாயமான பதில் இல்லை.

அவர் சொன்ன கருத்துக்களில் முக்கியமானது, இன்று மருத்துவர்கள் எழுதிக்கொடுக்கும் மருந்துகளில் பெரும்பாலானவை தேவையற்றது. மருந்து நிறுவனங்களிடம் கமிசன் வாங்கிக்கொண்டு தேவையற்ற மருந்துகளை எழுதிக் கொடுத்துவிடுகின்றனர்.

அதற்கு ஒரு மருத்துவர் சொல்கிறார். இது உண்மை என்று ஒரே ஒரு பிரிஸ்கிரிப்சனை வைத்து நீங்கள் நிருபித்தால் கூட, நீதி மன்றத்தில் உங்களை சந்திக்கத் தயாராக இருக்கிறேன். நீதி மன்றம் எப்படியும் அவருக்கு ஆதரவு அளிக்கும் என்று ஆணித்தரமாக நம்புகிறார் அவர். பணம் படைத்தவர்களுக்கு நம் நீதிமன்றங்கள், தவறு செய்வதற்கு கூட எவ்வளவு நம்பிக்கையான ஒரு களமாக இருக்கிறது பாருங்கள். 

மேலும் ஜெய மோகன் அவர்கள் போலீஸ், கல்வித்துறை, மருத்துவமனை மேல மக்களுக்கு இருக்குற கோபம் வேற யார் மேலயும் இல்லை என்றார். முற்றிலும் உண்மை. அதைக் கோபம் என்று சொல்வதைவிட இயலாமை என்று சொன்னால் பொறுத்தமாக இருக்கும். திருச்சியில் எனது தம்பி படிக்கும் கல்லூரியில் 7000 ரூபாய் மதிப்புள்ள கைக்கணினியை (பாம் டாப்) 40000 ரூபாய்க்கு கட்டாயம் வாங்கியாக வேண்டும் என்று கூறி ஏமாற்றி விற்றிருக்கின்றனர். இப்படி கல்லூரிகள் எல்லாம் கொள்ளைக் கூடாரமாக மாறினாலும் யார் கேள்வி கேட்பது? அதற்காக மாணவர்கள் போராடிய செய்தி தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. ஆனால் இன்னும் ஓரிரு மாதங்களில் அந்தக் கல்வி நிறுவனத்தின் நிலை எப்படி இருக்கும். அதற்காக முன்னின்று போராடிய மாணவர்களின் நிலை எப்படி இருக்கும் என்பது நாம் அறிந்ததே...

இறுதியில் நிகழ்ச்சியின் நிறைவுக்காக பேசிய கோபிநாத்...

குற்றச்சாட்டு நிறைய இருக்கும் மருத்துவமனையும் கூட தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற்றுவருகின்றன. அதைப்பற்றி கொஞ்சமும் கவலையின்றி புற அழகை மட்டும் நம்பிச் செல்வது இந்தியாவில் மட்டும்தான்...

மருத்துவர்கள் சாமி மாதிரி...சாமிய திட்டாத ஆளுங்க இருக்காங்களா..நீங்கள்தான் பொறுத்துச் செல்ல வேண்டும். நீங்கள் இல்லை என்றால் நாங்கள் பொழைக்க முடியாது..அனால் நாங்கள் இல்லை என்றாலும் நீங்கள் பொழைச்சிக்கலாம்...ஒரு அப்பா....பையனைக் கவனித்துக் கொள்ள மாட்டேன். என்று சொல்லலாமா? நீங்கள் எல்லாம் எங்களுக்கு அப்பா மாதிரி...

கடவுளுக்கு ஆணையிட எங்களுக்கு உரிமை இல்லாவிட்டாலும் கூட கடவுளைக் கோபித்துக் கொள்ள எங்களுக்கு உரிமை இருக்கிறது என்றார்.

உண்மையில் அவர்கள் கல்லா? கடவுளா?

சில விசயங்கள் பேசினால் நமக்குத் தீர்வே கிடைக்காத கையறு நிலையில் தவிக்க நேரிடும்...இதுவும் அது போல் ஒரு விசயம்தான். உண்மையில் நம்மை யார்தான் காப்பாற்றுவார்கள்?


13 comments:

  1. மருத்துவர்களிடம் இருந்து வாங்கும் கார்..தரமானதாக இருக்கும் என மக்கள் நினைக்கின்றனர். ஏனெனில் அது ஒழுங்காக பராமரிக்கப்பட்டிருக்கும். அந்த அளவுக்கு அவர்கள் வசதி படைத்தவர்கள். என்று ஒருவர் சொன்னார்.

    அதற்கு மருத்துவரின் பதில்..ஏனெனில் நாங்கள்...நோயாளிகளையே பார்த்துக்கொண்டிருப்பதால்...எங்களுக்கு காரைப் பயன்படுத்துவதற்கு நேரம் இல்லை..அது பயன்படுத்தாத காராக இருப்பதால் அதை வாங்குவதற்கு அனைவரும் விரும்புகிறார்கள்.....


    ....... இப்படி வேறயா? ஸ்ஸ்ஸ்ஸ்...... அப்பா.... முடியல....

    ReplyDelete
  2. // திருச்சியில் எனது தம்பி படிக்கும் கல்லூரியில் 7000 ரூபாய் மதிப்புள்ள கைக்கணினியை (பாம் டாப்) 40000 ரூபாய்க்கு கட்டாயம் வாங்கியாக வேண்டும் என்று கூறி ஏமாற்றி விற்றிருக்கின்றனர். //

    அநியாயம். கல்லூரிகள் மட்டுமின்றி பள்ளிகளும் அவற்றின் அளவுக்குப் பணம் பிடுங்கிக் கொண்டு தான் இருக்கின்றன.

    கல்வியெல்லாம் பண்ம் பிடுங்கும் கருவியாக வெகு நாட்களாகிறது

    ReplyDelete
  3. // உண்மையில் நம்மை யார்தான் காப்பாற்றுவார்கள்?
    //

    நாமே தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது தான் உண்மை.

    ReplyDelete
  4. ரமேஷ், நானும் அன்னைக்கு நைட்டே உங்க பதிவையும் படிச்சுட்டேன். ஆனா பின்னூட்டம் தான் போடலை. ஸாரி.

    ReplyDelete
  5. ரமேஷ், நானும் அன்னைக்கு நைட்டே உங்க பதிவையும் படிச்சுட்டேன். ஆனா பின்னூட்டம் தான் போடலை. ஸாரி.

    ReplyDelete
  6. //உண்மையில் நமக்குத் தெரிந்து எத்தனை மருத்துவர்கள் நோயாளியின் பிரச்சினையை முழுமையாகக் கேட்கின்றனர்? //

    அனைவரும்.

    ஆனால் எத்தனை நோயாளிகள் மருத்துவர் கூறுவதை முழுவதும் கேட்கிறார்கள் என்றால் அது 10 சதத்திற்கும் குறைவு

    ReplyDelete
  7. //எங்களுடைய சிறிய தவறுகளும் பெரிதுபடுத்தப்படுகின்றன என்று ஒருவர் பதில் அளித்தார். //

    இதை நீங்கள் மறுக்கிறீர்களா

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி புருனோ..நீங்கள் அனுப்பிய லிங்க் படித்தேன்...கிராமப்புறங்களில் (ஏன்? நகர்ப்புறங்களிலும் கூட) பொதுமக்கள் இவ்வாறு நடந்து கொள்வதும் இயல்பாகவே நடக்கக்கூடிய ஒன்றுதான்..நீங்கள்தான் அவர்களுக்கு புரிய வைத்திருக்க வேண்டும் (வைட்டமின் இஞ்ஜக்சனை போடுவதற்கு முன்பே). அதை விட்டு விட்டு...அவருக்கு ஊசி குத்தினால்தான் சேட்டிஸ்ஃபேக்சன் என்பதற்காக ஒரு வைட்டமின் ஊசியைப் போட்டேன்...என்பது எந்தளவில் சரி...நோயாளியின் பிரச்சினையை எத்தனை மருத்துவர்கள் முழுமையாக கேட்கின்றனர்? என்ற கேள்விக்கு...அனைவரும் என்ற உங்களது ஒற்றை வார்த்தை பதில் நிச்சயம் ஏற்புடையதல்ல..என்பது...உங்களுக்கும் நன்றாகவே தெரியும்..நல்ல மருத்துவர்கள் நிச்சயம் இருக்கிறீர்கள் மறுக்கவில்லை...ஆனால்..எல்லோரும் அப்படித்தான் இருக்கிறோம் என்று சொல்வது..முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் வேலை..மருத்துவர்களின் தவறுகளினால், அலட்சியத்தினால் உயிரிழந்த கதைகளை, உறுப்பிழந்த கதைகளை, அறுவை சிகிச்சை உபகரணங்களை வயிற்றில் வைத்து தைத்துவிடும் கதைகளை நாம் தினம் தினம் காண்கிறோம்..அதனால் அந்த லிங்குகளை எல்லாம்..நான் உங்களுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்.

    ReplyDelete
  9. //படித்தேன்...கிராமப்புறங்களில் (ஏன்? நகர்ப்புறங்களிலும் கூட) பொதுமக்கள் இவ்வாறு நடந்து கொள்வதும் இயல்பாகவே நடக்கக்கூடிய ஒன்றுதான்..நீங்கள்தான் அவர்களுக்கு புரிய வைத்திருக்க வேண்டும் (வைட்டமின் இஞ்ஜக்சனை போடுவதற்கு முன்பே). அதை விட்டு விட்டு...அவருக்கு ஊசி குத்தினால்தான் சேட்டிஸ்ஃபேக்சன் என்பதற்காக ஒரு வைட்டமின் ஊசியைப் போட்டேன்...என்பது எந்தளவில் சரி...//

    மருத்துவர் மீது அவநம்பிக்கையுடன் இருப்பவருக்கு எப்படி புரிய வைப்பது

    ஒரே நாளில் அனைவருக்கும் புரிய வைக்க முடியாது. தொடர்ந்து முயற்சி நடந்து கொண்டு தானிருக்கிறது. இன்று புரிந்தவர்களுக்கு மாத்திரை, இன்று புரியாதவர்களுக்கு மாத்திரை + ஊசி.

    ஆனால் முயற்சி தொடரும்

    இன்று புரியாதவர் நாளை புரிந்து கொண்டால் அவருக்கு ஊசி நிறுத்தப்படும்

    வேண்டுமென்றால் நீங்கள் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து ஒரு ஐந்து பேருக்கு புரிய வைத்து

    அனைவருக்கும் ஒரே நாளில் எப்படி புரிய வைப்பது என்று சொல்லி தாருங்கள்

    ReplyDelete
  10. //நோயாளியின் பிரச்சினையை எத்தனை மருத்துவர்கள் முழுமையாக கேட்கின்றன//

    அனைவரும்

    ஆனால் ஒரு மருத்துவர் முழுமையாக கேட்டபின்னரும், ஊசி தான் வேண்டும் என்று அடம்பிடிப்பவரிடம் ஒவ்வொரு முறையும் முழுவதும் கேட்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியமில்லாது

    ReplyDelete
  11. //நோயாளியின் பிரச்சினையை எத்தனை மருத்துவர்கள் முழுமையாக கேட்கின்றனர்? என்ற கேள்விக்கு...அனைவரும் என்ற உங்களது ஒற்றை வார்த்தை பதில் நிச்சயம் ஏற்புடையதல்ல..என்பது...உங்களுக்கும் நன்றாகவே தெரியும்..//


    ஏன் ஏற்புடையது என்பதை நான் விளக்கி யுள்ளேன்
    ஏன் ஏற்புடையவதில்லை என்பதற்கு நீங்கள் காரணம் தாருங்கள்

    //நல்ல மருத்துவர்கள் நிச்சயம் இருக்கிறீர்கள் மறுக்கவில்லை...ஆனால்..எல்லோரும் அப்படித்தான் இருக்கிறோம் என்று சொல்வது..முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் வேலை..//

    அப்படி சொல்லவில்லை

    ஆனால் யாருமே இல்லை என்று கூறுவது சரியா

    ReplyDelete
  12. //மருத்துவர்களின் தவறுகளினால், அலட்சியத்தினால் உயிரிழந்த கதைகளை, உறுப்பிழந்த கதைகளை, அறுவை சிகிச்சை உபகரணங்களை வயிற்றில் வைத்து தைத்துவிடும் கதைகளை நாம் தினம் தினம் காண்கிறோம்..அதனால் அந்த லிங்குகளை எல்லாம்..நான் உங்களுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்.//

    தவறு நடக்கிறது
    அது 1 சதத்திற்கும் குறைவே

    ஆனால் அனைவரையும் குற்றம் சாட்டு போக்கு தான் இருக்கிறது. இதை நீங்கள் மறுக்கிறீர்களா

    அதை தவிர தவறு செய்யாவிட்டாலும் குற்றம் சாட்டும் போக்கு இருக்கிறது. இது ஏன். இதை நீங்கள் ஏன் எதிர்க்க மறுக்கிறீர்கள்

    ReplyDelete
  13. நமக்குள்ளான விவாதம் சற்றே நீள்வதால் அதனைப் பதிவாகவே இட்டிருக்கிறேன்..உங்கள் கேள்விகளுக்கான பதிலை அங்கு அளித்திருக்கிறேன்..புருனோ அவர்களே...

    http://rameshspot.blogspot.com/2010/08/blog-post_20.html

    ReplyDelete